நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 10

நாட்கள் எல்லாம் இலையுதிர் கால மரங்களின் நிலைக்கு ஈடுக்கொடுப்பது போல வேகமாய் வந்து பறந்தது! சர்வா – அபியின் வாழ்க்கையில் அதன்பிறகு பெரியதொரு மாற்றமெல்லாம் வரவில்லை! சர்வாவுடன் மீண்டும் பேச ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே பூனே சென்றுவிட்டாள் அபி! சர்வாவும் ஹர்தியுடன் தான் நடித்த படம், அதற்கான இசை வெளியிட்டு விழா, பிரீமியர் ஷோ என்று பிசியாகி விட்டான்! அடுத்த படத்தில் நடிக்க இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்ததால், கிடைத்திருக்கும் விடுமுறையை கழிக்க அவனும் தீபக்கும் வெளிநாடு சென்றுவிட்டனர்!

பெண்கள் நால்வரும், படப்பிடிப்பு, வேலை, படிப்பு என்று வேறுவேறு ஊரில் இருந்தனர்! ஒருவரை ஒருவர் சந்திக்கவே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆனது! அபிக்கு கல்லூரி இருந்த சமயத்தில், மூவரும் சென்னையிலேயே இருந்தனர் படப்பிடிப்பு என்று!

ஆனால் அபிக்கு விடுமுறை வந்த சமயத்தில், சஞ்சுவும் ஹர்தியும் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டனர்! பின் சஞ்சு நியூயார்கில் ஏதோ ஃபேஷன் ஷோ என்று அங்கே செல்ல, ஷ்ரவந்தியோ விடுமுறையை கழிக்க பெற்றோரோடு லண்டன் சென்றுவிட்டாள்! ஹர்திகா மட்டும் இரு மொழி படங்களில் நடிப்பதால், ஷூட்டிங் என்று மும்பைக்கும் ஹைத்ராபாத்திற்கும் பறந்து கொண்டிருந்தாள்!

அபிக்கோ இந்த விடுமுறையை தனிமையில் கழிக்க வேண்டிய நிர்பந்தம்! அதனால் அவள் சென்னையில் ஹர்திகாவின் வீட்டில் துணைக்கு யாருமில்லாமல் பொழுதை ஒப்பேத்திக்கொண்டு இருந்தாள்!

சரியாய் மூன்று நாட்கள் சென்றிருந்த நிலையில், ஒரு மாலை வேளையில் சஞ்சுவிடமிருந்து அபிக்கு போன் வந்தது! “என்ன விட்டுட்டு எல்லாரும் ஊர் சுத்த போயிட்டிங்கல?” ஹலோ கூட சொல்லாமல் பொருமலுடன் வந்தது அபியின் குரல்!

“சரி.. சரி.. கோச்சுக்கக்கூடாது!! வரும்போது மேக்கப் செட்டும், சாக்லேட்டும் வாங்கிட்டு வருவேன்!” சமாதானம் செய்தாள் சஞ்சு!

“நான் ஒன்னும் குழந்தையில்லை.. சாக்லேட் கொடுத்து என்னை ஏமாத்த.. எனக்கு வரும்போது லேட்ஸ்ட்டா வந்த டிஎஸ்எல்ஆர் கேமரா வேணும்!” என்று தனக்கு என்னமாதிரியான புகைப்பட கருவி வேண்டுமென்று விலாவாரியாய் விளக்கினாள் அபி!

“என் ஒரு மாச சேலரி கூட அவ்ளோ கிடையாது! விட்டா நீ உலகத்தையே கேட்ப..!” என்று கிண்டல் செய்தாள் சஞ்சு!

“நீங்க இப்படியெல்லாம் சொல்லலாமா? எனக்கு நீங்க வாங்கித்தராம வேற யார் இதெல்லாம் வாங்கித்தருவா?” என்று மூக்கால் பேசி அழ ஆரம்பித்த அபியிடம்,

“இதுவரைக்கும் நான் உனக்கு என்ன செஞ்சிருக்கேன்.. யோசிச்சு சொல்லு?”

அவள் கூறியபடியே யோசிக்க ஆரம்பித்த அபி இறுதியில், “எதுவுமேயில்லை!” குறை போல கூறினாள்!

“ரைட்! இதுவரைக்கும் எதுவுமேயில்லை.. இனிமேலும் எதுவுமேயில்லை!” என்று நக்கலுடன் மிகத்தெளிவாக உரைத்தாள்!

“விளையாடாதிங்க ஆப்லா! நல்ல ஆப்லால.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று அபி கெஞ்ச,

“உனக்கு நீ கேட்டது வேணும்னா எனக்கு வேண்டியதை நீ செய்யணும்!” என்று தயவு தாட்சண்யமேயின்றி பேரம் பேசினாள் சஞ்சு!

