நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 3 (2)

“எனக்கு எப்படி எங்கேயிருந்து ஆரம்பிக்க என்று சத்தியமா தெரியலை வருண்! அப்படி ஒரு குழப்பத்தில் இருக்கேன்! என் கண்ணு முன்னாடி இத்தனை நாளா இருந்தவங்களை திடீர்ன்னு காணோம்! தேடினாலும் கிடைக்கலை! எங்கே போனாங்க? ஏன் போனாங்க அப்படிங்கற ஒரு குழப்பத்திலேயே இருக்கேன்!” என்றபடி அவனின் கண்களை அப்பொழுது தான் சந்தித்தாள்!

அதுவரை எங்கே அவனைப் பார்த்தாள்? சஞ்சு காஃபி போடும் அழகை தானே அவள் பார்த்து கொண்டிருந்தாள்! மேலும் கருத்தும் கவனமும் அவள் கூறப்போகும் விபரத்தில் தானே இருந்தது!

வருணின் கண்கள் காட்டிய தீவிரத்தில் இவள் இன்னமும் தடுமாறினாள்! ஆனால் அவனோ லேசாய் புருவம் நெரித்து அவள் சொல்வதை தீவிரமாய் கேட்கும் ஆர்வத்தில் இருந்தான்!

சஞ்சுவோ காஃபி எடுத்து கொண்டு வந்தவள், “குடிச்சிட்டு பேசலாம்!’ என்று ஆளுக்கு ஒரு கப்பை கொடுத்துவிட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு வருணின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள்!

சஞ்சு வைத்த காஃபியை அருந்திய வருணோ, “ஹ்ம்ம்!” என்று முகம் சுழித்தவன், “சுகரை அள்ளி கொட்டிருக்க” என்று கூறிய அதேவேளையில் காஃபியை குடித்தாலாவது கொஞ்சம் பதட்டமில்லாமல் இருப்போம் என்று நினைத்தபடி தனது காஃபியை அருந்திய ஷ்ரவந்தியோ, “ஐயே! எனக்கு சக்கரையே இல்லை!” என்று எரிச்சல் பட்டு சஞ்சுவை பார்த்து கத்தினாள்!

‘ஒரு காஃபி கூட ஒழுங்கா போடத்தெரியலையே சஞ்சு உனக்கு!’

மனதார தன்னை சபித்து கொண்ட சஞ்சு, தான் இன்னமும் அருந்தாமல் இருந்த காஃபியை ஷ்ரவந்திக்கு கொடுத்து, அவளதை தனக்கு எடுத்து கொண்டாள்!

“எனக்கு சரியா போட்டு இருப்பேன்! நீ டென்ஷன் ஆகாம குடி! டென்ஷனானா நீ நீயாவே இருக்கமாட்ட” என்று சஞ்சுவுக்கு ஒரு அறிவுரையையும், “முதல் முதலா வர ஒரு இடத்துக்கு இனிப்பை தான் முதலில் சாப்பிடனும்! அதனால இனிப்பாவே இந்த காஃபியை குடிங்க” என்று வருணுக்கு அவளாகவே ஒரு லாஜிக்கையும் கூறினாள்!

வருண் அதில் கடுப்பாகி மௌனமாய் அவளை முறைக்க, சஞ்சுவோ மானசிகமாய் தலையில் அடித்து கொண்டாள்!

“சரி.. சரி.. நான் எதுவும் சொல்லலை!” என்று இருவரையும் சமாதானம் செய்த சஞ்சு அமைதியாய் அவர்கள்.. இல்லையில்லை ஷ்ரவந்தி சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

“எனக்கு உங்களை எவ்வளவு தூரம் நம்புறதுன்னு தெரியலை.. ஆனா இன்னைக்கு சூழ்நிலைல உங்களை தவிர யாரையும் நம்ப முடியா சூழல்ல இருக்கேன்! நானும் நேரடியா எதுவும் செய்ய முடியாது! அப்படி செஞ்சா இங்கே பலருக்கும் விஷயம் தெரிஞ்சுரும்! அதான் சஞ்சு மூலமா நம்பிக்கையான ஒரு ஆள் வேணும்ன்னு உங்களை வர வைச்சேன்!” என்றபடி நிறைய பெரிய காகிதங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை தனது மேஜை டிராயரில் இருந்து எடுத்து கொடுத்தாள்.

