நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 7

வானின் வெண்மேகத்திற்கு சவால் விடுவது போல, அந்த சிகரத்தின் மீது அடர்ந்து பரவியிருந்தது வெண்பனி! அதன்மேல் மிகவும் கம்பீரமாய் நின்றிருந்தான் அவன்.. கருநீலமும், புகர் நிறமும் கலந்த, பனிசறுக்கு செய்வதற்கென்றே அணியும் பிரத்யேக ஆடையும் அதற்குரிய பூட்ஸ் அணிந்து மிடுக்கும் வசீகரமுமாய் காணப்பட்டான் அவன்! குளிர் தலைக்குள் இறங்காமல் தடுப்பதற்காய் தலையில் தலைக்கவசத்தை அணிந்தவன், அப்படியே கையுறையும் மாட்டிக்கொண்டு, வலது புறம் திரும்பினான்.

அங்கேயிருந்த வானுர்தியின் அருகில் நின்றிருந்த அவனது தோழர்களுக்கு இடது கையை உயர்த்தி ‘தம்ப்ஸ் அப்’ காட்டியவன், அவர்களுக்கு சற்று தள்ளி நின்றிருந்த அந்த பச்சை நிற விழியழகிக்கு இதழ் விரித்து வசீகர புன்னகையை உதிர்த்தவன் அப்படியே அவளை நோக்கி கண்சிமிட்டினான்! அவளோ பதிலுக்கு லேசாய் சிரித்து வைத்தாள். அவனோ அவளை பார்வையாலேயே அழைக்க, தயக்கமும் தவிப்புமாய் அவனை நெருங்கினாள் அவள்.

அவளின் கைப்பிடித்து அருகில் இழுத்து கொண்டவன், “பயப்படுறியா ஹர்திகா?” என்று அவளின் விழிகளில் தன்னை தேடியபடியே இளம்புன்னகையுடன் கேட்டான்.

‘இல்லையே!’ என்பதுபோல உதட்டை பிதுக்கு தோளை குலுக்கினாள் ஹர்திகா தனது பயத்தை அவனுக்கு காட்ட மனமில்லாதவளாய்! ஆனால் அவளது கண்களோ அவனது முகத்தை முழுதாய் தனக்குள் பதித்து கொண்டிருந்தது!

அவனோ கண்கள் சுருங்க சிரித்தவன், “பொய் சொல்லாத கேடி… கண்ணு வேற சொல்லுது? பயப்படுற தானே?” என்று அவளது வதனத்தை ஆழமாய் பார்த்து மறுத்தவன் தனது கேள்வியை மீண்டும் முன் வைத்தான்! அவளோ எதுவும் தோன்றாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதையுணர்ந்து மென்மையாய் புன்னகை செய்தான் அவன்!

அவள்புறம் நன்றாக திரும்பி அவளது கையிரண்டையும் பற்றியவன், “இந்த கண்ணு ரெண்டுலயும் பயம் தெரிஞ்சா என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே!” என்று அவளது கையுறையின் மேலே இதழ்களை பதித்தவன் அப்படியே பார்த்துக்கொண்டிருக்க, அவளோ இடது பக்கம் திரும்பி தூரத்து வெண்சிகரமொன்றில் தனது பார்வையை பதித்திருந்தாள்!

அவனது தீண்டலில் உண்டான கூச்சமும் குறுகுறுப்பும் ஒருபுறமிருந்தாலும், அவனது வார்த்தைகளில் வெளிப்பட்ட காதலிலும் கனிவிலும் தனக்குள் உருவாகும் மாற்றத்தை அவனிடம் மறைக்கவே திட்டம்! கண்கள் கலங்கிவிட்டால் இன்னமும் வருத்தப்படுவானே? என்று தவிப்பு வேறு வந்து தொலைத்தது ஹர்திகாவிற்கு!

ஆனாலும் அவன் அதையுணராமல் இருப்பானா? அவளை இன்னமும் நெருங்கி அவளது குல்லாவில் கொஞ்சமே கொஞ்சம் வெளியில் தெரிந்த பக்கவாட்டி நெற்றிப்பரப்பில் அழுத்தமாய் இதழொற்றியவன், அதில் அதிர்ந்து போய் தன்னை நோக்கி திரும்பிய அந்த மரகத விழிகளில் மென்மையாய் முத்தமிட்டான்.

