நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 12

‘நேசித்தல் மட்டுமே எனது குறிக்கோளென்ற’ கொள்கை மட்டுமே சர்வாவின் மனதில் அதிதீவிரமாய் இருந்தது!

ஆனால் ‘தான் பெரிய ஆள்.. தான் ஆசைப்பட்டது கிடைக்கவேண்டும்.. தான் விரும்பிய பெண் என்னையும் நேசிக்கவேண்டும்.. எனக்கு மறுப்பு சொல்லக்கூடாது! அதெப்படி என்னை வேண்டாமென்று சொல்வாள்?’ என்றெல்லாம் அவனின் மண்டைக்குள் உதிக்கவே இல்லை!

அன்னை வரலக்ஷ்மியின் போதனையில் மோல்ட் செய்யப்பட்ட மூளையானது ‘ஒவ்வொரு பெண்ணிற்கும் எல்லா விஷயத்திலும் வேறுவேறு மாதிரியான ஆசைகள், அபிப்ராயங்கள் உண்டு! உனது ஆசைகளே சிறந்ததென்று உன்னை மட்டுமே கருத்தில் வைத்து எந்தவொரு உறவையும் வளர்க்க நினைக்காதே!’ என்ற தீவிர கருத்தை திணித்திருந்தது!

அதனால் அபியின் விருப்பமென்னவென்று தெரிந்துக்கொள்வதில் மிகப்பெரும் ஆர்வமுடனிருந்தான் சர்வா! அபிக்கு தன்னைப் பார்க்கும் முன்பிருந்தே தன்மேல் நல்ல அபிப்ராயம் உண்டென்று அறிவான்! அது தனது நடிப்பில் வந்த பிரமிப்பு, திறமையின் மேல் வந்த மரியாதை!

ஆனால் தன்னைப்பற்றி.. தனது குணத்தைப்பற்றி.. தனது வாழ்வின் சூழ்நிலையைப்பற்றி எந்தளவிற்கு புரிதல் வைத்திருக்கிறாள்? தன்னுடனிருந்த இத்தனை நாட்களில் அவளுக்கு தன்மேல் எந்த அளவிற்கு பிடித்தம்? வெறுமனே கூகிள் சொன்னது, விக்கிபீடியாவில் இருந்ததென்று வைத்து மட்டுமே நேசத்தை வளர்க்க முடியாதே? அவளின் விருப்பம் தெரியவேண்டுமே? அப்படி தெரிந்தால்தானே.. அடுத்த கட்டத்திற்கு அவன் உறவை கொண்டு செல்லவேண்டும்?

வெளிப்பார்வைக்கு அபி அவனிடம் நன்கு பேசுவது போல தெரிந்தாலும், சிலசமயம் அவள் ஒதுக்கமும் காட்டுவதுண்டு! தான் சாதாரணமாக பேசும்பொழுது பதிலுக்கு பதில் வாயடிப்பவள், தனது பார்வையில் சிறு வித்தியாசம் உணர்ந்தாலும் விலகலை காட்டிவிடுவாள்! அவனின் அருகில் தான் இருப்பாள்.. ஆனாலும் பேசமாட்டாள்! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வரும்! அதனால் அபியின் மனம் பற்றியறிய சர்வா பொறுத்திருக்கத்தான் வேண்டியிருந்தது! அதுவரை பார்த்தும் பார்க்காமலேயே காதல் வளர்த்தான்!

ஆனால் அதற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல வந்துசேர்ந்தாள் சஞ்சு! மூன்று வார ஃபேஷன் ஷோ முடிந்ததும், இந்தியாவிற்கு திரும்பிய சஞ்சு, முதல் வேலையாய் சர்வாவின் படப்பிடிப்பு நடக்குமிடத்திற்கு தான் வந்தாள்!

மேலும் ஹர்திக்கும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடவே, அடுத்தநாள் அவளும் அபியும் சென்னை செல்ல திட்டம்! அன்று ஒருநாள் மட்டும் படப்பிடிப்பில் இருந்துவிட்டு செல்கிறேன் என்று அபி கேட்க, சரியென்று சஞ்சு ஒப்புக்கொண்டாள்!

