நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 4

இரண்டரை வருடங்களுக்கு முன்பு

மும்பையின் மிகப்பிரபலமான ஃபேஷன் ஸ்டுடியோவான ‘எலகன்ட் ரங்க்’கில் காலடி எடுத்துவைத்தாள் அபி! கேம்பஸ் இன்டர்வ்யூ மூலம் இங்கே இன்டர்ன்ஷிப்போடு வேலை கிடைத்திருந்தது அவளுக்கு!

அந்த பிரமாண்ட வரவேற்பில் படு பிசியாக இருந்த பெண்ணிடம் தனது தோள் பையினில் இருந்து ஒரு கவரை எடுத்து நீட்டியபடியே தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்!

“ஹாய் மேம்! ஐ ஆம் அபிநிதி! ஐ ஆம் கம்மிங் ஃப்ரம் மைசூர் _____ ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்! ஐ ஹாவ் பீன் அசைண்ட் டு வொர்க் ஹியர் அஸ் ஜூனியர் டிசைனர்! திஸ் இஸ் மை அப்பாய்ன்மென்ட் லெட்டர் அண்ட் பயோ-டேட்டா! கேன் ஐ ஏபிள் டு மீட் தி எச்.ஆர்.?”

வரவேற்பு பெண் அதற்கு பதில் சொல்வதற்குள் அவளை நெருங்கியிருந்தாள் ஒருத்தி! கை நிறைய உடைகளோடு!

ஓடி வந்திருப்பாள் போல, மூச்சு வாங்கியது! “ஹாய் லியா! ஐ நோ ஹெர்.. ஐ’ல் டேக் ஹெர் டூ ஷெர்லி!” என்றபடி அபியின் கையிலிருந்த கவரையும், அவளின் தற்குறிப்பையும் பறித்து கொண்டவள், தன்னிடம் இருந்த உடைகளில் பாதியை அவளின் கையில் திணித்திருந்தாள்!

மிகவும் சிரமப்பட்டு கவரை பிரித்து, கடித்தத்தை எடுத்தவள், அதில் வேகவேகமாய் கண்களை ஓட்டியபடி, “கம் ஃபாஸ்ட்!” என்று கூறிவிட்டு, முன்னே நடக்க ஆரம்பித்தாள் தற்குறிப்பை படித்தபடி!

அபியும் அவளின் பின்னோடு எல்லாவற்றையும் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு ஓடினாள்!

‘யாரம்மா நீ?’ என்று மனதிற்குள் குழப்பம் வேறு எழுந்தது! இருவரும் லிஃப்டினுள் நுழைய, அபியின் கேள்விப்படலம் ஆரம்பமானது!

“நான் இங்கே வேலைக்கு வந்துருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

“உன் பின்னாடி தானே வந்தேன்! அண்ட் நீ ரிசப்ஷன்ல கொஞ்சம் சத்தமா சொன்னதை நான் கேட்டேன்!” ஜஸ்ட் லைக் தட் என வந்தது அவளின் பதில்!

“சரி! எனக்கு தமிழ் தெரியும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? என்கிட்டே தமிழ்ல பேசுறிங்களே?” அபி குழப்பமாய் கேட்க, ‘உனக்கு என்னாச்சு’ என்பது போல பார்த்தாள் அவள்!

“உன்னோட பயோ-டேட்டால தமிழ், இங்கிலீஷ், கன்னடா, ஹிந்தின்னு நாலு மொழி தெரியும்ன்னு நீ தான கொடுத்துருக்க! அதுலயும் முதல் லாங்க்வேஜ் தமிழ்! அதான் பேசினேன். வேணாமா?” அவள் சிரிப்போடு கேட்க, அபியோ அசடு வழிந்தாள்!

‘மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்துட்டேன்! ஆனால் யார் இவள்?’ அதை அறிந்துக்கொள்ளும் ஆவலில் அவளிடமே கேள்வி எழுப்பினாள்!

“மே.. மே.. மே ஐ நோ ஹூ ஆர் யூ மேம்?”

மற்றவளோ சிறு சிரிப்புடன் பார்த்தாள், “நான் சஞ்சண்யா.. நான் உன்னோட ட்ரைனர் கம் சீனியர் டிசைனர்! நாம ஒண்ணா தான் இனி வேலை செய்யப்போறோம்” என்று அபிக்கு தன்னை அறிமுகம் செய்ய, அந்த அறிமுக படலமே அபிக்கு பிரமிப்பாய் இருந்தது! அதேசமயம் மிகவும் பிடித்தும் இருந்தது!

எதிரில் இருப்பவள் இங்கே ஒரு சீனியர் டிசைனர் என்பதையும் தாண்டி, தென்னிந்திய திரையுலகின் பல முன்னணி நடிகைகளுக்கு ஆடைகள் வடிவமைத்து தருபவள்! தங்களுக்கு ஆடை வடிவமைத்து தர இவள் தான் வேண்டும் என்று பல நடிகர் நடிகைகள் கூறுவார்கள் என்று எலகன்ட் ரங்கின் முதன்மை வடிவமைப்பாளர் ஒரு பத்திரிக்கை செய்தியில் கூறியிருந்தது அபியின் நினைவேட்டில் வந்து போனது!

தனது கல்லூரியில் பலகட்டமாக நடந்த ஆடைகள் வடிவமைத்தல் போட்டி, கேம்பஸ் தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றிப்பெற்ற சமயம் அதை நடத்தியவர், ‘எங்களோட சீனியர் டிசைனர் உங்க ஃபோர்ட்ஃபோலியோ எல்லாம் பார்த்தாங்க! ஷீ இஸ் இம்ப்ரெஸ்ட் பை யுவர் வொர்க்!’ என்று சொல்லியது வேறு வந்தது! அதை மறந்து கிடப்பில் போட்ட தன்னை என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள் அபி!

சஞ்சண்யா, ‘எனக்கு கீழ் வேலை செய்யப்போகிறாய்’ என்று கூறாமல் ‘நாம் ஒன்றாய் பணி புரியப்போகிறோம்’ என்று கூறியதிலேயே அவளின் அந்த லீடர்ஷிப் அபிக்கு அந்நேரம் நெகிழ்ச்சியை உண்டாக்கியது! ஆனால் அவளால் இங்கே பணி புரிய முடியாதே! இங்கே இவ்வளவு தூரம் வந்ததே ‘தன்னால் இங்கே வேலை செய்ய முடியாது’ என்பதை கூறத்தானே!

மனத்தில் எழுந்த வலியோடு அதைச்சொல்ல வாயை திறக்கும் முன், “எதுவா இருந்தாலும் ஈவ்னிங் பேசிக்கலாம்! இன்னைக்கு நமக்கு பிக் டே! கம்.. கம்..” என்று சஞ்சு இடையிட்ட மறுநிமிடம் இரண்டாம் தளம் வந்து சேர்ந்தது லிஃப்ட்!

‘எனக்கு இவங்களை ரொம்ப பிடிக்குதே! ஆனா இவங்களோட எனக்கு வேலை செய்ற கொடுப்பினை இல்லையே! சரி இன்று மட்டும் வேலை செய்துவிட்டு சென்றுவிடலாம்! ஒரு எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் அவங்களுக்கு ஒரு உதவி போல நினைத்து கொள்வோம்!’ அபியின் மனத்தில் இப்படி தான் எண்ணம் ஓடியது!

அதுதான் அவள் அன்றைய நாளில் கடைசியாய் அவளைப்பற்றி சிந்தித்தது! அதற்கடுத்து அதற்கெல்லாம் நேரமே வைக்கவில்லை! அப்படியே அவளை இழுத்து கொண்டு அந்த தானியங்கி மரக்கதவை நோக்கி சென்றாள் சஞ்சண்யா! அதை திறந்து பார்த்தால், விசாலமான மேக்கப் ஸ்டுடியோ தென்பட்டது!

ஃபுல் சென்ட்ரலைஸ்ட் ஏசியின் ஜில்லிப்பில் பகல் நேரத்திலும் குட்டிகுட்டியாய் எல்ஈடி மற்றும் அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது! இருபக்கத்திலும் ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு, அதனின் முன்னே தங்களை அப்படியும் இப்படியும் அழகு பார்த்து கொண்டிருந்தனர் மாடல்கள் பலர்! அவர்களின் ஆடைகள், அலங்காரம் என்று கவனத்தோடு இருந்தனர் இன்னும் சிலர்!

‘இந்தியால இருக்க எல்லா பியூட்டிசும் இங்கேதான் இருக்காங்க போல!’ என்று எண்ணிக்கொண்டபடி, ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்தாள் அபி! சஞ்சுவோ அங்கேயிருந்த சிலரிடம் ஹிந்தியில் ஏதோ விசாரித்தபடி முன்னேறிக்கொண்டிருந்தாள்!

அங்கே ஓரமாய் இருந்த மரத் தடுப்பிற்கு முன்னே சென்ற சஞ்சு, “மேம்! ஆப்க்கே கப்டே ஆஹயீ ஹெயன்!” என்று அந்தப்பக்கம் இருந்த ஒருத்தியிடம் இயம்பினாள்!

அவளோ கையை மட்டும் நீட்ட, “ஹான் இதோ!” என்றபடி சஞ்சு பின்னால் திரும்ப, அங்கே அபி இல்லாதது கண்டு பதறிப்போனவள் அப்படியே எட்டிப்பார்க்க, அபியோ ஆரம்ப புள்ளியில் நின்றபடி எல்லாவற்றையும் அதிசயமாய் பார்த்து கொண்டிருந்தாள்!

“அபிநிதி!” என்று சஞ்சு கத்தி அழைக்க, அதுவரை இருந்த மாயத்திலிருந்து விடுப்பட்ட அபியோ, சஞ்சுவை கண்டு அவளை நோக்கி வேகமாய் வந்தாள்!

“இங்கேயே நில்லு! இவங்க கேட்கிறதை எல்லாம் கொடு! எனக்கு பக்கத்து ரூம்ல வேலை இருக்கு!” என்றபடி அங்கிருந்து சென்றுவிட்டாள் சஞ்சு!

‘யாருக்கு கொடுக்கணும்?’ என்பது போல முழித்த அபியோ, தடுப்பை தனது லேசர் கண்களாலேயே துளைக்க செய்ய, அதற்கு தேவையே இல்லை என்பது போல தலையை மட்டும் நீட்டினாள் அந்தப்பக்கம் இருந்தவள்!

‘ஹான்! ஹர்திகா!!! என் டார்லிங்.. செல்லக்குட்டி..’ அபியின் மனம் ‘ஆடுறா ராமா! ஆடுறா ராமா!’ என்று ஆட்டம் போட்டது! மனம் தான் ஆடியதே தவிர, சரிரம் எல்லாம் ஸ்தம்பித்து போய் கிடந்தது! அவள் மட்டும் ஸ்தம்பித்து என்ன பிரயோஜனம், உலகம் சுழலத்தானே செய்கிறது!

ஹர்திகா ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம்’ என்பது போல இவளை உணர்ந்து கொண்டு மென்னகை புரிய, அதிலேயே இன்னமும் ‘ஆவென்று’ நின்றாள் அபி!

“என்னை அப்பறம் சைட் அடிக்கலாம்! இப்போ என்னோட ட்ரெஸ் ப்ளீஸ்!” என்று தனது பச்சை நிற விழிகளை சுருக்கி கேட்டதில், இவளோ மொத்த ஆடைகளையும் அப்படியே ஸ்லோ மோஷனில் நீட்டினாள்!

அதில் இன்னமும் விரிந்த சிரிப்பை வெளிப்படுத்திய ஹர்திகா, தடுப்பில் அப்படியே சாய்ந்து கொண்டு அபியின் கன்னத்தில் செல்லமாய் தட்ட அப்பொழுது தான் சுயவுணர்வுக்கே வந்தாள் அபி!

அடுத்த பக்கம்