நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 4 (2)

“மேம்! நான் உங்களோட பெரிய ஃபேன்!” என்று குதித்தவள், “மேம்.. மேம்.. ப்ளீஸ்.. எனக்கு உங்களோட ஆட்டோகிராஃப் கிடைக்குமா? ப்ளீஸ்.. ப்ளீஸ்!” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்!

“ஆட்டோகிராஃப் என்ன ஃபோட்டோகிராஃப் கூட தருவேன்! ஆனா நீ எனக்கு ட்ரெஸ் கொடுத்தா” என்று ஹர்திகா பேரம் பேச, தனது கைகளில் இருந்த ஆடையில் ஒன்றை ஒப்படைத்தாள் அபி!

அதை ஹர்திகா அணிந்து வெளியில் வர, அபிக்கு அந்த ஆடை சுத்தமாய் பிடிக்கவில்லை! முசுமுசுவென்று செம்மறி ஆட்டின் தோல் போல முட்டிவரையிருந்த அந்த கபில நிற கவுனை கண்டு பீதியாய் நின்றாள் அபி!

“இது வேணாம்.. நாம அடுத்த ட்ரெஸ் ட்ரை பண்ணலாம்!” என்று இந்தமுறை தனது கையினில் இருந்த ஆடைகளில் இளமஞ்சள் நிற ஆடையொன்றை பார்த்து எடுத்து கொடுத்தாள்.

“ரொம்ப சரி! எனக்கும் இந்த ட்ரெஸ் பிடிக்கலை!”

மரகதமாய் மின்னிய பச்சை விழிகளை சிமிட்டி சிரித்த ஹர்திகா, அபி கொடுத்த அடுத்த ஆடையை அணிய சென்றாள். மேலும் அதை அணிய அபி உதவி வேறு செய்ய, சற்று நேரத்தில் அதை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்க்க, ‘பரவாயில்லை! போன முறைக்கு இது எவ்வளவோ மேல்!’ என்று அபிக்கு தோன்றினாலும் எதுவோ ஒன்று குறைவது போல தோன்றியது!

மிக மென்மையாக தொட்டால் வழுவழுக்கும் பட்டுப்போல இருந்த அந்த மஞ்சள் நிற உடை மார்பிலிருந்து இடைவரை உடலை கவ்வி பிடித்திருந்தது! பிறகு இடையிலிருந்து பாத நுனி வரை விரிந்து மஞ்சள் நிற நெட்டின் கீழ் படர்ந்திருந்தது! அந்த ஆடையை கெடுப்பதே அந்த வலை துணி தான் என்று உணர்ந்து கொண்டாள்.

மேலும் அவளின் கைகளில் இன்னமும் மூன்று ஆடை இருந்தது! அதை அருகில் இருந்த சோபாவில் வைத்து விரித்து பார்த்தவள், ஹர்திகாவையும் ஆடைகளையும் சில நொடிகள் மாற்றி மாற்றி பார்த்தாள்! மூன்றுமே சரியாய் இல்லை! என்ன அணிந்தாலும் அது ஹர்திகாவின் அழகை கெடுப்பது போல தோன்றியது அபிக்கு!

அதை நினைத்து கொண்டே ஹர்திகாவை பார்க்க, ஹர்திகாவும் ‘தனக்கு எதுவுமே பிடிக்கவில்லை’ என்று மூக்கை சுருக்கி வேண்டாமென்று தலையாட்டினாள்!

அப்படியே மொத்தமாய் அள்ளிக்கொண்டு, அங்கிருந்த ஒரே பக்கத்து அறையை நோக்கி ஓடினாள் அபி! அதுவோ ஆடைகள் களஞ்சியமாக காணப்பட்டது! அதனை சுற்றி பலரும் நின்று ஆராய்ந்து கொண்டிருந்தனர்! அந்த கூட்டத்தில் சஞ்சுவை கண்டு நெருங்கியவள், “மேம்! மேம்!” கிசுகிசுவென அழைத்தாள்!

“என்ன? ஹர்திகா ஏதாவது போட்டாங்களா?”

“இல்லை மேம்.. அவங்களுக்கு எதுவுமே பிடிக்கலை.. நல்லாவும் இல்லை..” மெல்லிய குரலில் பணிவாய் பதில் சொன்னாள் அபி!

சலிப்படைந்த சஞ்சுவோ அங்கிருந்த சில ஆடைகளை எடுத்துக்கொண்டு ஹர்திகாவை காண சென்றாள்! அவளின் பின்னோடு அபியும் ஓடினாள்! அங்கு ஹர்திகாவோ அந்த மஞ்சள் நிற உடையில் ஒய்யாரமாய் கடைசி கண்ணாடியின் முன்பிருந்த மேக்கப் சேரில் அமர்ந்திருந்தாள் போனை பார்த்துக்கொண்டு!

“இதை ட்ரை செஞ்சு பார்க்கலாமே!” என்றபடி ஒரு ஆடையை கொடுக்க, அதை வாங்கி கொண்டு அணிய சென்றாள் ஹர்திகா!

