நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 5 (5)

சரியென்று ஹர்திகா தலையாட்ட, செக்யூரிட்டியும் அந்நேரம் வந்து சேர்ந்தனர்! அவர்களிடம் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்ட சஞ்சுவும் ஹர்தியும் அபியோடு ஸ்டுடியோவிற்கு வந்தனர்! ஹர்தியும் அபியும் காரிலேயே இருக்க, அபியின் உடமைகள் கிரீன் ரூமிலும், ஹர்தியின் உடமைகள் விஐபி ரூமிலும் இருப்பதை தெரிந்துக்கொண்டு அதையெடுத்துவர ஒரு பாதுகாவலரை அனுப்பினாள்!

மற்றொருவர் ஓட்டுனர் இருக்கையில் இருந்தார்! உடமைகள் சற்று நேரத்தில் வர, சஞ்சு அதை காரில் வைக்க சொல்லிவிட்டு, பெண்கள் இருவரிடமும் விடைப்பெற்றாள்!

விடியலில் அபி தக்க பாதுக்காப்புடன் காரிலேயே பூனே சென்றுவிட, ஹர்திகா அதன்பிறகு தான் ப்ரைவேட் சார்ட்டரில் சென்னை வந்து இறங்கினாள்! அபி ஸ்டுடியோவில் வந்த தடயங்கள் மொத்தமாய் அழிக்கப்பட்டு, அன்றைக்கு சிசிடிவி கேமரா எதுவும் வேலை செய்யவில்லை என்றானது! மேலும் அந்த சாலையில் கேமராவும் இல்லையாதலால் சஞ்சுவிற்கு சிரமமாக இல்லை!

‘கெட்டதிற்காக என்னென்னமோ செய்கிறார்கள்! நான் நல்லதிற்காக.. ஒரு பெண்ணின் நலனுக்காக தானே செய்கிறேன்!’ எதுவும் தப்பில்லை என்ற மனநிலைக்கு வந்தாள்!

மறுநாள் மைசூர் போலிஸ் வாயிலாக மும்பை போலிஸ் ஒருவர் வர, எதுவும் கிடைக்கவில்லை.. கிடைக்கும்படி சஞ்சு வைக்கவில்லை!

ஜேடியின் குறுக்கு கேள்வியில் கூட, ‘அந்தப்பொண்ணு உங்களைப்பார்த்து பயந்து போச்சு! நான் நாளைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டா! இருக்க டிசைனர்ஸ் வைச்சே ஒப்பாரி வைக்க சொல்லிட்டு போய்ட்டா!’ என்று அவரையும் போட்டு தாக்கினாள்!

அபியின் தந்தை ஒருவாரம் கழித்து வந்து அவர் வேறு பெண்ணை காணோம் என்று சத்தம் போட, செக்யூரிட்டியை வைத்து விரட்டியடித்தாள் சஞ்சு! அதன்பிறகு வந்த நாட்களில் ஹர்தி, சஞ்சுவிற்கு காரியதரிசியாக, சில மேக்கப், ஆடை நுணுக்கங்களை கற்று தேர்ந்தாள்! பிறகு கல்லூரியில் மேல்படிப்பில் சேர்ந்து விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்தாள் அபி! வைரம் விற்ற பணம் இருந்ததே? மேலும் தேவைக்கு பெண்களே உதவி செய்தனர்!

அபியின் தந்தை மகளை கொஞ்ச நாட்கள் தேடியவர், பிறகு ‘தனக்கு மகளே இல்லை’ என்று கூறிவிட்டு ஊரை காலி செய்துவிட்டதாய் விவரம் கிட்டியது!

இந்த ஷ்ரவந்திக்கே சில மாதங்களுக்கு பிறகு தான் அனைத்து உண்மையும் கூறப்பட்டது! அதன்பிறகு அவளுமே அபியோடு நன்கு பழகினாள்! நான்கு பெண்களும் உயிர் தோழிகளாய் மாறினர் அதன்பிறகு என்று சொல்லவும் வேண்டுமோ?

ஆனால்..

எல்லாமே நன்றாக சென்றது கடந்த எட்டு மாதம் முன்பு வரை! அதன்பிறகு தானே இந்த அசோகவனத்து தனிமை! தனக்கு இந்த கதியென்றால்.. தன்னுடன் இருப்பவளோ வனவாசம்.. இல்லையில்லை அறைவாசம் செய்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும்!

‘எதுவாயினும் இங்கே வர.. அதிலும் ஹர்திகாவிற்கு உதவிக்கு வர.. நானே தான் விரும்பி வந்தேன்! எதுவும் தெரியாமலேயே!’ அவள் தனக்குத்தானே பேசிக்கொள்ள, அவளின் மனசாட்சியோ, ‘நிஜமாகவா?’ என்று நம்ப முடியாமல் கேள்வி எழுப்பியது!

