நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 7 (2)

“ஹர்தி.. ஹர்தி.. ஹர்திகா! நிறுத்து..! ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை..” என்று அவர் எத்தனை சமாதானம் செய்தாலும் அதையெல்லாம் உணரும் மனநிலையில் ஹர்திகா இல்லை!

அவர்களின் பிடியிலிருந்து திமிற ஆரம்பித்தாள்! பொறுத்துப்பொறுத்து பார்த்த அந்த பெண்மணியோ ஒருக்கட்டத்தில் சமாளிக்க முடியாமல் அவளை விட்டவர், விட்ட வேகத்திலேயே பளாரென ஒரு அறைவிட்டார்.

ஹர்திகாவோ அப்பொழுதுதான் கண்களை திறந்தவள் அவரைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். கூடவே அபியை பார்த்தும்! அவ்வளவு தான் தேம்பித்தேம்பி அழுதாள் ஹர்திகா! அந்த பெண்மணியோ ஹர்திகாவையே வெறித்து பார்த்தார்.

அவளின் நிலையில் இப்பொழுது அபிக்கே கண்ணீர் வந்துவிட, ஹர்திகாவை நெருங்கி, “சாரி.. சாரி.. சாரி..” என்று பலமுறை அழுதுக்கொண்டே மன்னிப்பு வேண்டினாள். மேலும் அவரை முறைத்தபடி.. ‘யாரைக்கேட்டு அடித்தாய்’ என்பதுபோல! அவரோ ஒன்றும் பேசாமல் ஹர்திகாவின் மேலேயே பார்வையை பதித்து இருந்தார்!

ஹர்திகாவோ பிடிவாதம் பிடித்து அழும் குழந்தைபோல அழுதவள், பின்பு அப்படியே முட்டியிட்டு அறையின் மூலையை நோக்கி சென்று ஓவென அழ ஆரம்பித்தாள். குழந்தை ஒன்று அடி வாங்கினால் பயந்துபோய் மூலைக்கு செல்லுமே அதுபோல தோற்றம் கொடுத்தது அபிக்கு! அதில் அவளது கண்ணீர் முற்றிலும் நின்றுவிட, ஹர்திகாவை நெருங்கி அவளின் அருகில் அமர்ந்தாள்!

“ஹர்திகா! ஹர்தி!” என்று அவளின் கைப்பற்ற, ஹர்திகாவோ கையை கொடுக்காமல் தன்னிடமே இறுக பினைத்துக்கொண்டாள். ஆனால் அபியோ விடாமல் அவளது கைகளை எடுத்து தன்னோடு இணைத்துக்கொண்டாள். மற்றொரு கையினால் அவளது முகத்தை வருடி, முன்நெற்றியில் வந்துவிழுந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட, அந்த ஸ்பரிசத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை வந்த ஹர்திகாவோ அபியின் தோளில் விசும்பியபடியே முகம் புதைத்து கொண்டாள்.

“சரி.. சரி.. அழக்கூடாது! வேண்டாம்.. பயப்படாத.. எதுவுமில்லை.. நானிருக்கேன்!” அபி சமாதானம் செய்தாலும், ஹர்திகா அதையெல்லாம் காதில் வாங்கினாலும் அவளது அழுகை மட்டும் நின்றபாடில்லை.

அவளை தன்னிடமிருந்து பிரித்த அபி, “இப்போ எதுக்கு நீ இப்படி அழற? நான் தான் வந்துட்டேன்ல?” என்று அழுத்தமாய் கண்டிப்புடன் சொல்லிய நொடி, ஹர்திகாவோ பதில் பேச தெரியாமல் முழித்தாள்.

வாய் திறந்து பேச முயற்சித்தாலும் அவளால் பேசவே முடியவில்லை! விழிகள் பயத்தில் மிரண்டு போயிருக்க, ஆ ஊவென சத்தம் மட்டும் வந்தது!

மற்றவளோ, “என்ன பண்ணுது ஹர்திகா? ஏதாவது சொல்லு? தண்ணி வேணுமா?” என்று கேட்டு எழுந்த சமயம், அவளின் கையைப்பற்றி மீண்டும் தன்னோடு இறுக்கிக்கொண்ட ஹர்திகா அபியின் தொண்டையை நோக்கி கைகளை கொண்டு சென்று தடவிவிட்டவள், பின் தனக்கும் அதுபோல தடவிக்கொண்டு வாயை மட்டும் திறந்து திறந்து மூடினாள் மிரட்சி மட்டும் விலகாமல்!

