நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 5 (4)

“சஞ்சு! ஒரு நிமிஷம் நீ என்கூட வா!” என்று தோழியின் கைப்பற்றி எழுப்பி ஹர்திகா, அபியின் புறம் திரும்பி, “நாங்க வர வரைக்கும் எங்கேயும் போகக்கூடாது! புரிஞ்சதா?” அழுத்தமாய் ஒற்றைவிரல் நீட்டி மிரட்டினாள்!

அபி ‘சரியென்று’ வேகவேகமாய் தலையாட்ட, அதன்பின்பே சஞ்சுவை அழைத்துக்கொண்டு அறையின் உள்பக்க கதவை திறந்து கொண்டு அங்கிருந்த பால்கனி பக்கம் சென்றாள்!

அபியோ சற்று நொடிகள் அமைதியாய் இருந்தவள், அறையின் அமைதியில் அங்கே இருக்க முடியாமல் தானுமே அவர்களை தேடி சென்றாள்! இருவரின் பேச்சும் நன்கு கேட்டது!

சஞ்சு தான் பேசினாள். “இந்தப்பொண்ணு இங்கே இருக்கிறது ரொம்பவே ரிஸ்க் ஹர்தி! முதல்ல இவளை அவங்க வீட்டுக்கு போய் சேர்த்துறனும்! அட்லீஸ்ட் விபரமாவது சொல்லிரனும்!”

“நானும் அதான் யோசிக்கிறேன்! ஆனா அங்கே போய் இவளுக்கு இன்னமும் ரிஸ்க் ஆகிருமோன்னு இருக்கு! நாப்பது வயசு ஆள்! மனசாட்சியே இல்லாம எப்படி இவ அப்பானால இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சதோ?” ஹர்தி மனம் குமுறினாள்!

“படிச்ச முட்டாளுங்கன்னு இதைத்தான் சொல்லணும்! எதை நம்பனும் நம்பக்கூடாதுன்னு ஒரு காமன்சென்ஸ் கூட இல்லை! இப்படியா பெத்த பொண்ணு வாழ்க்கையவே நாசமாக்க பார்ப்பார்!” சஞ்சுவும் மனம் வருந்தினாள்!

ஆனாலும் மாற்றி மாற்றி வருத்தப்பட்டு என்னவாக? பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டுமே?

“சரி இப்போ என்ன செய்ய? இவங்கப்பா போலிஸ் கம்ப்ளைன்ட் ஏதாவது கொடுத்து இருந்தா.. காணோம்ன்னு சொல்லி..”

“இந்நேரம் பண்ணியிருக்கலாம்! வயசு பொண்ணு வேற, எனக்கென்னமோ லெட்டர் எழுதி வைச்செல்லாம் வந்திருக்க மாட்டான்னு தோணுது! மே பீ.. மைசூர் போலிஸ் நாளைக்கு வந்து விசாரிக்கலாம்! ஆர் ஏற்கனவே.. இவ வரதுக்கு முன்னாடியே விசாரிச்சு இருக்கலாம்!” ஹர்தியின் இந்த வார்த்தைகளில் உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த அபிக்கு திடுக்கென்று ஆனது!

‘அப்பா வந்தா என்ன சொல்றது? அடிச்சு கூட்டிட்டு போயிருவாரோ?’

அவளை மேலும் சிந்திக்க விடாமல் இங்கே சஞ்சு பேசினாள், “அப்படி இருந்தால் இந்நேரம் என்கிட்டே விஷயம் வந்திருக்கும், அல்லது ஜே.டி. ஏதாவது சொல்லியிருப்பார்” என்று உறுதியுடன் பதில் தர, கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி கொண்டது அபியின் மனம்!

“பேசாம நாமளே அவங்க அப்பா மேல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிருவோமா?” ஹர்தியின் யோசனையில், மற்ற இருவருக்குமே அதிர்ந்து போனது மனது!

“என்ன விளையாடுறியா? நாம என்ன கம்ப்ளைன்ட் செஞ்சாலும், அவர் பெத்த அப்பா.. அவர் பேச்சு தான் எடுபடும்.. இந்த பொண்ணை வாயை திறக்க முடியாத அளவு மிரட்டுவார்! அப்பறம் போலீஸ்க்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க பார்ப்பார்!” இதெல்லாம் இயலாத காரியம் என்று பதில் தந்தாள் சஞ்சு!

அவ்வளவு தான் மொத்த உயிரும் போயேவிட்டது அபிக்கு! அதற்குமேல் அங்கே இருக்க அவளுக்கு மனம் இல்லை! அறையை விட்டு, ஸ்டுடியோவை விட்டு வெளியேறி இருந்தாள்! இது அறியாமல் சஞ்சுவும் ஹர்தியும் விவாதித்து கொண்டிருந்தனர்!

“நோ… அபி சொல்றதை வைச்சு பார்க்கிறப்ப.. அவங்க அப்பா அப்படி பணத்தை எடுத்து நீட்டமாட்டார்ன்னு தோணுது! கமுக்கமா காரியம் சாதிக்கிற ஆள்ன்னும் தோணுது! அதேபோல கம்ளைன்ட் போனாலும், விபரம் கேள்விப்பட்டு அந்த ஆளையே உள்ளே போட சான்ஸ் இருக்கு!” தான் உணர்ந்ததை தோழிக்கு புரிய வைத்தாள் ஹர்திகா!

“எப்படி யோசிச்சாலும் ரொம்ப குழப்பமா இருக்கு! இப்போ என்னதான் பண்ண?” சஞ்சுவின் கேள்விக்கு “இப்போதைக்கு யாரோட கண்ணிலும் படாம அவளை பாதுக்காப்பா வைக்கணும்!” என்று சலனமே இல்லாமல் பதில் தந்தாள் ஹர்திகா!

“என்ன? லூசா நீ? இது எல்லாத்தையும் விட பெரிய ரிஸ்க்! நாளைக்கு நீயோ நானோ மாட்டினோம்! மொத்த மீடியாவும் நாறடிச்சிடும் நம்ம பேரை! அதைவிட ஜேடி. என்னை ஸ்டுடியோவிட்டே தூக்கிருவார்! உனக்கு கெரியரே போயிரும்!” சஞ்சு பிடிவாதமாய் மறுத்தாள்!

“இப்போ நாம செய்யாட்டி தான் ரிஸ்க்! பிரச்னையை சமாளிக்க ஓடி வந்திருக்கா! இப்போ அவ மைன்ட்செட் ரொம்பவே தடுமாற்றத்துல இருக்கு! இப்படியே இருந்தா ஒன்னு பைத்தியம் பிடிச்சிரும்! இல்லாட்டி… செத்து தான் போவா!” ஹர்தியும் அதற்குமேல் பிடிவாதம் பிடித்தாள்!

“சொந்த அம்மா அப்பாக்கே தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைச்சிருக்கா! தான் செஞ்சது தப்பிலைன்னு நினைச்சிட்டு இருக்கா.. வயசு பொண்ணு சஞ்சு, இன்னும் சின்னப்பொண்ணாவே இருக்கா.. வெளியுலகம் பத்தலை.. சோ.. இப்படியே விடமுடியாது! முதல்ல அவளுக்கு ஒரு வேலையும்.. தங்க பாதுகாப்பான இடமும் வேணும்!” ஹர்தி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க, சஞ்சுவோ ‘நான் அவளை பார்த்துவிட்டு வருகிறேன்!’ என்று அறைக்கு வந்தாள்!

ஆனால் அபி அங்கே இல்லாதது கண்டு, அரண்டு போனவள், ஹர்தியை அழைத்து விவரத்தை சொல்ல, ஹர்தியும் அவளும் மின்னல் வேகத்தில் கீழே வந்தனர்!

‘அப்படியே விடமுடியாதே! போகட்டுமென்று!’

அன்று முழுக்க, விழாவும் விருந்தும் என்று நடந்ததால் பலர் சீக்கிரமே சென்று இருந்தனர்! மிச்ச பேரும் பார்ட்டி ஹாலில் இருந்தனர். அதனால் பெண்கள் இருவரும் வந்ததை யாரும் கவனிக்கவில்லை! அங்கேயிருந்த பாதுகாவலர்கள் இருவரை தங்களுடன் அழைத்து கொண்டவர்கள், சாலையில் காரை செலுத்தினர்!

ஸ்டுடியோவிற்கு வர ஒரு வழியே இருந்ததால், பிரிந்து செல்ல தேவையே இருக்கவில்லை! ஆனால் ஸ்டுடியோவில் இருந்து பிரதான வீதிக்கு வர கண்டிப்பாக அரைமணி நேரம் பிடிக்கும்! நிரம்ப நேரம் ஆகவில்லை என்றாலும் தனிமையும் இருட்டும் கண்டிப்பாய் பயம் காட்டும்!

‘எங்கே சென்றாளோ? என்ன வேகத்தில் சென்றிருக்கிறாள் பார்? ரொம்பவும் தொலைவாய் சென்றுவிட்டாளோ!’ என்று பயத்திலேயே காணப்பட்டனர்! இவர்களே பத்து நிமிடமாய் சாலையில் தேடினர்! ஆனால் சற்று தொலைவில் தங்களின் காரை நோக்கி அபி வருவதை கண்டதும் இன்னமும் அதிகளவு பயம் பெருகியது! காரணம் அவளை துரத்தியபடி பின்னே நால்வர்!

“அபி..!” என்று அலறினர் பெண்கள்! காரை நிறுத்த சொல்லி ஹர்திகா செக்யூரிட்டிக்கு கட்டளையிட, சடன் ப்ரேக் போட்டார் அவர்! அதற்குள் அபியும் காரை நெருங்கியிருக்க, காரிலிருந்து இறங்கினர் பெண்கள் இருவரும்!

முதலில் கார் நின்றதும் பயந்து போன அபி, இவர்களை கண்டதும் வேகவேகமாய் ஓடி வந்தாள்!

‘பளாரென்று’ ஒரு அறை! ஹர்திகா தான் அறைந்திருந்தாள்! அதில் சஞ்சுவே அரண்டு போக, அபி எம்மாத்திரம்? கையினால் கன்னத்தை தாங்கி பிடித்தவள், பேச்சே வராதவளாய் ஸ்தம்பித்து போய் கிடந்தாள்!

ஹர்திகாவோ பாதுகாவலர்களிடம், “போய் அடிச்சு விரட்டுங்க!” என்று அவர்களை அனுப்பி வைத்தவள், அவர்கள் சென்றதும் அபியின் புறம் திரும்பினாள்!

“உன்கிட்ட என்ன சொன்னேன் அங்கேயே இருன்னு தானே! யாரைக்கேட்டு நீ வெளில வந்த? உனக்கெதாவது ஆகிருந்தா கடைசி வரைக்கும் நாங்க தான் குற்றவுணர்ச்சியும், வீண்பழியையும் சுமந்துட்டு இருப்போம்!” கண்டிப்புடன் வந்தது ஹர்தியின் வார்த்தைகள்! அதிலும் அவளின் விழியோ இருளில் அடர்பச்சை நிறத்தில் தோன்றி அபியை பயம் காட்டியது!

“நீங்க பேசினது கேட்டேன்.. உங்களுக்கு எதுவும் பிரச்சனை ஆகக்கூடாதுன்னு தான் வந்தேன்! அப்பறம் அப்பா வந்தா சத்தியமா என்னை கூட்டிட்டு போயிருவார்!” விக்கலும் கேவலுமாய் அபி சொல்லியதில்,

“மண்ணாங்கட்டி! இன்னொரு தடவை அழுத, மறுபடியும் அறை தான் விழும்!” என்று மிரட்டிய ஹர்தி.. “இதைவிட பெரிய பிரச்சனை எல்லாம் பார்த்துருக்கோம்! கடந்தும் வந்துருக்கோம்! முதல்ல ரியாலிட்டியை புரிஞ்சுக்கோ! இன்னைக்கு சஞ்சுவோட கண்ணுல பட்ட, அவ மனசில என்ன இருந்ததோ உன்னை பார்த்ததும் கண்டுப்பிடிச்சு உள்ளே கூட்டிட்டு வந்துட்டா! இதே நீ அவ கண்ணுல விழாம, வேலை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிட்டு, எங்கேயாவது இது மாதிரி பொறுக்கி பசங்ககிட்ட மாட்டியிருந்தா?” அதற்குமேல் ஹர்தியால் சொல்லமுடியவில்லை! அபியாலும் நினைத்து பார்க்க முடியவில்லை!

அடர்ந்த இருட்டில் அந்த அமைதியும் ஹர்தியின் கோபமும் அபியை இன்னமும் அழவைத்தது!

“நாங்க பேசினதை நீ எவ்ளோ கேட்டேன்னு தெரியலை! என்ன ஆனாலும் உன்னை உங்க அப்பாகிட்ட விடக்கூடாதுன்னு நாங்க எப்பவோ முடிவு பண்ணிட்டோம்! உனக்கு இப்போதைக்கு பாதுகாப்பும் நல்ல வேலையும் முக்கியம்ன்னு தான் பேசிட்டு இருந்தோம்!” என்று சஞ்சு ஆறுதல் படுத்த, நம்பமுடியாமல் அவளை ஏறிட்டாள் அபி!

“முதல்ல உன்னோட சேஃப்டி தான் எங்களுக்கு முக்கியம்! உங்க அப்பாவெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லை! நீ ஹர்திகாவோட போ.. இப்போதைக்கு அதான் நல்லது! நான் இங்கே கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வரேன்!” என்று சொல்லிய சஞ்சு, ஹர்திகாவை ஏறிட, அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள் ஹர்திகா!

ஸ்டுடியோவில் அபி வந்த மொத்த சிசிடிவி பதிவுகளையும் அழிக்க போகிறாள்! நாளை அபியை தேடி யார் வந்தாலும் எந்தவொரு பிரச்சனையும் வராது! பிறகு ஒரு சின்ன மீட்டிங் வைத்துவிட்டால், அங்கே இருப்பவர்களும் எதுவும் சொல்லமாட்டார்கள் என்று உணர்ந்து கொண்டாள்!

அடுத்த பக்கம்