நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 11

மறுநாளே சர்வாவும் அபியும் ஹைதராபாத் கிளம்ப ஆயத்தமானார்கள்! ஒருமாதத்திற்கு அங்கேயே ஷூட்டிங் என்று முடிவாகியிருக்க, அபிக்கும் கல்லூரி முதல் வருட விடுமுறையாதலால், தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அங்கே ஹர்திகாவோடு தங்க ஒத்துக்கொண்டாள்! அப்பொழுது ஹர்திகாவும் தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் ஹைத்ராபாத்தில் தான் இருந்தாள்!

சஞ்சுவிற்கு ஃபேஷன் ஷோ முடிய இன்னும் மூன்று வாரங்கள் ஆகிவிடும் என்பதால், அபியே மொத்த படத்திற்கும் சஞ்சுவின் சார்பாய் அங்கே இருந்தாள்! ஆடைகள் தேர்வு, சர்வாவின் மேக்கப் ஆர்டிஸ்ட்க்கு ஜூனியரென்று பரபரவென சர்வாவிற்கே சர்வமாய் இருந்தாள். காலையில் சர்வாவுடன் சேர்ந்து ஷூட்டிங் வந்துவிடுபவள், அது முடிந்ததும் ஹர்திகாவின் காரில் அதில் டிரைவரோடு ஹர்திகாவின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பின் ஹர்திகாவோடு சென்றுவிடுவாள்!

சர்வாவின் பட நாயகிக்கு வேறொருவர் ஆடை வடிவமைப்பாளராக இருந்ததால் இவள் சர்வா மற்றும் மற்ற கதாப்பாத்திரங்களுக்கு மட்டும் பார்த்துக்கொண்டால் போதும்! இப்படி படப்பிடிப்பு தளத்தில் எல்லாம் கவனித்து வேலை செய்வதும் புதுவித அனுபவமாக இருந்தது!

சர்வாவிற்கோ அபியின் துணையிருத்தல், இன்னமும் புதியதாய்.. புத்துணர்வாய் இருந்தது! அவள் வேலை செய்யும் பாங்கு, யார்யாரிடம் எப்படி பேசவேண்டுமென்ற வரைமுறை அறிதல், அதிலும் அங்கே மக்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என்று எல்லாவற்றையும் கவனித்து அதுபோல மரியாதை கொடுக்கும் பண்பு என்று அசத்தினாள்!

சர்வாவிற்கு தான் கேமராவின் முன்பு நிற்கும்பொழுது அபி அவன் கண்படும் தூரத்திலேயே இருக்கவேண்டும்! அவள் செல்லும் திசையெல்லாம் அவன் பார்வையும் அவளோடே பயணிக்கும்! சிறிதுநேரம் கண் பார்வையிலிருந்து மறைந்தாலும் ‘எங்கேயென்று’ தேட ஆரம்பித்துவிடுவான்! இல்லையென்றால் அவளை கூட்டிவர சொல்லி ஆளை அனுப்பிவைத்துவிடுவான்! அவள் அவனது கண்முன்னே சும்மாவேணும் நிற்கவேண்டும்! அபிக்கு அவன் செய்வது பார்த்து ஒருபக்கம் சிரிப்பாய் வந்தாலும், இன்னொரு பக்கம் இனிய அவஸ்தையை தந்தது!

ஒரு பெண்ணாய் அவனது பார்வையின் அர்த்தம் கூட அறியாத அளவு வெகுளி இல்லையே அவள்! சில நேரங்களில் அக்கறையாய், சில நேரங்களில் தேடுதலாய், சில நேரங்களில் அன்பாய், சில நேரங்களில் மென் நேசமாய் என்று அவளுள் அவனது உணர்வுகளை அனுப்பி அதிரவைத்துக்கொண்டு தான் இருந்தான் சர்வா!

ஒருமுறை படப்பிடிப்பு முடியும் தருவாயில் ஹர்திகாவின் கார் வரவில்லை! அன்று ஹர்திகாவிற்கு ஒரு ஆடியோ லான்ச் இருக்க, அங்கே வர சொல்லி வைத்துவிட்டாள்! அதனால் சர்வாவே, அபியை விட்டுவர கிளம்பினான். அங்கே சென்றால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது! அந்த கூட்டத்திற்கு நடுவில் அபியை கொண்டுப்போய் ஹர்திகாவிடம் ஒப்படைக்க வேண்டும்! வெளி வாயிலில் இருந்து பார்கிங் வரை வந்தாயிற்று! ஆனால் அங்கும் சில ரசிகர்களோடு பத்திரிக்கையாளர்களும் இருக்க, அபியோ வழக்கம் போல பயந்துவிட்டாள்! உள்ளே நடந்துதான் செல்லவேண்டும் போல!

நெஞ்சின் படப்படப்பை அடக்க, சர்வாவின் முழங்கையை இறுக பற்றிக்கொண்டாள்! சர்வாவும் அவளை உணர்ந்தவனாய், “எதுக்கெடுத்தாலும் பயப்படக்கூடாது அபி!” என்று மென்மையாய்.. அவளின் மனத்துள் பதியவைத்தான்!

தனது சட்டையில் சொருகியிருந்த தன்னுடைய பெரிய கருப்பு நிற குளிர் கண்ணாடியை போட்டுவிட்டவன், அவளது க்ரோக்கடைல் க்ளிப்பை அப்படியே உருவி ஃப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு கொண்டுவந்திருந்தான்!

முகம் முக்கால்வாசி கண்ணாடிக்குள் போய்விட, ‘இட்ஸ் வெரி குட்’ என்று திருப்திப்பட்டுக்கொண்டான் சர்வா! அபியோ ‘பெப்பே.. பெப்பே..’ என்றுதான் முழித்தது எப்பொழுதும் போல புரியாமல்!

ஓட்டுனர் காரை பார்க் செய்ய, சர்வா அவளை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு இறங்கியவன், ஐந்து நிமிடத்திற்கு பிறகு அபியின் பக்க கதவை திறக்க, அபியோ திடுக்கென்று திரும்பியவள், ‘யாரோன்னு பயந்துட்டேன்!’ என்று அதிர்வாய் சொன்னாள்!

“பேனிக் ஆகாம வா! நாம இங்கே ஆடியோ லாஞ்ச் நடக்குற ரிசப்ஷன் வழியா பக்கத்து ஹோட்டலுக்கு போயிறலாம்! அங்கே வெயிட் பண்ணுவோம்!” என்று சொல்ல, காரிலிருந்து இறங்கியவள் தனது நடுக்கத்தை குறைக்க, அவனது முழங்கையை பற்றிக்கொண்டாள். அதற்குள் சில பத்திரிக்கையாளர்கள் இவனையறிந்து ஃபோட்டோ எடுக்க சூழ்ந்தனர்! ரசிகர்களும் தமிழ் நடிகனென்று அவனை தங்களின் செல்ஃபியில் இணைத்துக்கொண்டனர்!

அத்தனை அதரிபுதரியிலும் ரசிகர்களுக்கு கைக்குலுக்கி, தூரமாய் இருந்தவர்களுக்கு கையாட்டியபடி, மேலும் சிலருக்கு ஆட்டோகிராஃப்பும் போட்டுக்கொடுத்தான்! அபியின் மனமோ, ‘என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்துப்பா ஆண்டவா!’ என்று வடிவேலு போல கதறியது!

ஆண்டவரோ, ‘ஒரு நல்ல மனுஷன் உன்னை பத்திரமா கூட்டிட்டு போறான்! நீ உன்னை மட்டும் காப்பாத்த சொல்லி கேட்கிறயே? இரு உன்னை எப்படி மாட்டிவிடுறேன் பாரு!’ என்று சொல்லிக்கொண்டே சுற்றியிருந்த கூட்டத்திடம் சிக்கவைத்துவிட்டார்!

சுற்றி நடந்த தள்ளுமுள்ளில் யாரோ இவளது உடையை இழுப்பது போல தோன்ற, தன்னைக்காக்கும் பொருட்டு, சர்வாவை பற்றியிருந்த கையை விலக்கி தனது உடையை சரிசெய்த நொடி, சர்வாவிற்கும் அவளுக்கும் இடையில் வந்துவிட்டனர் மக்கள் சிலர்! பாதுகாவலர்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், சர்வாவிற்கு ஐந்தடி பின்னே இருந்தாள் அபி!

இவையனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்துவிட, முன்னே சென்றுக்கொண்டு யாருக்கோ கையாட்டிய சர்வாவோ அபி தன்னருகில் இல்லையென்பதையே அப்பொழுதுதான் உணர்ந்தான்! பின்னால் திரும்பி பார்த்தால், அவள் அங்கே கூட்டத்தில் இடிப்பட்டு கொண்டிருந்தாள்!

பதட்டம் அவனை நோக்கி வேகமெடுத்து பாயவர, அதை அப்படியே தள்ளிவிட்டவன், அதுபோலவே பின்னிருந்தவர்களையும் விலக்கிவிட்டு சடுதியில் அபியின் அருகில் வந்திருந்தான்!

இடது கையை அவளின் கையோடு இறுக்கமாய் கோர்த்தபடி, மறுகையை யாரும் அவளை நெருங்கி விடாதவாறு அவளின் முதுகில் பாதுகாப்பாய் பதித்து, தன்னோடு அழைத்து வந்தான்! அபிக்கும் கூட்டத்தில் இப்படி தனியாக சிக்குவது முதல்முறை என்பதால் அவளின் கைகள் மட்டுமல்லாமல் அவளே மொத்தமாய் வெடவெடக்க ஆரம்பித்தாள்!

அதில் அவனின் கைகளின் அழுத்தம் இன்னமும் அதிகரிக்க, அவனின் கைகள் கொடுத்த திடத்தில்.. அவனின் அரண்போன்ற அணைப்பில்.. கிட்டிய பாதுகாப்பு உணர்வும்.. அவனின் மொத்த அன்பும் அவளுக்குள் வெண்மஞ்சளாய் அவன்பால் பரவி அவளையே மொத்தமாய் ஒளிர செய்தது! அதில் இன்னமும் நடுக்கம் கூட, கன்னத்துக் கதகதப்பை மறைக்க, அவனோடே ஒண்டிக்கொண்டாள்! இருவரும் உள்ளே வந்து பக்கவாட்டு வழியாக ஹோட்டலுக்குள் சேர்ந்தனர்! அவர்களை விஐபி அறைக்கு வந்தனர் ஹோட்டல் பணியாளர்கள்!

அபியோ இன்னமும் அவனைவிட்டு விலகவில்லை! சர்வாவோ அங்கேயிருந்த சோபாவில் அமரவைத்தவன், அவள் முன்னால் ஒரு காலை மட்டும் மடக்கி மண்டியிட்டு அமர்ந்தான்!

‘அவள் இன்னமும் பயப்படுகிறாள்’ என்றெண்ணி பாதுகாவலரை தண்ணீர் கொண்டுவர பணித்தான்! அவர் கொண்டுவந்ததும், அவளை பருக வைத்துக்கொண்டே, முகம் மறைத்த அவளின் கூந்தலை காதிற்கு பின்னே ஒதுக்கி,

“ஆர் யூ ஒகே?” என்று அவளின் மேல் பார்வையை விலக்காமல் கேட்க, அவளுக்கோ அவனது முகம் காண பெரும் தயக்கம் சுடர்விட்டது!

வாயைத்திறந்து பதிலேதும் கூறமுடியாமல் மெல்ல தலையாட்டிவள், அமைதியையே கைப்பற்றியிருந்தாள்! கொஞ்சமே கொஞ்சம் பயம் இன்னமும் மிச்சமிருப்பது போல, கையில் வைத்திருந்த சர்வாவின் கண்ணாடியை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்!

மெல்ல இமையுயர்த்தி அவனைப்பார்க்க, சர்வாவோ யாரிடமோ எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தான்! அவளது மற்றொரு கை, சர்வாவின் கையோடு பிணைந்திருக்க, அப்படியே ஏந்தலாய் தூக்கியபடி இருந்தது அவளது கரம்! அதை அவன் உணரவில்லை.. அவள் அதை உணர்ந்தாலும் விலக்க முயவில்லை.

அடுத்த பக்கம்