அவள் காட்டிய செய்கையில் எதையும் உணர்ந்துக்கொள்ள முடியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டாள் அபி! அப்படி அவள் பயந்துக்கொண்டிருக்கும் பொழுதே அவள் மேலேயே மயங்கி சரிந்திருந்தாள் ஹர்திகா. இப்பொழுது அந்த பெண்மணியே பயந்து போனவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்க விரைந்தார்!

சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸ் வந்துவிட, ஹர்திகாவை அதிலேற்றினார்கள். அபி ஹர்திகாவோடு செல்ல ஆம்புலன்ஸ் ஏறிய சமயம்! அவளை தடுத்தவர், “நீ இங்கேயே இரு!” என்று குரலில் மாற்றமே இல்லாமல் கூறினார்!

“நான் இல்லாம அவ எப்படி? நானும் வரேன்.. நான் பார்த்துக்குறேன்!” அபிக்கு ஹர்திகாவை சமாளிக்க தான் வேண்டுமே! தானில்லாமல் அவள் மிகவும் கோபம் கொள்வாளே? என்ற தவிப்பில் கூறினாள்.

அவரோ, “இதுநாள் வரைக்கும் நீ பார்த்த லட்சணம் போதும்! என் பொண்ணை எனக்கு பார்த்துக்க தெரியும்! நீ முதல்ல இங்கேயிருந்து கிளம்புற வழியை மட்டும் பாரு!” என்று முகத்தில் அடித்தார் போன்று சொல்ல, அபிக்கோ கண்ணீர் வழிந்தது! ஆம்புலன்சின் கதவுகளை செவிலியர் ஒருவர் மூடிவிட, வண்டி விரைந்தது மருத்துவமனை நோக்கி! அதன் பின்னோடு ஹர்திகாவின் அன்னை அவரது காரில் சென்றார்.

அபியோ எதுவும் செய்ய இயலா தனது நிலையை எண்ணி அழுதபடியே அப்படியே நின்றிருந்தாள். அவளது உணர்வினை வேரோடு வெட்டி சாய்த்திருந்தது அவரின் செயல்!

இத்தனை வருடங்கள் ஹர்திகாவின் துக்கத்திலும் சந்தோசத்திலும் பங்கு கொள்ளாதவர், இன்று அவளை அவரே பார்த்துக்கொள்வதாய் கூறியதும் அபிக்கு அழுகையையும் மீறி ஆத்திரம் தான் வந்தது! அப்படியே வாசல் படியிலேயே குளிரையும் மீறி அமர்ந்துவிட்டவள், இறைவனிடம் தனது பிரார்த்தனையை முன்வைத்தாள்.

‘கடவுளே! போதும் எல்லாமே! எப்படியாவது அவங்களை நல்லபடியா கொண்டுவந்து சேர்த்துடு!’ இதுமட்டுமே அபியின் பிரார்த்தனையாக இருந்தது! எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ? கீழ்வானில் ஆதவனின் வருகையோடு ஒரு கார் வந்த பிறகு தான் தன்னிலை வந்தாள்.

ஹர்திகாவின் அன்னையின் கார் தான்! அதிலிருந்து வேகமாய் இறங்கியவர், “பெரிய இவளா நீ? நீ இல்லாம எதுவுமே நடக்காதுன்ற மாதிரி எல்லாம் செஞ்சு வைச்சிருக்க? இத்தனை நேரம் கொஞ்சம் செடேஷன்ல தூங்கிட்டு இருந்தவ, கண்ணு முழிச்சு பார்த்து உன்னைத்தான் தேடுறா? நீ பக்கத்துல இல்லாம யாரையும் விடமாட்டிக்கிறா! பெத்த அம்மா என்னை சுத்தமா கண்டுக்கவேயில்லை!” என்று பொருமித்தள்ளினார்!

அபிக்கோ அவரின் கத்தலை எல்லாம் மீறி ஹர்திகா தன்னை தேடுவதை கண்டு மனம் பனித்து தான் போனது! அன்பால் மட்டுமே பிணைந்த பந்தமல்லவா அவர்களது? யாரையும் அதற்குள் அவர்கள் வரவிட்டதேயில்லையே? சஞ்சு, ஷ்ரவந்தி இருந்தாலும் அபிக்கு மட்டுமே தோழி என்ற ஸ்தானத்தை தாண்டி சகோதரி என்றொரு பந்தத்தை கொடுத்து இருந்தாளே ஹர்திகா! இனிமேல் யாரால் தடுக்க முடியுமாம் உள்ளே பெரும் வடிவமெடுத்து எழும் பேரன்பினை?

