நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 9 (3)

“என்னையும் அதுபோல செஞ்சுருவாங்களோ அப்படின்ற எண்ணம் ஒருப்பக்கம் பயத்தை கொடுத்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோவான உங்களை பத்தி அதுபோல பத்திரிக்கைல வர்றதில் விருப்பமில்ல! உங்களுக்கு அப்படி வந்தா, நிறைய கோபமும் வருமே.. அது எனக்கு கஷ்டமா இருக்கும்! அதனால தான் அமைதியா இருக்கேன்! எனக்காகவும் தான் பார்க்கிறேன்! உங்களுக்காகவும் தான் பார்க்கிறேன்! அப்பறம் எனக்கும் இதெல்லாம் புதுசு தானே.. கொஞ்சம் பயமாதானே இருக்கும்! அதான்! மத்தபடி எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் தான்!”

மனத்துள் இருக்கும் எண்ணங்களை படபடவென்று சொல்லி முடிக்கவும் தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியே பிறந்தது! அதனாலேயே அவளது முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் தெளிவும் பிறந்தது!

சர்வாவோ ஒரு நெகிழ்வான மனநிலையிலேயே இருந்தான்! அவள் சொல்வது போல சில பத்திரிக்கைகள் இதுபோல செய்தியை வெளியிடும்போது அவனுக்கு கோபம் வரும்தான்! ஆனால் அதையெல்லாம் படித்து முடித்ததும் மறந்தும் விடுவான்! அபி சொல்வது போல சில ரசிகர்கள் ‘உங்களை அதுபோல பார்க்க முடியலை! இப்படி இருக்காதிங்க!’ என்று கோபத்துடன் சொல்லி தான் அதிகம் கேட்டிருக்கிறான்! ஆனால் யாரும் அபி போல மனம் முழுதும் பரவிய வருத்தத்துடன் சொல்லியிருப்பார்களா என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்வான் சர்வா!

அவனுக்கு இது புதுவிதமாக இருந்தது.. நன்றாகவும் இருந்தது! அதுவே அவனது முகத்தில் ஒரு மனநிறைவான புன்னகையை ஒளிர செய்தது! அவனின் அந்த ஒளிர்வே அவளின் மனத்திற்குள்ளும் ஒரு நிறைவை உண்டாக்கியது!

அதன்பிறகே தான் இன்னமும் அவனைபற்றியிருப்பதை உணர்ந்தாள் அபி!

“ஹோ! சாரி!” சங்கடமாய் உணர்ந்து சட்டென்று அவனது கையை விட, இதழ் விரித்தொரு புன்னகையை வெளிப்படுத்தியவனோ, “நிஜமா அதுதானா?” என்று கேட்க, மௌனமாய் தலை மட்டும் ஆடியது அபிக்கு!

“சரி! எதுனாலும் உனக்குள்ளேயே வைச்சுக்காத! அப்படி வைச்சிட்டு உன்னை நீயே வருத்திக்காத!” என்றபடி அவளது தலைமேல் கைபதித்து அவளின் தலைமுடியை கலைத்தவன், “வா.. போகலாம்!” என்றபடி அழைத்து சென்றான் படப்பிடிப்பிற்கு!

ஆனால் அவள் அனைத்தையும் மனதிற்குள்ளேயே வைத்து மருகி தவிக்கத்தான் போகிறாள் என்று அறியாமல் அடுத்துவந்த நிமிடங்களை மகிழ்வுடன் கழித்தான் சர்வா!

தொடரும்..

அடுத்த பக்கம் (அத்தியாயம் 10)