சர்வாவிற்கோ அபி இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிடுவாள் என்று தெரிந்தவுடன், ‘இத்தனை நாட்கள் தன் கையிலிருந்த பொருளொன்று.. தன்னைவிட்டு போவதைப்போல’ உணர்ந்தான்! அந்த எண்ணமே சர்வாவை அதிகம் தவிக்கவைத்தது! அதனால் அபியின் மீதே அவன் பார்வை அடிக்கடி சென்றுக்கொண்டிருந்தது!

அவளிடம் தனியாக சென்று பேசவும் வழியில்லை.. சுற்றிலும் ஆட்கள் வேறு! அவளுக்கு பிரச்சனை உண்டாகிவிடுமோ என்ற பயத்திலேயே அமைதியாய் இருந்துவிட்டான்! படப்பிடிப்பு இடைவேளையில் பேசலாம் என்று பார்த்தால், அன்றென்று பார்த்து, காடு போன்ற இடத்திற்கு நடுவில் படத்திற்கு தேவையான சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்துக்கொண்டிருந்தனர்!

ஆனால் அதை திறம்பட எடுக்கமுடியாமல், சர்வாவினாலே ‘டேக்’ பத்து பன்னிரண்டு என்று போனது! அபியோ இவனது உணர்வுகளைப்பற்றிய எண்ணம் சிறிதும் தெரியாதவளாய் சற்று தொலைவில் அங்கே எல்லோருடனும் ‘இதுதான் உலகின் கடைசிநாள்’ என்பதுபோல உரையாடிக் கொண்டிருந்தாள்!

“சர்வா! ப்ளீஸ்.. என்ன பிரச்சனையா இருந்தாலும், அதை கொஞ்சம் ஒதுக்கி வைங்க.. இதை கொஞ்சம் ஒரே ஷாட்ல முடிச்சா நல்லாயிருக்கும்! இல்லாட்டி கண்டின்யூட்டி மிஸ் ஆகிரும்!” என்று இயக்குனரே கெஞ்ச வேண்டியிருந்தது!

அவரின் சத்தத்தில் எல்லோரின் பார்வையும் சர்வாவின் மீது படிய, அபியே பேசுவதை விடுத்து சர்வாவை கவலையாய் பார்த்தாள்! சஞ்சுவே ‘என்னாச்சு இவனுக்கு?’ என்று புரியாமல் முழித்தாள்! அந்த அளவிற்கு மனம் கலங்கிப்போய் இருந்தான் சர்வா! அதுவே மொத்தமாய் சொதப்பலாய் அமைந்தது!

அவரின் கெஞ்சலில் கொஞ்சம் தன்னிலை அடைந்தவனோ, “சாரி!” என்று பொதுவாக மன்னிப்பு வேண்டி காட்சிக்கு தயாரானான்!

அங்கே ஓங்கி உயர்ந்த மரமொன்றில் ஏறி நின்றபடி, அருகிலிருக்கும் இன்னொரு மரத்திற்கு தாவ வேண்டும்! இடுப்பில் மட்டும் நைலான் கயிறு வைத்து கட்டியிருந்தனர் தாவும்பொழுது எதுவும் ஆகக்கூடாதென்று! மேலும், கீழே வலையும் போடப்பட்டிருந்தது!

இயக்குனர் ‘ஆக்சன்’ சொல்ல, காட்சி படமாக்கப்பட்டது! ஒரே தாவலாய் தாவி மரத்தில் காலுன்றிய நொடி, கிளையொன்றை பற்றும்பொழுது கை வழுக்கியதா.. இல்லை மனதை இன்னமும் ஒருநிலை படுத்தவில்லையா..? அவனுக்கே தெரியவில்லை! சடாரென்று பிடியை விட்டவன், அந்தரத்தில் ஊஞ்சலாட ஆரம்பித்தான் அதிவேகமாய்!

“சர்வா!” என்று எல்லோரும் ஒருமித்த குரலில் ஸ்தம்பித்த நொடி, சர்வாவின் பழு தாங்காமலும், அவன் ஆடிய வேகத்திலும் கயிறும் அறுந்து விழுந்தது! அப்படியே வலையில் விழுந்தவனை நோக்கி ஓடிவந்தனர் அனைவரும் பதற்றமுடன்!

சர்வாவோ விழுந்த வேகத்தில் கண்கள் மூடி தன்னை சமன்படுத்த முயல, அதற்குள் சண்டைப்பயிற்சி உதவியாளர்கள் அவனைத்தூக்க, அவர்களில் ஒருவனை மற்றும் பற்றிக்கொண்டு வெளியில் வந்தான் சர்வா!

சர்வா அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட்டவன் எத்தேச்சையாய் பார்வையை உயர்த்த, விழிகளில் விழுந்தவள் அபிதான்! அபி மட்டுமே தான்!

முகம் முழுதும் பயத்துடன், சிவப்பேறி போயிருந்த விழிகளுடன் அவனையே வைத்த கண் வாங்காமல் இன்னமும் பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள் அபி!

மரண வேதனை என்பார்களே.. அது உண்டானால் ஏற்படும் வலியை அவளின் கண்கள் பிரதிபலித்தது! அவனுக்கோ அதுவரை எந்தவொரு வலியும் தெரியவில்லை! ஆனால் அந்த கண்கள் காட்டிய வேதனையில், யாராவது வந்து ‘எங்காவது வலிக்கிறதா’ என்று கேட்டால், ‘இதயத்தில் வலி’ என்றுதான் கூறுவான் போல! அப்படியொரு வலியை அவன் கொண்டிருந்தான்!

யாரோ தண்ணீர் பாட்டிலை அக்கறையாய் நீட்ட, அவருக்கு நன்றி சொல்லயபடியே வாங்கி அருந்தியவன் சுற்றி எல்லோரையும் பார்க்க, எல்லோருக்கும் வருத்தம் இருந்தது தான்! பயம் இருந்தது தான்! ஆனால் யாரும் அபி அளவு வேதனையை காட்டவில்லை என்றுதான் தோன்றியது சர்வாவிற்கு!

காதல் கொண்ட மனது ஏதேதோ நினைத்தது! ஆனாலும் அதையும் மீறி, ‘தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ’ என்று எல்லோரும் போல பதறுகிறாளோ என்று குழப்பமும் வேறு வந்தது!

இப்படி எண்ணம் கொண்டவன் தன்னைச்சுற்றி நின்றபடி மிகவும் அக்கறையாய் விசாரித்த அனைவரையும் முதலில் சமாதானம் செய்து அனுப்பிவைத்தான். பின் இயக்குனரிடம் திரும்பி, ‘அந்தக்காட்சியை அன்றே முடித்துவிடலாமென்று’ உறுதியுடன் சொல்லி அவர் மறுக்க மறுக்க ஒத்துக்கொள்ள வைத்தான்!

பிறகு இயல்பு போல திரும்பியவன் அபியின் பார்வையை மீண்டும் உள்வாங்கினான்! அவளோ இப்பொழுது பயத்தையும் மீறி, அதிர்வை வெளிக்காட்டினாள்! அத்தோடு வேண்டாமென்பது போல லேசாய் தலையாட்டல்!

எல்லாம் உணர்ந்தவனோ எதுவும் சொல்லாமல் காட்சிக்கு தயாரானான்! செய்யும் வேலையை திறம்பட செய்து பழகவேண்டுமென்ற வரைமுறை வைத்துக் கொண்டவனாயிற்றே? எங்கனம் மாறுவான்?

மீண்டும் தன்னை கயிற்றில் அதிக கவனமாய் பிணைத்துக் கொண்டவன் மரத்திலேறி தனது விழிகளை அபியின் மீது தான் செலுத்தினான்! அவளோ இரு கைகளையும் கோர்த்தபடி கண்மூடி வேண்டியபடி நின்றிருந்தாள்!

அதை சிறு புன்னகையோடு கண்டவனுக்கு, உண்மையாகவே உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது! அந்த குறுகுறுப்போடு மெல்ல பார்வையை கொஞ்சம் முன்னே செலுத்த, அங்கே சஞ்சு நின்றிருந்தாள்! அவளின் கண்ணிலோ ‘சர்வா சரியாய் செய்துவிடுவானென்ற’ திடம் மட்டுமேயிருந்தது! அதைக் கண்டுக்கொண்டவனும் ‘ஆமாமென்பது’ போல ஒற்றை தலையசைப்பை குறுநகையுடன் தர, பதிலுக்கு விரிந்த சிரிப்புடன் ‘தம்ப்ஸ் அப்’ காட்டினாள்!

இயக்குனர் மீண்டும் ஆக்ஷன் சொல்ல, இந்தமுறை சிறு தவறும் நேராமல் காட்சி படமாக்கப்பட்டது! சர்வாவின் மனவுறுதி தளரவில்லை! அதனால் அவனின் பிடியும் தவறவில்லை! ஒருவழியாய் காட்சி எடுத்து முடிக்கப்பட, அனைத்தும் சிறப்பாய் வந்திருந்தது!

“கட்” என்று இயக்குனர் சொன்னதும், கீழே ஜாக்கிரதையாக இறங்கிவந்த சர்வாவை அனைவரும் பாராட்ட ஆரம்பித்தனர்! அவர்களுக்கு நன்றி சொன்னவனது கண்கள் அபியின் புறமே சென்றது! அவளோ அவனை கொஞ்சம் கூட பார்க்காமல் எங்கோ பார்வையை செலுத்தியபடி, தனது அழுகையை கட்டுப்படுத்தியபடி நின்றாளே தவிர, இவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை!

‘என்னைப் பார் அபி! என்னைப் பார்!’ என்று உரக்க கத்தியது அவனது உள்ளத்தின் குரல்..

ஆனால் அது அவளை எட்டவேயில்லை போல.. அவனை ஏறிடாமலேயே நின்றிருந்தாள். எதிர்பார்ப்பெல்லாம் பொய்யாய் போகிறதோ என்று தோன்றியது சர்வாவிற்கு!

அன்றைய வேலை முடிய, எல்லோரும் அவர்களுக்கு காத்திருந்த வேனில் எல்லாவற்றையும் ஏற்றியபடி கிளம்ப ஆரம்பித்தனர்.

சஞ்சுவும் அபியிடம் ‘போகலாமா?’ என்று கேட்க, அதற்கு சரியென்பது போல தலையாட்டிவிட்டு முன்னே சென்றுவிட்டாள் அபி! தூரத்தில் அவர்களுக்கான கார் காத்திருந்தது! சஞ்சு சர்வாவிடம் விடைப்பெற்று செல்ல, சர்வாவோ பெயருக்கு அவளிடம் தலையாட்டி அனுப்பிவைத்தவன், செல்லும் அபியை மட்டுமே பார்த்தபடி இருந்தான்!

அவளிடம் எதுவும் பேசமுடியாத தவிப்பும், அதனால் தன்மேலேயே கோபமும் ஒருங்கே பிணைந்து அவனை வட்டமிட்டது!

‘இனி அவளை எப்பொழுது சந்திக்க முடியுமோ? தனக்கு படப்பிடிப்பு மொத்தமாய் முடியும் சமயம் அவள் மீண்டும் பூனே சென்றுவிடுவாள்!’

படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே அபியின் அலைப்பேசி எண்ணை வாங்கியிருந்தான் தான்! ஆனாலும் அவளின் மனம் தெரியாமல் பேசிவிட எண்ணம் கொண்டிருக்கவில்லை சர்வஜித்!

மனசாட்சியோ, ‘ஒரு பொண்ணுக்கிட்ட பேசவே தைரியம் இல்லாத உனக்கு காதலெல்லாம் ஒரு கேடா?’ மானக்கேடாக கடிந்தது! வெறுமையுடன் வேகவேகமாய் தனது கேரவனுக்குள் சென்றுவிட்டான் உடையை மாற்ற!

ஆத்திரமாய் போட்டிருந்த புழுதி படிந்த சட்டையை கழற்றியவன், வேறொரு டிஷர்ட்டை அணிந்து நிமிர்ந்த நொடி, அவனது கேரவனின் கதவு திறக்கப்பட்டது! திரும்பி பார்த்தால்.. உள்ளே வந்தது அபி!

இந்நொடிகள் அவனுக்காகவே படைக்கப்பட்டதோ? விந்தையில் பேச்சிழந்து தான் நின்றான் சர்வா!

அவளோ மென்னடையிட்டு அவனது அருகில் வந்தவள், அவனை நிமிர்ந்தும் பாராமல் மௌனமாய் நின்றிருந்தாள்!

“இன்னும் நீ கிளம்பலையா?” சர்வாவின் கேள்விக்கு பதிலாய் கையில் வைத்திருந்த அவனது கூலர்ஸை நீட்டினாள்! அன்று ஹர்தியின் ஆடியோ லாஞ்சில் போட்டுவிட்டது.. வாங்க மறந்திருந்தான்! அதை அவனிடம் ஒப்படைக்க வந்திருந்தாள்!

பிரமிப்பும் ஆசையும் சந்தோசமும் மொத்தமாய் அவனை சூழ்ந்து தள்ளியது என்றுதான் சொல்லவேண்டும்! அவன் அவளிடம் பேசுவதற்கு சாக்கு தேடிக்கொண்டிருக்க, அவளோ அழகாய் அதை அமைத்திருக்கிறாள்!

‘ஆனால்… ஏன்? எதற்கு?’ குழம்பினாலும் அவன் முகம் முழுவதும் புன்னகை பரவியிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்!

“தாங்க் யூ!” என்று சொல்லிய நொடி, அவனை நிமிர்ந்து பார்த்தவளை கண்டு மீண்டும் பேச்சிழந்து தான் போனான் சர்வா!

விடைத்த நாசியும், கலங்கிய கண்களுமாய் அவனை ஏறிட்டவள், அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை மொத்தமாய் வெளியிட்டு இருந்தாள் அவனுக்காய்.. அவனின் முன்னே! அதில் மனம் உருகிப்போனவன், அவளை சமாதானம் செய்யத்தான் முதலில் இறங்கினான்!

“அச்சோ! நிதிம்மா! நான் இதை கேட்கவேயில்லையே. வேணும்னா இந்த கூலர்ஸை நீயே வைச்சுக்கோ! அதுக்காக மறுபடியும் டாமை திறக்காத!”

லேசான புன்சிரிப்பும் கிண்டலும் கலந்து உரைக்க, அதில் இன்னமும் அதிகமாய் அழுத அபி, சிணுங்கலுடன் அவனை பட்பட்டென்று அடிக்க ஆரம்பித்தாள்!

“சரி.. சரி..” என்றபடி அவளின் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டவன், அப்படியே அவளின் கைகளை ஒரு கையால் இறுக்கமாய் பற்றி, மறுகையை அவளின் தலைக்கு பின் கொண்டுவந்து தன் மார்பில் அவளை சாய்த்துக்கொண்டான்!

அவளோ அழுகையும் விசும்பலுமாய் அவனிலிருந்து பிரியாமல் இன்னும் நன்றாய்.. அழுத்தமாய் அவனது மார்பில் முகத்தைப் பதித்துக்கொண்டாள்!

சர்வாவிற்கோ காட்டுப்பூக்கள் எல்லாம் எங்கிருந்தோ பறந்துவந்து தன்மேல் மொத்தமாய் விழுந்த உணர்வு! அப்படியே அவளின் ‘ஃபிரென்ச் ப்ளைட்’ போடப்பட்டிருந்த குழல்களுக்குள் விரல்களின் நுனியால் அவளது விசும்பல் மொத்தமாய் நிற்கும்வரை மென்மையாய் வருடினான்!

“ஒண்ணுமில்லை நிதிம்மா! இதெல்லாம் சாதாரணம்! அண்ட் எனக்கு பயமாவேயில்லை!” அவளின் காதருகில் குனிந்து சொன்னவனைவிட்டு விலகாமல் தலையை மட்டும் உயர்த்தி அவனைப்பார்த்தாள் அபி!

“எனக்கு பயமாயிருந்தது!”

அவளின் சொல்லிய வார்த்தைகளில்.. அவளின் கண்கள் காட்டிய தவிப்பில்.. அவள் சிந்திய கண்ணீர்த்துளிகளில் சர்வா மொத்தமாய் கசிந்துருகித்தான் போனானென்று சொல்லவேண்டும்!

அவளை பற்றியிருந்த கையை விடுவித்து அவளை மொத்தமாய் தன்னுள் பொத்தி வைத்தபடி மென்மையாய் அணைத்துக்கொண்டான்! அபியோ அவனது டீஷர்ட்டினை இறுகப்பற்றி கொண்டாள்!

அவனுக்காக தானே இத்தனை அழுகை! அவனுக்கெதாவது ஆகிவிட்டால் என்னாவது என்ற பயம் தானே! எல்லாவற்றையும் உணர்ந்துதான் இருந்தான் சர்வா ஆரம்பம் முதல்! ஆனால் தன்னோடு காலம் முழுமைக்கும் வரப்போகிறவள் இதையெல்லாம் கண்டு பயமில்லாமல் இருக்க வேண்டுமல்லவா? எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வாளென்று சமாதானம் செய்யவிழைந்தான்!

“பயப்படாத! எனக்கு எதுவுமாகாது! என்னை நேசிக்கிறவங்களுக்காகவே என்னை பத்திரமா பார்த்துக்குவேன்! அவங்க கஷ்டப்பட்டா எனக்குமே கஷ்டமா தான் இருக்கும்!”

தன்னிலிருந்து இஷ்டமேயில்லாமல் அவளை விலக்கி, அவளது வதனத்தை தாங்கியவன், கட்டைவிரலால் அவளது கண்ணீரை மொத்தமாய் துடைத்தெறிந்தபடியே மென்மையாய் உரைத்தான் சர்வா!

அதற்கு சரியென்பது போல தலையாட்டியவளிடம், “என்ன புரிஞ்சது?” என்று தெரிந்துக் கொள்வதற்காய் வினவ,

“நான் அழக்கூடாது! அழுதா வெள்ளம் வந்துரும்ன்னு புரிஞ்சது!” என்று பதில் தந்தவளின் குறும்பில் லேசாய் முறைத்தான் சர்வா!

“வாலு.. வாலு..!” என்று செல்லமாய் கடிந்தவன், அவளின் மூக்கைப்பிடித்து ஆட்டினான்!

மீண்டுமொரு முறை தன்னோடு அவளை இணைத்துக்கொண்டவன், பின் அவளை அதிகநேரம் அங்கே இருத்திவைக்காமல் கிளப்பிவிட்டான் சர்வா! சஞ்சுவுடன் கிளம்பிய அபி, ஹர்தியுடன் அடுத்து சென்னை கிளம்பிவிட்டாள்! பின் சில நாட்கள் அங்கே விடுமுறையை கழித்தவள்.. மீண்டும் பூனே வாசியாக மாறியிருந்தாள்!

அதன்பிறகு அவளிடம் குறுஞ்செய்தி மூலமோ இல்லை நேரடியாகவோ அழைத்து நலன் விசாரிப்பான்! ஆனால் இதுயெதுவும் ஹர்தி, சஞ்சு, ஷ்ரவந்தி மூவருக்கும் தெரியவேயில்லை என்பதையும் மீறி தெரியும் சந்தர்ப்பமும் வரவேயில்லை! மேலும் அவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஆட்களுமில்லை!

சர்வாவிற்கு இதையெல்லாம் அவர்களிடம் சொல்லவேண்டுமென்ற எண்ணமேயில்லை என்பதைவிட தோன்றவேயில்லை! அவனது காதல் உலகில் அவன் பாட்டிற்கு சஞ்சாரம் செய்துக்கொண்டிருந்தான்!

அபியோ.. ஹர்தியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து விடுபவள்.. சர்வா தன்னுடன் பேசுவதை பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை.. பயத்தில் அப்படி செய்தாளா? இல்லை மறந்துவிட்டாளா? என்று அவளே அறியாதவொன்று!

அதிலும் சர்வாவிடம் பேச அவர்கள் என்றுமே தடை சொன்னதுமில்லை.. மேலும் ஓரளவு வரை அபியை கண்காணிக்கும் ஹர்தி, அவள் யாரிடம் பேசுகிறாள் என்றெல்லாம் தூண்டி துருவிக்கொண்டிருக்க மாட்டாள்! ஷ்ரவந்தியும் அப்படி தான்! சஞ்சு தான் இவளை அடிக்கடி கவனித்து தார்குச்சி போடுபவள்.. அவளும் வேலை வேலை என்று பறந்து கொண்டிருக்க, அவள் என்ன செய்கிறாள் என்று யார் இப்பொழுது கண்காணிக்க?

மேலும் விடுதியில்.. இரவின் தனிமையில் இருப்பவள் யாரிடம் பேசுகிறாள் என்றெப்படி இவர்களுக்கு தெரியும்?

இது ஒருபக்கமிருக்க.. மற்றொரு பக்கமோ.. சர்வாவிடம் தன் குடும்பம்.. தனது கடந்த காலமென்று எல்லாவற்றையும் முழுதாய் அறிந்தே மறைத்திருந்தாள் அபி! ஒவ்வொரு முறையும் சொல்லவந்து மனதிற்குள் புழுங்கி பின் மொத்தமாய் மறைத்துவிடுவாள்! சர்வாவும் அவளிடம் அதைப்பற்றி பேசினால் காயப்பட்டு விடுவாளோவென்று எதுவுமே அதைப்பற்றி பேசமாட்டான்!

பிறகு வேறு என்னதான் பேசுவான்? அகன்ற வானின் கீழ் பேசவா அவர்களுக்கு விஷயமில்லை? அனைத்துமே ‘ஸ்வீட் நத்திங்க்ஸாக’ தான் இருந்தது!

இரவும் நிலவும் மலரும் வேளையில் தனது நேசத்தை அவளுக்கு அனுப்பிவைத்துக்கொண்டே இருந்தான்! அவளுமே கட்டுக்குள் வைக்கமுடியா அன்பை அவனிடம் பகிர்ந்துக்கொண்டே தான் இருந்தாள்!

இருவரும் வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்தவில்லை என்றாலும்.. பேசும் ஒவ்வொரு நொடியும் அந்த காதலை உணர்ந்து தான் இருந்தனர்!

அபியின் தனிமைக்கு பேச்சுத்துணையாய் இருந்தவன் சர்வா தான்! அப்படியொரு இனிமையை இழக்க அபியும் விரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும்! அவனோடு பேசும்பொழுது தனது கவலையெல்லாம் மறந்தாள்! அதை சர்வாவும் உணர்ந்தான்! அவனுக்கும் அதுதானே வேண்டும்! தனது அருகாமை அவளது கவலை எல்லாவறையும் மறக்கடிக்க வேண்டும் தானே! அப்பொழுது தானே அவள் தன்னைப்பற்றி நினைப்பாள்! சர்வாவின் ஆசைகள் இப்படி போய்க்கொண்டிருந்தது!

காதலெனும் மாயநதியோ வற்றாத ஜீவநதியாய் அவனிலிருந்து அவளை நோக்கி துள்ளியோடியது!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி