நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 11 (3)

“நாளைக்கு உங்களைப்பத்தி ஏதாவது எழுதினா? ஆப்லாவும் இதை யோசிச்சிட்டு தான் சொல்லியிருப்பாங்க! அதுக்கும் கோபப்படுறிங்க! அவங்களும் கோபத்தோட போய்ட்டாங்க!”

“ஹர்திகாவோட கோபம் கொஞ்ச நேரம் தான் இருக்கும்! ரொம்ப நேரம் ஒருத்தர் மேல கோபத்தை வைச்சிட்டு இருக்க அளவு அவ ஒன்னும் பையித்தியக்காரி கிடையாது! அண்ட் மீடியா.. கண்டிப்பா எழுதுவாங்க.. ‘தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்.. தி ஃபைனஸ்ட் ஆக்டர் ஃப்ரம் தி தமிழ் இண்டஸ்ட்ரி.. கோயிங் டு டை த நாட் சூன்னு’ வரும்.. இல்லாட்டி.. ‘சர்வா அவரோட கேர்ள்ஃப்ரெண்டை அவ்ளோ அக்கறையா பார்த்துக்கிட்டார்ன்னு வரும்!” என்று விளையாட்டாய் பதில் தந்தான்!

அதில் அபியோ, “நான் உங்க கேர்ள்ஃப்ரெண்டா?” என்று அதிர்வாய் கேட்டாள்!

“அப்போ நீ கேர்ள் இல்லையா?” ஒற்றைக்கண் திறந்து சர்வா பதில் கேள்வி கேட்டதில், ‘ரைட்டு.. ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க’ என்பதுபோல தலையை உருட்டினாள் அபி! அதில் தேங்காய் கீற்றாய் புன்னகைத்த சர்வா மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்!

“அபி.. நீ சொல்றது போல, கண்டிப்பா ஏதாவது எழுதுவாங்க தான்! அதெல்லாம் நினைச்சிட்டே இருந்தா நமக்கான வாழ்க்கையை வாழ முடியாது! அவங்க வேலையே நம்மளைப்பத்தி ஏதாவது எழுதுறது தான்! வருஷம் பல ஓடினாலும் அவங்களை மாத்த முடியாது! நம்மளைப்பத்தி தப்பா எழுதினா ‘இல்லை.. இது இப்படியில்லை.. தப்புன்னு..’ எக்ஸ்ப்ளையின் பண்ணிட்டே இருந்தா நமக்கு தான் டைம் வேஸ்ட்! சோ.. நீ அதெல்லாம் நினைச்சு கவலைப்படாத.. புரிஞ்சுதா?” என்று சொன்னவன் பதில் வேண்டி கண்களை திறந்து அவளது வதனத்தை நோக்கினான்!

புரிந்தது போல தான் அவள் பாவனை இருந்தது! ஆனால் அதன்மீது திரையாய் அதித பயமும் இருந்தது!

“சரி உன்னோட பயத்தை போக்க.. பாட்டு கேட்கலாமா?” என்று சூழ்நிலையை மாற்ற தனது போனில் பாட்டை ஓடவிட்டான்! அவளோ கொஞ்சநேரம் ஏனோதானோவென்று இருந்தவள், அதன்பின் பாடல்களில் லயித்துவிட்டாள்.

பிறகு இருவரும் பாட்டை பற்றிய முக்கிய அம்சங்களையும், தங்களுக்கு எந்த வரி அதில் பிடிக்குமென்றும், பாடலை பாடியவர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று தீவிரமாய் பகிர்ந்தனர் தங்களுக்கு தெரிந்த அனைத்தையும்!

அவனுக்கு நிறைய ஆங்கில பாடல்கள், தமிழ் – ஹிந்தி மெலடி பிடித்தமென்றால், அவளுக்கோ ஃபாஸ்ட் பீட் தமிழ், ஹிந்தி மெலடிகளை விரும்பினாள்! ரசனைகள் இருவருக்கும் ஒற்றுமையாய் இல்லைதான்! ஆனால் இருவரின் பேச்சும் மிக சுவாரஸ்யமாய் அமைந்ததை உணர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டான் சர்வா!

“நான் நிறைய படம் பார்ப்பேன்! விடிய விடிய கண்ணு வலிக்க பார்ப்பேன்! ஆப்லா திட்டினாலும் இதைமட்டும் என்னால மாத்தவே முடியலை!” அபி சிரித்தபடி தான் செய்யும் கூத்து எல்லாவற்றையும் சர்வாவிடம் பகிர்ந்தாள்!

சர்வாவோ, “ஹேய்! நானும் நிறைய படம் விடிய விடிய பார்ப்பேன்!” என்று வியப்புடன் சர்வா சொன்னதற்கு, “அதெல்லாம் விக்கிபீடியாலயே போட்டுட்டாங்க பாஸ்!” என்றொரு போடு போட்டாள்.

சர்வா அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்க்க, “சரி சரி.. இதுக்கெல்லாம் முறைக்கக்கூடாது!” என்று சமாதானம் செய்தவள், அவனது போனில் மணி பார்த்தாள்! முக்கால் மணிநேரம் கடந்திருந்தது!

“ஐயோ! உங்களுக்கு லேட் ஆகுது! நாளைக்கு விடியல்ல உங்களுக்கு ஷூட்டிங் இருக்கு! நாளைக்கு நைட் டப்பிங்ன்னு வேற சொன்னிங்க! கிளம்புங்க!” என்று கெஞ்சினாள்!

இம்முறை கெஞ்சலுக்கு அவன் கொஞ்சம் இறங்கி வந்தான்! “சரி.. ஒரு கால்மணி நேரம் கழிச்சு கிளம்புறேன்!” என்று பதிலளித்தவன், அவளோடு தனது பேச்சை ஆரம்பித்தான்!

அவளுக்கு என்ன பிடிக்கும்.. பிடிக்காது என்ற கேள்விகளை கேட்டவன், அதற்கு அவள் தரும் பதிலையெல்லாம் மனத்தினுள் பட்டியலிட்டபடியே வந்தான்! அதிலும் ஒரு அரைமணி நேரம் கடக்க, அதையுணர்ந்து அவனை மறுபடியும் கிளம்பச் சொன்னாள் அபி!

“ஃபிஃப்டீன் மினிட்ஸ்ல கிளம்புறேன்!” என்று அதே பதிலை மறுபடியும் தந்தான்! இப்படியே சில அரைமணி நேரங்களும்.. பல கால்மணி நேரங்களும் அவர்களை கடந்து சென்றது!! ஆடியோ லாஞ்சும் முடிந்தபாடு இல்லை! மழை வேறு பொழிய ஆரம்பித்தது!

“நான் இனி அழத் தேவையில்லை!” என்று கண்சிமிட்டி சிரித்த அபி மழையை ரசிக்க பால்கனி பக்கம் வந்து நின்றுக்கொண்டாள்! அங்கேயிருந்த ஒரு குஷன் நாற்காலியில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டவள், இரு கன்னத்தையும் கைகளால் தாங்கியபடி மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்! மழை பால்கனியை நனைக்காமலிருக்க கொஞ்சம் பெரிதாகவே சன்ஷீல்ட் அமைக்கப்படிருந்தது!

அதனால் சர்வா கவலைப்படாமல் அவளின் பின்னே மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டவன், சுவற்றில் சாய்ந்தபடி நின்று அவளையே ரசிக்க ஆரம்பித்தான்!

சர்வாவிற்கு புரிந்தது இதுநாள் வரையிருந்த தயக்கமெல்லாம் மொத்தமாய் அவன் மனதை விட்டு விலகியிருந்தது! தனது கண்ணிலிருந்து மறைந்தால் அவளை தேடுவதும், தன்னுடனிருந்தால் அதை நினைத்து குதூகலிப்பதும், அவள் கண் கலங்கினால் இவன் மனம் கலங்குவதும், அவள் சிரித்தால் மனநிறைவாய் உணர்வதும், இதோ இப்பொழுது கூட அவளை தனியே விடாமல் துணையிருப்பதும், இதெல்லாம் மற்ற யாருக்கேனும் செய்திருப்பானா என்று கேட்டால் நிச்சயமாய் இல்லையென்று தான் சொல்வான்!

அபியின் மேல் தனக்கு வந்திருப்பது ஆழமான நேசமென்று நன்றாகவே உணர்ந்துக்கொண்டான்! இந்த ஒரு வருடத்தில் அவளுடன் பழகியது சொற்ப நாட்களே என்றாலும், அவளே தனக்கு எல்லாமாய் இருக்கிறாள்! கண் மூடினால் கனவில் வருகிறாள் என்றெல்லாம் இல்லை! ஆனால் அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் பெரியவர்களின் முகம் தீண்டும் சிறுபிள்ளையின் மென்ஸ்பரிசம் போல ஓர் உணர்வு!

அவனுள் அவளைப்பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க, பின்னணியிலோ “Rehna Tu.. Hai Jaisa Tu..” ரஹ்மானின் குரல் ஹஸ்கியாய் இறங்கியது! பாடலில் அப்படியே லயித்த வேளையில், அந்நேரம் ஒலித்த வரியில்.. அதன் அர்த்தத்தில் தனக்குள் சிரித்துகொண்டான்!

“நீ நீயாக இருப்பதே

எனக்கு பிடித்தம்

உந்தன்

பெருமழையில்

முழுதாய் நனைந்து

கரைந்திடவே

எனக்கு விருப்பம்”

அவளுக்குள் தொலைந்துபோக அவன் விரும்பினால், அவளோ மழையில் தன்னை மொத்தமாய் தொலைத்திருந்தாள்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி