நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 2

சென்னைக்கு வெளியில் நகரத்தின் பரபரப்பு எதுவுமின்றி அமைதியாக காணப்பட்டது அவ்விடம். வெளிவாயில் இரும்பு க்ரில் தடுப்புகளை தாண்டி ஐந்து நிமிட நடைப்பயணத்தில் உள்ளே தள்ளி இருந்தது அந்த பங்களா! சுற்றிலும் மரங்களும் சோலைகளும் அரணாய் சூழ்ந்திருக்க, அதற்கடுத்து இருந்த இடத்திலோ மஞ்சள் நிற மலர்கள் மட்டுமே பூத்து குலுங்கி கொண்டிருந்தது.

கருநிற கற்கள் பதிக்கப்பட்ட நடைப்பாதையும், அடர் பழுப்பும், கருமையும் கலந்த நிறத்தில் வீட்டின் மதில் சுவர்களும் பரவி படர்ந்திருந்த மலர் தோட்டத்தை மேலும் எடுப்பாய் காட்ட, அதில் ஈர்க்கப்பட்டுத்தான், அங்கே தோட்டத்தை சுற்றி ஜாகிங் செய்தபடியே மலர்களின் நறுமணத்தை தனது சுவாசத்தில் முழுதாக நிரப்பி உள்வாங்கி கொண்டிருந்தான் சர்வா! கால்கள் அதன்போக்கில் சீராய் ஓடிக்கொண்டிருக்க, மனமோ முன்தினம் நடந்த விழாவில் தனக்கும் ஷ்ரவந்திக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை நினைத்து பார்த்தது!


ஷ்ரவந்தியின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான விஸ்வநாத்தும், சர்வாவின் தந்தை ராகவேந்தரும் நீண்டகால நண்பர்கள்! விழாவின் போது இருவரும் பேசிக்கொண்டிருக்க, மரியாதை நிமித்தம் அவர்களின் மக்களும் அங்கேயே இருந்தனர்!

பெரியவர்கள் பேசும் பேச்சுக்களை மௌனமாய் கேட்டுக்கொண்டபடி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்தபடி அமைதியாகவே இருந்தனர்.

‘ஒரு சமயத்தில் இரு தந்தைகளும் வேறொரு முக்கிய நபரின் அழைப்பில் அவர்களோடு பேச சென்றுவிட, அப்பொழுதுதான் அவளை நன்றாய் பார்க்கவே செய்தான் சர்வஜித். ஷ்ரவந்தியோ ‘நீ யாரோ’ என்பது போல தான் பார்த்து வைத்தாள்.

‘ஹர்திகா எங்கே மிஸ். ஷ்ரவந்தி?” ஏதோ தீவிரமாய் பேசுவது போல பேசினாலும் பார்வையோ கூர்மையாய் அவளின் மேல் படிந்தது!

“இதே கேள்வியை உங்களை பார்த்து நானும் கேட்கலாம் சர்வா!” அதே தீவிரமாய் பதில் தந்தாள் ஷ்ரவந்தி!

“நினைச்சமாதிரியே இந்த சினி ஃபீல்ட் விட்டு அனுப்பியாச்சு? அவ்வளோ வெஞ்சன்ஸ் அவங்கமேல? அப்படித்தானே?’

சர்வா எதையும் மனதில் வைத்து கொள்ளத் தெரியாதவன்! அதே போல அவனால் சுற்றி வளைத்து எல்லாம் பேசமுடியாது! இதோ பார்த்தவுடன் ‘எப்படி இருக்கிறாய்?’ என்றுக்கூட கேட்கவில்லை! என்ன கேட்கவேண்டுமோ அதை மட்டும் தானே கேட்டான்! யார் அவர் என்றெல்லாம் பாராபட்சம் கிடையாது! முகத்திற்கு நேரே கேட்டுவிடுவான்! அதிலும் அவனுக்கு நெருக்கமானவர்களிடம் என்றால் சர்வசுத்தம்! அதில் ஷ்ரவந்திக்கு முகம் கொஞ்சம் வாடித்தான் போனது!

“என்ன யோசிக்கிற ஷ்ரவந்தி? என்ன சொல்லி தப்பிக்க பார்க்கலாம்ன்னா?”

சுள்ளென்ற எரிச்சல் பிறந்தே விட்டது அவளுக்கு! ஆனால் தனக்கு முன்னால் ஒளிர்ந்து கொண்டிருந்த கேமராவிற்கு முகம் மாறாமலிருக்க மிகவும் சிரமம் கொண்டாள்!