‘இவங்களுக்கு ரொம்ப பொறுமை ஜாஸ்தி!’ என்று எண்ணிக்கொண்டு அமைதியாய் நின்றாள் அபி! ஆனால் அடுத்த நொடிகளில் ‘ஐயோ! நான் உள்ளேயே போகமாட்டிக்கிறேன்!’ என்று ஹர்திகா அலறியதில், அபி தான் பதறியடித்து அவளுக்கு உதவி புரிய சென்றாள்! இப்படியே இன்னும் சில ஆடைகளை போட்டுப்பார்க்க, எதுவுமே ஒரு ஈர்ப்பை தரவில்லை சஞ்சுவிற்கு!

ஒருக்கட்டத்தில் “என்னத்தை ட்ரெஸ் டிசைன் பண்ணியிருக்காங்க! ஒன்னும் உருப்படியா இல்லை!” என்று அவளே எரிச்சல் படவேண்டியிருந்தது! ஹர்திகாவோ மௌனமாய் சிரிக்க மட்டும் தான் செய்தாள்!

“சிரிக்காத! அந்த லேடிக்கு உன்னை கண்டாலே ஆகாது! அவங்ககிட்ட போய் நீதான் இந்த ஷோவோட டாப் மாடல்ன்னு ஜே.டி சொன்னதும் அவங்களுக்கு மூஞ்சி அப்படியே செத்து போச்சு அந்த கடுப்பில தான் கண்டமேனிக்கு ட்ரெஸ்சை டிசைன் செஞ்சு இருக்கா!” என்று எலகன்ட் ரங்கின் முதன்மை ஆடை வடிவமைப்பாளரை திட்டி தீர்த்தாள்!

“நான் தான் டாப் மாடல்ன்னு உங்க ஜே.டி. சொன்னதும் டிஸப்பாய்ன்ட் ஆகிருப்பாங்க! விட்டுத்தள்ளு!” என்று சமாதானம் செய்தாள். ஜே.டி என்பவர் எலகன்ட் ரங்கின் சிஈஓ

“போன தடவையே அவங்களுக்கும் உனக்கும் டெர்ம்ஸ் சரியில்லை! நீ போடமாட்டேன்னு சொன்ன டிரெஸ்ஸை நான் தான் வற்புறுத்தி போடவைச்சேன்! ஏதோ எனக்காக போட்ட?” என்று பழைய நினைவில் முகம் கசங்க சஞ்சு கூற, அவளை சமாதானம் செய்தாள் ஹர்திகா!

“விடுன்னு சொல்லிட்டேன்! நானே எதுவும் நினைக்கலை! நீ எதுக்கு மூட் ஆகுற? எனக்கு என்னமோ இந்த ட்ரெஸ் நல்லாயிருக்குன்னு தோணுது!” என்று தங்கநிற அடர் ஜரிகை துணியில் வெளிர் பிங்க் வண்ண கற்கள் பதிக்கப்பட்ட மேற்பகுதி, இடுப்பிலிருந்து சென்ற கீழ்ப்பகுதியில் இளஞ்சிவப்பு சிந்தடிக் துணியில் எந்தவொரு டிசைனும் இல்லாமல் வெறுமையாய் இருந்த அந்த உடையை தடவியபடியே ஹர்திகா சொல்ல, அந்த ஆடையின் மேல்தான் மற்றவளின் கண்ணும் இருந்தது!

அபியின் கண்களோ, ஹர்திகாவின் விழிகளின் மேல் படர்ந்தது! இதுவரை ஜொலித்த விழிகள் இப்பொழுது நிறம் மங்கி தெரிவதாய் தோன்றியது!

“மூட் அப்செட் ஆகுறாங்களோ? ஆனால் முகத்தில் எந்தவொரு பாவனையையும் காட்டவில்லையே!’ என்று சந்தேகப்பட, அதை உறுதி செய்வது போல இருந்தது சஞ்சுவின் பேச்சு!

“ப்ச்! இல்லை.. இல்லை.. தயவுசெஞ்சு காம்ப்ரமைஸோ, மூட் அப்செட்டோ ஆகாத! இன்னும் ஷோக்கு அரைமணி நேரம் இருக்கு! இரு ஏதாவது செய்வோம்!” என்று யோசனையுடன் கூற, இவர்களின் கூத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!

“எனக்கு என்னமோ எதுவுமே சரியில்லைன்னு தான் தோணுது! பேசாம நீ டிசைன் செஞ்சதையே போடலாமே? நீதான மத்த எல்லாருக்கும் ட்ரெஸ் டிசைன் செஞ்ச? அப்போ டாப் மாடலுக்கும் உன்னோட டிரெஸ்ஸை தானே போடவைக்கணும்? உழைப்பு உன்னோடது கிரிடிட் அவங்களுக்கா?” என்று ஆலோசனை வேறு வழங்கி தனது எண்ணத்தை முன் வைத்தார்!

“அதெப்படி இங்கே முடியும்.. இது எல்லாரோட முயற்சியும் தானே! அதே போல டாப் மாடலுக்கு எல்லாம் சீஃப் டிசைனர் டிசைன் செஞ்ச ட்ரெஸ்ஸை தானே கொடுக்கணும்!” சஞ்சு மறுக்க, ஹர்திகாவோ மௌனமாய் கண்ணாடி வழியே அவளை ஏறிட்டாள்!

சஞ்சுவோ அதை உணர்ந்து ‘இல்லையென்பது போல’ கண்ணாடி வழியேயே ஹர்திகாவை காண, அவளோ அந்த பார்வையில் என்ன உணர்ந்தாளோ? அமைதியாய் காலை ஆட்டியபடி இருந்தாள் ஹர்திகா! அப்பொழுது அங்கே வந்து சேர்ந்தார் ஒரு பெண்மணி.

“ஹாய் ஹர்திகா டியர்!” என்று அலட்டலாய் அவர்களை நெருங்கியவர், ஹர்திகாவின் ஆடையை கண்ணுற்று, “நீ என்ன இந்த டிரெஸ்ஸை போட்டு இருக்க? உனக்கு நான் டிசைன் செஞ்ச அந்த ஸ்பெஷல் ட்ரெஸ் எங்கே? அதை போடு!” என்று ஆர்ப்பரிக்க வேறு செய்தார்!

அபியின் மனமோ, ‘நீதான் அந்த சீஃப் டிசைனரா? நீ டிசைன் செஞ்ச டிரெஸ்ஸை குப்பைல தான் போடணும்!’ என்று கவுண்ட்டர் கொடுத்தது!

“எனக்கு அது பிடிக்கலை மம்தா! அண்ட் இட் டசின்ட் லுக் குட் ஃபார் மீ! ஐ வோன்ட் வியர்!” என்று தனது மறுப்பை தெரிவித்தாள் ஹர்திகா!

“நோ! என்னோட டிசைன்ஸ்ல அதுதான் பெஸ்ட். உனக்காகவே நியூவா ரெடி செஞ்சது! யூ ஹேவ் டு வியர்!” மம்தா கொஞ்சலாய் சொன்னாலும், ‘நீ போட்டுத்தான் ஆகணும்!’ என்ற கட்டளையும் மறைமுகமாய் தென்பட்டது!

“என்னைக்கேட்டா இதுதான் வொர்ஸ்ட்ன்னு சொல்வேன்! அண்ட் எனக்கு இது பிடிக்கலைன்னு சொன்னதா ஞாபகம்!” அந்த நாற்காலியில் அமர்ந்தபடி கழுத்தை மட்டும் திருப்பி ஹர்திகா அலட்சியமாய் பதில் தந்ததில் மம்தாவின் முகம் கருத்து தான் போனது!

“யூ ஆர் நாட் இன் ய பொசிஷன் டு சே நோ! என்னோட டிசைன்ஸ் எல்லாம் போட பாலிவுட் ஸ்டார்ஸ் எல்லாம் வரிசைல நிற்கிறாங்க! ஜே.டி. உன்னைத்தான் போடணும்ன்னு சொன்னாதால எனக்கு விருப்பமில்லாட்டியும் நான் பேசாம இருக்கேன்! அதெப்படி என்னோடதை நீ வேணாம்ன்னு சொல்லலாம்?”

“அப்போ அந்த வரிசைல நிற்கிற பாலிவுட் ஸ்டார்சையே கூப்பிட்டுக்கோங்க! நான் எலகன்ட் ரங்கோட போட்ட அக்ரீமென்ட்டை கேன்சல் செஞ்சுட்டு கிளம்புறேன்!” மிகவும் கேசுவலாக சொன்ன ஹர்திகா சன்சுவின் புறம் திரும்பினாள்.

“ஜே.டி. இன்னும் பத்து நிமிஷத்துல இங்கே இருக்கணும்!” என்று கட்டளையிட்டவள் மறுபடியும் தனது போனில் முகத்தை புதைத்து கொண்டாள்! மம்தாவோ காச்மூச்சென்று கத்த ஆரம்பித்துவிட்டாள்!

சஞ்சு நிலைமை கைமீறி செல்வது கண்டு சமைந்துபோய் நின்றாள்! யாரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் முழித்தாள்! மம்தாவை சமாதானம் செய்து அவர் தைத்த உடையை போடவைத்தாள் ஹர்திகா மொத்த ஷோவையும் நிறுத்திவிடுவாள்! ஹர்திகாவிற்கு சாதகமாய் பேசினால், மம்தா ‘எலகன்ட் ரங்கின்’ பெயரை மொத்தமாய் கெடுத்துவிடுவார்! என்ன செய்வதென்றே புரியாத நிலை?

அபிக்கோ காட்டிற்கு நடுவில் சிக்கிய உணர்வு! ஆதியில் இருந்து எதுவுமே புரியவில்லை! தான் ஏதாவது வாய் திறந்தால் ரசாபாசம் ஆகிவிடுமோ என்று வாயை மூடிக்கொண்டு இருந்தாள்!

அடுத்த பக்கம்