நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 6 (2)

“அவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! மூணு வருஷம் முன்னாடி பிரஸ் மீட் வைச்சு என்கூட நடிக்கமாட்டேன்னு சொன்னவன், இப்போ என் படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொல்றான்! நடிக்காட்டி நடிகர் சங்கத்துல புகார் பண்ணுவேன்னு மிரட்டுறான்! விளையாடுறானா?” என்று கத்தினாள்!

“அவன் என்ன பண்றான்னு எனக்குமே சுத்தமா புரியலை! என்கூட மூணு வருஷம் காண்ட்ராக்ட் போட்டவன், இனி அடுத்த படத்துக்கு நான் வேற காஸ்ட்யூம் டிசைனர் பார்த்துட்டேன்னு சொல்றான்! அடுத்த வாரம் நடக்கப்போற என்னோட ராம்ப்க்கு மாடலா வரேன்னு சொன்னவன்! இப்போ முடியாதுன்னு மூஞ்சில அடிச்சமாதிரி சொல்றான்! இவனை நம்பி நான் மொத்தமா பணத்தை கொட்டிருக்கேன்! நிறைய ஏஜெண்ட்ஸ்க்கு அதுக்குள்ளயும் விஷயம் தெரிஞ்சு இப்பவே பேக் அடிக்கிறாங்க! ஜேடி என்னை கடிச்சு குதறுறார்!” என்று அவள் பங்கிற்கு பதிலுக்கு கத்தினாள் சஞ்சு!

“இவன் ஏன் இப்படி பண்ணுறான்னு எனக்கு நல்லாவே தெரியும்! ஹர்திகா இங்கேயிருந்து போனதுக்கு நான்தான் காரணம்ன்னு நினைக்கிறான்! அதான் என்கூட நடிச்சு என் மூலமா விஷயத்தை கண்டுப்பிடிக்க பார்க்கிறான்! என்னை நேரடியா தாக்க முடியாதுன்னு உன்னையும் இதுல இழுத்து விட்டுருக்கான்!”

ஷ்ரவந்தியின் கூற்றினை கேட்டு, “ஹோ! இப்போ தான் எனக்கு புரியுது! எதுவுமே தெரியாம அவன் இஷ்டத்துக்கு ஒரு முடிவை எடுத்திருக்கானா? நான் இவனை சும்மா விடமாட்டேன்! இவன் இப்போ செஞ்சு வைச்சிருக்க வேலைக்கு இவன்தான் எனக்கு நஷ்ட ஈடு தரனும்!” சஞ்சுவும் கோபம் கொண்டாள்!

“நானும் சும்மா விடமாட்டேன் அவனை! இவன் என்ன என்னை சங்கத்துல புகார் பண்ணுறது! நான் இவன்மேல கம்ப்ளைன்ட் தரேன் இவன் செய்றதுக்கு எல்லாம்!” சூழுரைத்தாள் ஷ்ரவந்தி!

“நானும் பண்ணுவேன்! ஹான்! சர்வா” என்று சஞ்சுவும் கத்தி கண்களை மூடிக்கொண்டாள்! இப்படி இருவரும் சர்வாவை வஞ்சகம் இல்லாமல் திட்டிக்கொண்டிருந்த நேரம்தான் அறைக்கதவை யாரோ தட்டிவிட்டு திறக்க, யாரென்று பார்த்தால் ஷ்ரவந்தியின் பி.ஏ.!

“யாரும் இப்போ உள்ளே வர தேவையில்லை! போங்க முதல்ல! கெட் அவுட்!” என்று கண்களை மூடிக்கொண்டு கையை நீட்டி திட்டினாள் ஷ்ரவந்தி!

ஆனால் அவளோ திட்டையும் வாங்கிக்கொண்டு போகாமல், “ஆனா மேம்! உங்களை பார்க்க வருண்னு ஒருத்தர் வந்துருக்கார்! ரொம்ப முக்கிய விஷயமாம்!” என்று தயக்கமாய் சொல்ல, இரு பெண்களின் கண்களும் பட்டென்று திறந்து ஒருவரை ஒருவர் ஏறிட்டது!

“அபி எங்கே இருக்கான்னு தெரிஞ்சுருச்சு!” என்றனர் ஷ்ரவந்தியும் சஞ்சுவும் ஒரே நேரத்தில் அத்தனை மகிழ்வுடன்!