அதை வாங்கிய வருண், ஒவ்வொரு காகிதமாய் புரட்ட ஆரம்பித்தான்! அவன் வாங்கும்போதே அதனை எட்டி ஏறிட்ட சஞ்சுவோ, கோப்பின் ஆரம்பத்தில் இருந்த புகைப்படத்தை கண்டு அதிர்வுடன் ஷ்ரவந்தியை பார்த்தாள்!

ஷ்ரவந்தியோ ‘அமைதியாய் இரு.. சொல்கிறேன்..’ என்பது போல கண்ஜாடை செய்து வருணின் மேல் பார்வையை பதித்தாள்.

அதற்குள் வருண் ஷ்ரவந்தியை ஏறிட, “இவங்களோட விபரமெல்லாம் ஃபைல்லயே இருக்கு! நேட்டிவ் திருச்சி! ஆனா.. வளர்ந்தது படிச்சது எல்லாம் மைசூர்ல! இதுவரைக்கும் எங்களோடவே இருந்தா.. இப்போ எங்கே இருக்கான்னு நீங்க தான் சொல்லணும். எங்களை விட்டு ஏன் போனா.. எதனால போனாங்கற விபரமும் எனக்கு கண்டிப்பா வேணும்!” என்றாள் ஷ்ரவந்தி!

‘யூ ஆர் மை லாஸ்ட் ஹோப்! தயவுசெய்து முடித்து கொடுத்துவிடு!’ என்ற கோரிக்கை மறைந்திருப்பதை நன்கு உணர்ந்தான் வருண்! சஞ்சுவோ ‘இதற்கு தான் எல்லாமா?’ என்பது போல நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தாள்!

“நான் நீங்க நினைக்கிற மாதிரி ப்ரோஃபஷனல் இல்லைதான்! ஆனா நம்பி கொடுக்குற வேலையை திறம்பட செய்வேன்! உங்களோட நம்பிக்கையை காப்பாத்துவேன்! கவலைப்பட வேண்டாம்!” வாக்குறுதி கொடுத்தான் வருண்!

ஒப்புதலாய் தலையை அசைத்தவளிடம் “நான் இப்போவே என்ன செய்யணும்ன்னு பார்த்து கிளம்புறேன்! பை!” என்று விடைப்பெற்றவன், சஞ்சுவை பார்த்தான்!

அவளோ, “எனக்கு வேலை இருக்கு.. நான் தனியா வந்துக்குறேன்!” என்று அமைதியாய் பதில் தர, சரியென்று கூறியவன், கதவை நோக்கி நகர்ந்தான்!

அறைக்கதவை திறந்துவைத்துவிட்டு மீண்டுமொரு முறை ஷ்ரவந்தியை மட்டும் அழுத்தமாய் பார்த்து வெளியேறினான்! சத்தியமாய் அந்த பார்வைக்கான அர்த்தம் புரியவேயில்லை அவளுக்கு!

“சஞ்சு இவர் என்ன செய்றார்?” மனதின் கேள்வியினை அடக்க முடியாமல் தோழியிடம் விடைவேண்டி அவள் முகம் பார்த்து கேட்க, அவளோ இவளை முறைத்து கொண்டிருந்தாள். உண்மையை மறைக்கும் பிள்ளையை கண்டிக்கும் தாய் போல்!

“அவர் என்னமோ செஞ்சுட்டு போறார்? நீ இப்போ என்ன செஞ்சுட்டு இருக்க?” கேள்வி மேல் கேள்வி எழுந்தது சஞ்சுவிற்கு!

“உன்கிட்ட சொல்லாததுக்கு என்னை மன்னிச்சிரு!” தலைகுனிந்தபடி மன்னிப்பு வேண்டி வருந்துபவளிடம் என்ன சொல்லி திட்டுவது?

“லூசு மாதிரி பேசாத! நீ சொல்லாதது எனக்கு பிரச்சனை இல்லை.. நீ.. நீ அபியை தேடிட்டு இருக்க? ஏன்?”

புரியாமல் கேள்வி எழுப்பிய சஞ்சுவை ஏரிட்டவளுக்கு இதுவரை இருந்த குழப்பம் பயம் தயக்கம் எல்லாம் மறைந்து தீவிரமும் அழுத்தமும் மட்டுமே குடியிருந்தது ஷ்ரவந்தியின் முகத்தில்!

“அப்போ தேடவேணாமா?” என்று தோழியை முறைத்தவள், “அப்படியே போய் தொலையட்டும்ன்னு விட்டுருவோமா?” என்று அவள் கோபமாய் கேள்வி எழுப்பியதில் சஞ்சு தான் வாயை மூட வேண்டி இருந்தது! ஆனாலும் எதுவோ உறுத்த மௌனமாய் தோழியை ஏறிட்டு பார்த்தாள்!

“ஹர்திகாவை இப்போதைக்கு நாம நினைச்சாலும் தேட முடியாது சஞ்சு! நாம தேட வேண்டிய ஒரே ஆள்.. அபி மட்டும் தான்! என்ன? எதுக்கு தேடுறேன்னு பார்க்கிறயா? அவளை தேடினாலே நாம ஹர்திகாவை நெருங்கிறலாம்! ஆனா அவ நமக்கு கிடைக்கணும்!” என்று யோசனையுடன் சொல்லிய ஷ்ரவந்தி,

“அவ நம்மகிட்ட வந்து சொல்லிட்டு அழுதுட்டு போன ரெண்டாவது வாரம் ‘ஒரு போன் பண்ணலை.. ஒன்னும் விபரம் சொல்லலைன்னு பதறிப்போய் அவ எப்படி இருக்கா, என்ன செய்றான்னு’ விசாரிக்க அப்பாவுக்கு தெரிஞ்ச நம்பிக்கையான ஆள் ஒருத்தரை அனுப்பினேன்! ஆனா.. அவ அங்கே இல்லை! அவ வீட்லயும் யாருமில்லை!”

ஷ்ரவந்தி ஒருவிரல் நீட்டி அழுத்தமுடன் சொல்லியதில் சஞ்சுவிற்கு அடிமனதில் பயப்பந்து உருள ஆரம்பித்தது!

“ஐயோ! ஏற்கனவே அவ வீட்ல பிரச்சனைன்னு தான் வந்தா.. அவங்க மறுபடியும் ஏதாவது செஞ்சுருப்பாங்களோ? செஞ்சுட்டு மொத்தமா தலைமறைவா ஆகிட்டாங்களோ?” சஞ்சு பயந்து போய் சொல்ல, வெறுமையாய் பார்த்தாள் ஷ்ரவந்தி!

“ஏதாவது சொல்லேன்?”

“என்ன ஆச்சுன்னு இனி வருண் தான் நமக்கு சொல்லணும்!”

சலனமே இல்லாமல் வந்த ஷ்ரவந்தியின் வார்த்தைகளில் அரண்டு போன சஞ்சுவோ தனது கையில் இருந்த காஃபி கப்பை மேஜையின் மேல் வைத்து அதை இன்னமும் இறுக்கமாய் பற்றிக்கொண்டாள்!

“இத்தனை நாள் மறைமுகமா தேடி பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை சஞ்சு! அப்பாவோட ஆளை வைச்சு அபியை தேடுறதும் இனி சேஃப் இல்லை.. அப்பா, அம்மான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிரும்.. சோ.. இனி கொஞ்சம் ப்ரோஃபஷனலா அதேசமயம் ரகசியமா அபியை தேடணும்ன்னு தான்.. ஒரு டிடக்டிவ் கேட்டது! ஹர்திகாவை தேடி இல்லை!” மன்னிப்பு கோரும் குரலில் ஷ்ரவந்தி கூற, சஞ்சுவோ எதுவும் சொல்லமுடியாமல் தலையை மட்டும் ஆட்டினாள்!

ஆனால் சஞ்சுவின் மனதோ, ‘அப்பவே போகவிடாமல் தடுத்திருக்க வேண்டுமோ? தன்னுடனே வைத்திருக்கவேண்டுமோ? அவள் ‘அப்பா அம்மா நியாபகமா இருக்கு.. போகிறேன்’ என்று அழுததும் நானும் தடுமாறிவிட்டேனே?’ தன்னையே நொந்து கொண்டு தடுமாறியது!

அடுத்த பக்கம்