நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 9

அந்த படுக்கையறையில் முகம் முழுக்க வியாபித்த இளம்புன்னகையுடன் எதிரிலிருந்தவளின் கோப வார்த்தைகளை தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தான் சர்வா!

“உங்களுக்கு பைத்தியமா என்ன? தரகர் சொன்னாங்க.. எங்கப்பா சொன்னாங்கன்னு பொண்ணு பார்க்க வந்துருக்கிங்க? சொந்தமா யோசிக்க மாட்டிங்க? போய் லவ் பண்ணுங்க.. லவ் பண்ணினா லைஃப் நல்லாயிருக்கும்!” என்று எண்ணெயில் தெறித்த தண்ணீராய் சடசடவென பேசினாள் ஹர்திகா!

“அதெல்லாம் செட் ஆகலைங்க! லவ் பண்ணுன பொண்ணுங்ககிட்ட, கல்யாணம்ன்னு சொன்னதும் தெறிச்சு ஓடிட்டாங்க! அதான் மேரேஜ் பண்ணிட்டு லவ் பண்ணினா ரொம்ப ஸ்ட்ராங்கா இறுக்கி பிடிச்சுக்கலாம்ன்னு!” என்று சொல்லியவன் அவளை கட்டிப்பிடிப்பது போல வர, ‘அம்மே!’ மெலிதாய் அலறி துள்ளியவள் இரண்டடி தள்ளி நின்று அவனை பயத்துடன் பார்த்தாள்!

அவனோ கண்சிமிட்டி, “அதான் பொண்ணுப்பார்க்க வந்துட்டேன்!” என்று பிரவாக சிரிப்பு உதட்டில் பரவ சொன்னான்!

“அதுக்கு நான் தான் கிடைச்சேனா? போங்க.. வேற யாரையாவது பாருங்க! இதுக்காகவே கிராமத்துல இருந்து வருவிங்களா? உங்களுக்கு எல்லாம் நிறைய அத்தைப்பொண்ணுங்க, மாமா பொண்ணுங்கன்னு அழகழகா இருப்பாங்க தானே? அவங்கள்ல யாரையாவது கட்டிக்க வேண்டியது தானே? எதுக்கு என்னை கட்டிக்க வந்திங்க? இங்கே பாருங்க எனக்கு உங்களை பிடிக்கலை! அதனால வந்த வழிலேயே திரும்பி போயிருங்க!” என்று ஒருவிரல் நீட்டி எச்சரிக்கை செய்ய, அவனோ அந்த விரலை லபக்கென்று பற்றியவன், அப்படியே அவளை தனக்கு அருகில் கொண்டு வந்திருந்தான்!

அவளோ அவனது பிடியிலிருந்து விரலை உருவ முயன்றாள்! ஹ்ம்ம்கூம்.. அவன் விட்டபாடில்லை! நிமிர்ந்து அவன் முகத்தை எரிச்சலாய் காண, அவனோ அவளது கண்களுக்கு தனது நேசத்தை மட்டுமே விருந்தளித்தான்!

இவளோ அந்த தீட்சண்யத்தில் எதுவும் பேசமுடியாமல் திணறித்தான் போனாள்!

நொடிகள் மௌனத்தில் கடக்க, இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க, “கட்.. கட்.!” தீபக்கின் குரலில் இருவரும் கலைந்து அவனை திரும்பி பார்த்தார்கள்.

“இந்த டேக் ஓகேவா தீபக்? எதுவும் மிஸ் ஆகலைல.. இதோட இது நாலாவது டேக்!”

ஹர்திகா பரிதாபத்துடன் சொன்னதில், “எங்க எல்லாருக்கும் ஒகேதான்! உன் பக்கத்துல நிற்கிறானே.. அவன் தான் பயங்கர நொட்டல் சொல்றான்!” என்று கடுப்புடன் பதில் தந்தான் தீபக்!

அவனின் வார்த்தைகளில் ஹர்தி சர்வாவை பார்த்து சிரிக்க, தனது பிடியிலிருந்த ஹர்திகாவின் விரலை விருப்பமேயில்லாமல் விடுவித்தான் அவன்!

“நல்ல சான்ஸ்.. விரலை நல்லா முறுக்கி சொடக் சொடக்குன்னு உடைக்கனும்ன்னு நினைச்சேன்! ஆனா சதிகாரன் விடமாட்டிக்கிறான்!” என்று நண்பனை வேறு திட்டினான் சர்வா!

“ஹோ! அப்போ என் விரலை உடைக்கத்தான் நீ இத்தோட மூணு டேக் எடுத்தியா? விரல் உன்னால கொடகொடன்னு ஆடுது சதிகாரா!” என்று சிரித்தபடி அவனை மொத்தினாள்!

சர்வாவோ சிரிப்புடன் வாங்கிக்கொண்டு, “ரொம்ப வலிக்குதா!” என்று அக்கறையுடன் கேட்க, இல்லையென்று தலையாட்டினாள் ஹர்திகா!

“சரி.. சரி.. வந்து இப்போ எடுத்த ஸ்டில்ஸ் பாருங்க!” என்று அவர்களை தீபக் அழைக்க, இருவரும் சென்று பார்த்தனர்!

திரையில் கவனம் இருக்கும்பொழுதே சர்வாவின் கண்கள் அபியை தேடியது! அவளோ அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி உடைகளை ஒதுக்கி வைத்து கொண்டிருந்தாள்!

இந்த சில நாட்களில் அபி படப்பிடிப்பிற்கு தினமும் வருவாள்! ஆனால் ஹர்திகாவுடன் மட்டுமே இருப்பாள்! யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டாள்! முதல் சந்திப்பில் தனது வீட்டிற்கு வந்து உடையை கொடுத்துவிட்டு சென்றுவிடு என்று சொன்னதற்கு, அடுத்தநாள் சஞ்சு மூலமாய் வேறொருவர் தான் வந்து உடையை கொடுத்துவிட்டு சென்றாரே தவிர, அபி வரவில்லை! சரி ஹர்திகாவிற்கும், சஞ்சுவிற்கும் பிடிக்கவில்லை போல என்று விட்டுவிட்டான்! இங்கே படப்பிடிப்பில் கூட, அபி சர்வாவை பார்த்து புன்சிரிப்போடு நிறுத்திக்கொள்வாள்! தீபக்கிடமும் அப்படிதான்! என்னவென்று ஏதாவது கேட்டால் பதில் மட்டும் வந்துவிடும்!

நன்றாக பேசுக்கொண்டிருந்த பெண், திடீரென யாரிடமும் ஒட்டாமல் இருந்தால் வித்தியாசமாக தெரியாதா? இப்படியான எண்ணங்கள் சர்வாவின் மனத்துள் சங்கடத்தை கொடுத்ததா? இல்லை அவனே கஷ்டமாக உணர்கிறானா என்று அவனுக்கே புரியவில்லை!

தீபக் அதிலெல்லாம் சிந்தனையை வைக்காததால் சர்வா மட்டுமே இப்படியெல்லாம் குழம்ப வேண்டியிருந்தது!

‘ஒருவேளை நடிகன் என்பதால் கொஞ்சம் தள்ளியே நிற்கிறாளா? இல்லை.. ஹர்திகா தன்னிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறாளா?’ அவனுக்கு தான் எதையும் மனதில் வைத்துக்கொள்ள தெரியாதே.. நேரடியாக ஹர்தியிடமே பஞ்சாயத்து பண்ண சென்றான்!

“உன்னோட அசிஸ்டன்ட்டை மிரட்டி வைச்சிருக்கியா என்கூட பேசக்கூடாதுன்னு? இப்போ எல்லாம பேசவேமாட்டிகிது? சிரிக்கிறது கூட ரொம்ப குறைஞ்சு போச்சே.. என்னவாம்? என்கிட்டே மட்டும் தான் இப்படி செஞ்சு வைச்சிருக்கியா? இல்லை எல்லார்கிட்டயும் இப்படிதான் இருக்கனும்ன்னு சொல்லிருக்கியா?”

‘என்னைப்பார்த்தா அப்படி செய்றவ போலவா இருக்கு?’ சர்வாவின் குற்றசாட்டில் அவனை முறைத்தாள் ஹர்தி!

“அவளை நானெல்லாம் எதுவும் சொல்லமாட்டேன்! நான் கொஞ்சம் சத்தம் போட்டு பேசினாலே அவ அழுதுறுவா.. சோ சாஃப்ட்டா தான் அவளை டீல் பண்ணுவேன்!”

“அப்போ அந்த ரெண்டு குரங்கும் தான் எதாவது சொல்லியிருக்கணும்!” என்று சர்வா அதற்கும் குதித்தான்! அவன் குரங்கு என்று குறிப்பிட்டது ஷ்ரவந்தியையும், சஞ்சுவையும் தான்!

“உனக்கு அவங்களை குறை சொல்லாட்டி தூக்கம் வராதே! அபியும் அவங்க திட்டுற மாதிரி ஏதாவது லூட்டி அடிச்சிட்டே இருப்பா!” என்று தோழிகளை விட்டுக்கொடுக்காமல் ஹர்தி சொன்னாலும், சர்வா அதையெல்லாம் நம்பவில்லை!

படப்பிடிப்பிற்கு என்று வாடகைக்கு விடும் அந்த வீட்டின் ஹாலில், யாருக்கோ உடையின் அளவு சரியாக இல்லையென்று சஞ்சு வேறு உடைகளை தேர்வு செய்துக்கொண்டிருக்க, அவளை சத்தம்போட்டு அழைத்தான் சர்வா!

