நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 6 (4)

அவளைப்போலவே சஞ்சுவும், என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டவள், அதை உடனே செயல்படுத்த எண்ணினாள்! நின்று அடிக்கவெல்லாம் நேரமில்லை என்பதால், திட்டத்தை சிறப்பாய் போட்டாள்! நொடிநேரத்தில் போனிலேயே ஜே.டியையும், எலகன்ட் ரங்கின் நிதி ஆலோசகரையும், ஸ்டுடியோவின் ஆஸ்தான வக்கீலையும் கான்ஃபரன்ஸ் காலில் பிடித்தவள், மூவரிடமும் அதை கூறினாள்! ஜே.டி.க்கு அவள் கூறியதில் சுத்தமாகவே உடன்பாடில்லை! ஆனால் மற்ற இருவரும் அவளுக்கு சாதகமாக பேச, மெஜாரிட்டியே வென்றது! ஒருவழியாய் ஜே.டியையும் அவளின் வழிக்கு கொண்டுவந்து, என்ன செய்யலாம் என்று அவர்களிடமும் ஒருவார்த்தை கேட்டு, ‘தான் என்ன செய்யப்போகிறேன்’ அன்று அதையும் திறம்பட விளக்கியவள், அவர்கள் எல்லோரும் ஒருமனதாய் ஒத்துக்கொண்டதும் மகிழ்ந்து தான் போனாள்! ‘விடியலில் தான் அங்கேயிருப்பதாக’ தெரிவித்துவிட்டு போனை வைத்தாள்.

பின்பு தனது திட்டத்தை பற்றி தோழியிடம் பகிர்வதற்கு வெளியில் வர, அவள் வாசலிலேயே இருப்பதை உணர்ந்து அங்கே சென்றாள் சஞ்சு! தோழியின் மோன நிலையை கலைக்காமல் அவளது அருகில் அமர, அரவம் உணர்ந்து கண்திறந்து பார்த்தாள் ஷ்ரவந்தி!

“சர்வாவை வைச்சு செய்ய ரெடியாகிட்ட போல?” ஷ்ரவந்தி தோழியின் முகத்தெளிவை கண்டு இளநகை புரிந்தபடி கேட்டாள்!

“ஆமா! ஒருநாள் என்னை படுத்தின பாட்டுக்கு, ஒருவாரம் அவனை என்ன செய்யுறேன் பாரு! ஏண்டா இவளை பகைச்சுக்கிட்டோம்ன்னு தோணனும் அவனுக்கு!” என்று சூழுரைத்த சஞ்சு, “நீ என்ன டிசைட் பண்ணிருக்க? உன் முகத்தை பார்த்தாலே உனக்கு விருப்பமில்லாததை தான் செய்யப்போறன்னு தோணுது!” என்று அவளை உணர்ந்தவளாய் அக்கறையுடன் கேட்டாள்!

“இஷ்டமில்லை தான்.. ஆனாலும் அவனை சும்மாவிடவும் மனசில்லை! அத்தனை விஷயத்தையும் நாலா பக்கமும் பார்த்துப்பார்த்து செய்றவன்! இன்னைக்கு மனசில எதையோ வைச்சிட்டு, தப்பா புரிஞ்சிட்டு பண்ணுறான்! நாம எவ்ளோதான் விலகி நின்னாலும் சும்மா விடமாட்டான்! நம்மளை போலவே உண்மை தெரியுறவரைக்கும் அமைதியா இருக்கமாட்டான்! சோ.. அவன் போக்கிலேயே போகணும். அதுக்கு நான் அவன்கூடவே இருக்கணும்! உண்மையை புரியவைக்கணும்!” என்று தீவிரமாய் சொன்ன ஷ்ரவந்தி, தோட்டத்தில் தூரத்தே தெரிந்த ஒரு அலங்கார விளக்கினை வெறித்து பார்த்துவிட்டு பின்பு தோழியின் புறம் திரும்பினாள்!

“சோ.. அவன்கூட நடிக்கலாம்ன்னு டிசைட் பண்ணிட்டேன்! வைச்சு செய்ய நானும் ரெடி” என்றுவிட்டு கண்சிமிட்டி புன்னகை புரிந்தாள்!

“ஹேய்! தாட்ஸ் மை க்ர்ள்!” என்று ஆரவாரம் செய்தபடி ஹைஃபை கொடுத்தாள் சஞ்சு!

இப்படி இரு பெண்களும் தனக்கெதிராய் திட்டம் போடுவதை உணராமல் அன்றைய இரவை தனிமையிலும் பழைய நினைவுகளிலும் கழித்தான் சர்வா!

மறுநாளைய விடியலோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விடிந்தது!

ஷ்ரவந்திக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மும்பையில் தான் படப்பிடிப்பு என்பதால் அவளுமே சஞ்சுவுடன் மும்பை வந்திறங்கினாள்! பின்பு மனோஜிற்கு அழைத்து, அவரது தயாரிப்பில், ரமணனின் இயக்கத்தில் சர்வாவுடன் நடிக்க ஒப்புக்கொண்டாள்! அவரும் அவளை வாழ்த்திவிட்டு பூஜைக்கான வேலையை தொடங்குவதாய் கூறிவிட்டு போனை வைத்தார்! இந்த விஷயம் ரமணன் மூலம் சர்வாவிற்கு தெரியவர, தான் நினைத்தது போலவே நடக்கிறது என்ற எண்ணத்தில் அன்றைய படப்பிடிப்பில் பிசியாக நடித்து கொண்டிருந்தான் மறுநாள் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்று உணராதவனாய்!

சஞ்சுவோ காலையிலேயே விமானத்தில் எலகன்ட் ரங்கிற்கு சென்றவள் அங்கே முக்கிய மீட்டிங்கில் இருந்தாள்! அது சர்வாவிற்கு எதிராய் என்று சொல்லவும் வேண்டுமோ?

வருணோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க எண்ணி, முதலில் சென்ற இடம் பூனே! அங்கேதானே அபி அவளது மேல்படிப்பை படித்தாள்! விடுதியில் தங்கியிருந்தாலும், கொஞ்ச நாட்கள் ஹர்திகாவின் பூனே வீட்டிலும் தங்குவாளாம்! அதன் காரணமாகவே அங்கே சென்றுள்ளான்! அதை ஷ்ரவந்திக்கு குறுஞ்செய்தியில் தெரிவிக்க, பதிலுக்கு ‘பத்திரமாக இருக்கவும்! ஜாக்கிரதை!’ என்று அனுப்பினாள் இவள்!

அதைப்பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்ட வருண், அந்த வீட்டிற்கு இரவில் செல்ல முடிவெடுத்தான்! அன்றைய பொழுது நால்வருக்கும் விறுவிறுவென்று போனது!

அதற்கடுத்த நாள், சரியாய் ஒருமணியளவில் எலகன்ட் ரங்கின் டிசைனிங் ரூமில் சில துணிகளை வைத்து புதுவிதமாய் ஆடைகளை வடிவமைத்து கொண்டிருந்தாள் சஞ்சு! அந்நேரம் அவளைத்தேடி புயல் போல வந்து சேர்ந்தான் சர்வா! கையில் சஞ்சுவின் ஆலோசனையால், எலகன்ட் ரங்கின் வழக்கறிஞர் மூலம் கோர்ட்டிலிருந்து வந்துசேர்ந்த நோட்டிஸ்!

கண்ணாடித்தடுப்பு வழியாகவே, அவனது வருகையை உணர்ந்த சஞ்சுவோ ஷ்ரவந்திக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியவள், தானியங்கி கண்ணாடிக்கதவை திறந்து வேகமாய் உள்ளே வரும் சர்வாவை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றாள்!

“வாங்க! வாங்க! வாங்க தோஸ்த்! உங்களை இங்கே நான் எதிர்பார்க்கவேயில்லை! என்ன சாப்பிடுரிங்க? காஃபியா? டீயா? ரொம்ப ஹாட்ட இருக்கீங்க போல? சில்லுன்னு மில்க்ஷேக் குடிக்கிறிங்களா?” என்று ஆர்ப்பாட்டமாய் உபசரித்தாள்!

அவனோ அவளது உபசரிப்பை தூக்கி கிடப்பில் போட்டவன், “இது என்னது?” என்று அந்த நோட்டிஸை தூக்கி காட்டினான்!

“ஹ்ம்ம்!” என்றபடி அதை வாங்காமல் உத்துப்பார்த்த சஞ்சுவோ, “ஏதோ ரிஜிஸ்தர் போஸ்ட் மாதிரி இருக்கு! உனக்கு வர லவ் லெட்டரை எல்லாம் ரிஜிஸ்தர் போஸ்ட்டா அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்களா உன்னோட ரசிகைகள்!” என்று கிண்டல் செய்தாள்!

“என்ன நக்கலா? நஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருக்க? என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? ஏதோ ஜே.டிக்காக சும்மா விடுறேன்!” ஒருவிரல் நீட்டி எச்சரித்தான் சர்வா! கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது!

“அடேங்கப்பா! அவருக்கெல்லாம் அவ்ளோ சீன் ஆகாது! நல்லா பாருங்க சர்வஜித்! நோட்டிஸ்சே அவர் மூலமா தான் வந்துருக்கு! கையெழுத்தெல்லாம் இருக்கும்! நல்லா உருண்டை உருண்டையா போட்டுருப்பார்!” என்று பந்தாவாக சொன்னாள் ஷ்ரவந்தி!

சர்வாவிற்கு இன்னமும் கோபம் பெருக, “அவர் நீ சொல்லித்தான் இப்படி பண்ணிருப்பார்ன்னு தெரியும்! மரியாதையா நோட்டிசை வித்ட்ரா பண்ணு! இல்லை நடக்குறதே வேற!” என்று மிரட்டினான்!

“பண்ணமுடியாது சர்வா! என்ன பண்ணுவ? நீ ஆரம்பிச்ச கேம்ல நான் உனக்கு ஆப்போனன்ட்டா விளையாடுறேன்! அவ்ளோதான்!” என்று அசால்ட்டாக சொன்ன சஞ்சு, “ஒன்னு உன்னோட காஸ்ட்யூம் டிசைனரா நான் இருக்கணும்! ரெண்டாவது என்னோட ஷோல நீ ராம்ப் பண்ணனும்! இது ரெண்டுமே பண்ணமாட்டேன்னு நீ சொன்னா.. நான் கோட் பண்ணியிருக்க நஷ்ட ஈடு பணத்தை எனக்கு ஒரே பேமன்ட்ல கட்டவேண்டியிருக்கும்! அமவுண்ட் எவ்ளோன்னு தெரியும்ல? கிட்டத்தட்ட ஏழு படத்துக்கு நீ வாங்குற சம்பளம்!” தயவுதாட்சண்யமேயின்றி பதில் மிரட்டல் விடுத்தாள் சஞ்சு!

சர்வாவின் முகமெல்லாம் கோபத்தில் சிவந்துவிட, தனக்கு முன்னே இருந்த ஸ்டூல் ஒன்றை காலால் எட்டி உதைத்திருந்தான்!

நல்லவேளை.. அது தனி ரூம் என்பதால் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை! சர்வாவின் சினத்திற்கு எந்தவொரு பிரதிபலிப்பும் காட்டாமல் அமைதியாகவே இருந்தாள் சஞ்சு!

“என்கிட்டே விளையாடாத சஞ்சண்யா!”

“கோர்ட் ஆர்டர் எல்லாம் அனுப்பி விளையாடலாம்ன்னு என்னை எங்க வீட்ல பழக்கலை! நீ செஞ்சா பழி, நான் செஞ்சா விளையாட்டா.. என்ன நியாயம் இது?” என்று பரிகாசம் செய்தவள், “முதல்ல உன் கோபத்தை குறை சர்வா! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க! நீ ஆத்திரக்காரன் மட்டுமில்லை.. அவசரக்காரன்னும் கூட.. உன்னோட காஸ்ட்யூம் டிசைனரா இருக்க எனக்கு மூணு வருஷ காண்ட்ராக்ட் இருக்கு சர்வா! உடனே அதை கிழிச்சு போடலாம்ன்னு நினைக்காத! என்கிட்டயும் அதே டாக்குமென்ட் இருக்கு! அண்ட் ராம்ப்க்கும் உன்கிட்ட அக்ரிமென்ட் போட்டு சைன் வாங்கிருக்கேன்! மறந்துட்டியா? நீ எப்படி என்னை விரட்டினாலும், நான் வந்துட்டேதான் இருப்பேன்!” அழுத்தமாக உரைத்தாள்!

சில நொடிகள் அங்கே மௌனம் மட்டும் ஆக்கிரமித்து இருந்தது! முதலில் அதை உடைத்தது சஞ்சு தான்!

“ரெண்டே கேள்வி தான் கேட்கிறேன்! நான் சொல்றதை செய்றியா? இல்லை.. எனக்கு மொத்த பணத்தையும் கொடுத்துட்டு போறியா? பதில் சொல்லு..!” என்று அவள் அவனை உறுத்து விழித்து கேட்ட நேரம்…

“ரெண்டு கேள்வி இல்லை சஞ்சு.. மூணு கேள்வி!” என்று கதவை திறந்து நின்றபடி கேட்டாள் ஷ்ரவந்தி! அதில் சஞ்சுவும் சர்வாவும் திரும்பி பார்த்தனர் குழப்பமாய்!

அவர்களை நிதானமாக எட்டுவைத்து நெருங்கியவளோ, சர்வாவின் முன்னே வந்து நின்று, “வெனிஸ்ல நீ யார்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுன சர்வா?” அவனின் மேல் தீவிரமாய் பார்வையை பதித்து கேட்டாள் ஷ்ரவந்தி!

சர்வாவோ ‘இது இப்பொழுது முக்கியமா?’ என்ற ரீதியில் பார்த்தவன், அவளது முகத்தில் என்ன கண்டானோ? பதில் சொல்ல வாயை திறந்த அதேநேரம்.. பனி சூழ்ந்த நள்ளிரவில் அரைகுறை உறக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்த ஹர்திகாவிற்கு முகமெல்லாம் பதட்டம் சூழ்ந்து காணப்பட்டது! கனவொன்று வந்து அவளை மொத்தமாய் மூழ்கடிக்க, அதிலிருந்து வெளிவர முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தாள்!

ஒருக்கட்டத்தில் அது முடியாமல் போகவே, ‘ஹோவென்றே’ பெருங்கதறலுடன் எழுந்தவள் மொத்தமாய் நிலைதடுமாறித்தான் போனாள்! முகமெல்லாம் வெளிறிப்போய், முத்துமுத்தாக வியர்த்திருக்க, கண்ட கனவிலிருந்து மீண்டுவர தெரியாமல் கைக்கு எட்டியதை எல்லாம் விசிறியடிக்க ஆரம்பித்தாள்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி