நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 8 (2)

‘பட சீன்ல நடிக்கவேண்டியது எல்லாம் நிஜ வாழ்க்கைல நடந்தா ரொம்பவே எம்பாரசிங்கா இருக்கு! இப்படியெல்லாம் நடக்கும்ன்னு கனவுல கூட நினைச்சதில்லை!’ என்று நொந்துப்போய் அவளை எப்படி தூக்க என்று திணறினான்!

அதற்குள் அவர்களை நெருங்கிய ஹர்திகாவும் அபியை தாங்கிக்கொள்ள இருவரும் அபியை சோபாவில் படுக்க வைத்தனர்!

“யார் ஹர்தி இந்தப்பொண்ணு?” என்று தீபக்கின் கேள்விக்கு,

“அபிநிதி! எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்! என்கூட ஒருமாசமா வொர்க் பண்ணுறா தீபக்! ஃபேஷன் டிசைனிங் முடிச்சிருக்கா, ஒருவகைல சஞ்சுவுக்கும் ட்ரைனீ!” என்று அவனுக்கு பதில் தந்தவள், டீபாயின் மேலிருந்த ஜக்கில் தண்ணீர் எடுத்து அபியின் முகத்தில் தெளிக்க, கண்கள் சுருக்கி முகத்தை சுழித்தவள் மெல்ல கண்விழிக்க, அவளுக்கு அருகில் நின்றிருந்த ஹர்திகா, தீபக், இன்னும் சிலரையும் தாண்டி அவளின் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தது அவன் தான்!

அபியோ அவனைக்கண்டதும், ‘அது.. அது.. சர்வா! சர்வா தான்! அவன்தானே என்னைத் தாங்கினான்! இது கனவா? நனவா? ஹான்..’ என்று மிரண்டுபோய் அவனை நோக்கி லேசாய் கையுயர்த்தி சுட்டிக்காட்டியவள் மீண்டுமொரு மயக்கத்தை போட்டாள்!

அதில் ஹர்தி இன்னமும் பயந்துவிட, அவளுக்கு பக்கத்தில் நின்றிருந்த தீபக்கோ அப்படியே டீபாயின் மேல் உட்கார்ந்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டான்!

சர்வாவோ, “எழுப்பிவிடுமா மறுபடியும்!” என்று ஹர்திகாவிடம் கடுப்பாகி சொன்னவன், தள்ளிப்போய் நின்றுக்கொண்டான் அபியின் கண்படாத தூரத்தில்!

‘மறுபடியும் தன்னைப்பார்த்து மயங்கிவிட்டாள் என்னாவதென்ற முன்னெச்சரிக்கை தான்!’ இப்பொழுது மீண்டும் அபி எழுப்பப்பட, ஒருவாராய் ஹர்தியின் மென்மையான வருடலிலும், அழுத்தமான சமாதானத்திலும் தன்னிலை வந்தாள். அவளுக்கு தீபக் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த வாங்கி குடித்தவள், தண்ணீர் குடித்தபடியே திருட்டுமுழி காட்டி சர்வாவை தேடினாள்!

“முதல் தடவை உங்க எல்லாரையும் பார்க்கிறதால அதிர்ச்சில மயங்கிட்டா போல!” என்று ஹர்திகா அபிக்காக பரிந்து பேச,

“சரி எதுக்கு ரெண்டாவது தடவையும் மயங்கி விழுந்தாங்களாம்?” சர்வாவின் கேள்வி நக்கல் வந்தது!

அதற்கு ‘தெரியலை!’ என்று சொல்ல ஹர்திகா வாயை திறக்கும் முன், “அது.. அது.. அழகுல மயங்கி விழுந்துட்டேன்!” என்று அபியே தண்ணீர் க்ளாசை இறுகப்பற்றியபடி முணுமுணுவென்று யாரையும் பார்க்காமல் கூறினாலும், அந்த அறையில் ஏசியின் சத்தம் மட்டுமே ஒலித்ததால், அபியின் குரல் துல்லியமாக சர்வாவை சென்றடைந்தது!

தள்ளி நின்றிருந்த சர்வாவிற்கே கேட்டதென்றால், ஹர்தி, தீபக் மற்றும் அங்கேயிருந்த சொற்ப பேருக்கா கேட்காமல் இருக்கும்?

‘என்ன சொல்றா?’ என்று புரியாமல் முழித்த ஹர்தி, ‘சேட்டையை பாரேன்!’ என்று கடுப்பான சர்வாவை தவிர்த்து மற்ற எல்லோரும் அபியின் படவசனத்தில் சிரித்துவிட்டார்கள்!

சர்வாவோ, “ஓய்! என்னைய பார்த்தா நாய் சேகர் மாதிரியா இருக்கு!” என்று மிரட்ட, ‘நானெங்கே அப்படி சொன்னேன்?’ என்று பதறிப்போனாள் அபி!

“பின்னே அழகுல மயங்கி விழுந்தேன்னு நக்கலா பண்ற?” சர்வாவின் கேள்விக்கு, அபியோ ஹர்தியின் காதில் என்னமோ சொன்னாள்! அதற்கு ஹர்தியும் அவளை சிரிப்போடு முறைத்தவள் ஏதோ மெல்ல முனுமுனுத்தாள்!

“என்ன? என்ன சொல்லுது அந்தப்பொண்ணு? நீயும் என்ன சொல்ற?” சர்வா விரட்டிக்கொண்டே அவர்களை நெருங்க, அபியோ பயந்துப்போய் வேகமாய் ஹர்தியின் கையை பற்றிக்கொண்டாள்.

“சரி.. சரி.. அந்தப்பொண்ணு உன்னைப்பார்த்து பயப்படுதுன்னு நினைக்கிறேன்! நீயும் விரட்டாத!” என்று தீபக் தான் அதைக்கண்டு சர்வாவை அடக்கவேண்டியிருந்தது!

பிறகு ஹர்திகாவும் அபியை நிற்கவைத்து வெளியில் அனுப்ப, அவளும் சர்வாவை தான் குறுகுறுவென பாவம்போல் பார்த்துவைத்து நகர்ந்தாள்!

“சாரி ரெண்டு பேருக்கும்! யூ போத் ஆர் ஹெர் ஃபேவரைட் ஸ்டார்ஸ்! ரெண்டுபேரையும் ஒரே டைம்ல இப்படி பக்கத்துல பார்த்ததில் அதிர்ச்சியாகிட்டா போல!” என்று அபிக்காக பேசியவள் சட்டென்று சிரித்துவிட, இரு ஆண்களும் என்னவென்பது போல அவளை பார்த்தனர்!

“இல்லை.. சர்வாவை ரொம்ப பிரமிப்பில் பார்த்தவ, அவன் முறைப்பா கேள்வி கேட்டதும்! ‘எனக்கு அவரைப் பிடிக்கலை ரொம்ப ஓவரா சீனை போடுறாருன்னு’ சொல்லிட்டாளா? அதான் எனக்கு சிரிப்பு வந்துருச்சு!” என்று அப்பொழுதும் விடாமல் அபி சொல்லியதை நினைத்து சிரித்தாள் ஹர்திகா!

தீபக்கும், “ஓவரா சீனைப்போடாதடா!” என்று சிரித்தபடியே நண்பனை நக்கல் செய்தவன் அடுத்து எடுக்கவேண்டிய காட்சியை பற்றி விவரிக்க ஆரம்பித்தான்! அதில் எல்லோரும் கலந்துவிட, சர்வாவும் அதில் கலந்தாலும் அபியின் வார்த்தைகளில் ‘சீன் போடுறேனா சொல்ற? இரு உன்னை என்ன செய்றேன் பாரு?’ என்று மனதிற்குள் அதையே நினைத்து சூழுரைத்துக்கொண்டான்!

ஏனென்றால் அவன் அபியை அவனது ரசிகையாகவே முதலில் பார்க்கவில்லை! தன்னோடு நடித்துக்கொண்டிருக்கும் ஹர்திகாவிற்கு வேண்டப்பட்டவளாய் தான் அவனது கண்களிலும் கருத்திலும் முதலில் பதிந்து இருந்தாள்! அதனால் தோழிக்கு தெரிந்தவள், மேலும் மற்றொரு தோழியான சஞ்சுவின் ட்ரெயினி என்பதையும் தாண்டி இவளும் திரையுலகில் இருக்க போகிறவள், தங்களுக்குள் ஒருத்தி என்ற எண்ணத்தை அவனுக்குள் விதைத்தது! அதுவே அவளை கொஞ்சம் வம்பிழுப்போம் என்று அவனுக்கு சொல்லிக்கொடுத்தது!