‘ஆமாம்! எனக்கு உதவி செஞ்சவங்களுக்கு உதவி செய்யாம சும்மா இருக்க சொல்றியா? அதுவும் தன்னோட நினைவையே இழந்துட்டு இருக்கவங்களுக்கு உதவி செய்யாம எனக்கென்னன்னு போறது மிகப்பெரிய சுயநலம்! உதவி செஞ்சவங்களோட சந்தோஷத்தில் கூட இருக்கோமோ இல்லையோ.. அவங்களோட கஷ்டத்தில் கூட இருக்கணும்! அதான் நான் இருக்கேன்!’ அழுத்தமாய் சொல்லி மனசாட்சியை அடக்க, அதுவோ ‘நம்பிட்டேன்’ என்று ஏளனம் செய்தது!

‘எனக்கு உன்கூட பேச நேரமில்லை! நான் தூங்க போறேன்!’ என்று அபி எழ, ‘அட மக்கே! விடிஞ்சுருச்சு! போ.. போய் என்னை கழட்டி வைச்சிட்டு உன் வேலையை பாரு’ என்று நக்கல் செய்தது அவளின் மனசாட்சி!

‘விடிந்தே விட்டதா? இது கூட தெரியாமல், பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேனே?’ என்று மானசிகமாய் கொட்டு வைத்துக்கொண்டவளுக்கு கீழ்வானின் உதயம் எதையெதையோ நினைவு படுத்தியது!

அதுமட்டுமில்லாமல் பழைய நாட்களை பற்றி நினைத்ததினால், சஞ்சு மற்றும் ஷ்ரவந்தியின் ஞாபகங்கள் மணக்கண்முன் வந்து போனது அபிக்கு!

ஆனால் அதற்குமேலும் சிந்திக்கவிடாமல் மாடியில் இருந்து ஹர்திகா அபியை அழைக்கும் சத்தம் கேட்டது!

இவர்களைப்பற்றி அவர்கள் நினைக்க, அவர்களைப்பற்றி இவள் நினைத்து கொண்டிருந்தாள்!

நினைவுகளுக்கு காரணமானவர்களோ சர்வாவை கிழித்து கொண்டிருந்தனர்!

“அவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! மூணு வருஷம் முன்னாடி பிரஸ் மீட் வைச்சு என்கூட நடிக்கமாட்டேன்னு சொன்னவன், இப்போ வந்து என் படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொல்றான்! நடிக்காட்டி நடிகர் சங்கத்துல புகார் பண்ணுவேன்னு மிரட்டுறான்! விளையாடுறானா?” ஷ்ரவந்தி தனது அலுவலக அறையில் கத்தினாள்!

“அவன் என்ன பண்றான்னு எனக்குமே சுத்தமா புரியலை! என்கூட மூணு வருஷம் காண்ட்ராக்ட் போட்டவன், இனி அடுத்த படத்துக்கு நான் வேற காஸ்ட்யூம் டிசைனர் பார்த்துட்டேன்னு சொல்றான்! அடுத்த வாரம் நடக்க போற என்னோட ராம்ப்க்கு மாடலா வரேன்னு சொன்னவன்! முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றான்! இவனை நம்பி நான் மொத்தமா பணத்தை கொட்டிருக்கேன்! நிறைய ஏஜெண்ட்ஸ் வேற இவன் சொல்றதை வைச்சு இப்பவே பேக் அடிக்கிறாங்க! ஜேடி என்னை கடிச்சு குதருறார்!” என்று அவள் பங்கிற்கு பதிலுக்கு கத்தினாள் சஞ்சு!

“சும்மா விடமாட்டேன் அவனை! இவன் என்ன என்னை சங்கத்துல புகார் பண்ணுறது! நான் இவன்மேல கம்ப்ளைன்ட் தரேன்! இவன் செய்றதுக்கு எல்லாம்!” என்று சூழுரைத்தாள் ஷ்ரவந்தி!

“நானும் பண்ணுவேன்! ஹான்! சர்வா” என்று சஞ்சுவும் கத்தி கண்களை மூடிக்கொண்டாள்!

அப்பொழுது கதவை யாரோ தட்டிவிட்டு திறக்க, யாரென்று பார்த்தாள் அவளின் பி.ஏ.!

“யாரும் இப்போ உள்ளே வரத்தேவை இல்லை! போங்க முதல்ல! கெட் அவுட்!” என்று கண்களை மூடியபடி கையை நீட்டி திட்டினாள் ஷ்ரவந்தி!

ஆனால் அவளோ திட்டையும் வாங்கிக்கொண்டு போகாமல், “ஆனா மேம்! உங்களை பார்க்க வருண்னு ஒருத்தர் வந்துருக்கார்! ரொம்ப முக்கிய விஷயமாம்!” என்று தயக்கமாய் சொல்ல, இரு பெண்களின் கண்களும் பட்டென்று திறந்து ஒருவரை ஒருவர் ஏறிட்டது!

“அபி எங்கே இருக்கான்னு தெரிஞ்சுருச்சு!” என்றனர் ஷ்ரவந்தியும் சஞ்சுவும் ஒரே நேரத்தில் அத்தனை மகிழ்வுடன்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி