நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 4 (3)

அங்கிருந்த மற்றவர்கள் எல்லாம் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்! மம்தாவே ஜே.டி.யை கூட்டிக்கொண்டு வந்து ஹர்திகாவின் மேல் புகார் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்! அவர் சொல்வதையெல்லாம் அமைதியாய் கேட்டவர், ஹர்திகாவின் புறம் திரும்பி அவள் சொல்வதையும் கேட்க ஆரம்பித்தார்!

‘நியாயமான மனுஷன்! வாதி பிரதிவாதின்னு சிறப்பா விசாரிக்கிறார்! ஐயோ ஆனா.. இவங்களுக்கு கீழே வேலை செய்ய எனக்கு கொடுத்து வைக்கலையே!’ மறுபடியும் புலம்பி தள்ளியது அபியின் மனது!

“ஜே.டி. உங்களோட சீஃப் டிசைனர் எனக்கு கொடுத்த ட்ரெஸ் இது!” என்றபடி அந்த ஆட்டுத்தோலை விரித்து காண்பித்தவள், “இப்படிதான் போனதடவை அவங்க ஏதோ டாப் ட்ரென்ட்ன்னு ஒரு ட்ரெஸ்ஸை கொடுத்தாங்க, அதைப்போட்டு ராம்ப் செஞ்சப்போ அத்தனை பேரும் படுகேவலமா ஒரு லுக்கை கொடுத்தாங்க! ஃபேஷன் மீடியா எல்லாம் கேவலமா இருக்குன்னு சொல்லி ஒரே நக்கல்! இதுல சிலர் மீம் வேற போட்டு என் மானத்தை வாங்கிட்டாங்க! என்னோட ரெபுடேஷன் மொத்தமா போன ஃபீல் எனக்கு! நான் இவ்ளோ தூரம் வந்ததே உங்கமேல இருக்க மதிப்பினால தான்! இப்படி எல்லாம் டிசைன் செஞ்சு என்னோட கேரியரை மொத்தமா மூடிறனும்ன்னு நினைக்கிறிங்களா? அப்படியெதாவதுன்னா சொல்லிருங்க! நானே கிளம்பிருவேன்!” வருத்தமுடன் தெரிவித்த ஹர்திகா, தனது மறுப்பை ஆணித்தரமாய் முன்வைத்தாள்!

மம்தா அதற்கும் ஒரு கூப்பாடு போட, தனது அழுத்தமான பார்வையால் அவரின் வாயை மூடவைத்தார் ஜே.டி.

“நான் உங்களோட அக்ரிமென்ட் சைன் செஞ்சப்பவே சஞ்சு டிசைன் செய்ற ட்ரெஸ் மட்டும் தான் போடுவேன்னு கமிட் ஆனதா ஞாபகம்! அண்ட் இன்னைக்கு நான் இங்கே இருக்க காரணமே சஞ்சு தான்! போனதடவை போல இந்த தடவை ஆகாது, என்னை டிஸப்பாயன்ட் செய்யமாட்டிங்கன்னு நம்பி தான் வந்தேன்! ஆனா.. இங்கே மொத்தம் தலைகீழ்! ஒருதடவை தான் என்னால காம்ப்ரமைஸ் ஆகிக்க முடியும் ஜே.டி.! எல்லா டைமும் என்னோட ரெபுடேஷன் போகுதுன்னு தோணுறப்ப.. சாரி ஐ கான்ட்!” அழுத்தமாய் மறுத்தாள் ஹர்திகா! அவளின் குரல் உயரவில்லை, உடல் பாவனையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை! ஆனால் மறுப்பு மட்டும் அத்தனை கடினமாய் தென்பட்டது!

‘ஒரு ட்ரெஸ்க்கு இத்தனை அக்கப்போரா?’ என்று ஆரம்பத்தில் அபிக்கு தோன்றினாலும், ஒரு செலிப்ரிட்டி, தான் தனித்துவமாய் தெரிய வேண்டுமென்று செய்யும் மெனக்கெடல், ஃபேஷன், ட்ரென்ட், மீடியா, நெட்டிசன்ஸ் அனைத்தின் வாயிலும் சிக்காமல் சிறப்பாய் செய்ய படும் பாட்டை பார்த்ததில் அவளின் கவலை மொத்தமாய் உருண்டு சுருண்டு மறைந்தே தான் போனது!