பேச்சின் வீரியம் முகத்தில் தெரியக்கூடாது என்று இருவரும் மிகவும் கவனமாய் அத்தனை மகிழ்வுடன் உரையாட வேண்டியிருந்தது!

“உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பேசு… உளறுவீங்களா மிஸ்டர் சர்வஜித்? எனக்கும் ஹர்திகாவுக்கும் இந்த சினிஃபீல்ட்ல எதிலும் போட்டிங்கறது கிடையாது! அப்படியே இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாதான் இருக்கும்!” என்று அவனை போலவே மரியாதையாக பேசி குரலில் மட்டும் காட்டத்தை கூட்டினாள்.

“ஹோ! இதை என்ன நம்ப சொல்றிங்களா ஷ்ரவந்தி மேடம்? உங்களோடது ரொம்பவே ஆரோக்கியமான போட்டின்னாஎதுக்கு அவங்க கமிட்டான அந்த புது டைரக்டர் படத்துல அவங்களை தூக்கிட்டு நீங்க நடிக்க போனிங்க?”

‘இது என்ன குற்றச்சாட்டு?’ ஷ்ரவந்தியின் மனம் குமுற, சர்வாவின் வார்த்தைகளின் வீரியத்தில் அவளின் மனது அந்நேரத்திலும் கொஞ்சம் வலியைக் கொண்டது. அது அப்படியே அவளின் முகத்திலும் தென்பட்டது!

“இப்படி எல்லாம் பேச உனக்கு வெக்கமா இல்லையா சர்வா? அந்த படத்துல கடைசி நிமிஷத்துல நடிக்க முடியாதுன்னு சொன்னது ஹர்திகா தான்! நான் ஒன்னும் அவங்களை தூக்கலை, அவங்க நடிக்க முடியாதுன்னு சொன்ன பிறகு தான், அண்ட்.. அவங்க மூலமா தான் டைரக்டர் வினோத் என்னை பார்க்க வந்தாரு! இதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்ன்னு எனக்கு அவசியம் இல்லை சர்வா! ஆனா உன்னைப்போல ஆளுங்க இப்படி ஏதாவது கட்டுக்கதை சொல்லி ஊரை நம்ப வைச்சிருவிங்களே? என்ன செய்ய? அதான் சொல்லிட்டேன்!”

அவளின் வார்த்தைகளில் தெறித்த ஒருமையில் இப்பொழுது சர்வா தான் அவளை கூர்மையாய் பார்வையிட வேண்டியிருந்தது!

“எனக்கு என்னைப்பத்தி நல்லாவே தெரியும் சர்வா! இந்த ஃபீல்ட்ல உன்னைவிட நான் அதிகமா இருந்துருக்கேன்! அதிகமா பார்த்துருக்கேன்! அதிலயும், உன்னைமாதிரி ஆளுங்களை இன்னமும் அதிகமாவே பார்த்துருக்கேன்!” அவனின் விழிகளை கர்வமாய் ஏறிட்ட ஷ்ரவந்தி தீர்க்கமாய் கூற, தனது பேன்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தபடி மௌனமாய் அவளை ஏறிட்டான் சர்வா.

அவளோ கொஞ்சம் கூட முகத்தில் மாற்றத்தை காட்டவில்லை! விரிந்த புன்னகையில் முகம் முழுவதும் பிரகாசமாக காணப்பட்டது!

‘பார்ன் அஸ் ய ஸ்டார்!’ என்று எழுதி ஒட்டாதது ஒன்றுதான் குறை!

அதை உணர்ந்து கொண்ட சர்வாவோ தனது அழுத்தத்தை குரலிலும் கூட்டி பேச ஆரம்பித்தான்.

“உனக்கு உன்னைப்பத்தி நல்லா தெரியும் தான்! ஆனா.. உன்னைவிட.. எனக்கு உன்னைப்பத்தி இன்னும் நல்லாவே தெரியும் ஷ்ரவந்தி.. அண்ட் நீ என்னை என்னைக்கும் சரியாவே உணர்ந்தது இல்லை..” என்று அவளின் பேச்சுக்கு ஏற்றார் போல கூறியதில், ஷ்ரவந்தியினால் இச்சமயம் வெறுமையாய் மட்டுமே அவனைப் பார்க்க முடிந்தது!

ஆனால் அவளின் மனத்து என்ன நினைக்கிறது என்று நன்றாகவே உணர்ந்து தான் இருந்தான் சர்வா!

‘தனது தலையை பிளக்க கட்டை கிடைத்தால் நன்றாயிருக்கும்!’ என்றுதான் நினைக்கிறாள் என்று புரியாதவனா சர்வா?

அதில் அவனுக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது!

“விட்டா கொலையே பண்ணிருவ போல? நீ ஏதாவது செஞ்சா நாமதான் நாளைக்கு சென்சேஷனல் நியூஸ்!” என்று கிண்டலாக தங்களை சுற்றியிருக்கும் ஆட்களின் மேல் பார்வையை படரவிட்டு சொல்ல, அவளுக்கோ தன்னை சரியாய் உணர்ந்து கொண்டதில் லேசாய் சிரிப்பு வந்துவிட கீழுதடை கடித்து அடக்கினாள்.

மேலும் அவன் சொல்வதும் உண்மைதானே! அவள் ஏதாவது ‘ரியாக்ட்’ செய்தால் பத்திரிக்கையாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் ஏதாவது கட்டுக்கதை கிளப்பி பிறர் வம்பு பேச வைப்பர்.

இதில் புன்னகை மாறாமல் காப்பது வேறு இன்னமும் சிரமமாக இருந்தது! தாடை, கன்னத்து சதை எல்லாம் வலிக்க வேறு செய்தது இருவருக்கும்!

‘இதற்குமேலும் நின்று பேசினால், கண்டிப்பாக ரத்தக்களறி ஆகிவிடும்’

சர்வநிச்சயமாய் தோன்றியது ஷ்ரவந்தியின் எண்ணங்களில்!  கண்களில் பரவிப்படர ஆரம்பித்திருந்த கோபத்தை அடக்கியபடி, அமைதியாய் அவனை பார்த்தவள்,

“உன் ஃபீலிங்ஸ்க்கு, அட்வைஸ்க்கு டாங்க்ஸ் நைனா! போ, போய் ஜூஸ் குடிச்சினு ஜாக்ரதையா வீட்டாண்ட போயிரு! இல்லாங்காட்டி மூஞ்சை பேத்துன்னு பூருவேன்” என்று சென்னை தமிழில் சிரித்து கொண்டே நக்கல் செய்ய, இப்பொழுது முறைப்பது சர்வாவின் முறையாயிற்று!

“ஏய்! இன்னும் இந்த பழக்கத்தை நீ மாத்தலையா?”

ஷ்ரவந்தியிடம் இருக்கும் மிக ‘நல்ல’ பழக்கம் இது! சட்டென்று சென்னை பாஷையில் நக்கல் செய்வது, திட்டுவது என்று! பலமுறை சொல்லியும் அவளால் மாற்ற முடிந்ததே, இல்லையில்லை.. அவள் மாற்றியதே இல்லை!

அவளை கடிய ஆரம்பித்த சர்வா, அதற்கு மேல் என்ன சொல்லியிருப்பானோ, அவர்கள் இருவரையும் நோக்கி வந்தனர் அவர்களின் தந்தைமார்கள்!

தந்தையிடம் ‘தனக்கு மறுநாள் டப்பிங் இருக்கிறது.. செல்கிறேன்!’ என்று அறிவித்த ஷ்ரவந்தி, ராகவேந்தரிடம் விடைப்பெற்று திரும்பும் முன் ‘பை நைனா’ என்று தந்தைமார் அறியாமல் சர்வாவை நோக்கி வாயை மட்டும் அசைத்தாள்.

‘எல்லாம் கொழுப்பு! சேட்டை!’ அவனால் முடிந்தமட்டும் முறைத்தான் சர்வா.

அதை அலட்சியம் செய்துவிட்டு கிளம்பினாள் ஷ்ரவந்தி! விஸ்வநாத்தோ இன்னமும் அங்கே இருக்க வேண்டிய கட்டாயத்தால் மகளை மட்டும் டிரைவருடன் அனுப்பினார்!

சர்வாவும் தானும் கிளம்பவேண்டியிருக்கிறது என்று விடைப்பெற்றவன் மற்ற நடிகர்கள், ரசிகர்கள் எல்லோரையும் தாண்டி பாதுகாவலர் துணையுடன் வெளியில் வந்து சேர்ந்தான்.

அடுத்த பக்கம்