‘எதுக்கு இவன் கத்துறான்?’ என்ற ரீதியில் வந்து நின்ற சஞ்சு, “என்னடா? எதுக்கு இப்படி டைனோசர் மாதிரி சத்தம் போடுற?’ என்று மெல்லிய குரலில் கடிந்தவள் என்னவென்பது போல பார்த்தாள்!

“என்னது டைனோசரா? நீ ஏன் சொல்லமாட்ட?” என்று எகத்தாளமாக கேட்ட சர்வா, “சரி! என்னவாம் அபி ரொம்ப சைலன்ட் ஆகிட்டா? என்ன நிறைய பயமொருத்தி வைச்சிருக்கியா உன்னோட லவ்வரை பயமொருத்துற மாதிரி?” கிண்டல் தொனியிலேயே சஞ்சுவை மிரட்டினான்!

“ஆமா! எனக்கு ரொம்ப தேவை பாரு! நான் மிரட்டினா.. இல்லையில்லை… பேசினா கூட என் லவ்வரும் கேட்கமாட்டான்! அதேபோல இவளும் கேட்கமாட்டா! இதுல பயமொருத்தி வேற வைக்கனுமாக்கும்!” என்று ஆவேசப்பட்டு பேசியவளுக்கு, “மூக்கால பேசினா யார் கேட்பா!” என்று கவுண்டர் கொடுத்தான் தீபக்!

“ப்ச்!” என்று கடுப்பான சஞ்சு, “பாஸ்! போய் வேலையை பாருங்க! கொஞ்சம் ஓவரா தான் போறீங்க! சரியில்லை.. அப்பறம் உங்க ஆளுகிட்ட இருந்து தூது வராது.. சொல்லிட்டேன்!” என்று சஞ்சு அவனை திரும்பி பார்த்து எச்சரிக்க, “ரைட் விடு!” என்று பின்வாங்கிவிட்ட தீபக் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான்!

சர்வாவோ, “இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்! பின்னே எதுக்கு அபி இப்படி சைலண்ட்டா இருக்கா? நானும் ஒரு வாரமா பார்க்கிறேன்!” தான் கண்டுணர்ந்ததை தோழிகள் இருவருக்கும் தெரிவித்தான்!

“அடடா! அப்படி எல்லாம் எதுவுமில்லை சர்வா! அவ சில சமயம் அதிகமா குறும்பு செய்யும்போது தான் திட்டுவேன்! மத்தபடி இவங்ககிட்ட தான் பேசணும்.. அவங்ககிட்ட பேசக்கூடாதுன்னு எல்லாம் சொல்லமாட்டேன்! அப்படி சொல்லிவைக்க எனக்கென்ன உரிமை இருக்கு? யார்கிட்ட பேசினாலும் ஜாக்கிரதையா பேசுன்னு தான் சொல்லிருக்கேன்!” என்று உரைக்க, ஹர்தியும் ‘நான்தான் சொன்னேன்ல’ என்பதுபோல உதட்டை இடதுபக்கம் வளைத்தாள்!

“நான் அபிக்கிட்டயே கேட்பேன்!” என்று அப்பொழுதும் நம்பாமல் சர்வா தெரிவிக்க, ஹர்தி ‘ஒகே’ என்று தோளை குலுக்கினாள் என்றால், சஞ்சுவோ ‘கேட்டுத்தொலை’ என்பதுபோல அலட்சியமாய் நின்றாள்!

“அபி!” என்று சர்வா உரக்க அழைக்க, அவளோ விசுக்கென்று பயந்துப்போய் திரும்பி பார்த்தாள் கண்ணெல்லாம் கலங்கிப்போய்! தூரத்தில் இருந்தாலும் அவளின் கலங்கும் விழி மூவருக்கும் அப்பட்டமாய் தெரிய, பதறித்தான் போனார்கள்!

“அபி!” என்றபடி அவளை நோக்கி முதலில் ஓடியவள் ஹர்திகா தான்! பின்னோடு சஞ்சுவும் பயந்துபோயோட, சர்வா அங்கேயே நின்றபடி அபியையே பார்த்துக்கொண்டிருந்தான்!

‘என்னவாயிற்று?’ இருவரும் அவளை சமாதானப்படுத்துவதை மௌனமாய் பார்த்தபடி இருப்பதை விட வேறு வழி தெரியவில்லை அவனுக்கு!

இங்கே பெண்களோ, அவன் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் தங்களை கவனிப்பதை உணர்ந்து, தீபக்கிடம் “ஒரு பத்து நிமிஷம்” என்று அனுமதி கேட்டபடி வெளியில் தோட்டத்திற்கு அவளை அழைத்து சென்றனர்!

அடுத்த பக்கம்