நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 10 (2)

ஆனால் அவளின் பயமெல்லாம், அங்கே சென்றதும் மறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்! வாயில் காவலரிடம் விபரம் சொல்லிவிட்டு, உள்ளே கொண்டுபோய் நிறுத்தினார் ஹர்திகாவின் ஓட்டுனர். காரிலிருந்து இறங்கும்போதே, காற்றோடு வந்து வீசிய செண்பகப்பூக்களின் வாசத்தினை ஆக்சிஜனோடு நாசியில் வாங்கியதும், அவளின் பயமெல்லாம் கார்பன் டையாக்சைடாய் வெளியேறிக்கொண்டே இருந்தது!

வீட்டின் முன்பு இருந்த நீரூற்றோ பிள்ளைகள் உருவம் கொண்ட சிலைகள், மிகவும் உற்சாகமாய் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடுவது போல வித்யாசமாக அமைக்கப்பட்டிருந்தது! ஒரு சிறுவனின் சிலையோ மற்றதின் தலைமேல் தண்ணீர் கொட்டுவது போல இருந்தால், இன்னொன்றோ முதல் சிலையின் உடலில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருந்தது!

அந்த சிலைகளின் அழகில் கவரப்பட்டவள், அதைவிட்டு நகராமல் ஆசையாக பார்த்தாள்! உள்ளே செல்லவேண்டும் என்ற எண்ணத்தையே மொத்தமாக மறக்க வைத்துவிட்டது நீரூற்று! அதுமட்டுமா? அந்த நீரூற்றிற்கு உருவம் வரைந்து கொடுத்தவனும் அவளுக்கு பின்னே நிற்கிறான் என்பதையும் உணரவைக்கவிடாமல் செய்தது!

ஒருகட்டத்தில் அவளே ரசித்தது போதுமென்று திரும்பியதும், அங்கே தன்னையே இமைசிமிட்டாமல் பார்த்தபடி, மௌனப்புன்னகையில் இதழ் பிரிக்காமல் நின்றவனை கண்டு மிரண்டுதான் போனாள்!

“ஹான்! பயந்துட்டேன்!” நொடிநேரம் என்றாலும் இதயம் படப்படத்திருக்க, நெஞ்சின் மேல் அழுத்தமாய் கைவைத்து வேகமாய் துடிக்கும் துடிப்பினை சீராக்க முயற்சி செய்தாள்!

சர்வாவோ, “ஹேய்! ரொம்ப நேரமா ரசிக்கிறியேன்னு தான் பேசாம இருந்தேன் உன்னோட ரசனைல குறுக்கிட வேண்டாம்ன்னு! அப்பறம் போதும் ‘கூப்பிட்டுருவோம்.. இல்லாட்டி பொண்ணு திரும்பினா பயந்துரும்ன்னு நினைச்சு வாயை திறந்தா நீ திரும்பிட்டே! ரியல்லி சாரி!” என்று கண்கள் சுருங்க, குறுநகை கலந்து அவளை சமாதானம் செய்தான்!

“இல்லை… பரவாயில்லை.. ஆனா அடுத்த தடவை இப்படி பயமொருத்தாதிங்க!” இவளது வார்த்தைகள் தவிப்பாய், கண்கள் இன்னமும் பயத்தை விலக்காமல்!

அதில் புன்னகையின் சாயல் கொஞ்சம் குறைந்தாலும் “ரொம்ப பயந்துட்டியா?” என்று சர்வாவின் வார்த்தைகள் அக்கறையாய், கண்கள் கனிவாய் அவளைத் தாங்கியது!

“திடீர்னு பார்க்கவும் பயந்துட்டேன்! வேற ஒண்ணுமில்லை!” அவனுக்காக.. அவனின் புன்னகையை மீண்டும் வரவைக்க “இந்த ஃபவுண்டைன் டிசைன் நல்லாயிருக்கு! இங்கே ஒரு ஃபிஷ் ஸ்டாச்சூ தானே இருக்கும்!” என்று பேச்சை மாற்றினாள் அபி!

“உனக்கெப்படி தெரியும்?” வியப்பாய் ஏறிட்டான் சர்வா!