இன்னும் ஷோ ஆரம்பிக்க அரைமணி நேரமே இருக்க, துரிதமாய் செயல்பட்டார் ஜே.டி. ஹர்திகா காட்டிய ஆடையிலே தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியவர், மம்தாவிடம் திரும்பி “உங்களை நான் ஏற்கனவே ஃபிரான்ஸ்ல நடக்குற ஷோக்கு கவனத்தை செலுத்துங்கன்னு சொன்னேன்! ஆனா நீங்க என்னோட பேச்சை கேட்கவே இல்லை.. இங்கே மத்த விஷயத்திலேயே மூக்கை நுழைச்சிங்க! இனிமே அப்படி பண்ணாம நான் சொன்னதை மட்டும் செய்ங்க.. போய் அதுக்கு தேவையான டிசைன்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க.. இதை இவங்களே பார்த்துக்கட்டும்!’ என்று ‘அடுத்த முறையும் இதே போல நடந்தால் உன் வேலை போவது நிச்சயம்!’ என்ற மறைமுக எச்சரிக்கையையும் கொடுத்து அவரை முதலில் அனுப்பி வைத்தார்!

பிறகு சஞ்சுவின் புறம் திரும்பி, “இப்போ என்ன செய்யப்போறிங்க?” என்று கேட்க, அவளோ ‘தான் கடைசியாய் முடித்த ஆடை ஒன்று இருக்கிறது அதை எடுத்து வருகிறேன்’ என்று கிளம்பினாள்!

“சாரி ஜே.டி!” என்று தனது மன்னிப்பை ஹர்திகா வேண்ட, “நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் போன முறை நடந்ததுக்கு! இந்தமுறையும் அப்படி ஆகியிருந்தா பெரிய லாஸாகியிருக்கும்! அண்ட் தாங்க் யூ டூ!” என்றபடி தனது நன்றியை ஜே.டி. தெரிவித்த நேரம் அங்கே வந்து சேர்ந்தாள் சஞ்சு!

அவளின் பின்னே இரு பெண்கள் ஒரு வெள்ளைத்துணியால் மறைக்கப்பட்ட அந்த ஆடையை பத்திரமாய் கொண்டு வந்தனர்!

“இதை ட்ரை செய்!” என்று ஹர்திகாவிடம் ஒப்படைத்தபடி சொன்ன சஞ்சு, அவளுக்கு உதவிக்கு அபியையும் மற்ற இருவரையும் அனுப்ப, அப்பொழுதுதான் அபியை கவனித்தார் ஜே.டி.

“நீ யாரு?” அவரின் கேள்விக்கு சஞ்சு பதில் சொல்வதற்குள் “புது டிசைனர்! இன்னைக்கு தான் ஜாய்ன் ஆகிருக்காங்க! வெரி க்ளவர் அண்ட் ஸ்மார்ட்!” என்று ஹர்திகா சிரிப்புடன் நற்சான்றிதழ் வழங்கினாள்!

சஞ்சு ‘இருக்கும் பதட்டத்தில் இவளை மறந்துவிட்டேனே’ என்று திணற, அபியோ ஸ்கூல் பிரின்சிபாலின் முன்பு நிற்பது போல அட்டென்ஷனின் நின்றபடி ‘பேந்த பேந்த’ முழித்தாள்.

“புது டிசைனரா? இங்கே இருக்க டிசைனர்ஸ வைச்சிட்டே எனக்கு நாக்கு தள்ளுது! இதுல இன்னொன்னு வேறயா? எனிஹவ்… வெல்கம் டூ எலகன்ட் ரங்க்” என்று அவளை வரவேற்றவர், சஞ்சுவிடம் ‘ஒரு ஆல் தி பெஸ்ட்டை’ கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்!

“அப்போ இன்னைக்கு நம்ம சஞ்சுவுக்கு தான் ஸ்பெஷல் டே! சோ அவங்களுக்காகவே நாம பெஸ்ட்டா பண்ணிறனும்!” என்று ஹர்திகா எல்லோரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க, அனைவரும் உற்சாகமாய் ஆர்ப்பரித்தனர்!

அவளை அணைத்த சஞ்சுவோ, “நீ காலை ஆட்டிட்டு கம்முன்னு இருந்தப்பவே சுதாரிச்சு இருக்கணும்! எப்படியோ என்னோட டிரெஸ்ஸை ப்ளான் செஞ்சு போட்டுட்ட! தாங்க்ஸ் என்னை நம்பி வந்ததுக்கும்.. முன்னிறுத்தி பேசினதுக்கும்!” என்று கண்கள் பனிக்க தனது நன்றியை சொல்ல, அவளை தட்டிக்கொடுத்து மென்னகை புரிந்தாள் ஹர்திகா!

அடுத்து வந்த நிமிடங்களோ மின்னல் வேகத்தில் சென்றது! ஹர்திகா அபியின் துணையோடு ஆடையை அணிய செல்ல, சஞ்சு மற்ற விஷயங்களை பார்வையிடவேண்டும் என்று வெளியேறினாள்.

மற்ற மாடல்களுக்கு தேவையானதை செய்துமுடித்து, வந்தவர்களை வரவேற்று, பத்திரிக்கையாளர்களை கண்டு அவர்களிடம் தங்களது விழாவை பற்றி சிறப்பாக உரைத்து என்று பம்பரமாய் சுழன்றார்கள் ஒவ்வொருவரும்!

அபியோ ஹர்திகாவின் உடன் இருந்தபடி, அவளுக்கு தேவையான மேக்கப், தலையலங்காரம் என்று ஒவ்வொன்றையும் சிரத்தையுடன் கவனித்து வந்தாள்! அதுமட்டுமில்லாமல் அங்கே இருந்தோருக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள்.

ராம்ப்பில் சஞ்சு பிரத்யேகமாய் தயாரித்த, விடியலின் போது காணும் வானின் இளநீல நிறத்தில், அதன்மேல் சீராய் பொடிப்பொடியாய் வெண்ணிற ஸ்வரோஸ்கி கற்கள் பதித்த அந்த நீண்ட கவுனை அணிந்து கொண்டு ராணி போல வலம் வந்தாள் ஹர்திகா!

முதல் ஆளாய் அவள் நடந்து முடித்தபிறகு மற்ற மாடல்கள் வலம்வர, ஸ்டுடியோவின் உள்ளே ஃபோட்டோ ஷூட் நடந்தது! அந்நேரம் அபியை அழைத்து செல்ஃபியும் எடுத்துக்கொடுத்து ஆட்டோகிராஃப்பும் தந்தாள்! இறுதியில் சஞ்சுவை முன்னிறுத்தி அவளின் திறமையையும் மேடையிலேயே பாராட்டினாள்! ஒருவழியாய் ஷோ நல்லபடியாய் முடிய, ஜே.டியின் அன்புக்கட்டளையை மீற முடியாமல் விருந்து முடிந்தபின்னும் ஸ்டுடியோவின் வீஐபி அறையிலேயே இருந்தாள் ஹர்திகா! சஞ்சு எல்லாவற்றையும் ஜே.டியிடம் ரிபோர்ட் செய்துவிட்டு அபியோடு ஹர்திகாவை காண வந்தாள்!

அபி ஷோ ஆரம்பிக்கும் வரை ஹர்திகாவிற்கு வால் பிடித்தவள், அதன்பிறகு சஞ்சுவின் அருகில் சென்றுவிட்டாள்! மேலும் அங்கே இருந்தோர் எல்லோரும் அவளிடம் நல்லமுறையில் பழக, ‘வேலைக்கு வரமுடியாது!’ என்று எப்படி சொல்வது என்று மீண்டும் தனது சோகத்தில் மூழ்கி விட்டாள்!

“ஹப்பாடா!” என்று ஆசுவாசமாய் ஹர்திகா அமர்ந்திருந்த சோபாவில் அவளின் அருகில் தொப்பென்று விழுந்த சஞ்சு, “இப்போதான் நிம்மதியா இருக்கு! இன்னைக்கு நைட் நல்லா தூங்குவேன்!” என்றாள்!

அடுத்த பக்கம்