“அப்போ உங்களுக்கு வேலை நடக்கணும்ன்னு தான் என்னை கூப்பிட்டிங்களா? பிள்ளை தனியா இருக்கேன்னு அக்கறைல கூப்பிடலையா?” அபியின் பொருமலுக்கு, ஈயென்று சஞ்சு சிரித்து வைத்தாள்!

“சரி.. சரி.. விஷயத்தை சொல்லுங்க!”

“உடனே சர்வா வீட்டுக்கு போ அபி!”

“எதுக்கு?” அபியோ புரியாமல் பயந்து போய் முழித்தாள்.

“சர்வாவோட புது படத்துக்கு அவனுக்கு காஸ்ட்யூம் அசிஸ்டன்ட் வேணும்! ‘எலகன்ட் ரங்ல’ முக்காவாசி பேர் ஃபேஷன் ஷோக்கு ஹெல்ப் பண்ணுறாங்க! சோ என்னால இங்கே யாரையும் அனுப்ப முடியலை! உனக்கு லீவ் தானே போய் ஹெல்ப் பண்ணிட்டு வந்துரு! நான் சர்வா கிட்ட சொல்லிட்டேன்.. ஹீ வில் டேக் கேர்.. நீன்னா அவனுக்கு பிரச்சனையில்லை! ஹி ஃபீல் ஒகே.. எனக்கும் உன்னை அனுப்பினா கொஞ்சம் பயமில்லாம இருக்கும்! அதான் போக சொல்றேன்! போயிட்டு வந்துரு! சரியா?”

கட்டளையும் இல்லை.. கெஞ்சலும் இல்லை.. சாதாரணதொரு தொனியில் அபி சிறப்பாய் செய்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் மட்டுமே வெளிவந்தது சஞ்சுவின் வார்த்தைகள்! ஆனால் அபிக்கு தயக்கமும் பயமும் விட்டபாடில்லை!

“நான் எப்படி? தனியா?”

“பயப்படாத அபி! முதல்ல வீட்டுக்கு போய் சர்வாகிட்ட பேசு, அங்கே டைரக்டரும் ப்ரொட்யூசரும் இருப்பாங்க.. டைரக்டர் ஒரு லேடி தான்! சோ வொர்ரி பண்ணிக்காத! அவங்க என்னமாதிரி வேணும்ன்னு சொல்வாங்க.. உனக்கு ஹெல்ப்க்கு டூ டேஸ் கழிச்சு ஆள் வருவாங்க.. நீ தனியா எல்லாம் இருக்கமாட்ட.. அண்ட் ஷட்டிங் ஹைத்ராபாத்ல தான்.. உனக்கு ட்ராவல்ன்னா பிரச்சனை உண்டாகும்ன்னு ட்ரைன், ஃபிளைட் ட்ராவல் அபிக்கு உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்லி வைச்சிருக்கேன்! சோ அவனோட கார்ல ரொம்ப சேஃப்பா போயிட்டு வந்துறலாம்! வேற யாராவதுன்னா நானே உன்னை அனுப்ப மாட்டேன்! நீ சர்வா கூட தான் போற, தைரியமா போ.. அவன் உன்னை பத்திரமா பார்த்துக்குவான்! உனக்கு நான் இதை சொல்லவும் தேவையில்லை?”

சஞ்சுவின் கூற்றில் அபிக்கு முதன்முதலில் சர்வாவை பார்த்த படப்பிடிப்பு நினைவிற்கு வந்தது! அன்று சர்வாவிடம் தான் மறுபடியும் பேச ஆரம்பித்த பிறகு, அவன் பத்திரிக்கை, புகைப்படம் போன்றவற்றில் அவனைப்பற்றிய எந்தவொரு செய்தியும் வரவிடாமல் பார்த்துக்கொண்டான்! அடுத்த நாளே நிறைய பாதுகாவலர்கள் ஆங்காங்கே வலம் வந்துக்கொண்டிருந்தனர். அவர்களை மீறி யாரினாலும் உள்ளே வரவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது!

அதையும் மீறி யாரோவொருவன் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த சமயம் ஃபோட்டோ எடுத்திருக்க, அங்கே பணியிலிருந்த பாதுகாவலர் ஒருவர் இதை கவனித்து, கேமராவை வாங்கி மொத்தமாய் எல்லாவற்றையும் அழித்திருந்தார்! இதுவும் சஞ்சு மூலமாக அபி தெரிந்து கொண்டது! அவன் எல்லாமே அபிக்காக தான் செய்தான்! அதை அவளால் இல்லையென்று மறுக்கவும் முடியாது!

அதை இப்பொழுது நினைத்தாலும் அபியின் மனத்துள் ஜில்லிப்பாய் பனித்துளி இறங்கும்! ஆனாலும் அது அவளின் அடியாழ பயத்தினை நீக்கிவிடுமா? இல்லையே.. தயக்கமாய் தான் இன்னமும் சஞ்சுவிற்கு ஒத்துக்கொள்ள முடியாமல் இருந்தாள்!

“வேற யாரையாவது அனுப்பலாமே? நான் எதுக்கு?”

கொஞ்சம் எரிச்சல் பட்ட சஞ்சுவோ, “அபி! அது எனக்கு தெரியாதா? ஆள் இல்லைன்னு தானே சொல்றேன்! சர்வாக்கு எப்பவும் நான் தான் கூட இருந்து செய்வேன்! இல்லாட்டி என்கூட வொர்க் பண்ணுற இன்னொருத்தர் போவாரு! இப்போ நாங்க ரெண்டு பேருமே அங்கேயில்லை! அண்ட் சர்வா புது ஆளுங்க யாரையும் அவ்ளோ சீக்கிரம் அக்சப்ட் செய்யமாட்டான்! அதுவும் உனக்கு தெரியும்! ஹீ நீட்ஸ் ட்ரஸ்ட் அண்ட் கம்ஃபோர்ட்.. அதான் சொல்றேன்.. நீ போனேனா.. ஹீ வில் அக்சப்ட்.. இல்லாட்டி எனக்கு ‘நை.. நைன்னு’ அனத்துவான்.. எனக்கும் இங்கே நிம்மதியா வேலைப்பார்க்க முடியாது!” என்று தனது நிலைமையை விளக்கினாள்.

இப்பொழுதும் அபியிடமிருந்து மௌனம் தான் பதிலாய் வந்தது!

‘இனி இவகிட்ட அன்பா சொன்னால்லாம் வழிக்கு ஆகாது!’ முடிவெடுத்த சஞ்சு, தனது அதிகாரத்தை கையில் எடுத்தாள்!

“அங்கே சும்மா உட்கார்ந்துட்டு என்ன பண்ணபோற, டிவி தான பார்க்க போற? இல்லை.. கடல்ல போய் மீன் பிடிச்சு பொரிச்சு சாப்பிட போறியா? இல்லைல்ல… அதுக்கு போய் வேலையை பார்க்கலாம்! எப்படியெல்லாம் டிசைனிங் வொர்க் பண்ணலாம் அப்படின்னு ஒரு ஐடியா கிடைக்கும்.. அண்ட் கொஞ்சம் வெளி ஆளுங்களோட பழகினா தான் மத்தவங்க மைன்ட்செட், அவங்க ஒபினியன் கிடைக்கும்! நமக்கும் கொஞ்சம் ஆளுங்களை ஹேண்டில் பண்ணுற பக்குவம் வரும்.. ஐசோலேட்டடா இருக்காத அபி!” என்று அப்படியும் இப்படியும் சொல்லி ஒருவழியாக போனிலேயே அபியை அமர்ந்திருந்த இடத்திலிருந்து நெம்பி, சர்வாவின் வீட்டிற்கு காரில் பார்சல் அனுப்பினாள்! அதற்குள் சர்வாவிற்கும் குறுஞ்செய்தி மூலம் விஷயத்தை தெரிவித்திருக்க, ‘சிரிக்கும் ஸ்மைலியை’ பதிலாய் தந்து ‘தம்ப்ஸ் அப்’ கொடுத்தான் சர்வா!

‘நான் பக்கம் பக்கமா பேசினா, இவன் ஒத்த ஸ்மைலியை போட்டு என்னை மொத்தமா விரட்டுறான்!’ என்று சஞ்சு புலம்பியது எல்லாம் தனிக்கதை!

அபி ஹர்திகாவிடம் விஷயத்தை கூறிவிட்டு, அவளும் ‘போயிட்டு வா அபி! எதுக்கு இதெல்லாம் கேட்கிற? சஞ்சு தானே சொன்னா.. போ.. ஏதாவது இஸ்யூன்னா சொல்லு.. இல்லாட்டி சர்வா பார்த்துக்குவான்!’ என்று நம்பிக்கை கொடுத்தாள்! ஹர்திகாவிற்கு எப்பொழுதும் அபி தனித்து தைரியமாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது!

அபியோ மனம் முழுக்க வியாபித்த பயத்துடன் சர்வாவின் வீட்டிற்கு ஹர்திகாவின் காரிலேயே பயணப்பட்டாள்! தனியாக சமாளித்துவிடுவோமா என்ற பயம் மட்டுமே அவளை சூழ்ந்திருந்தது!

அடுத்த பக்கம்