நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 5 (2)

அபியின் ஏழாவது வயதில், ஜெயராமன் தனது சொந்த வீட்டில் சொந்த ஊரில் இருந்தால் கடன் தொல்லை ஏற்பட்டு பெரும் நஷ்டம் அடைவார்! அதனால் இங்கிருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறெங்காவது செல்வது நல்லது என்று கூற, ‘அப்படியே ஆகட்டும் மன்னா!’ என்று கிளம்பிவிட்டார் ஜெயராமன் குடும்பத்தோடு!

அடுத்து அவர் கையை வைத்தது அபியின் படிப்பில், சரியாய் அவளது பதினேழாவது வயதில்! ‘உங்கள் மகள் ஏதாவது கையால் வேலை செய்வது போல படிப்பை படித்தால், மிகப்பெரும் ஆளாய் வருவாள்’ என்று கூற, அதற்கும் ‘அபப்டியே ஆகட்டும் மன்னா’ என்றார் ஜெயராமன்!

அபியோ, “எல்லா வேலையும் கைல தானே செய்வாங்க? கை இல்லாம செய்ற வேலை என்னது?” என்று படுபயங்கரமாய் யோசனை செய்தாள்!

ஆனால் அதையெல்லாம் யார் மதிக்க? அவளின் தந்தை அவளை பி.எஸ்.சி ஃபேஷன் டிசைனிங்கில் சேர்த்துவிட, அபிக்குமே அதில் அதிக விருப்பம் இருந்ததால் நன்றாகவே எல்லாம் செய்தாள். சரி அடுத்து இருபத்தி ஏழாவது வயதில் தான் வந்து நிற்பார்! அதற்குமுன் தான் எங்காவது செட்டில் ஆகிவிடுவோம் என்று அவளை சந்தோசப்படக்கூட விடாமல் பூதமாய் அவள் முன்னே வந்து நின்றார் அந்த ஜோசியர்!

‘அவர் எங்கே வந்தாரு? நீதானே வந்துருக்க?’ என்று நக்கல் செய்தது மனசாட்சி!

‘கண்ணம்மா.. கம்முன்னு கிட..!’ என்றதை அடக்கியவள் அவர் சொல்வதை குறுகுறுவென கேட்க ஆரம்பித்தாள் பெற்றோரோடு!

எல்லோரின் ஜாதகத்தையும் பார்த்து கணித்தவர், இறுதியாய் அபியின் ஜாதகத்தை விரித்துவைத்து பார்த்தார்! சற்று நேரத்திற்கு எல்லாம் மிகவும் தீவிர முகபாவனைக்கு மாறினார்!

“உங்க பொண்ணுக்கு இப்போ நேரம் சரியில்லை! இன்னும் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் செய்யலைன்னா.. உங்க பொண்ணுக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காது! களத்திர தோஷமா போயிரும்” என்று ஜெயராமன் கல்பனா தம்பதியை பயம் காட்டினார் ஜோசியர்!

அபியோ, ‘ஃப்ப்பூ.. இவ்ளோதானா! கல்யாணம் தானே பண்ணிக்கலாம்! அதெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை.. நானுமே சீக்கிரம் செட்டில் ஆகலாம்!’ என்று ரொம்பவும் கூலாகவே தான் இருந்தாள்!

ஆனால் அவரோ, “அதுவும் உங்க பொண்ணை யாருக்காச்சும் இரண்டாந்தாரமா கல்யாணம் செஞ்சு வைச்சா அவளோட வாழ்க்கை இன்னும் சிறப்பா நல்லாயிருக்கும்!” என்று மிகபெரும் ஆட்டம் பாமை அவள் மேல் தூக்கி வீச, பகீரென்று ஆனது அபிக்கு!

தந்தை இதுபோல எல்லாம் பிற்போக்குத்தனமாய் செய்யமாட்டார்! கண்டிப்பாய் ஜோசியரை திட்டுவார் என்று நம்பிக்கையுடன் தந்தையை ஏறிட, அவரோ ஜோசியர் சொல்வதே வேதவாக்கு என்று அதற்கு கீழ்ப்படிய ஆரம்பித்தார்!

“சீக்கிரம் பார்த்துருறேன்! இனி எனக்கு அதான் வேலையே!” என்று அபியின் மனதை சில்லுசில்லாய் நொறுக்கினார்!

அன்னையை உதவிக்கு அழைக்க, அபியின் தாயும் அதிர்ந்தவர், “பரிகாரம் எதுவும் இல்லையா சாமி?” என்று கேட்க, தலையில் அடித்துக்கொண்டாள் அபி!

‘நான் என்ன சொல்ல வரேன்! இவங்க என்ன பேசுறாங்க!’ என்று அன்னையை மனதினுள் கடிந்தவள், இப்பொழுது அந்த ஜோசியக்காரனை முறைக்க ஆரம்பித்தாள்!

“அவர் பரிகாரம் இருந்தா அதை முதலில் சொல்லியிருக்க மாட்டாரா? உன் வாயை மூடிட்டு இரு!” என்று ஜோசியருக்கு வாயாய் முறைப்புடன் உரைத்தார் ஜெயராமன்!

கல்பனாவோ கணவரை எதிர்க்க முடியாமல் மௌனியாய் இருந்தார்! மூவரும் ஒருவழியாய் மைசூர் வந்து சேர்ந்தனர்! ஜெயராமனுக்கு எப்படியோ, கல்பனாவும் அபியும் கனத்த மனத்துடன் தான் வந்தனர்! வந்ததுமே சண்டை தான் போட்டார் கல்பனா.

“உங்களுக்கு எப்படிங்க மனசு வந்தது? அந்த ஆள் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுறிங்க? நமக்கு இருக்காது ஒரே பொண்ணு! அவளை எப்படிங்க ரெண்டாந்தாரமா கொடுக்க?” என்று கதறினார்!

“என்ன செய்ய சொல்ற? அவ வாழ்க்கை நல்லாயிருக்க வேண்டாமா? இதுவரைக்கும் அவர் நல்லது தானே நமக்கு சொல்லிருக்கார்! நம்ம வீடு, அபி, அரவிந்த் படிப்பு எல்லாத்திலும் அவர் சொன்னது போல நடந்து இருக்கு! அது எல்லாம் நல்லாவும் தானே இருக்கு!” என்று வாதம் செய்தார் ஜெயராமன்!

“என்ன நல்லது? யாரோ ஒருத்தனுக்கு ரெண்டாவது பொண்டாட்டியா போறதா? அதுக்கு தான் நான் அவளை பெத்துப்போட்டேனா? அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை ஒரு கனவு இருக்கது தெரிய வேண்டாம்?

“எல்லாம் எனக்கு தெரியும்! அப்படியே என்ன உன் பொண்ணை பாழும் கிணத்துலயா தள்ளப்போறேன்! ரெண்டாந்தாரம்னாலும் நல்லவனுக்கு தான் பார்த்து கொடுப்பேன்! அவ எனக்கும் பொண்ணு தான்! என் பேச்சை என்னைக்கும் மீறமாட்டா!” அழுத்தமாய் வந்து சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார் ஜெயராமன்!

அவரின் வார்த்தைகளில், ‘என்னை மீறி ஏதாவது நடந்தால், கொன்று புதைத்துவிடுவேன்!’ என்ற எச்சரிக்கை இருப்பதை உணராமலா இருப்பார்கள் தாயும் மகளும்!

வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் மகனும் மருமகளும் போடும் சண்டையில் புரியாமல் நின்றார் ஜெயராமனின் அன்னை!

“என்ன கல்பனா ஆச்சு?” கேட்கும் மாமியாருக்கு எல்லாவற்றையும் விளக்கினார் கல்பனா!

“இவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சு இருக்கு! கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்த பொண்ணை இப்படியா கட்டிக்கொடுக்க பார்ப்பான்!” என்று மகனை நன்கு கடிந்தவர், “நாளைக்கு நான் அவன்கிட்ட பேசுறேன்! நீங்க கவலைப்படாதிங்க!” என்று மருமகளையும் பேத்தியையும் உறங்க சொன்னார்!

அபியும் ‘எல்லாம் நல்லபடியாய் நடக்கும்!’ என்று முழு நம்பிக்கையோடு உறங்க சென்றாள்!

ஆனால் மறுநாளைய விடியலிலோ எல்லாம் தலைகீழாய் இருந்தது!

அன்னையோ, “அப்பா உனக்கு நல்லது தான் பண்ணுவார்! அவர் சொல்றதை கேளு!” என்று கட்டளையிட்டு தனது வேலையை மட்டும் பார்த்தார்!

பாட்டியோ, ‘வயாசான காலத்துல உன் அப்பனை எதிர்த்து எங்கே போக! எனக்கு அவன்கூட போராட தெம்பில்லை அபிம்மா! அவன் சொல்ற பேச்சை கேளு!’ என்று அவர் பங்கிற்கு ஒரு அறிவுரையையும் கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டார்!

சரி இனி நேரடியாய் தந்தையிடம் சென்று கெஞ்சிவிடுவோம் என்று பார்த்தால், அவர் மகள் சொல்வது எதையுமே காது கொடுத்தே கேட்கவில்லை! ‘முதலில் உனது படிப்பை முடி! பிறகு எல்லாம் பேசலாம்!’ என்று போய்விட்டார்! இதற்குமேல் யாரிடம் பேச? எரிச்சலும் அழுகையும் தான் முட்டிக்கொண்டு வந்தது!

அவளுமே முகத்தை தூக்கிவைத்து கொண்டு தான் இருந்தாள் யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல்! சகோதரனும் தேர்வு, டியூஷன் என்று சென்றுவிட்டான்! அப்படியே அவன் இருந்தாலும், ‘எனக்கென்ன?’ என்றுதான் இருப்பான்! தோழிகளிடமும் தனது வாழ்க்கையை படம் போட்டு காண்பிக்க அபிக்கு இஷ்டம் இல்லை! கிண்டல் செய்வார்களோ? அறிவுரை, ஆலோசனை என்ற பெயரில் எதையாவது சொல்லி பயமொருத்துவார்களோ? என்று எதை எதையோ நினைத்தபடி பேசாமல் இருந்துவிட்டாள்!

நாட்களும் நகர ஆரம்பித்தது! அபிக்கு கல்லூரி தேர்வு ஆரம்பமாக முதலில் படிப்பில் கவனத்தை செலுத்தி நன்கு பரிச்சையும் எழுதினாள்! செய்முறை தேர்வும் நல்லபடியாய் முடிந்தது! கடைசி தேர்வு வரை எல்லாம் நன்றாகவே சென்றது என்றே சொல்லலாம்! மேலும் ஜெயராமனும் அதுவரை திருமண பேச்சை எடுக்கவில்லை!

சரி தந்தையிடம் வேலை விஷயம் பற்றி கூறலாம் என்று பார்த்தால், அவரோ ‘உனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டேன்! இதுதான் பையன்!’ என்று ஓர் ஆளை கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினார்!

அடுத்த பக்கம்