நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 3

தங்களுக்கு சொந்தமாக இருக்கும் ஸ்டுடியோவில் தன்னுடைய படத்திற்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தாள் ஷ்ரவந்தி!

படப்பிடிப்பில் நடித்தது போக இங்கே.. இந்த தனியறையில் தனக்கு முன்னே இருக்கும் மைக் முன்பு திரையில் தான் ஏற்கனவே செய்ததை மறுபடியும் செய்யவேண்டும். வார்த்தைகளின் உச்சரிப்பு துல்லியமாக ஒலிப்பட வேண்டுமென்று நடிப்பிற்கு ஏற்றவாறு குரலின் அழுத்தத்தை கூட்டுவதில் குறைப்பதினால் காய்ச்சலே வந்த காலம் உண்டு! செய்வதை திறம்பட செய்ய அவள் மெனக்கெட்டாள் என்று தான் சொல்லவேண்டும்!

ஆரம்பத்தில் தனது படங்களில் ஷ்ரவந்தி டப்பிங் பேசியதே இல்லை. மொழி தெரியும் என்றாலும் உச்சரிப்பு சரியாக இருந்ததில்லை! ஆனால் ஒருக்கட்டத்தில் தானே பேசினால் தான் தனது நடிப்பை மெருகேற்ற முடியும் என்று தீர்மானித்தாள். அதன்பின் அவள் நடிக்கும் படங்களுக்கு அவளே டப்பிங் பேச ஆரம்பித்தாள். இது அவளுக்கு புது அனுபவமாக இருந்தது. சவுண்ட் எஞ்சினியர், டப்பிங் இயக்குனரின் உதவியோடு எதை எவ்வாறு பேசவேண்டும்! குரலின் ஏற்றம் இறக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பதை எல்லாம் கற்றாள்.

ஒரு படத்தில், அவளது கதாப்பாத்திரம் சாப்பிட்டு கொண்டே பேசுவது போல இருக்கும்! எப்படி பேசியும் அது சரியாகவே வரவில்லை! இப்படியே பல டேக் போனது! என்ன செய்வதென்றே தெரியவில்லை!

சாப்பிட ஏதாவது வாங்கி வரசொல்லி மென்று கொண்டே பேசலாம் என்று பார்த்தால், டப்பிங் பேச வந்ததோ நடுஜாமத்தில்! அவளின் நேரமோ என்னமோ ஒரு சிப்ஸ் கூட கிடைக்கவில்லை! என்னத்தை சாப்பிட?

சட்டென்று உதித்த யோசனையில் ஒரு பேப்பரை கிழித்து சுருட்டி வாயில் போட்டுக்கொண்டவள், மென்றபடியே பேசினாள்! அந்த காட்சியோடு அவளின் பேச்சும் குரலும் நன்கு பொருந்தியது! படமாக வெளிவந்த சமயத்திலும் அந்த காட்சி பலரால் பாராட்டவும் பட்டது!

அதன்பின் தான் டப்பிங் பேசுபவர்கள் படும் சிரமங்களையும் உணர்ந்தாள். இதற்குமுன் தனக்கு டப்பிங் பேசிய பெண்ணுக்கும் அழைத்து மனதார நன்றி சொன்னாள். தன்னால் டப்பிங் பேசமுடியா கட்டத்தில் அப்பெண்ணை மட்டுமே சிபாரிசு செய்வாள்! மேலும் அவளது குரலும் இவளது குரலும் ஓரளவு பொருந்துவதும் இன்னொரு காரணம்!

நல்லவேளை இன்று கழுதை போல காகிதம் உண்ணும் வேலையெல்லாம் இல்லை! மேலும் நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாதலால், இவளது காட்சிகளும் பேச்சும் கம்மியே!

அப்படி பேசி முடித்து வெளியில் வந்த சமயத்தில் தான் அவளை தேடி அங்கே வந்தாள் அவள் தோழியான ஆடையலங்கார நிபுணர் சஞ்சு! உடன் ஒரு ஆணும்! அவர்களுக்கு பின்னே இன்னும் இருவர் விதவிதமான ஆடைகள் அடங்கிய தாங்கியையும் ஒரு பெரிய பெட்டியையும் தூக்கி கொண்டு வந்தனர்!