காட்சிகளை விளக்கியபடி இருந்த தீபக் தான் சர்வாவின் மௌனத்தை முதலில் கண்டுக்கொண்டான்! “சர்வா!” என்று அவன் அழைத்தும் நிமிராமல் சர்வா தனது கையில் இருந்த காகிதத்தில் கண்ணை பதித்து யோசித்துக் கொண்டிருக்க, இந்தமுறை கொஞ்சம் குரலை உயர்த்தி சர்வாவின் கவனத்தை தன்பக்கம் கொண்டுவந்தான் தீபக்!

நண்பனை ஏறிட்ட சர்வாவோ என்னவென்பது போல பார்த்துவைக்க, “என்ன யோசிக்கிற?” என்று கேட்டான் தீபக்! அதற்கு பதிலாய் சர்வாவோ ‘ஒன்றுமேயில்லை!’ என்று தலையாட்டும்போதே குறும்பு புன்னகை வெளிவந்தது சர்வாவின் உதட்டினில் இருந்து!

‘இவன் சிரிப்பே சரியில்லையே!’ என்று தீபக் குறுகுறுவென பார்க்கும் பொழுதே, ஹர்தியும் நண்பர்கள் இருவரின் முகபாவனைகளையும் ஊன்றி கவனித்தாள்! திரைக்கு வந்த புதிதிலிருந்து சர்வாவை நன்கு தெரியும், தீபக்கோ குறுகிய காலத்திலேயே நண்பனானவன்! இருவரின் குண இயல்பையும் அவளால் அதிகமாக இல்லையென்றாலும் நன்கு புரிந்துக்கொள்ள முடியும்! அவர்களின் சேட்டையையும் அவளால் கண்டுப்பிடித்துவிட முடியும்!

அதுபோலவே இப்பொழுதும் நண்பனின் பார்வையை கண்டுக்கொண்டவள், “நோ சர்வா! பாவம் அவ!” அவன் அபியை தான் வம்பு செய்ய காத்திருக்கிறான் என்று சரியாய் உணர்ந்து எச்சரித்தாள்! அதன்பிறகே தீபக்கும் உணர்ந்தான்!

“டேய்! வேணாம் விட்டுரு! சின்ன பொண்ணு அழப்போறா?” என்று அவனுமே எச்சரிக்கை செய்தான்!

இருவரையும் நன்றாக முறைத்த சர்வாவோ, “என்னைப்பார்த்தா எப்படி இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்? நான் என்ன அப்படி கஷ்டப்படுத்துற அளவு சீண்டுறவனா?” என்றபடி கையிலிருந்த பேப்பரை மேஜையின் மீது பட்டென்று போட்டவன் “சும்மா மைல்டா பிரான்க் பண்ணலாம்ன்னு தான் இருக்கேன்! என்னமோ ஓவரா நீங்க மிரட்டுறிங்க?” என்று லேசாய் கோபப்பட்டான்! ஹர்தியும் தீபக்குமே பதிலுக்கு முறைப்புடன் சர்வாவை பார்த்தனர்!

“எனக்கு பிடிக்கலை சர்வா! அவ என்னை நம்பி வந்திருக்கா!” என்று கூறிய ஹர்திகாவிற்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்பதை அவளது முகமே காட்டிக்கொடுத்தது!

உடனிருந்த அந்த சிலரோ “சர்வா சாரை பத்தி தான் நமக்கு தெரியுமே? அவர் அப்படியெல்லாம் ரொம்ப பயமொருத்தமாட்டார்! நாமளும் கொஞ்சம் ஜாலியா இந்த ப்ரான்கை ரசிக்கலாம்!” என்று இவர்களை சமாதானம் செய்து, சர்வாவிற்கு பச்சைக்கொடி காட்டினர்! வேறு வழியில்லாமல் இருவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையாயிற்று!

“என்னமோ பண்ணித்தொலைங்க! ஆனா மேட்டர் சீரியஸ் ஆச்சு! உங்க அத்தனை பேர் தோலையும் உரிச்சிருவேன்!” படுபயங்கரமாய் மிரட்டல் விடுத்தான் தீபக்!

அடுத்த பக்கம்