ஹர்திகாவோ விழிகளை மூடியபடி அப்படியே கசிந்துருகி நின்றாள். அவனோ, “பயப்பட வேணாம்! நான் வந்துருவேன்!” என்று மென்மையாய் சொன்னான். அதன்பிறகே விழிகளை திறந்தாள் அவள். அவனுக்காக ‘சரியென்று’ தலையாட்டியவள் அவனுக்காகவே அவள் மனத்துள் பரவிய காதலை புன்னகையாய் பரிசளித்தாள்.

“ஒகே.. ஒகே.. போய் அவங்களோட இரு!” என்று அனுப்பி வைத்தவன், அவள் அவர்களோடு வானுர்தியில் ஏறும்வரை அவளையே பார்த்தபடி நின்றான். அவள் பார்க்கும் நேரத்திலேயே கண்ணாடியை அணிந்தவன், காலில் ஸ்கீசை மாட்டி, அதனின் போல்களை இறுக்கமாய் பற்றிக்கொண்டான். வானோடு வானுர்தி பயணிக்க, அவனோ பனியின் மேல் தனது சாகசத்தை காட்டினான்.

அவனை இங்கே வானுர்தியில் இருந்து கேமராவில் விடியோ எடுத்துக்கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள். மலை முகடுகளின் பனியில் வளைந்து நெளிந்து பாய்ந்து கொண்டிருந்தான்.

வேகம்.. வேகம்.. வேகம் மட்டுமே.. தூரத்தில் இருந்து பார்க்கும் தனக்கே இத்தனை பயமாக இருக்கிறதே! அவனுக்கு இருக்காதா? மிரட்சியுடன் காணப்பட்டது அவளின் கண்கள்.

‘அவனுக்கு ஏது பயம்? இதுவரை அவனது பயத்தை நீ பார்த்திருக்கிறாயா? முதல் சந்திப்பிலேயே ஒரு உயிரை காப்பாற்ற வேண்டுமென்று ஐந்தாவது மாடியிலிருந்து எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் கவசமும் இல்லாமல் படுபத்திரமாய் ஏறிவிட்டு குதித்தவனாயிற்றே?’ அந்த சம்பவத்தை நினைக்கும்போதே உடல் சிலிர்த்தது என்றால், இப்படி ஒரு சம்பவத்தில் பேச்சே வராமல் கிடந்தாள் ஹர்திகா.

கண்சிமிட்டினால் கூட கண்ணிலிருந்து மறைந்துவிடுவானோ என்று தோன்றியது அவளுக்கு! வைத்த கண் வாங்காமல் அவன் போகும் திசையிலேயே அவளது விழிகளும் பின்தொடர்ந்தது!

‘பெரிய இவான் ஒரிகானோன்னு நினைப்பு அவரோட ரெக்கார்டை ப்ரேக் பண்ணுறவன் போல போறான்! மெதுவா தான் போயேன்!’ மனம் பரிதவித்தது அவனுக்காய்! பனிச்சறுக்கு போட்டிக்காய் ஒன்றும் அவன் இதை செய்யவில்லை. ஆவணப்படம் எடுக்க வந்த இடத்தில் இப்படி சாகசம் செய்யவேண்டுமென்ற ஆசையில் வந்திருக்கிறான். இதுபோல பலமுறை செய்திருக்கானாம்! அப்படி என்னதான் செய்கிறான் என்ற ஆவலில் அவனோடு தொத்திக்கொண்டபடி இவளும்! சாதாரணமாய் படத்தில் பார்ப்பதற்கும் இப்படி நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் மிரண்டு போயிருந்தாள்.

வானுர்தியில் அவனது நண்பர்களோ அவனின் பெயரைச்சொல்லி கத்தி கூச்சலிட்டனர். இவளையும் அவனுக்காய் கத்த சொன்னார்கள்.

‘பேச்சே வரலையாம்? எங்கேயிருந்து கத்த?’ இவள் அவர்களை புதுவித ஜந்துக்களோ என்று பார்த்துகொண்டிருக்கும் பொழுதே, அவர்களில் ஒருவன், “வலாங்கே” என்று கத்தினான்!

இத்தாலிய மொழியில் வலாங்கே என்றால் பனிச்சரிவு என்று அர்த்தம்! அதைக்கேட்டு அதிர்ந்து போன மற்றவர்களோ, அவன் காட்டிய திசையில் திரும்பினர்! கீழே சென்றுக்கொண்டிருப்பவனின் பின்னேயிருந்து மலையின் மேலெழும்பி சீறிப்பாய்ந்து சரிந்து கொண்டிருந்தது பனிப்பாறைகள்!

அதைக்கீழே சென்றுக்கொண்டிருப்பவனும் உணர்ந்திருப்பான் போல, இன்னமும் வேகமெடுத்து சீறிப்பாய்ந்தான்! ஆனால் இயற்கைக்கு மிஞ்சிய சக்தியேது? மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்துக்கொண்டிருந்தது பனிச்சரிவு! ஆங்காங்கே இருந்த மரங்களையும் பாறைகளையும் தன்னோடு பெயர்த்தெடுத்து இழுத்துவந்தது!

‘அதற்கே அந்த கதியென்றால்? அவனுக்கு..’ அதற்குமேல் அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!

‘நோ.. அவன் வேண்டும்.. எனக்கு அவன் வேண்டும்!’ எங்கிருந்து தான் அத்தனை வேகம் ஹர்திகாவிற்கு வந்ததோ? அவன் பெயரைச்சொல்லி கத்த ஆரம்பித்தாள் தனது குரல் அவனை எப்படியாவது எட்டிவிடும் என்ற நோக்கத்தில்!

அதையெல்லாம் உணராதவனோ மின்னல் வேகத்தில் இயற்கையின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தான். ஒருக்கட்டத்தில் அவன் கையிலருந்த POLE வழுக்கி செல்ல, பிடிமானம் இல்லாமல் நிலைதடுமாறி அவன் விழுந்த நொடி, சரியாய் அந்நேரம் பனிச்சரிவும் அவனை நெருங்கியிருந்தது!

அவ்வளவுதான் ‘ஹோவென்ற’ கதறலோடு கைகளை உதறியபடி அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள் ஹர்திகா!

அபியோ முதல்நாள் மனவுளைச்சலிலும், மனச்சோர்விலும் மிகவும் அசந்துப்போயிருந்தாள்! அரைகுறை தூக்கமும், அதையும் மீறி தூங்கிவிட்டால் ஏதாவது மனத்திற்கு விரும்பத்தகாத அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயத்திலேயே உருண்டுக்கொண்டிருந்தாள்! நடுநிசியில் தான் ஒருவழியாய் தனது உறக்கத்தை தொடங்கினாள். ஆனால் அதற்கடுத்து வந்த சிற்சில நிமிடங்களில் ‘வீலென்ற’ அலறலும் தொடர்ந்து கேட்ட கதறலும் அவளை விதிர்த்துப்போய் எழவைத்தது!

அலறியடித்து ஹர்திகாவின் அறைக்கு ஓடியவள் பட்டென்று கதவைத்திறக்க, சரியாய் அவள்மேல்.. வலது பக்க தோள்பட்டையில் வந்து விழுந்தது ஒரு சிறிய பூஜாடி! பதறிப்போனாள் அபி! அறைக்குள் செல்லவும் பயந்தாள் ஹர்திகாவின் நிலைமையை கண்டு!

இரவு விளக்கின் மங்கிய நீல ஒளியில், எதைக்கண்டோ பயந்தவளாய் எதையுமே காண விருப்பமில்லாதவளாய் கதறிக்கொண்டிருந்தாள் ஹர்திகா! மாத்திரையின் உபயத்தில் உறங்கியிருப்பாள் என்று அபி நினைத்திருக்க, அவளோ இப்படி கண்மண் தெரியாமல் அறை மொத்தத்தையும் அலங்கோலமாக மாற்றியிருப்பதை கண்டு பீதியில் நின்றாள். ஆனால் அப்படியே நின்றுக்கொண்டிருக்க முடியாதே? குருட்டாம்போக்காய் வீசிக்கொண்டிருக்கும் அத்தனை பொருட்களையும் மீறி ஹர்திகாவை நெருங்கி அவளை பற்றிய நொடி இன்னமும் அதிகமாய் கதறல் வெளிவந்தது! ஓலமாய் ஓங்கி ஒலித்த அவளின் சத்தத்தில் மிரட்சி அதிகமாய் தென்பட்டது!

என்ன இப்படி அலறுகிறாள் என்று அபி யோசிக்கும் பொழுதே அவளது பிடி தளர்ந்துவிட, ஹர்திகாவோ அபியையே தள்ளவிட்டு அடிக்க முயன்றாள். நொடிநேரத்தில் சுதாரித்த அபியோ அப்படியே சமாளித்து நின்றவள், ஹர்திகாவை இறுகப்பிடித்து பின்னிருந்தபடியே அணைத்து கொண்டாள். அதற்குள் அபியை முன்தினம் சத்தமிட்ட அந்த பெண்மணியும் வந்து ஹர்திகாவை பற்றிக்கொண்டார்.

அடுத்த பக்கம்