நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 8 (3)

கொஞ்சம் வில்லன் சிரிப்பு சிரித்த சர்வாவோ, “என்ன கொழுப்பு இருந்தா என்னை நாய் சேகர்ன்னு சொல்லுவா?” என்று உடல் சிலிர்த்து பொங்க, தீபக் தான், “டேய்! அவ அழகுல மயங்கி விழுந்ததா தான் சொன்னா? மாத்தி சொல்லாத!” சிரிப்போடு மிரட்டினான்!

“அதுல வடிவேலுவை தான் அப்படி சொல்வாங்க! அதுல அவர் பேர் அதுதான்!” சண்டையிடும் சேவலாய் சீறினான் சர்வா!

“இதுல ஒன்னும் குறைச்சலில்லை! வாடா வந்து முதல்ல வேலையை பாரு! அடுத்து என்ன எடுக்கணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன்!” என்று அவனை வேலையில் ஈடுப்படுத்தினான் தீபக்!

சர்வா தன்னை வைத்து செய்ய காத்திருப்பது தெரியாமல் அபியோ வெளியில் ஹர்திகாவிற்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்தோரோடு அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்!

சிறிது நேரம் கழித்து ஹர்திகாவும் மற்றவர்களும் வெளியில் வர, அதையுணர்ந்து ஹர்திகாவிற்கு வேண்டிய ஆடையை எடுத்து அவளிடம் சென்ற அபி, அவள் அதை வாங்கிக்கொண்டு ஆடைமாற்ற சென்றுவிடவும், இவள் மீண்டும் தனது அரட்டையை அடிக்க ஆரம்பித்தாள்!

அந்தநேரம் தீபக்கோடு வெளியில் வந்த சர்வாவின் தேடல் பார்வையில் வந்து விழுந்தாள் அபி! ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரிடம் கண்கள் பெரிதாய் விரிய, கருநிற கண்மணிகள் அங்குமிங்கும் நர்த்தனமாட சந்தோசச் சிரிப்போடு மிகவும் ஆச்சர்யமாய் பேசிக்கொண்டு இருந்தாள்!

சிரிப்பிற்கு மனதோடு நேரடி தொடர்பு உள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போல, அவளது ஆச்சர்யமான மனநிலைக்கு எதுவாய் அவளது கண்களும் வதனமும் இருந்ததில் சர்வாவிற்கு தன்னையறியாமல் ஒரு புன்னகை எழுந்தது!

‘வம்பிழுக்க வேண்டாமென்று’ ஒருபக்கம் எண்ணினாலும், ‘சும்மா செய்து பார்ப்போம்! அதிகமாய் சீண்ட வேண்டாம்!’ என்று எச்சரிக்கையுடன் சொல்லியது சர்வாவின் மனது இன்னொரு பக்கம்!

அதன்விளைவாய் அடுத்து வந்த நிமிடங்களில் அங்கேயிங்கே என்று அலையும் அபியை கண்களாலேயே பின்தொடர்ந்தவன், முதலில் சின்ன சின்னதாய் தனது வம்பை ஆரம்பித்தான்! அவளை தனது உதவியாளர் மூலம் வரவழைத்து தான் படிக்க வேண்டிய ஸ்க்ரிப்ட்டை சத்தமாக வாசிக்க சொன்னான், மேக்கப் போடும்பொழுது கண்ணாடியை பிடிக்க சொன்னான், பாடல் காட்சியை படம் பிடிப்பதால் கொரியோகிராஃபரை விட்டு அவளுக்கும் ஆட கற்றுக்கொடுக்க சொன்னான்! தீபக் ஆக்ஷன் சொல்லும் சமயத்தில் க்ளாப்ஸ் அடிக்க வைத்தான்! ஸ்டில்ஸ் எடுக்கும்பொழுது பக்கத்தில் நிற்கவைத்து தான் எப்படி நின்றால் நன்றாகயிருக்கும் என்று அவளைவிட்டே சரிப்பார்க்க வைத்தான்! அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பாக வந்தது! ‘வம்பு செய்வோம் என்று வந்துவிட்டு இது என்ன விளையாட்டு’ என்று அவனது மனசாட்சியே அவனை படுகேவலமாய் லுக் விட்டது!

தீபக்கோ, ‘என்னடா இது? ப்ரான்க் பண்ணப்போறேன்.. பழி வாங்கப்போறேன்னு பெரிய இவனாட்டம் போனான்! இப்படி எடுபிடி வேலை வாங்கிட்டு இருக்கான்! இவனோட ப்ரான்க் ரேஞ்ச்சே இதானா? நார்மல் லெவலை விட ரொம்ப மோசமா இருக்கே?’ என்று சர்வாவின் சேட்டையில் குழம்பிப்போய் நிற்க, ஹர்தியோ ‘அதைவிட இவன் சொன்னதை எல்லாம் உடனே உடனே அபி செய்றது தான் நம்பமுடியாம இருக்கு! எனக்கு பிஏவா இருந்தப்ப கூட அபி இவ்வளவு வேலை செய்யலை! இப்போ என்னாமா வேலைப்பார்க்குது!’ என்று ஆச்சர்யப்பட்டுதான் போனாள்!

உண்மைதான்! சர்வா கூறிய அனைத்தையும் முதலில் லேசாய் பயத்தோடும், பின்பு கொஞ்சம் ஆசையோடும் அதற்கடுத்து முழுதாய் ஈடுபாட்டோடும் எல்லாம் செய்தாள்! சர்வாவிற்கே நிறைய ஆலோசனைகளை வழங்கி ‘பாருடா’ என்று வியக்க வைத்தாள். அந்த ஈடுபாடு தான் அபியை பற்றி சர்வாவின் மனத்துள் விழுந்த நன்விதையாகும்! அதிலேயே அவனது வம்பிழுக்கும் படலத்தை விட்டுவிட்டான் சர்வா! படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருவரும் பலநாள் பழகியவர்கள் போல ஆகிவிட, மற்றவர்கள் தான் ‘ங்கே’ என்று முழித்தார்கள்! சர்வாவும் அபியும் யாரையுமே கண்டுக்கொள்ளவில்லை!

எல்லாம் முடித்து கிளம்பும் போது, சர்வா அபியை அழைத்து, “நீ நாளைக்கு என்னோட காஸ்ட்யூம் என்னென்னன்னு சஞ்சுகிட்ட கேட்டு என்னோட வீட்டுக்கு வந்து கொடுத்துடு!” என்று சொல்ல, அபியோ அதற்கு ‘சரி சர்வா சார்!’ என்று மிகபவ்யமாய் மண்டையை மண்டையை ஆட்டினாள்!

தீபக் ‘ஹான்.. டேய் உனக்கு இந்தப்படம் முழுக்க வெள்ளை சட்டை தாண்டா!’ என்று வாயை பிளக்க, ஹர்தியோ, ‘அப்போ என்னோட காஸ்ட்யூம் எல்லாம் யார் கொண்டுவந்து பார்ப்பா? என்று முறைக்க, இருவரையுமே டீலில் விட்டான் சர்வா!

அபி அனைத்திற்கும் தலையாட்டிவிட்டு எல்லோரிடமும் ‘பை’ சொல்லிவிட்டு வெளியேற, தீபக் தான் “இங்கே சர்வஜித் சர்வஜித்ன்னு ஒரு ரோசக்காரன் மீசை வைச்சுட்டு இருந்தான்! யாராவது பார்த்திங்களா?” என்று தேடுவது போல கேட்க, அவனுக்கு பதில் தந்தது ஹர்திகா தான்!

“இப்போ தான் மீசையை மண்ணுல போட்டுட்டு எங்கேயோ போனான்!” என்று இடையில் கைவைத்து சர்வாவை முறைத்தபடி சொன்னாள்!

அதற்கு சர்வாவோ ‘ஒரு தெய்வீக சிரிப்பை’ மட்டும் வெளியிட்டு அங்கேயிருந்த இருக்கையொன்றில் மிகவசதியாய் அமர்ந்தவன், அப்படியே இரு கைகளையும் தலைக்கு பின்னே கோர்த்து நன்றாய் கால்நீட்டியபடி இவர்களை பார்த்து,

“ரொம்ப நல்ல பொண்ணுலடா! சாஃப்ட் அண்ட் கைண்ட் நேச்சர்!” என்று அபியை பாராட்டி சிலாகித்து சொன்னானே பார்க்கலாம்?

அவ்வளவு தான் ஹர்தியும் தீபக்கும் ஒருவருக்கொருவர் பார்த்தவர்கள், கோபத்தில் கொந்தளித்தபடி, “இதைத்தானே நாங்களும் சொன்னோம்!” என்றபடி சர்வாவை மொத்தி எடுத்துவிட்டார்கள்! இவர்கள் மூவரின் விளையாட்டை கண்ட மற்றவர்கள் சிரித்தபடி அவர்களின் வேலையை பார்த்தார்கள்!

சர்வா சிரிப்போடு இருவரின் அடிகளையும் வாங்கிக்கொண்டவன், ஒருக்கட்டத்தில் வலி பொறுக்கமாட்டாமல், “சரி.. சரி.. விடுங்கடா!” என்று அவர்களிடம் கத்தி கெஞ்சியபிறகே சர்வாவை விட்டவர்கள் அவனைப்பார்க்க, அவனுமே இவர்களை பார்க்க, ஒரு நிலைக்கு மேல் மூவருக்குமே சிரிப்புதான் வந்தது!

“நீ இருக்கியே? எப்படிடா இப்படி அந்தர் பல்டி அடிக்கிற?” தீபக்கின் கேள்விக்கு இன்னமும் விடாமல் ஆர்ப்பாட்டமாய் சிரித்தான்! அவனுக்கே தெரியவில்லை! தனக்கு என்னவாயிற்று என்று? பிறகு நண்பனுக்கு எப்படி அவனால் பதில் சொல்லமுடியும்? அதனாலேயே சிரிப்போடு சமாளித்தான்!

ஹர்திகாவோ, “வர வர உன் சேட்டைக்கு அளவில்லாம போயிட்டு இருக்கு! நாளைக்கு எல்லாம் இந்த வேலையை வைச்சுக்காத! நான் கிளம்புறேன்!” என்று விடைபெற்றாள்!

சிரித்தபடி சொன்னாலும் ‘எனக்கு இதெல்லாம் பிடிக்கலை சர்வா!’ என்ற மறைமுக எச்சரிக்கையும் அதில் இருந்ததை சர்வா உணர்ந்து தான் இருந்தான்!

அவள் சென்றபிறகு தீபக் தான், “ஹர்திகாக்கு நீ செய்றது பிடிக்கலை போல! சின்னதா ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்ட்ங்கானா கூட ஏதாவது பெருசா ஆகிருமோன்னு பயப்படுறா” என்று ஹர்திகாவை புரிந்துக்கொண்டு சொன்னான்!

“எனக்கும் புரியுது! அந்தப்பொண்ணுக்கு யாருமில்லை போல, இவ பொறுப்பில் இருக்கிறதால கொஞ்சம் அதிகமா சேஃப்டி கான்சியஸோட இருக்கிறா! அப்படி எல்லாம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டான்னா அவளோட பயம் போயிரும்!” என்று நண்பனை சமாதானம் செய்தான் சர்வா!

“நீ சொல்லு? ஏன்னா உன் பார்வையும் பேச்சும் நடவடிக்கையும் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம்ல தான் இருக்கு? டூ யூ லைக் அபி?”

தீபக் கூர்மையாய் சர்வாவை நோக்கி கேள்வி எழுப்பினான்! சர்வாவோ நண்பனை குழப்பமாய் ஏறிட்டவன், பிறகே அவன் சொன்னதை நன்றாய் உள்வாங்கினான்!

“லைக்? எஸ் ஐ லைக் ஹெர்! ஐ லைக் ஹெர் கேரக்டர், பிஹேவியர், டெடிகேஷன்.. இப்படி சொல்லிட்டே போகலாம்!” என்று விளக்கும்போதே தீபக் ஏதோ சொல்லவருவதை கண்டு, “சப்போஸ் நீ மீன் பண்ணுறது.. லவ், சோல்மேட் அப்படின்னா.. சத்தியமா அப்படியில்லைன்னு தான் சொல்வேன்! பார்த்தவுடனே ஒரு பொண்ணை லவ் பண்ணுறதுக்கு இது சினிமா இல்லை! அதுவும் எனக்கெல்லாம் சத்தியமா வராது! அண்ட் ஐ கான்ட் டேட் மை ஃபேன்ஸ்” என்று உறுதியுடன் சொல்ல, தீபக் அவனின் கூற்றை ஒத்துக்கொண்டு மறுநாளைய படிப்பிடிப்பு வேலைகளை பார்வையிட சென்றான்! சர்வாவோ இன்னமும் சொகுசாய் அமர்ந்துக்கொண்டு தனது போனை உதவியாளரிடமிருந்து வாங்கியவன், கேம் விளையாட ஆரம்பித்தான்!

‘போன்ல கேம் விளையாடுறியா தம்பி! வா.. நிஜத்துல உன் லவ்வை வைச்சு கேம் விளையாடுறேன்!’ என்று அழகான சதி செய்ய விளைந்தது காதல் விதி!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி