நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 6 (3)

பின்பு வருணின் பக்கம் திரும்பியவள், “சாரி வருண்! அவ வேறவொருத்தர் மேல இருக்க கோபத்தை உங்ககிட்ட காண்பிக்கிறா.. கொஞ்சம் வேலைல டென்ஷன்! அவ்ளோதான்! என்ன.. கொஞ்சம் கொடைச்சல் தான் அதிகமாயிருக்கு! மத்தபடி வேறயெதுவும் இல்லை!” என்று மென்புன்னகை மாறாமல் இயம்பினாள் ஷ்ரவந்தி!

அதைக்கேட்டு வருணுமே லேசாய் புன்னகை புரிந்தவன், சஞ்சுவை நோக்கி, “எல்லா வேலைலயும் டென்ஷன், வொர்க் ப்ரஸ்ர் இருக்கத்தான் செய்யும்! அதிலும் பொண்ணுங்களுக்கு இன்னும் அதிகமாவே இருக்கும்! பிகாஸ் யூ ஆர் ஆல் மல்டி டாஸ்கர்ஸ்.. உங்க வேலையை டாக்கிள் செய்றதுல தான் இருக்கு எல்லாமே! ரிலாக்ஸ்டா இரு.. நிதானமா யோசி.. நின்னு அடி! ஆனா எப்பவும் கோபப்பட மட்டும் செய்யாத! ஏன்னா.. அதிக கோபம்.. உடம்பு, அறிவு, நடத்தை.. இந்த மூணு விஷயத்தையும் பாதிக்கும்!” அமைதியாய் சொன்னான்!

அவனது அமைதியும்.. வார்த்தைகளும்.. இரு பெண்களுக்குமே ஆழமாய் மனதில் பதிந்து போனது! அதில் இருவரின் உதட்டிலும் அவர்கள் அறியாமலேயே சிறுமுறுவல் மலர்ந்திட, இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கினர்! அவனது வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரிந்ததாய்!

அதைக்கண்ணுற்ற வருணோ இருவரின் மேலும் தனது பார்வையை சிலநொடிகள் செலுத்தியவன், “என்ன செய்யணும்ன்னு சரியா புரிஞ்சுக்கிட்டிங்க போல!” என்று குறுநகை புரிந்தான்!

சஞ்சுவோ, “ஹ்ம்ம்.. ஆமா.. சரி நான் உள்ளே இருக்கேன் ஷ்ரவ்ஸ்! நீ அனுப்பிட்டு வா! பை வருண்” என்று சொல்லிவிட்டு உள்ளறைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டாள்!

ஷ்ரவந்தியோ தோழியின் புறம் சிரிப்போடு பார்வையை பதித்தபடி நின்றிருக்க, தொண்டையை செருமியபடி அவளை அழைத்தான் வருண்! அதில் அவனை நோக்கி திரும்பியவளிடம், “நானும் கிளம்புறேன்!” என்று கூறினான் வருண்!

“சரி வருண்!” என்றவள், “அப்பறம்.. என்னோட பெர்சனல் நம்பர் தரேன் வருண்! எதுனாலும் கால் பண்ணுங்க! சஞ்சு சொன்னது போல இங்கேயெல்லாம் வரவேண்டாம்!” என்று சொல்ல, வருணோ எதுவும் சொல்லாமல் மௌனமாய் அவளை பார்த்தான்!

“தயவு செஞ்சு தப்பா எடுத்துக்க வேண்டாம்! அப்பாவோ அம்மாவோ நான் அபியை தேடுறதை விரும்பமாட்டாங்க! அவங்க கண்ணுல நீங்க பட்டா, நான் உண்மையை சொல்லவேண்டியிருக்கும்! அதிலும் என்னால அப்பாகிட்ட எதையும் மறைக்கமுடியாது! இதே வெளிலன்னா வேலைன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்! யாரும் கேட்கிற நிலைமையும் இருக்காது! ஐ ஹோப் யூ கேன் அண்டர்ஸ்டாண்ட் மீ!” என்று தவிப்பாய் சொல்ல, அதை உணர்ந்தவனாய் சரியென்று தலையாட்டினான் வருண்!

பிறகு அவன் விடைப்பெற, அவனை வழியனுப்ப வாசல்வரை வந்தாள் இவள்! வருணும் எதுவும் சொல்லவில்லை! மௌனமாய் தனது வண்டியை நோக்கி நடந்தான்! இருசக்கர வாகனத்தில் வந்திருந்தான் போல, அதை வெளிப்புற கேட்டின் அருகிலேயே நிறுத்தியிருந்தான்! அதை நோக்கி அவன் செல்ல, அவளுமே உடன் வந்தாள்.

கருமையும் இருள் சிகப்புமாய் இருந்த பைக்கினை நெருங்கி அதிலிருந்த ஹெல்மெட்டை மாட்டியவன், வண்டியில் அமர்ந்தபடி ‘உங்க சென்னைக்கு பைக் தான் வசதியா இருக்கு!” என்று ஹெல்மெட்டின் க்ளிப்பை ‘கிச்சென’ மாட்டினான்! ஷ்ரவந்தியோ புன்னகை மாறாமல் நின்றிருந்தாள்! ஆனால் அந்தப்புன்னகை அவளின் கண்களை எட்டவில்லை என்பதை அந்த அரையிருளிலும் கவனித்தான் வருண்! அது தான் காட்டிய அமைதியால் என்பதை உணர்ந்தே தான் இருந்தான் வருண்! ஆனால் எதுவும் சொல்லவில்லை! மௌனமாய் கிளம்பிவிட்டான்!

அவனை அனுப்பிவிட்டு வந்தவளோ நேரே வீட்டிற்குள் செல்லாமல் வாயில் படியிலேயே அமர்ந்து கொண்டாள்! செருப்பை கழற்றி ஓரமாய் போட்டவள், பாதங்களை மென்மையாய் அழுத்திவிட்டு, கால் முட்டுகளின் மேல் சாய்ந்து கண்மூடிக்கொண்டாள்! காற்றின் சிலுசிலுப்பு அவளின் தேகம் தீண்டினாலும், அது அவளது மனத்தினை சமன் செய்ததாவென்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்! ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாய் யோசிக்க யோசிக்க, தலைதான் வலித்தது!

மனத்தின் குழப்பமும், அதனால் உண்டான பயமும், இத்தனை நாட்கள் தனிமையும் அவளை மொத்தமாய் சுருட்டி தள்ளாவிட்டாலும், கொஞ்சம் யோசிக்கும் திறனை மந்தப்படுத்தியது என்று சொன்னால் அது பொய்யில்லை! நிதானத்துடன் இருப்பதாய் மற்றவர்கள் முன் காட்டிக்கொண்டாலும் அவளொன்றும் அப்படியிருக்கவில்லை என்று அவளே அறிவாள்! ஹர்திகா லண்டன் சென்றுவிட்டதாய் சொல்லிவிட்டு வேறெங்கோ சென்றுவிட்ட உண்மையை அறிந்த நொடியில் மனக்குழப்பம் சூழ்ந்ததென்றால், அபி காணாமல் போய்விட்டாள் என்று தெரிந்த நொடியிலிருந்து பயமும் சேர்ந்து சூழ்ந்து கொண்டது!

இன்னமும் இதுபோலவே இருந்தால் ஒன்றுமே செய்யமுடியாது என்றும் உணர்ந்தாள்! முதல்கட்டமாக சர்வாவை சமாளிக்கவேண்டும்! ஒரு விவரமுமே தெரியாமல் எல்லா நேரத்திலும் ஹர்திகா இங்கேயிருந்து சென்றதற்கு தான் தான் காரணம் என்று கூறும் அவனது முன்கோபத்தை நினைத்து எரிச்சலாக வந்தது! ‘தனக்கே எதுவும் புரியாதவொரு நிலை! இதில் இவன் வேறு!’ இப்படி அவளாய் உழன்று கொண்டிருந்த வேளையில் தான் ஒரு விஷயமே புரிய வந்தது!

‘எதுக்கு இவன் என்னையவே குத்தம் சொல்றான்? நாங்க ரெண்டு பேருமே நல்ல ஃபிரெண்ட்ஸ்ன்னு இவனுக்கு தெரியுமே? இப்படி என்மேல கோபமா இருக்க என்ன காரணம்?’ நினைவினை தட்டி எழுப்பியவளுக்கு சின்னதாய் சந்தேக விதையும் அங்கேதான் எழும்பியது! ‘ஒருவேளை அம்மா ஏதாவது இதற்கு காரணமாக இருக்கலாமோ?’ என்ற எண்ணம் தோன்ற, உடனே பதைத்துத்தான் போனாள்!

ஷ்ரவந்தியின் இந்த பயத்திற்கும், தனது தாயையே சந்தேகப்படுவதற்கும் சில காரணங்கள் இருக்கிறது! ஷ்ரவந்தியின் தாய் சுபாஷினி எண்பதுகளில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர். அவரின் நடிப்பு வாரிசாக மகள் இப்பொழுது இருக்கவேண்டும், அவ்விடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவருக்குண்டு. ஷ்ரவந்தி அதற்கும் பல படிகள் மேலேதான் இருக்கிறாள். நடிகையின் மகள், பிரபல தயாரிப்பாளரின் மகள் என்ற ஷ்ரவந்திக்குத்தான் எல்லாப் பெயரும் புகழும் கிடைக்கவேண்டுமென்ற எண்ணம்! அதை தடுப்பதற்கென்று யார் வந்தாலும் முதலில் அவர்களை தகர்த்தெறியவே பார்ப்பார்! மேலும் மகள் தோழியாய் நினைத்து பழகும் ஹர்திகாவையும் மகளுக்கு போட்டியாய் தான் நினைத்தார் சுபாஷினி.

ஆனால் இயல்பாகவே ஹர்திகாவிற்கு நல்ல நடிப்புத்திறமை இருக்க, நல்ல திறமைமிக்க இயக்குனர்களின் படங்களில் அவளுக்கு தானாகவே வாய்ப்பு கிடைத்தது! திரையுலகிற்கு வந்த சில வருடங்களிலேயே பல மொழிகளிலும் நடித்து நல்ல பெயர் வாங்கியிருந்தாள்! அதனால் அவளை அத்தனை சீக்கிரம் மகளின் வழியிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை! இதையறிந்த மகளும் தாயின் செயல்கள் பிடிக்காமல் ஒதுக்கம் காட்ட, கணவரும் இதையறிந்து கண்டிக்க, அவர்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஹர்திகாவிடம் நேரடியாக மன்னிப்பும் கேட்டிருந்தார்! அதன்பிறகு ஹர்திகாவிடம் அவர் நன்றாகவே பழகி வந்தார்! இது பெண்கள் மூவர் மட்டுமே அறிந்த ரகசியம்! ஒருவேளை அதை நினைத்துதான் சர்வா தன்னை குற்றம் சாட்டுகிறானென்று ஊர்ஜிதமானது ஷ்ராவந்திக்கு!

அவனுக்கொரு காரணம் இருப்பதுபோல், தனக்கும் சர்வாவின் மேல் குற்றம் சுமத்த மிகபெரும் விஷயம் இருக்கிறதே! அதுதான் அந்த வெனிஸ் ட்ரிப்! அங்குதான்.. எல்லா குழப்பமும் ஆரம்பமானது! ஹர்திகாவின் படப்பிடிப்பு, அதன்பிறகு நடந்த கேலண்டர் ஷூட், பிறகு அங்கிருந்து சஞ்சுவும், அபியும் மட்டும் இந்தியா வந்திறங்க, அப்பொழுதே லேசாய் சந்தேகம் வந்தது! ஆனால் அவளை எதையும் யோசிக்கவிடாமல் இரவும் பகலும் படப்பிடிப்பு நடந்ததில், இதையெல்லாம் அப்படியே சுத்தமாய் மறந்துவிட்டாள்! ஆனால் ஒருக்கட்டத்தில் எல்லாம் நினைவுக்கு வருகையில் நிலைமை கைமீறி சென்றிருந்தது!

இனியும் அப்படி ஆகவிடக்கூடாது என்ற யோசித்தவள், தான் என்ன செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்! அந்த முடிவு அவளுக்கு பிடித்தமானதாக இல்லையென்றாலும் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தாள்! வருண் சொன்னது போல நின்று அடிக்க தயாரானாள் என்றுதான் சொல்லவேண்டும்!

அடுத்த பக்கம்