“ஹாய்!” என்றபடி சஞ்சுவிற்கு கையை அசைத்தவள், உடன் வந்தவனை கண்டு கேள்வியாய் பார்த்தாள்!

சஞ்சுவோ, “இதெல்லாம் மேடமோட பெர்சனல் ரூம்ல வைச்சிருங்க! பெட்டியை பெரியவரோட ஆஃபிஸ் ரூம்க்கு கொண்டுப்போங்க” என்று உடன் வந்தவர்களுக்கு கட்டளையிட்டவள், அதன்பிறகே தோழியின் புறம் திரும்பினாள்!

“ஹாய் ஷ்ரவ்ஸ்! உனக்கு ரெடி செஞ்ச காஸ்ட்யூம் ஃபோட்டோ ஷூட்க்கு அண்ட் சாரிஸ் உன்னோட அம்மாக்கு!” என்று படபடவென்று விபரம் தெரிவித்தவள்,

“ஹோ சாரி! இது வருண்! என் ஃபிரெண்டோட அண்ணா! மும்பைல இருந்து வந்துருக்கார்.. வருண்.. இது ஷ்ரவந்தி.. சொன்னேன்ல!” என்று பரஸ்பரம் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தாள்!

“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் வருண்!” என்று ஷ்ரவந்தி தனது கையை நீட்ட, அவனோ “ஜஸ்ட் வருண்!” என்றபடி அவளின் கையை பற்றி குலுக்கினான்!

தன்னுடைய மெத்தன்ற உள்ளங்கையில் அவனின் உறுதியான உள்ளங்கை அழுத்தமாக பதிந்த வேளையில், அவ்வுறுதியையும் மீறி அவனின் ஸ்பரிசம் உறுத்தியது அவளுக்கு!

விதிர்த்து போய் அவனை ஏறிட, அதை கண்டுக்கொண்டவனோ அவளிடம் இருந்து கையை விடுவித்து உயர்த்தி காட்டியபடியே, “இட்ஸ் ய மைனர் இஞ்சூரி!” என்று புன்னகை மாறாமல் பதில் தந்தான்!

“ஹோ! ஒகே..” என்று மென்சிரிப்பை இவளுமே தந்தாலும் மனதிற்குள் உறுத்தல் இன்னமும் விட்டபாடில்லை. ஆனால் அதை வெளிக்காட்டவும் தயக்கமாய் இருந்தது! எதிரில் இருப்பவனின் கண்கள் வேறு ‘கேட்காதே! நீ கேட்டாலும் சொல்லமாட்டேன்!’ என்ற அழுத்தத்திலேயே பதிந்தது!

அதிலேயே லேசாய் எழுந்த தைரியத்தையும் மொத்தமாய் அடக்கிவிட்டாள்!

“வாங்க! என்னோட ரூம்க்கு போயிறலாம்!” எனக்கூற, தனது இடது கையை மட்டும் லேசாய் உயர்த்தி “லீட் மீ!” என்றான் வருண்!

ஷ்ரவந்தி அங்கே லிஃப்ட் நோக்கி முன்னே செல்ல, அவளோடு பேசியபடியே நடந்தாள் சஞ்சு! பின்னோடு வந்த வருணோ பார்வை சுழல அவ்விடத்தை ஆராய்ந்தபடியே நடந்தான்!

நான்கு பிரமாண்ட தளங்கள் கொண்ட ஸ்டுடியோ! ஒன்றிற்கும் மேற்பட்ட ரெக்கார்டிங் தியேட்டர்கள் இருப்பதை பல கண்ணாடி தடுப்புகள் மூலம் உணர்ந்தான் வருண்!

மூவரும் லிஃப்டினுள் நுழைய, கதவுகள் மூடியது! எண் நான்கினை அழுத்தினாள் சஞ்சு!

“எத்தனை தியேட்டர்ஸ் இருக்கு?” வருணின் கேள்விக்கு,

“ஜஸ்ட் சிக்ஸ்! எங்க தயாரிப்பையும் தாண்டி வேறு சிலரோட படங்களோட டப்பிங் நடக்கும்! சில டிவி ப்ரோக்ராம்ஸ் இன்டோர் ஷூட்டிங் எல்லாம் இங்கேதான்! தேர்ட் ஃப்ளோர்ல போயிட்டும் இருக்கும்” என்று விபரம் கூறினாள் ஷ்ரவந்தி!

அதற்குள் அவர்கள் செல்லும் தளம் வந்திருக்க, தானியங்கியின் வலது புறம் குறுகிய நடைப்பாதையில் திரும்பி கடைசியாக இருந்த அறைக்குள் சென்றனர் மூவரும்!

மிகவும் காம்பாக்ட்டாக, அதேசமயம் கொஞ்சமே கொஞ்சம் ஆடம்பரமாய் இருந்தது ஷ்ரவந்தியின் அறை! ஐங்கோண வடிவ அறை, அடர் அரக்கு வண்ணத்தில் மார்பிள் தரை! அதன்மேலே ஐங்கோண வடிவிலேயே வெளிர் சாம்பல் வண்ண கார்பெட்! நான்கு பக்க சுவற்றிலும் அதே அடர் சாம்பல் வண்ணத்திலும் வெண்ணிறத்திலும்  சுவர்பூச்சு பூசப்பட்டிருக்க, கடைசியிலோ முழுக்க கண்ணாடி தடுப்புகள், அதை திறந்தால் சின்னதாய் நீளவடிவ பால்கனி!

அறையின் ஒருபக்கம் சரியாய் அவள் அமரும்  கருநிற மேஜை மற்றும் சுழல் நாற்காலியின் பின்புறம் அவளது ஓவியம் மிகப்பெரிய அளவில்! அதற்கு பாதுகாவல் போல இருபக்க ஓரத்திலும் வெண்ணிறத்தில் “ட’ வடிவில் வரிசையாய் மேலிருந்து கீழாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அலங்கார அலமாரி. ஒவ்வொரு அடுக்கிலும் குட்டி குட்டியாய் வெண்ணிற தொட்டியில் வீட்டினுள்ளேயே வளர்க்கும் செடி வகைகள்! வெண்ணிற அலங்கார விளக்கு, டைம் பீஸ், சாய்வாய் அடுக்கி வைக்கபட்டிருந்த புத்தகங்கள்!

அதற்கு எதிர்பக்கம் விரிந்த ‘வீ’ போல இருக்கும் இடத்திலோ பீஜ் நிறத்தில் சோபாக்கள் போடப்பட்டிருந்தது! அதனின் முன்பு கருநிற கண்ணாடி டீபாய்! அதற்கு அடுத்தபக்கம் சின்னதாய் சுவரோடு பதிக்கப்பட்ட ஹாஃப் வைட் வண்ண மேஜையில் கருநிற காஃபி மேக்கர், கப் அண்ட் சாசர் என்று அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது! அதனோடு இன்னொரு அறைக்கு செல்ல கதவும் அதனின் மேலே வால் கிளாக்!

சஞ்சுவோ நேராய் காஃபி மேக்கர் இருக்கும் இடத்திற்கு சென்று மூவருக்கும் காஃபி தயாரிக்க ஆரம்பித்தாள். ஷ்ரவந்தி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டவள், தனக்கு எதிரில் வருணை அமர சொன்னாள்!

“நைஸ் ஆஃபிஸ் ரூம்! இன்டீரியர் டிசைன்ஸ் எல்லாம் நல்லாயிருக்கு!” என்று மனதார பாராட்டினான் வருண்! பதிலுக்கு நன்றி நவின்றாள் ஷ்ரவந்தி!

“ஒகே! நான் உங்களை வர சொன்னது எதுக்குன்னு சஞ்சு சொன்னாளா?”

மேஜையின் மேல் மணிக்கட்டுகளை ஊன்றி விரல்களை கோர்த்து கொண்டு கேள்வி எழுப்பினாள்!

“இல்லை! எனக்கு எப்பவுமே நான் யாரை டீல் செய்றேனோ அவங்ககிட்டயே விபரம் வாங்கி தான் பழக்கம்!” என்றவன்,

“நீங்களே சொல்லுங்க! என்ன விஷயத்துக்காக என்னோட உதவி தேவை?” என்று கேட்டான்!

பிணைந்திருந்த விரல்கள் மேஜையில் லேசாய் தாளம் போட, சொல்லமுடியா தயக்கத்தில் இருந்தாள்! இவனிடம் சொல்வது சரியா தவறா என்று பிரிக்க முடியா குழப்பம் வேறு! ஆனால் இதற்குமேல் பின்வாங்க அவளுக்கு விருப்பமும் இல்லை!

அடுத்த பக்கம்