நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 5 (3)

‘பணம் வசதி எல்லாம் இருக்கிறதாம்! இவனைத்தான் கட்டவேண்டுமாம்! அப்படியே அவனின் தலையில் கல்லை தூக்கி போடுறேன்!’ ஆத்திரமாய் வந்தது! இதுநாள் வரை அடக்கி வைத்த கோபமெல்லாம் மொத்தமாய் அன்று வெடித்தது!

“அந்த ஆளை நான் கட்டிக்க மாட்டேன்! எனக்கு அப்பா மாதிரி இருக்கான்! இவனெல்லாம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலைன்னு யார் அழுதா! எனக்கு பதினெட்டு வயசு ஆகிருச்சு! படிப்பும் முடிஞ்சிருச்சு! நான் வேலைக்கு போகணும்! அதுக்கு அப்பறம் கல்யாணம் பத்தி பேசலாம்! கல்யாணமே ஆகாட்டியும் பரவாயில்லை!” என்று தனது மறுப்பை முதல்முறையாய் வெளிப்படுத்தினாள் மகள்!

அவளின் தந்தையோ, “என்னையா எதிர்த்து பேசுற? என்ன தெரியும் உனக்கு! பெரிய படிப்பை முடிச்சிட்டாளாம்! என்ன பெருசா படிச்சிருக்க? துணி தைக்கிறது எல்லாம் ஒரு படிப்பா! துணி தைக்கிறவளுக்கு எல்லாம் பெரிய வேலை ஒன்னும் கிடைச்சிராது!” அவளின் கல்வியை கனவை மிகவும் கீழ்த்தரமாய் பேச, இன்னமும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது அபிக்கு!

உதவிக்கு அன்னை, பாட்டி வராததை கண்டு மனமே வெறுத்துத்தான் போனது என்று சொல்லவேண்டும்! ‘என்ன பிள்ளையை பெற்றிருக்கிறார்? நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் வறட்டு பிடிவாதம் பிடிக்க கற்று கொடுத்திருக்கிறார்?’

‘கணவரிடம் நல்ல பெயர் வாங்க ரொம்ப அமைதியாய் இருந்து என்ன நல்லதை கண்டார் இவர்?’ என்று எல்லோரின் மேலும் வெறுப்பு உண்டானது!

“அப்படி ஒரு படிப்பை படிக்க வைச்சது நீங்க தான்! நல்ல வழில செய்ற எந்தவொரு வேலையும் கீழ்த்தரமானது இல்லை! துணி தைக்கிறது என்ன அவ்ளோ கேவலமா? ரோட்ல சின்னதா கிழிஞ்ச சட்டை போட்டு உங்களால போயிற முடியுமா?” அபியின் குரலும் ஓங்கி ஒலிக்க, இப்பொழுது ஜெயராமனின் கை தான் ஓங்கி நின்றது!

தந்தையின் அடியில் பொறி கலங்கியபோதும் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை! பயப்படவும் இல்லை அபிநிதி!

“யாரோ ஒரு ஜோசியக்காரன் சொல்றதை வைச்சு என்னால என்னோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது! எனக்குன்னு விருப்பம் இருக்கு! கனவு இருக்கு!” அபியும் விடாமல் வாதம் புரிந்தாள்! அதற்கு பதிலாய் தந்தையிடம் இருந்து அடிதான் கிடைத்தது!

கல்பனாவிற்கு மகள் எதையாவது செய்துவிடுவாளோ என்று அடிமனதில் பயமும் இருந்து கொண்டே இருந்தது! ஆனால் அப்பொழுதும் கணவரை மீறி எதுவும் செய்யவில்லை அவர்!

பாட்டியும் பேரனும் உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டனர்! அபியோ தன்னால் முடிந்தவரை மறுப்பை காட்டிக்கொண்டே இருந்தாள் எல்லா வழியிலும்! கெஞ்சினாள்.. மிரட்டினாள்.. ‘செத்துவிடுவேன்!’ என்று பயமொருத்தினாள்! எதற்கும் மசியவில்லை ஜெயராமன்!

அபிக்குமே சாக தைரியம் வரவில்லை! சமையல் கத்தியை எடுக்கும்போதே கை நடுங்கியது! அழுகையாய் வந்தது! ஜெயராமனுக்கு மகள் கண்டிப்பாய் தனது பேச்சை மீறமாட்டாள்! எப்படி இருந்தாலும் தான் சொன்னதை தான் செய்வாள்.. செய்யவைப்பேன் என்ற மமதையில் திருமண வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்! அதனால் மகளுக்கு எந்தவொரு காவலும் கெடுபிடியும் வைக்கவில்லை! அபியும் தனது விருப்பமின்மையை மௌனமாய் காட்டிக்கொண்டே இருந்தாள்!

சரியாய் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்க, யாருமறியாமல் தனது உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்! பேருந்து நிலையித்திலோ பெங்களூர் செல்லும் பேருந்து தயாராய் இருக்க, அங்கே வந்து முதலில் இறங்கினாள்! அதன்பிறகு எங்கே செல்வது என்று புரியாதவொரு நிலை! அப்பொழுதுதான் பையினில் ‘வேலைக்கான கடிதம்’ இருப்பது நினைவில் வர, எதுவும் யோசிக்காமல் மும்பை வந்து சேர்ந்தாள்!

வந்ததும் ‘எலகன்ட் ரங்’கிற்கு அழைப்பு விடுக்க, அவர்கள் உடனே வர சொன்னார்கள்! ஆனால் அங்கே வந்தபிறகு தான், தந்தை கல்லூரி மூலமாய் விபரம் அறிந்து மும்பை வந்துவிட்டால் என்ன செய்வது?

பயந்துபோய் ஸ்டுடியோவிற்கு மீண்டும் அழைப்பு விடுக்க, அந்தப்பக்கமிருந்து யாரும் எடுக்கவே இல்லை! சரி நேரில் போய் சொல்லலாம் என்று வந்துவிட, சஞ்சுவின் கண்ணில் பட்டு எதுவும் சொல்லமுடியாமல், வேலையையும் எந்தவித உறுதிபடுத்துதல், ஒப்பந்தமின்றி செய்தும்விட, அந்த நாளும் அபி உணராமலேயே சிறப்பாய் நிறைவடைந்தது!


தனது கதையை சொல்லி முடித்ததும் இத்தனை நாள் அழுத்திக்கொண்டு இருந்த கணம் மொத்தமாய் இறங்கிவிட்டது போல உணர்ந்தாள் அபி! ஆனால் அதைக்கேட்டுக்கொண்டிருந்த பெண்களுக்கு தான் பாரம் கூடிப்போனது!

என்ன செய்வதென்ற குழப்பமும், என்னவாகுமோ என்ற பயமும் அபியின் கண்களை விட்டு இன்னமும் விலகவில்லை! எந்நேரத்தில் தந்தை வந்து தன்னை இழுத்து கொண்டு சென்றுவிடுவாரோ என்ற பீதியிலேயே இருந்ததை அவர்களால் உணர முடிந்தது!

பரபரவென்று எதையாவது செய்து கொண்டிருப்பவள், எல்லாவற்றையும் அதிரடியாய் தான் செய்து முடித்திருந்தாள்! கெட்டதிலும் நல்லதாய் அவள் செய்த ஒரே விஷயம் எலகன்ட் ரங்கில் வேலைக்கு வந்தது தான்! அதிலும் சிறப்பானது சஞ்சு, ஹர்தியிடம் வந்து சேர்ந்தது என்றே சொல்லலாம்!

“எப்படி வந்த? இவ்ளோ தூரம் வந்ததுக்கு ஏது பணம்?” என்று கேட்ட சஞ்சுவின் கேள்விக்கு!

“பஸ்ல பெங்களூர்! ட்ரைன்ல மும்பை! பணம்.. அது..” என்று தயங்கியவள், இருவரும் தன்னிடம் பதில் வாங்காமல் விடப்போவது இல்லை என்று நன்கு உணர்ந்தாள்!

டீபாயின் மேலிருந்த தண்ணீரை பருகிய அபி அவர்களை தயக்கமாய் ஏறிட்டு, “பெங்களூருக்கு பஸ்ல வந்தப்ப கொஞ்சம் காசு இருந்தது! அப்பறம் காதுலயும், கழுத்துலயும் வைரம் போட்டு இருந்தேன்! அப்பா உனக்கு வைரம் தான் ராசிக்கல்லுன்னு வாங்கி கொடுத்தது! பெங்களூர் வந்து இறங்குன கொஞ்ச நேரத்தில் ஒரு கடைல வித்துட்டேன்! அறுபதாயிரம் தந்தான்!” என்றதும் ஹர்தி, சஞ்சு வாயடைத்து தான் போனர்!

“நீ கிளம்புற வரை யாரும் எழுந்திருக்கலையா? மிட்நைட்ல தானே கிளம்பி வந்திருப்ப?” சஞ்சு இன்னும் என்னென்ன கூத்து செய்து வைத்திருப்பாளோ இந்தப்பெண் என்ற ரீதியில் கேட்க, ஹர்தியோ முட்டியில் இரு கையையும் ஊன்றி, உள்ளங்கையில் கன்னத்தை தாங்கியபடி அபி தங்களை ஆக்கப்போகும் கிளீன் போல்ட் பதிலுக்காய் அவளது முகத்தையே பார்த்திருந்தாள்!

“அது.. பாட்டி தூக்க மாத்திரை வைச்சிருப்பாங்க! நைட் பால்ல போட்டு கொடுத்து தூங்க வைச்சிட்டேன்! தம்பிக்கு அரை மாத்திரை! அப்பாக்கு மட்டும் ரெண்டு! ஏன்னா அவரு அவ்ளோ சீக்கிரம் தூங்க மாட்டாரு!” என்றாளே பார்க்கலாம்! மற்ற இரு பெண்களும் வாயடைத்து போனார்கள்!

சஞ்சுவிற்கோ அண்ட சராசரமே ஆடிவிட்டது!

“என்ன வேலை பண்ணி வைச்சிருக்க? அவங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா.. உன்னைத்தான் பிடிச்சு உள்ளே போடுவாங்க!” சஞ்சுவிற்கு கோபம் பெருகியது! ஹர்தியின் மௌனமும் ‘தப்பு செஞ்சுட்டியே!’ என்று அபியை குற்றம் சாட்டியது!

“அவங்களுக்கு ஒன்னும் ஆகலை! கிளம்பும் போதே நல்லா மூச்சு விடுறதை பார்த்தேன்! அப்பறம் பெங்களூர் வந்ததும், வீட்ல எல்லார் நம்பருக்கும் வேற வேற இடத்தில் இருந்து கால் செஞ்சேன்! எல்லாரும் ‘ஹலோ ஹலோன்னு’ பேசினாங்க! எதுவும் ஆகலை! பயப்பட வேணாம்!” என்று அபி சொன்னதும், ‘வாயை மூடு!’ என்று அதற்கும் கத்தினாள் சஞ்சு!

“நீ தூக்க மாத்திரை கொடுத்ததே தப்பு.. நீ தப்பிக்க இத்தனை தில்லாலங்கடி வேலையும் பார்த்து வைச்சிருக்கியா? இது மட்டும்தானா? இல்லை.. இன்னும் ஏதாவது இருக்கா?” சஞ்சுவின் மிரட்டலுக்கு ‘இல்லையென்று’ பயந்துபோய் தலையாட்டினாள் அபி!

சஞ்சுவின் கோபத்திலேயே அபி நடுங்கிவிட்டாள். இதில் தனது விருப்பமான நாயகியான ஹர்திகாவும் திட்டிவிடுவாளோ என்ற பயத்தில் இன்னமும் மிரட்சியாய் பார்த்தாள் அபி!

ஹர்திகாவிற்கு முதலில் தோழியை சமாதானப்படுத்துவது தான் முக்கியமாய் பட்டது! தோழிக்கு வெளிப்படும் கோபம் என்பது மிகவும் அரிதான ஒன்று! அப்படி அவள் கோபப்பட்டால் அத்தனை சீக்கிரம் நிறுத்தமாட்டாள் என்று உணர்ந்ததினாலேயே இந்த எண்ணம்!

அடுத்த பக்கம்