நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 5

“என்ன சொல்ற நீ? இதை சொல்லவா மைசூர்ல இருந்து வந்த? போன்லயே சொல்லியிருக்கலாமே! அது கூட ஏன்? நாங்க கூப்பிட்ட எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணாம வீட்லயே இருந்திருக்கலாமே?” சஞ்சு புரியாமல் கேட்டாள்.

“வீட்லயே இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வைச்சிருப்பாங்களே!” சோகமே உருவாய் சொல்ல, இன்னமும் புரியாமல் முழித்தனர் பெண்கள்!

“ஐயோ! போன தலைவலி எனக்கு மறுபடியும் வந்துரும்!” டென்ஷனானாள் சஞ்சு!

“வீட்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்க! இன்னும் மூணு நாள்ல கல்யாணம்!” என்று சொல்லும் போதே அபியின் கண்ணெல்லாம் கலங்கி, கை காலெல்லாம் நடுங்கியது!

ஹர்திகாவும் சஞ்சுவும் ‘சின்னப்பெண் திருமணத்தை நினைத்து பயப்படுகிறாள் போல! இல்லை பிடிக்காத மாப்பிள்ளை போல.. அதான் வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டாள் போல!’ என்ற ரீதியில் நினைத்தவர்கள், முதலில் அபியை சமாதானம் செய்ய எண்ணினார்கள்!

ஹர்திகா எழுந்து அபியின் அருகில் நின்றபடி அவளின் தோள் பற்றியவள், “யாராவது கல்யாணத்தை நினைச்சு பயப்படுவாங்களா? நீ வேணாம்ன்னு சொன்னா உங்க வீட்ல மறுக்கவா போறாங்க! எதுவா இருந்தாலும் அங்கேயே இருந்து சொல்லியிருக்கலாமே? வீட்டை விட்டு வந்தது தப்பில்லையா?” மென்மையாய் இயம்பினாள்.

அவளின் அக்கறையில் அழுகை வந்தது அபிக்கு!

“சொன்னேன்.. மிரட்டினேன்.. செத்துப்போய்ருவேன்னு கூட பயமொறுத்தினேன்! எதுக்கும் ஒத்துவரலை! கட்டினா இவனைத்தான் கட்டணும்ன்னு ஒரு நாப்பது வயசு ஆளை கூட்டிட்டு வந்து நிப்பாட்டுனாங்க! அதான் வீட்டை விட்டு வந்துட்டேன்!”

அழுகையுடன் அபி கூறிய வார்த்தைகளை கேட்டு ஒருவரை ஒருவர் அதிர்ந்துப்போய் பார்த்தனர் ஹர்தியும் சஞ்சுவும்!

“முதல்ல அழுகையை நிறுத்து! அழறதுனால எதுவும் நடக்காது! வா… வந்து உட்காரு! எங்களுக்கு புரியுற மாதிரி சொல்லு!” என்று அன்பாய் கூறிய ஹர்திகா, அவளின் தோளை பற்றியபடியே சோபாவில் அமரவைத்தவள், சஞ்சுவை தண்ணீர் கொண்டுவர பணித்தாள்!

சஞ்சு கொண்டு வந்து அபிக்கு கொடுக்க, சில்லென்று தண்ணீரோடு தனது அழுகையையும் உள்ளே இழுத்துக்கொண்டாள் அபி!

“இப்போ சொல்லு.. எங்களுக்கு புரியுற மாதிரி!” என்று அவள் அறிவுறித்தியதும், இரண்டுமாத காலமாய் தனது மனத்தை இரணமாய் கீறிக்கொண்டிருக்கும் விஷயத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தாள் அபி!


அபியின் சொந்த ஊர் திருச்சி! ஏழு வயது வரை அங்கேயே தான் இருந்தது அபியின் குடும்பம். பிறகு அபியின் தந்தைக்கு மைசூரில் வேலைக்கிடைத்துவிட, அங்கே குடிபுகுந்தனர்! வருடத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ திருச்சி வந்து உச்சிப்பிள்ளையாரை தரிசித்துவிட்டு செல்வது அவர்களின் பழக்கம்! இந்த முறையும் அப்படிதான் வந்தனர்! அபிக்கு ஒரு தம்பி உண்டு. அவனுக்கு இந்த வருடம் பத்தாவது என்பதால் அவன் மட்டும் வரவில்லை! மகனுக்கு துணையாய் அபியின் பாட்டி இருந்தார்!

அபிக்கு இந்தமுறை பிள்ளையாரிடம் பலமான வேண்டுதல் இருந்தது! அதனால் அவருக்கு ஒரு தேங்காய், இரு வாழைப்பழம், மூன்று தோப்புக்கரணத்தோடு அவரிடம் தனது வேண்டுதலையும் வைத்தாள்!

‘பிள்ளையாரப்பா! எனக்கு மும்பைல இன்டர்ன்ஷிப்போட வேலையும் கிடைச்சிருக்கு! ஆஃபர் லெட்டர் கூட வந்துருச்சு! எக்ஸாம் முடிச்சதும் வேலை தான்! அப்பாகிட்ட இன்னும் எதுவும் சொல்லலை! ஆனா சொல்லும்போது அப்பா ஒத்துக்கணும்! எந்தவொரு மறுப்பும் அவர் சொல்லகூடாது! அவர் எல்லாத்துக்கும் ஒகே சொல்லிட்டா, உங்களுக்கு டிசைன் டிசைனா புதுசு புதுசா சொக்கா தைச்சு தருவேன்! வாரத்துக்கு கொழுக்கட்டை வைச்சு தருவேன்!’ தனக்கு தைக்க மட்டுமே தெரியும், சமைக்க தெரியாது என்பதை மறந்துவிட்டு!

இப்படி வேண்டிக்கொண்டவள், தனது கோரிக்கைக்கு நிச்சயமாய் அவர் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கையோடு படியிறங்கினாள்! ஆனால் அவளுக்கு தெரியவில்லை! பிள்ளையாரப்பன் என்ன செவி சாய்த்தாலும், தந்தை தனது கனவுகளுக்கு எல்லாம் மொத்தமாய் முற்றுப்புள்ளி வைத்து கொண்டிருக்கிறார் என்று!

சிலுசிலுவென்ற காற்று மோத, அதனால் பறந்த துப்பட்டாவை இழுத்து பிடித்தவள், கோவிலின் உச்சியில் இருந்து திருச்சியை ரசித்தாள். தான் மகிழ்ந்து காணும் காட்சியை தந்தைக்கும் தாய்க்கும் காண்பிக்க எண்ணி திரும்ப, அவர்களோ மலையேறி வந்ததில் சோர்ந்து போய் நிழலின் கீழ் அமர்ந்து அவர்கள் பாட்டிற்கு எதுவோ பேசிக்கொண்டு இருந்தனர்! மேலும் அவர்களுக்கு இது போல காண்பதில் எல்லாம் துளியும் மகிழ்ச்சி இருந்ததில்லை! சகோதரனும் அவ்வாறே பழக்கப்பட்டவன்!

படிப்பு – சமையல் – சாப்பாடு – செய்திகள் – டிவி சீரியல்! இதுதான் அவர்களின் அன்றாட வாழ்வியல்! அபி மட்டுமே அந்த வீட்டில் வித்தியாசப்பட்டு தெரிவாள்! மழையோடு வெயிலையும் ரசிப்பாள், மொட்டைமாடியில் நீலவானை ரசித்தபடி பாடுவாள், பறவைகளுக்கு அரிசியும் தண்ணியும் வைத்து அது உண்ணும் அழகை காண மணிக்கணக்கில் மறைந்து இருப்பாள்! பயணம் செய்யும் போது உடன் வரும் வாகனங்களை, பின்னே செல்லும் தூரத்து மரங்களை ரசிப்பாள்!

சின்ன சின்ன விஷயங்களிலும் அவளுக்கு ஈர்ப்பு ஜாஸ்தி! மேலும் இதெல்லாம் ரகசியமாகவே தான் நடக்கும்! பெற்றோர் இருந்தால் அபியுமே கடிவாளம் கட்டிய குதிரை தான்! வீட்ல எலி.. வெளில புலி..

‘இவங்க நிஜமா தவிட்டுக்கு யார்ட்டயாவது வாங்கிட்டு வந்துருப்பாங்களோ? நம்மளை போல யாருமே இல்லையே! சரி.. நீ வா அபி! நாம மட்டும் இயற்கையை சைட் அடிக்கலாம்!’ என்று மீண்டும் அந்த காட்சிகளை ரசித்து போனோடு சேர்த்து தனது மனத்திற்குள்ளும் ஆசையாய் பதித்து கொண்டாள்! சிறிது நேரத்தில் தந்தை ஜெயராமன் அழைக்க, அவரை நோக்கி சென்றாள்!

“உன் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணித்தானே இருக்கு! லஞ்ச் முடிச்சிட்டு ரூமை காலி பண்ணிட்டு அப்படியே நம்ம ஜோசியர் வீட்டுக்கு போகலாம்! அங்கேயிருந்தே பஸ்ல போயிறலாம்!” என்று கூறினார் என்பதை விட கட்டளையிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்!

அபியோ, ‘ஐயோ! அந்த குடுகுடுப்பைக்காரன் வீட்டுக்கா? அவன் சும்மாவே ஓவரா சீனை போட்டு உடான்ஸா விடுவானே!’ என்று எரிச்சலானாள்! அதைக்கண்டு ‘என்ன?’ என்று அதட்டல் போட்டார் ஜெயராமன்!

“ஒண்ணுமில்லைப்பா போலாம்! எல்லாம் பேக் பண்ணித்தான் வைச்சிருக்கேன்!” என்று படுபவ்யமாய் பதில் தந்தாள் மகள்! அவளுக்கு அறைக்கு சென்று கொஞ்சம் உறங்கினால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது! ஏனென்றால் முதல்நாள் இரவு வந்ததோ அரசு பேருந்தில் அமர்ந்தபடி தான்! அதனால் முதுகும் இடுப்பும் ‘கொஞ்சம் படு’ என்று கெஞ்சியது அவளுக்கு!

ஆனால் தந்தையிடம் எதுவும் சொல்லமுடியாதே! சொன்னாலும், ‘மதியம் தூங்கினால் சோம்பேறி ஆகிவிடுவாய்’ என்று அதற்குமொரு அறிவுரை வழங்குவார்! அப்பொழுதும் அபியின் மனம் முனங்கும், ‘இவர் மட்டும் எங்காவது தனித்து சென்றால் சொகுசாக செல்வார்! அப்படி சென்றுவிட்டு வந்து நன்றாய் தூங்குவார்! நான் மட்டும் சோம்பி விடுவேனாம்!’ என்றெல்லாம் முரண்டு பிடிக்கும்! ஆனால் அதெல்லாம் சொன்னால், ‘நான் சம்பாதிக்கிறேன்!’ என்று அதற்கும் ஒரு பாட்டு பாடுவார்!

சரி அன்னையை உதவிக்கு அழைக்கலாம் என்று பார்த்தால், அவரோ தந்தையை மீறி எதுவும் சொல்லமாட்டார்! ஏன் மூச்சு கூட விடமாட்டார்! கணவர் என்ன சொன்னாலும் செய்தாலும் அவரை மீறி வாயையே திறக்காதவர் தாய் கல்பனா! அது அவருக்கே எதிராய் இருந்தாலும் மௌனியாய் தான் இருப்பார்!

‘என் வீடு இன்னும் அதர பழசான காலத்திலேயே இருக்கு! நாம மட்டும் வித்யாசமா இருக்கோம்! தவிட்டுக்கு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்க மாட்டாங்க! நாம அழகா இருக்கோம்ன்னு ஹாஸ்பிட்டல்ல இருந்து யாருக்கும் தெரியாம தூக்கிட்டு தான் வந்துருப்பாங்க! சீக்கிரம் என்னோட ஒரிஜினல் அம்மா அப்பாவை தேடனும்!’ என்று வழக்கம் போல நொந்துக்கொண்டு பெற்றோரின் பின்னே பூம்பூம் மாடாட்டம் நடந்தாள்!

அறைக்கு சென்று சாப்பிட்டு, எல்லாம் எடுத்துவைத்துவிட்டு ஜோசியரின் வீட்டிற்கு செல்ல சரியாய் மூன்று மணி ஆனது! ஆனால் அதுவே அபிக்கு ஏழரையாய் போனது!

அபியின் பெற்றோர் இருவருக்கும் ஜாதகம், ஜோசியம் மீது அதித நம்பிக்கை! தங்கள் குடும்பத்தின் மைசூர் வாசத்திற்கு தந்தையின் வேலை ஒரு காரணமென்றால், இன்னொரு காரணம் இந்த ஜோசியர் தான்! அபியை பொறுத்தவரை இவர்தான் முழு முதற்காரணம் என்று கூறுவாள்!

அடுத்த பக்கம்