நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 7 (3)

“உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வ? நான் அப்படியே சும்மா இருக்கனுமா? எல்லாத்துக்கும் நீதான் காரணம்! நீ ப்ரொபோஸ் செஞ்சதில் பயந்துப்போய் தான் அபி எங்கேயோ சொல்லாம போயிருப்பா? ஏற்கனவே கல்யாணம்ன்னு தான் குடும்பத்தை விட்டு வந்தா.. இப்போ நீ சொன்ன காதலை கேட்டு.. உன்னால தான் எங்ககிட்ட கூட சொல்லாம போய்ட்டா? என்னை நம்பி வந்த பொண்ணு அவ.. அவளோட பாதுகாப்புக்கு நான் தான் முழு பொறுப்பு!” என்று சஞ்சு அடுக்கி கொண்டே போக, இப்பொழுது மொத்தமாய் அதிர்வதும், குழம்புவதும் சர்வாவின் முறையாயிற்று!

“என்ன சொல்ற? அவளுக்கு குடும்பம் இருக்கா? என்கிட்டே தனக்கு யாருமில்லைன்னு சொன்னா..” என்று பரிதவித்தவன், “என்னதான் நடக்குது? ஒண்ணுமே புரியலை.. புரியுற மாதிரி சொல்லு!” என்று சஞ்சுவை குழப்பமாய் ஏறிட்டான்!

“ஆரம்பத்துல இருந்தே எதுவுமே தெரியாம தான் இருக்க சர்வா நீ? ஆரம்பத்திலிருந்து நீதான் ஒண்ணுமே தெரியாம உளறுற, ஒண்ணுமே தெரியாம எல்லாத்தையும் செஞ்சு வைக்கிற? இப்போ வந்து விளக்கம் கேட்கிறயே? முன்னாடியே கேட்டா என்ன உனக்கு உயரமா குறைஞ்சு போயிரும்?” என்று அதற்கும் கத்தியவள் அபி யார், எங்கிருந்து வந்தாள், எப்படி தங்களிடம் வந்து சேர்ந்தாள் என்று சர்வாவிற்கு தெரிவித்தாள்!

ஷ்ரவந்தியோ மௌனமாய் சர்வாவின் முகபாவனையை உள்வாங்கியபடி கூர்மையாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்! சஞ்சு தான் பேயாட்டம் ஆடினாள்! அவளது வார்த்தைகளில் மிகவும் அதிர்ந்து போனவன் அப்படியே தொய்ந்து போய் அருகிலிருந்த உயரமான குஷன் நாற்காலியொன்றில் அமர்ந்துவிட்டான்!

“எப்போயிருந்து சர்வா நீ இப்படி மாறுன? எப்பவுமே தீவிரமா அலசி ஆராய்ஞ்சு ப்ரோஸ் அண்ட் கான்ஸ் பார்ப்பியே? இப்போ ஹர்திகா விஷயத்தில் அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு உனக்கு ஏன் தோணலை சர்வா? அபிகிட்ட உன்னோட லவ் சொன்னியே.. அவளைப்பத்தி என்ன ஏதுன்னு என்கிட்டே ஒரு வார்த்தை ஏன் கேட்கலை? மனசில் இருக்கிறதை முகத்துக்கு நேரா யார் என்னன்னு பார்க்காம சொல்வியே? இப்போ இந்த விஷயத்தை மட்டும் எங்ககிட்ட ஏன் மறைச்ச?” ஆதங்கமாய் கேள்வி எழுப்பினாள் ஷ்ரவந்தி!

சர்வாவோ, “தீபக் கிட்ட இதை பேசினேன்!” மெல்லிய குரலில் தெரிவித்தான்! தீபக் சர்வாவை போல மற்றொரு நடிகன்! சர்வாவின் உயிர் தோழனும் கூட! ஷ்ரவந்தி சஞ்சுவிற்கும் பரிச்சயமானவன் தான்!

“அபி உங்களுக்கு பயப்படுறாளோன்னு தோணுச்சு! நான் பார்த்தப்ப எல்லாம் நீங்க அவகிட்ட கண்டிப்போட தான் இருந்திங்க! அதனால தான் எதுவும் சொல்ல எனக்கு தோணலை!” சர்வாவின் விளக்கம் இப்படி வந்தது!

“ஹர்திகா போனதுக்கு என்மேல சந்தேகப்பட என்ன காரணம் சர்வா?” விடாமல் கேள்வி எழுப்பினாள் ஷ்ரவந்தி!

“உங்க அம்மா தான்!” அவள் நினைத்தது போலவே சரியாய் சொன்னான் சர்வா!

“நினைச்சேன்!” என்று விரக்தியாய் சொன்ன ஷ்ரவந்தி, தானுமே அங்கிருந்த மற்றொரு உயர்ந்த குஷன் நாற்காலியில் அமர்ந்து, “நான் முதல்ல என்னை மட்டும் தான் சந்தேகப்பட்டேன்! நான் தான் ஏதோ செஞ்சுட்டேனோன்னு குழம்பியிருந்தேன்! ஏற்கனவே மனசெல்லாம் தளர்ந்து போயிருந்த எனக்கு உன்னோட இந்த குற்றசாட்டு மொத்தமா கொன்னே போட்டுருச்சு! அதுக்கப்பறம் தான் ஒன்னொன்னா யோசிக்க யோசிக்க அம்மாவா இருக்குமோன்னு தோணிச்சு! உனக்கொரு விஷயம் தெரியுமா சர்வா? அம்மாக்கும் ஹர்திகாவுக்கும் இப்போ எந்தவொரு பிரச்சனையும் இல்லை! அவங்களே அவகிட்ட போய் மன்னிப்பு கேட்டதும் நடந்து இருக்கு! அவ நம்மளை விட்டு போன கொஞ்ச நாளுக்கு முன்னாடி! உனக்கு நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைனா.. அம்மாமேல இன்னமும் சந்தேகமா இருந்ததுன்னா.. அப்பாகிட்ட கேட்டுப்பார்! அவர்கிட்ட என்னைக்கும் பொய் சொல்லமாட்டாங்க அம்மா! அவர்கிட்ட பொய் சொன்னாங்கன்னா, ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிக்கனும்ன்னு நினைச்சு இருந்தாங்கன்னா.. கண்டிப்பா அப்பா காட்டுற முகமே வேற! அது உனக்குமே நல்லா தெரியும்!” தாய்க்காக பரிந்து பேசும் போதே கண் கலங்கியது ஷ்ரவந்திக்கு!

சர்வாவும் அதை அப்பொழுது உணரத்தான் செய்தான்! உண்மைதான்! ஷ்ரவந்தி சொல்வது போல பொய்யையும் குணக்கேடையும் விரும்பமாட்டார் விஸ்வநாத்! திரையுலகம் தான் அவருக்கு எல்லாம்! அவரின் தயாரிப்பில் நடிக்கும் பொழுது யாருக்கும் எந்தவொரு குறையுமில்லாமல் பார்த்துக்கொள்வார்! சிறு தவறு யாரேனும் செய்தாலும் கூட பொறுத்துக்கொள்ளமாட்டார்! அதில் மனைவி மக்கள் என்றெல்லாம் பாராபட்சம் கிடையாது! தவறென்றால் தவறு தான்!

ஏற்கனவே தனது அவசரத்தினால் மனம் வருந்திய சர்வா, இப்பொழுது மொத்தமாய் தோழிகளை பார்க்க முடியாமல் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்! ஷ்ரவந்தியோ ‘என்னை சந்தேகப்பட்டு விட்டாயே?’ என்று குமுறலுடன் தான் இருந்தாள் இன்னமும்! சஞ்சு தான் முதலில் சுதாரித்து, “நான் காஃபி சொல்றேன்!” என்று கதவை நோக்கி நகர முயல, அவளை தடுத்த சர்வா, வேண்டாமென்பது போல தலையை ஆட்டினான்!

பின்பு எதையோ யூகித்தவனாய் ஷ்ரவந்தியின் பக்கம் திரும்பி, “நான்தான் காரணம்னு நீ ஏன் நினைச்ச? நான் வெனிஸ்ல அபிகிட்ட ப்ரொபோஸ் செஞ்சது யாருக்குமே தெரியாது! சஞ்சு, தீபக், ஹர்திகாக்கு கூட.. ஆனா உனக்கெப்படி தெரிஞ்சுது?” வியப்பாய் கேள்வி கேட்டான்!

ஷ்ரவந்தியோ எதுவும் சொல்லாமல் அருகிலிருந்த துணி வெட்டும் மேஜையில் தான் வரும்பொழுது வைத்த தோல்பையினில் இருந்து ஒரு நாட்காட்டியை எடுத்து காண்பித்தாள்!

“அபியோடது! அவளோட திங்க்ஸ் கொஞ்சம் இங்கே பூனேல ஹர்தி வீட்ல இருந்துச்சு! எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் மூலமா கேட்டு எடுத்துட்டு வந்துட்டேன்!’ என்றவளுக்கு வருணைப் பற்றி சர்வாவிடம் சொல்ல தோன்றவில்லை! வேணாம் என்று நினைத்துவிட்டாளென்று தான் சொல்லவேண்டும்! மேலும் தான் கொடுத்த வேலையை முடித்துக்கொடுத்து சென்றுவிடுபவனை எல்லோருக்கும் காட்ட மனமில்லாதவளாய் உண்மையை மறைத்துவிட்டாள்.

அதில் ஒருப்பக்கத்தை புரட்டியவள், “இதுல சொல்லியிருக்கா எல்லாமே அவளுக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு!” என்றபடி அவனிடமே அதை விரித்தவாறு காண்பித்தாள்!

சர்வாவோ அதை பார்க்கக்கூட இல்லை! அதை வாங்கி அப்படியே மூடிவைத்தவன், “எனக்கு தெரியும்! அதனாலதான் அவகிட்ட நான் போய் ப்ரொபோஸ் செஞ்சேன்! அவளுக்கு என்மேல நல்ல புரிதலும் அபிப்ராயமும் வந்தப்பறம்” என்று மென்மையாய் சொல்லியதில் இரு பெண்களும் அவனை வியப்பாய் ஏறிட்டனர்!

“ஆனா என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா! ரொம்பவும் கோபப்பட்டா! இந்த காதல் நமக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டா! எனக்கும் கோபம் வந்துருச்சு! நான் இல்லாதப்ப தான் என்னோட காதல் புரியும்ன்னு சண்டைப்போட்டேன்! அவளும் பதிலுக்கு கத்தினா!” என்று இருவரையும் பார்த்து சொன்னான் சர்வா!

“அதனால தான் நீ அன்னைக்கு அவார்ட் ஃபங்ஷன்ல ‘காதலி ஊடல்ல இருக்கான்னு’ சொன்னியா?” என்று கேட்ட ஷ்ரவந்திக்கு, ஆமென்றபடி தலையாட்டி மென்புன்னகை புரிந்தவனின் எண்ணமெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன் அபியை முதன்முதலாய் சந்தித்த நாள்முதல், கடந்த எட்டு மாதங்களுக்கு தன்னைவிட்டு பிரிந்த நாள்வரை பயணித்து அவளின் நினைவுகளில் மூழ்கி திளைக்க ஆரம்பித்தது! பெண்களின் மனத்தையும் அவளே ஆக்கிரமித்து இருந்தாளென்று சொல்லவும் வேண்டுமோ?

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி