நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 9 (2)

சஞ்சு தான் அவளை விசாரிக்க ஆரம்பித்தது! “என்னாச்சு அபி? ஏற்கனவே ‘நீ அமைதியா இருக்க, நல்லா பழகிட்டு இருந்த பொண்ணை என்ன சொல்லி மிரட்டி வைச்சிருக்கன்னு’ சர்வா திட்டுறாங்க! நீ என்னடான்னா இப்படி அழுதுகிட்டு இருக்க? என்னம்மா?” என்று தவிப்புடன் வினா எழுப்பினாள்!

ஹர்தி எதுவும் பேசவில்லை என்றாலும், அழும் அபியின் முதுகை ஆறுதலாய் வருடிக்கொண்டே இருந்தாள்!

‘யாரும் ஏதாவது சொல்லிவிட்டார்களா?’ என்ற கவலை அவர்களுக்குள்! அபிக்கோ அவர்களின் அக்கறையில் இன்னமும் அழுகை கூடியது!

சஞ்சு ஹர்தியை ஏறிட, ஹர்தியோ, “அழறதுனால எதுவும் ஆகப்போறது இல்லை! என்னாச்சு?” என்று கொஞ்சம் அழுத்தமாய் கேட்டாள்!

“இல்லை ஆப்லா! அந்த ஜோசியக்காரன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் சீக்கிரம்ன்னு சொன்னதும் நான் ரொம்ப சாதாரணமா தான் இருந்தேன்! ஆனா அவன் சொன்னான்னு எங்க அப்பா எனக்கு ஒரு மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்தார்! அப்ப கூட நான் பைத்தியக்காரி மாதிரி நினைச்சேன்! யாராவது சின்ன வயசுல இருக்கவங்க போல தான் கூட்டிட்டு வருவார்ன்னு… ஆனா அந்த வயசான எருமை மாடுக்கு என்னை கட்டிவைக்க பார்த்தார்!” என்று கேவலுடன் சொல்லிவிட்டு அதற்கு பிறகும் அழ, புரியாமல் முழித்தனர் பெண்கள்!

“என்ன அபி பேசுற நீ? முதல்ல உங்கப்பா ஜாதகத்தை நம்பி உன்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிவைக்க நினைச்சதே தப்பு! அவர் உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்ன்னு இருந்ததில், வயசானவன், வயசுல சின்னவன்னு எல்லாம் பார்ப்பாருன்னு நீ எப்படி நம்பின?” என்று சஞ்சு கடிந்தாள்!

ஹர்தியோ, “ஹேய்! இது நடந்து ஆறு மாசமாச்சு! இப்போ எதுக்கு இதை நினைச்சிட்டு அழற?” என்று கண்டிப்புடன் கேட்டதும்,

“இப்போ நடக்குற சீன் பொண்ணு பார்க்கிற சீன் தானே! என் வாழ்க்கைலயும் இதுபோல ஒரு சீன் பயங்கரமா நடந்ததே! சர்வா சார் போல எல்லாம் கேட்கலை.. ஆனா.. எனக்கு பிடிச்சமாதிரி.. ஹ்ம்ம்கூம்.. ஒரு சுமார் மூஞ்சி குமார் கூட இல்லையே!” என்று விசும்பியபடியே அப்படியிப்படி என்று சுத்தி வளைத்து மூக்கை தொட்டிருந்தாள் அபி!

இருபெண்களும் முதலில் திருதிருவென முழித்தவர்கள், பின் அப்படியே ‘பக்கென்று’ சிரித்துவிட்டனர்!

“எதுக்கு சிரிக்கிறிங்க?” அபிக்கோ பெண்களின் சிரிப்பின் காரணம் புரியாமல் குழப்பமும், ‘நான் கஷ்டமாக இருக்கிறது என்கிறேன் இப்படி சிரிக்கிறார்களே?’ என்ற ஆதங்கமும் ஒன்றாய் சூழ்ந்திருந்தது!

ஹர்தியோ இன்னமும் விடாமல் சிரித்தபடியிருக்க, சஞ்சு தான், “வேணும்னா ஒன்னு செய்யலாம்!” என்று சிரிப்பை அடக்கியபடி சொல்லவும், அபி அவளைப் பார்த்தாள்!

“பேசாம நீ மறுபடியும் உங்க வீட்டுக்கே போயிரு! நான் வேணும்னா சர்வாகிட்ட பேசி உன்னை பொண்ணு பார்க்க அழைச்சிட்டு வரேன்! நீ ஒகே பண்ணிரு!” என்று சொல்லிமுடித்துவிட்டு மீண்டும் சிரிப்பை தொடரவும், அபியோ அவர்களை முறைக்க ஆரம்பித்தாள்!

“என்னைப்பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா?” சொல்லிவிட்டு மீண்டும் அழ தொடங்கினாள் அபி!

உள்ளேயிருந்து இவர்களையே கவனித்துக்கொண்டிருந்த சர்வாவினால், ‘அது அழுது! இதுங்க ரெண்டும் என்ன இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிதுங்க?’ என்று முழிக்க மட்டுமே செய்ய முடிந்தது!

அவன் தங்களை தான் கவனிக்கின்றான் என்று உணராமல், “லூசு! இன்னொரு தடவை அழுத.. அடி வைச்சிருவேன்!” என்று கண்டித்த ஹர்திகா,

“அதேபோல இந்தமாதிரி லூசுத்தனமா பேசுறதையும் நிறுத்து! உன் மனசுல இப்படி சிந்தனையை வரவைக்கிறதே அந்த கிறுக்கு ஜோசியக்காரன் சொன்னது போல தான் நடக்கும்ன்னு நீ அதிகமா நம்புறன்னு அர்த்தம்!” என்றவுடன், விலுக்கென்று நிமிர்ந்தாள் அபி!

“உனக்கே நீ பேசுறது அபத்தமா தெரியலை? சுமார் மூஞ்சி குமாராம்.. வயசுல சின்னவனாம்.. எப்படியிருந்தாலும் அது ரெண்டாவது கல்யாணம் தானே! உனக்கு அதுல ஆரம்பத்துல இருந்து விருப்பமில்லை தானே! அப்படி இப்படின்னு யோசிச்சு உனக்கு நீயே நெகோஷியேட் பண்ணி வைச்சுப்பியா?” சஞ்சுவின் வார்த்தைகள் நறுக் சுருக்கென்று வந்தது!

அபிக்கோ பேச்சே வரவில்லை! கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்தோடியது! அதைக்கூட துடைக்க தோன்றாமல் இருவரையும் பார்த்தாள்!

“உன் நிலைமைல இன்னொரு பொண்ணு இருந்து.. அவளுக்கு இதுபோல நிலை வந்தா.. நீ பார்த்துட்டு சும்மா இருப்பியா? அவளும் இப்படி உன்னைப்போல சிந்திச்சா.. அப்படியே நினைன்னு விட்டுட்டு வந்துருவியா?” சஞ்சுவின் ஒவ்வொரு கேள்விக்கும் அபியின் தலை தானாகவே இல்லையென்று அசைந்தது!

“அப்பறம் என்ன?” தனது எண்ணத்தை நினைத்து வெட்கினாள் அபி!

அவளை அங்கேயிருந்த நீருற்று தொட்டியின் விளிம்பில் அமர வைத்த ஹர்திகா, தானுமே அருகே அமர்ந்து, “அபிமா! வாழுற வாழ்க்கை ஒருதடவை தான்! அதை உனக்காக வாழு! அப்பா சொன்னாங்க.. அம்மா சொன்னாங்கன்னு அவங்களுக்காக வாழாத.. அதுவும் இதுபோல அம்மா அப்பாக்காக.. அவங்க ஆசைக்காக வாழனும்ன்னு கனவுல கூட நினைச்சிராத! அது உன்னை முழுசா முழுங்கிரும்… ஒரு சின்ன புள்ளி கூட மனசுக்கு பிடிக்கலைன்னா, அந்த வாழ்க்கை வாழுறதில் திருப்தியே இருக்காது! சந்தோஷமும் இருக்காது! உன்னை நீயே ஏதாவது சொல்லி ஏமாத்திக்காத!” என்று மென்மையாய் சொல்வது போல சொன்னாலும் அவள் பார்வையின் அழுத்தம் ‘இதுபோல என்றுமே பேசாதே’ என்பதுபோல கட்டளையிட்டது!

“யூ ஆர் இன் தி சேஃப் ஹேண்ட்ஸ் நவ்! உனக்கான பாதைல முதலடியை எடுத்து வைக்க நாங்க உதவிட்டோம்! பிரச்சனைன்னு வந்தா உன்கூட துணைக்கு நிற்போம்.. ஆனா அதை ஃபேஸ் பண்ணவேண்டியது நீதான்! பழசெல்லாம் நினைச்சு உன்னை நீயே வருத்திக்காத! வா உள்ளே போகலாம்!” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவள், அவளைக்கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்!

செல்லும் வழியிலேயே சஞ்சு தான், “அம்மா தாயே! அந்த சர்வாகிட்ட எதுவுமில்லைன்னு சொல்லிட்டு எப்பவும் போல பேசிரு! ஏற்கனவே நீ பேசமாட்டிகிறன்னு எகிறிட்டு இருக்காங்க. இன்னும் நீ பேசலைன்னா என்னை மிரட்டியே சாவடிச்சிடுவாங்க!” என்று ‘இதற்குமேல் என்னால் அவனை சமாளிக்க முடியாது!’ என்று கண்ணை உருட்டி சொன்னதில்,

“அச்சோ நான் மாட்டேன்! அவரை சுத்தி ஒரே மீடியாவா வந்து வந்து போகுது! யாராவது ஏதாவது ஃபோட்டோ எடுத்தா எங்கே நியூஸ், பத்திரிக்கைன்னு போட்டுருவாங்களோன்னு பயமா இருக்கு! ஏதாவது அப்பா கண்ணுல பட்டுச்சுன்னா வந்து இழுத்துட்டு போயிருவார்! அதான் பேசாம ஒதுங்கியே இருக்கேன்! இல்லாட்டி பேசாம இருக்க ஆளா நான்!” என்று சலிப்புடன் பதில் தந்தாள் அபி!

“அபி! உங்க அப்பா வந்து இழுத்துட்டு போற வரைக்கும் நாங்க சும்மா இருப்போம்ன்னு நினைக்கிறயா? கண்டிப்பா மாட்டோம்! மீடியா தான் உனக்கு பயம்னா அதை நீயே நேரடியா சர்வாகிட்ட சொல்லு! அவன் ஹேண்டில் பண்ணிக்குவான்.. ஒகேவா? இப்போ வந்து வேலையை பாரு! அதுக்கு முன்னாடி சர்வாகிட்ட பேசிட்டு வந்துரு!”

அவளிடம் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்! சரியென்று தலையாட்டிய அபியின் பார்வையில் அங்கே ஹாலில் உட்புறம் நின்றபடி இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் சர்வா!

ஹர்தியும், சஞ்சுவும் ‘போ’ என்றுவிட்டு தீபக்கை நோக்கி நகர, அபியோ சர்வாவிடம் வந்து சேர்ந்தாள்!

“என்னம்மா? அவ்வளவுதானா? இல்லை இன்னமும் இருக்கா?”

புரியாமல் இவள் அவனை பார்க்க, “அதான்.. அப்படி அழுதில.. அவ்வளவுதானா.. இல்லை வெள்ளம் ஏதாவது வருமா?” கிண்டல் செய்தான் சர்வா!

“ச்சே! போங்க.. கலாய்க்காதிங்க!” என்று சிணுங்கினாள் அபி!

“எதுக்கு அழுத?”

என்ன சொல்வதென்று யோசித்து, “அது காலைல ஒரே செண்டிமெண்ட் சீனா இருந்ததா? அது என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுச்சு” என்று சத்தமாக சொல்லியவள், ‘அதனால் வீட்டு ஞாபகம் வந்ததென்று’ மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்!

‘குடும்ப காட்சியை கண்டு தனக்கு யாருமேயில்லை என்று வருந்துகிறாளோ?’ சர்வாவின் மனது அவளுக்காய் வருந்தியது!

“சரி.. ஏன் எஃப்எம் ஆஃப்லயே இருந்துச்சு? ப்ரோக்ராம் சரியில்லைன்னு ப்ரோட்யூசர் சொன்னாரா?”

‘என்ன சொல்றாங்க?’ இப்பொழுது நிஜமாகவே புரியாமல் முழித்தாள். அதன்பிறகு தான் சஞ்சு ‘சர்வா நீ பேசவில்லை என்றதும் எங்களை திட்டுகிறான்.. நாங்கள் தான் ஏதாவது சொல்லிவிட்டோமோ’ என்று சொன்னது நினைவில் வந்தது!

‘இதை சொல்லத்தானே வந்தோம், மறந்துட்டோமே!’ கொஞ்சம் தயங்கித்தயங்கி தான் நின்றாள் அபி! சர்வாவோ, அவளிடம் பதில் வாங்காமல் நகர்ப்போவது இல்லை என்று இன்னமும் நன்றாய் சுவரில் லேசாய் சாய்ந்து நின்றவன், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்!

“அது.. அது வந்து.. சில செகண்ட் கிரேட், தேர்ட் கிரேட் பத்திரிகை எல்லாம் உங்க பெர்சனல் ஃபோட்டோஸ் கலெக்ட் பண்ணி, உங்களோட பெர்சனல் லைஃப் பத்தி, ஏதாவது எழுதிட்டே இருப்பாங்க! ரொமாண்டிக் ஹீரோன்னு உங்களை அடிக்கடி யார் யார்கூடவோ லிங்க் பண்ணி பேசுவாங்க! என்னையும் அதுபோல செஞ்சுருவாங்க..” என்று சொல்லியபடியே அவனது கண்களை ஏறிட்டவள், அதில் கோபக்கனலை கண்டதும்,

“அச்சோ! ப்ளீஸ் கோபப்படாதிங்க.. நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க ப்ளீஸ்!” என்று அவன் கைப்பற்றி கெஞ்சினாள் தான் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் கோபம்கொண்டு நகர்வதை தடுத்தபடி!

அடுத்த பக்கம்