அதில் அபியின் முகம் விகசித்து தான் போனது! “என்ன ரொம்ப சந்தோசப்படுறியா? அவ நீ இல்லாம கத்துறதை பார்த்து டாக்டர்ஸ்சே உன்னை வர சொல்றாங்க! போ.. போய் தேவையானதை எல்லாம் பேக் பண்ணு.. அவகூட இரு!” என்று விரட்டியவர்,

“ஆனா ஒன்னு! எதாவது அவளைப்பத்தி சின்ன தகவல் கூட வெளில போச்சு! உன் குடும்பத்தை தொலைச்சு கட்டிருவேன்..” என்று மிரட்டல் விடுத்தார்! அபியோ அதையெல்லாம் அரசியல்வாதிகளை போல கிடப்பில் போட்டவள், ஹர்திகாவோடு உடனிருக்க மருத்துவமனைக்கு கிளம்ப ஆயத்தமானாள்! கால்நிமிடத்தில் தயாரானவள், அதற்குள் தேவையான அனைத்தையும் எடுத்துவைத்துக்கொண்டு ஹாலில் தனக்காய் காத்திருந்த ஹர்திகாவின் தாயாரோடு பயணித்தாள்!

“எல்லாம் எடுத்துவைச்சுட்டில?” அப்பொழுதும் அவர் விடாமல் தனது கெத்தை காட்ட, அபியோ புன்னகை மட்டும் புரிந்து “எதுவும் மறக்கலை!” என்று உறுதியுடன் பதில் தந்தாள் இனி என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தினை மனத்தில் விதித்துக்கொண்டு!

ஆனால் இங்கே மும்பையிலோ அந்த திடத்திற்கு முற்றிலும் மாறாய் ‘இனி என்ன செய்யவேண்டும்’ என்ற சிந்தனையே இல்லாமல் மொத்தமாய் மனமெல்லாம் கலங்கிப்போய் இருந்தனர் சஞ்சுவும் ஷ்ரவந்தியும், கொஞ்ச நேரத்திற்கு முன் சர்வா கூறிவிட்டு சென்ற வார்த்தைகளை கேட்டு!

“யார்கிட்ட நீ வெனிஸ்ல ப்ரொபோஸ் பண்ணின சர்வா?” ஷர்வந்தியின் கேள்வியில் சர்வா ‘இது எதற்கு?’ என்பதுபோல பார்த்தானென்றால், சஞ்சுவோ ‘சர்வா யாரையாவது விரும்பினானா?’ என்ற ரீதியில் முழித்தாள்!

“கேட்கிறேன்ல? பதில் சொல்லு?” என்று அதே கேள்வியை அவளது கண்கள் கெஞ்சலுடன் வலியுறுத்த, தனக்குள் எழுந்த வலியை கண்கள் மூடி சமன் செய்தவன், ஷ்ரவந்தியை ஏறிட்டு, “அபிநிதி!” என்று அழுத்தமாய் சொன்னான்!

“என்னது அபியா? என்கூடவே தான நீயிருந்த எப்போ அபிகிட்ட போய் ப்ரொபோஸ் செஞ்ச? என்கிட்டே சொல்லக்கூட இல்லை?” சஞ்சு குழப்பமும் அதிர்வுமாய் கேள்வி கேட்க, சர்வாவோ தோழியை கூர்மையாய் முறைத்தவன், “உன்கிட்ட சொல்லிட்டு தான் செய்யணுமா? நீயென்ன ப்ரீகேஜி டீச்சரா.. விட்டா பாத்ரூம் போனா கூட உங்கிட்ட சொல்லிட்டுத்தான் போகணும்ன்னு சொல்வ போல?” என்று எகிறினான்!

“நீ இந்த எகிறலை எல்லாம் என்கிட்டே தான் காட்டுவ? உனக்கு நான் தான கோமாளி! எங்கே இவகிட்ட காட்டேன்?” பதிலுக்கு எகிறினாள் சஞ்சு! சர்வாவின் மேல் அத்தனை கோபமிருக்கிறதே, வகையாய் வேறு சிக்கியிருக்கிறான்.. அப்படியே விட மனம் வருமா அவளுக்கு? வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்!

அடுத்த பக்கம்