“என்ன பாஸ்? செலிப்ஸ் பத்தி தான்.. பக்கம் பக்கமா போடுவாங்களே மேகசின்ல.. அப்படி தெரிஞ்சுக்கிட்டது தான்! நீங்க ஆர்கிடெக்ட் தானே! உங்க வீட்டை நீங்களே டிசைன் செஞ்சிங்கன்னு போட்டதை நான் படிச்சிருக்கேன்! உங்களுக்கு அந்த பழைய ஸ்டாச்சூ பிடிக்காதுன்னு சொல்லியிருக்கிங்க! இது எப்போ டிசைன் செஞ்சிங்க?” என்று அபி மிக சாதாரணமாக தகவல் பகிர்ந்து கேள்வி கேட்க, சர்வாவிற்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

அவள் கூறிய அனைத்தும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது! தனக்கே அது இப்பொழுது தான் நினைவிற்கே வர, இவள் என்னடாவென்றால் தன்னைப்பற்றிய அனைத்தையும் மறக்காமல் வைத்திருக்கிறாள்! கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது!

சர்வாவின் தந்தை எப்பொழுதும் தனது குடும்பத்தினைப் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவருவதை விரும்பமாட்டார்! அதனாலேயே மக்கள் பலருக்கு சர்வாவின் சிறுவயது பற்றிய விபரம் தெரியாது! ஏன் அவரின் மனைவியின் புகைப்படம் கூட வெளிவந்தது கிடையாது! ஆனால் இதெல்லாம் சர்வா திரையுலகிற்கு வந்த சில மாதங்களிலேயே முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது

‘தமிழ் திரையுலக நடிகர்களின் அழகான அம்மாக்கள்!’ என்று வந்த ஒரு யூடியூப் விடியோவில் சர்வாவின் தாயாருக்கு தான் முதலிடம்!

‘அம்மோவ்! பாருங்க.. என்னால நீங்க மக்கள் அதிகம் தேடப்படுற லிஸ்ட்ல வந்துட்டிங்க!’ என்று சர்வா கிண்டல் செய்ததெல்லாம் நடந்ததுண்டு!

ஆனால் இன்று அதையெல்லாம் அபியின் வாய் வார்த்தையாக கேட்கப்படும் பொழுது, கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தான் என்று தான் சொல்லவேண்டும்!

மேலும்.. தான் நடிக்க வந்த புதிதில் ‘நன்றாகயில்லை, நடிக்கவே தெரியவில்லை, முதல்ல பையனுக்கு வீட்ல நடிக்க கத்துக்கொடுக்கட்டும், அப்பறம் வந்து டைரக்ட் செய்யட்டும்!’ என்றெல்லாம் கேலி செய்தது! அதில் தாயும் தந்தையும் மனம் வருந்தினாலும் சர்வாவிற்காக எதையும் அவர்கள் வெளிக்காட்டவே இல்லை! ஆனால் அவனை கேலி செய்த அத்தனை பெரும் சர்வாவின் வெற்றிக்கு பிறகு அவனிருந்த பக்கம் கூட எட்டிப்பார்க்க துணிவு கொண்டிருக்கவில்லை! அதுவரை நாய் முகம் கொண்ட ஓநாய் போல இருந்தவர்கள், அதற்கு பிறகு முகத்தை கூட வெளியில் காட்டமுடியாத கோழைகளாய் மாறியிருந்தனர்!

அதேசமயம், சில ஊடகத்துறை ஆட்கள், தங்களை போன்ற பிரபலங்களை விளையாடும் பொம்மையாக பாவித்து, சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதை நினைத்து நொந்து தான் போனான்! மேலும் சில பிரபலங்கள் இதுபோன்ற பப்ளிசிட்டிக்களை விரும்பும்பொழுது இவன் தன்னை நொந்துபோக வைத்து என்ன பயன்?

ஊடகத்துறையால் நல்லதும் நடந்தது.. கெட்டதும் நடந்தது! ஆனால் சர்வா எல்லாம் கடந்து வந்தாகி விட்டது! இனியும் கடந்துவர கற்றுவிட்டான்! இதற்குமேல் கவலையும் அந்த வேண்டாத குப்பைகளும் எதற்கு? என்று தன்னை நிகழ்விற்கு ஒரு தலைக் குலுக்கலுடன் கூட்டிக்கொண்டு வந்தான் சர்வா!

ஆனாலும் மனதில் ஒரு மூலையில் தன்னைப்பற்றி மறக்காமல் நினைவு வைத்திருப்பவளை கொஞ்சம் பிரமிப்பும் உண்டானது!

அந்த பிரமிப்பை விலக்க மனமில்லாமல், “எதுக்கு என்னைப்பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்க?” என்று சர்வா கேட்டதற்கு,

“பிடிச்சவங்களை பத்தி தெரிஞ்சுக்கிறதுல என்ன தப்பு இருக்கு?” ‘இதென்ன கேள்வி என்பது போல தான் அபியிடமிருந்து வந்தது!

“ஹோ! என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?” அப்பொழுதும் வியப்பு விலகாமல், அவளின் பதில் என்னவாகயிருக்கும் என்ற ஆர்வத்தில் சர்வா கேட்க,

“ஹ்ம்ம்! பிடிக்கும்.. ஆனா தீபக் சாரை தான் இன்னமும் அதிகமா பிடிக்கும்! ச்சே.. என்ன ஒரு டேலன்ட்!” என்று கண்கள் மின்ன பதில் சொன்னாளே பார்க்கலாம்!

அவ்வளவு தான்.. சர்வா மொத்தமாக புஸ்.. லேசாய் தீபக்கின் மேல் பொறாமை என்னும் உணர்வு கடற்பச்சை நிறத்தில் வடிவெடுத்தது!

‘மவனே! நீ மட்டும் என் கண்ணு முன்னாடியிருந்த செத்தடா!’ என்று மானசிகமாக சொல்லும்போதே, அவனின் கண்ணுக்குள் தீபக் நக்கலாய், ஆர்ப்பாட்டமாய் சிரித்தபடி மறைந்து போனான்!

நனவிற்கு வந்தவனோ, எதிரில் தன்னையே புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருப்பவளிடம், “வா! போகலாம்” என்றுவிட்டு விறுவிறுவென முன்னால் நடந்தான்!

அபியோ, ‘நல்லத்தானே மனுஷன் பேசிட்டு இருந்தார்! என்னாச்சு?’ என்று புரியாமல் பின் தொடர்ந்தாள்!

தயாரிப்பாளரும், இயக்குனரும் அலுவலக அறையில் இவர்களுக்காக காத்திருக்க, கடகடவென பேச்சுவார்த்தை ஆரம்பித்தது! அவர்கள் கேட்பது போல டிசைனை பற்றி குறிப்பு எழுதியவள், தனக்கு தோன்றியதையும் சொன்னாள்!

இடையிடையே விருந்தோம்பலும் சிறப்பாக நடந்தேறியது! அபிக்கு தேவையானதை பார்த்து பார்த்து கொடுத்தான் சர்வா! பற்கூச்சத்தின் காரணமாய் ஜில்லென்று அபி எதுவுமே குடிக்கமாட்டாள்! அதை கவனித்து ஜூஸில் ஐஸ் போடாமல் கொடுத்ததாகட்டும், காஃபியில் சாக்லேட் பவுடர் போட்டு ஒருமுறை குடித்தேன்.. நன்றாக இருந்தது என்று அப்பொழுது சொன்னவுடன் அதுபோலவே செய்து அவளை மட்டும் தனியாக அழைத்து வந்து கொடுத்ததாகட்டும், அவளுக்கு பிடிக்குமே என்று சொல்லி சமோசா செய்ய சொல்லி உண்ண வைத்ததாகட்டும், தண்ணீர் குடுக்காமல் டிமிக்கி கொடுப்பாள் என்று சஞ்சு மூலமாக தெரிந்து வைத்திருந்தவன், அடிக்கடி தண்ணீரை பருக வைத்ததாகட்டும்.. அனைத்திலும் அவ்வளவு அக்கறையும் அன்பும் மட்டுமே ஒருங்கே இணைந்திருந்தது!

அடுத்த பக்கம்