“எங்கே இருக்காங்க அவங்க?” ஷ்ரவந்தியின் கேள்விக்கு, “வெளி ஹால்ல உட்கார வைச்சிருக்கேன் மேம்!” என்று காரியதரிசி சொன்னது தான் தாமதம்.. பெண்கள் இருவரும் வேகவேகமாய் அவனை தேடி சென்றனர்!

செல்லும் வழியிலேயே, ஷ்ரவந்தியின் மனத்துள், ‘அத்தனை சீக்கிரத்தில் கண்டுப்பிடித்துவிட்டானா’ என்று பிரமிப்பு நிலைத்திருக்க, சஞ்சுவோ ‘எப்படி வீட்டு அட்ரெஸ் தெரிஞ்சுது? நான் எந்தவொரு டீடைல்ஸும் கொடுக்கலையே…’ என்று குழம்பி போய் யோசித்தாள்!

வெளி ஹாலிற்கு அவர்கள் வந்து பார்த்தபொழுது, வருண் சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி தனது மடியினில் ஒரு வாரப்பத்திரிக்கையை வைத்து புரட்டி கொண்டிருந்தான்! அவனை நெருங்கியவர்கள், “ஹாய் வருண்!” என்று சொல்ல, அவனோ நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்னகை மட்டும் புரிந்தான்!

‘மறுபடியும் அதே ரஃப் அண்ட் டஃப் லுக்! இது என் வீடா? இவர் வீடா? வந்துருக்கோம்ன்னு ஒரு கர்டசிக்கு கூட எழ மாட்டிகிறார்? எனக்கும் என்ன கேட்கிறதுன்னு இப்போ குழப்பமா இருக்கே?’ ஷ்ரவந்தியினுள் கோபம் சின்னதாய் குமிழ்விட்டது!

“அதுக்குள்ளயும் கண்டுப்பிடிச்சுட்டிங்களா வருண்?” சஞ்சுதான் அதி ஆர்வமாய் கேட்டாள்!

“மதியம் தானே போனேன்! அரைநாள்ல கண்டுப்பிடிக்க நான் என்ன சூப்பர்மேனா? மனுஷன்!” என்று சஞ்சுவிற்கு குட்டு வைத்தான் வருண். ‘அவன் சொல்லும் பதில் கூர்மையாக வந்தாலும், சஞ்சுவை பரிகாசம் செய்கிறான்’ என்றுணர்ந்த ஷ்ரவந்தியோ இதழ் பிரித்து புன்னகைக்க, சஞ்சுவோ கடுப்பானாள்!

“எதுவுமே கண்டுப்பிடிக்காம எதுக்கு இங்கே வந்திங்க? யார் உங்களுக்கு இந்த அட்ரெஸ்ஸை கொடுத்தது? எதுவாயிருந்தாலும் எனக்கு கால் பண்ணிருக்க வேண்டியதுதானே? இனிமேல இங்க வர வேலையெல்லாம் வைச்சுக்காதிங்க!” சஞ்சுவோ இத்தனை மணிநேரங்கள் சர்வாவின் மேலிருந்த கடுப்பை யாரிடம் காட்டுவதென தெரியாமல் வருணின் மேல் காட்டிக்கொண்டிருந்தாள்!

ஷ்ரவந்திக்கோ தோழியின் பேச்சில் லேசாய் கோபம் வந்தது! “ஏய்! வீட்டுக்கு வந்தவங்கட்ட இப்படியா பேசுவ? சும்மாயிரு!” என்று படப்படத்தாள்!

வருணோ, ‘நீ பாட்டுக்கு கத்து!’ என்று அசால்ட்டாக இருந்தவன், “அப்படியா? முதல்ல உன் போனை எடுத்து பாரு? எத்தனை தடவை கால் பண்ணியிருக்கேன்னு அப்போத்தெரியும்!” என்று அதே அலட்சியத்துடன் சொல்லிவிட்டு, அமைதியாய் நிற்கும் ஷ்ரவந்தியின் புறம் திரும்பியவன், எழுந்து அவளருகில் வந்து நின்றான்! ஷ்ரவந்தி லேசாய் புருவங்கள் நெரித்து அவனையே பார்க்க, தனது லெதர் ஜாக்கெட்டின் உள்ளேயிருந்து ஒரு ‘டே ப்ளானர்’ போன்ற ஒன்றை எடுத்தான் வருண்!

“உங்களோடது ஷ்ரவந்தி! அங்கே டேபிள்ல ஃபைல் பார்த்துட்டு எடுத்தப்ப இதையும் தவறுதலா எடுத்துட்டேன் போல! இதை கொடுக்கத்தான் வந்தேன்! முதல்ல ஸ்டுடியோக்கு தான் போனேன்! ரிசப்ஷன்ல கொடுத்தப்ப, அவங்க பார்த்துட்டு ‘இது அவங்களுக்கு ரொம்பவே முக்கியமான ஒன்னு! டெய்லி ஷெட்யூல்ஸ், முக்கியமான ஈவென்ட் எல்லாம் எழுதி வைச்சிருப்பாங்க, எப்பனாலும் தேவைப்படும் அவங்களுக்கு! வேற யாரும் இதை பார்க்கிறதை விரும்பமாட்டாங்க.. இதைக்காணோம்ன்னா ரொம்ப டென்ஷனாவாங்கன்னு’ சொன்னாங்க! அங்கே வேற ஸ்டாஃப்ஸ் மூலமா கொடுக்கலாம்ன்னு பார்த்தேன். ஆனா ரிஷப்ஷனிஸ்ட் தவிர்த்து வேற யாரும் ஆஃபிஸ் ஸ்டாப்ஸ்யில்லை. சோ நானே அவங்ககிட்ட அட்ரெஸ் கேட்டு நேரடியா வந்துட்டேன்! வெளில உங்க செக்ரட்டரிக்கிட்ட கூட கொடுக்கலை” என்றபடி அவளை நோக்கி நீட்டினான்!

“தாங்க்ஸ் வருண்!” என்று சொல்லி வாங்க முற்பட, அவனது விரல்கள் இன்னமும் மெல்லிய அழுத்தத்துடன் பற்றியிருப்பதை உணர்ந்தாள் ஷ்ரவந்தி! உடனே அவனது கண்களை குழப்பமாய் ஏறிட, அவளது கண்களை மௌனமாய் கண்டபிறகே ‘டே ப்ளானரை’ கொடுத்தான்! வெளிப்பார்வைக்கு ஷ்ரவந்தி யோசனையுடன் வாங்குவது போலத்தான் தெரியும்! ஆனால் நொடிநேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வில் ஷ்ரவந்தி தான் அவனது பார்வையின் அர்த்தம் விளங்காமல் இருந்தாள். சஞ்சு பார்க்கிறாளா என்று திரும்பிப்பார்க்க அவளோ இன்னமும் வருணை முறைத்து கொண்டிருந்தாள்!

‘கவனித்தாளா? இல்லையா?’ மற்றொரு குழப்பம் எழுந்தது ஷ்ரவந்திக்கு! வருணுடைய சலனமேயில்லாத இந்தப்பார்வை அவளுக்கு எதையோ சொல்லவருவது போல தோன்றியது! ஆனால் அதையறிய முடியாமல் தடுமாறினாள்!

அவளை மேலே சிந்திக்க விடாமல், “ஏதாவது பிரச்சனையா? சொல்ல விருப்பமிருந்தா சொல்லலாம்?” அக்கறையுடன் கேட்டான் வருண்!

ஷ்ரவந்திக்கோ, ‘ச்சே! நாங்க ரெண்டுபேரும் அப்செட்டா இருக்கிறதை கவனிச்சிருக்கான் போல. அதான் என் முகத்தையே உத்து உத்துப்பார்த்து கேள்வி கேட்கிறான் போல! நான் தான் குழப்பத்துல இருந்துட்டு எல்லார் மேலயும் சந்தேகப்படுறேன்!’ என்று மானசிகமாக தனக்கே ஓரடி செல்லமாய் வைத்துக்கொண்டவள், வருணின் கேள்விக்கு பதில் சொல்ல வாய் திறக்கும் முன்..

“ஆமா! விருப்பமில்லை! நீங்க கிளம்புங்க!” என்று கைகளை மார்பிற்கு குறுக்காய் கட்டிக்கொண்டு பட்டென்று கூறினாள் சஞ்சு! அவளுக்கு இன்னமும் கடுப்பு போகவில்லை. அதிலும் சர்வாவின் மேல்! அந்த கோபத்தை தான் இப்பொழுது வருணின் மேல் காட்டுகிறாள்!

“வாயை மூடு! அவங்க ஏதோவொரு அக்கறைல கேட்கிறாங்க! எதுக்கு இப்படி கடிச்சு குதறுற?” தோழியின் பேச்சில் கோபம் கொண்டு, மீண்டும் வருணுக்கு கேட்காத மெல்லிய குரலிலேயே கண்டித்தாள் ஷ்ரவந்தி!

அடுத்த பக்கம்