நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 3 (3)

அந்த தவிப்புடனேயே தோழியை காண, ஷ்ரவந்தியோ “அவளுக்கு எதுவும் ஆகிருக்காதுன்னு நம்புவோம்! அந்த நம்பிக்கையும் இதுநாள் வரைக்கும் நமக்கு இருந்த தைரியமும் மட்டும் தான் எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சு வைக்கும்!” என்று அழுத்தமாய் சொன்னாலும் குரல் லேசாய் கரகரக்கத்தான் செய்தது!

எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆழ்மனதில் இருந்துக்கொண்டே இருக்கும் பயத்தினை மறைக்க முடியவே இல்லை! அதுவும் ஆருயிர் தோழியிடம்! ஆனால் தான் பயந்தால் அவளும் பயப்படுவாள் என்று எதையும் வெளிக்காட்டாமல் வெளிக்காட்டாமல் இருந்தாள் ஷ்ரவந்தி! லேசாய் நடுங்கும் கரங்களை, முன்னே வைக்கப்பட்டிருந்த காஃபி கப்போடு கோர்த்து இறுக்கமாய் பற்றிக்கொண்டாள்!

‘நல்லபடியாய் எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள் இருவரும்!’ என்று பெண்கள் இருவரின் மனதும் வேண்டுதல் விடுத்தது!

யாருக்காக வேண்டினார்களோ அவர்களில் ஒருத்தி தனக்கு முன்னே கோபாவேசத்தில் கத்தியவரிடம் அதேபோன்றொரு ஆவேசத்தில் சண்டையிட்டு கொண்டிருந்தாள்!


“அவளை கவனிக்கறது தானே உன்னோட வேலை! அது கூட செய்யாம என்ன செய்ற? இப்படி மயக்கம் போட்டு விழுற வரைக்கும் சும்மா இருந்து இருக்க? இதான் நீ பார்த்துக்கிற லட்சணமா?” அந்த பெண்மணி கத்த,

இவளோ, “சமைக்க போன நேரத்தில் கீழே விழுந்து வைப்பாங்கன்னு எனக்கும் தெரியாது! இவ்ளோ அக்கறை படுறவங்க, உடம்பு முடியாத ஒருத்தருக்கு கூடவே ஒரு நர்ஸ் தேவைன்னு புரிஞ்சு அதுக்கு ஏற்பாடு செஞ்சு இருக்கணும்! வேலைக்காரியா ஒருத்தி மட்டும் இருந்தா போதும்ன்னு நினைச்சு இருக்க கூடாது! இவளோ பெரிய வீட்ல தனியா ரெண்டு பொண்ணுங்க என்ன செய்வாங்கன்னு யோசிக்க வேணாம்!” பதிலுக்கு எகிறினாள்!

அவரைப்போல கத்தவில்லை என்றாலும் குரல் காட்டமாய் தான் ஒலித்தது!

“அபி!” அவரது குரல் இன்னமும் அதிகமாய் ஒலிக்க, அதில் லேசாய் உதறத்தான் செய்தது இவளுக்கு!

மேலும் மேலே அறையில் படுத்து இருப்பவள் விழித்துவிடுவாளோ என்று பயம் எழ, நல்லவேளை தூக்கமாத்திரையின் உதவியோடு தான் உறங்குகிறாள் என்று கொஞ்சம் நிம்மதி கொண்டாள்!

அவளை போல அதையெல்லாம் உணராதவரோ, “அவளுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை! நல்லாத்தான் இருக்கா! நீயா ஏதாவது முட்டாள்தனமா பேசாத!” சத்தம்போட்டே கண்டித்தார்!

“எவ்ளோ கத்தி சொன்னாலும் நான் சொல்றது தான் நிஜம்! கொஞ்ச கொஞ்சமா தன்னைத்தானே கொன்னுட்டு இருக்காங்க அவங்க! என்னதான் அவங்களுக்கு? உடம்பு சரியில்லையா? மனநோயா? எனக்கு சுத்தமா புரியலை! அவங்களோட அப்பாக்கும் தெரிவிக்கலை! அப்படி என்ன ரகசியத்தை காப்பாத்திட்டு வரிங்க?”

இன்றைக்கே தனக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்ற கோபம் அபியின் பேச்சில் தெரித்தது!

“யாருக்கு என்ன எப்போ தெரியனுமோ அப்போ நான் சொல்லிக்கிறேன்! நீ உன் வேலையை பாரு!” என்று எச்சரித்தார் அவர்!

“இனி இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்! இப்பவே இங்கேயிருந்து போறேன்! அவங்க அப்பாகிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்!” பதிலுக்கு மிரட்டினாள் அபி!

“ஹாஹா! தாராளமாய் போய் சொல்லேன்! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை! ஆனா உன்னை பெத்தவங்களுக்கு தான் பிரச்சனையே!” என்று தயவுதாட்சண்யமின்றி மிரட்டினார் அவர்!

எதற்கும் அழக்கூடாது என்று நினைத்தாலும் அவளையும் மீறி கண்கள் கலங்கிவிட, “வலிக்கிற இடமா பார்த்து பலமா அடிக்கிறிங்கல.. அடிங்க.. எவ்ளோ முடியுமோ அடிச்சுக்கோங்க..” என்று தன்னை சமன் செய்து தைரியப்படுத்தி கொண்டவள்,

“யாருக்கும் எதுவும் தெரியாது! நம்மளை மீறி எதுவும் நடக்காதுன்னு மமதைல இருக்கிங்கல? கடவுளுக்கு எல்லாம் தெரியும்! அவருக்கு மட்டுமே என்ன செய்யணும்னு தெரியும்!”

சொல்லும்போதே கன்னத்தில் கண்ணீர் வழிய, இடது புறங்கையினால் துடைத்து கொண்டாள்!

“இத்தனையையும் மீறி நான் இங்கே இருக்க ஒரே காரணம் எதுவும் தெரியாம மேலே நிம்மதியா தூங்கிட்டு இருக்க ஹர்திகாக்காக தான்! அவங்களோட நல்ல மனசுக்காக தான்! உதவி கேட்டப்ப உயிரை கூட கொடுத்து என்னை காப்பாத்தின அந்த மனிதாபிமானத்துக்காக தான்! இதுக்குமேல நான் சொல்ல எதுவும் இல்லை!”

அபி அங்கிருந்து நகர எத்தனிக்க, “நீ இன்னும் சொல்லலை!” என்று விறைப்பாய் கூறினார் அவர்!

“என்ன சொல்லணும்?” புரியாமல் கேட்டாள் அபி!

“முதல்நாள் காலைல யாரை பத்தி அவ பேசினான்னு! என்கிட்டே பொய் சொல்லலாம்ன்னு நினைக்காத! உனக்கு நல்லாவே தெரியும்ன்னு எனக்கு தெரியும்! சொல்லு? யாரவன்? அவனைப்பத்தி பேசும் போது தான் அவ மயக்கமானா!” அறியவேண்டும் என்ற ஆவலை மீறி எனக்கு நீ எல்லாம் சொல்லவேண்டும் என்ற எச்சரிக்கை அதில் அப்பட்டமாய் தெரிந்தது!

அவரை நன்றாய் பார்த்த அபியோ, “எனக்கெப்படி தெரியும்! முக்கால்வாசி அவங்க போற எந்தவொரு ஃபாரின் ஷூட்டிங், ட்ரிப்புக்கும் நான் கூட போகமாட்டேன்! அவங்களும் அதை விரும்பினது இல்லை!” என்று முறைப்புடனேயே சொன்னாள்!

“ஆனா.. கடைசியா நடந்த ஷூட்டிங் வெனிஸ்ல… ஒரு மாசம் நீ தான் அவகூட இருந்த! யார்கூட ஷூட்டிங் நடந்தது? எங்கே எல்லாம் அவ போனா?”

“ஷூட்டிங் நடந்தது முதல் பத்து நாள் தான்! அதுவரைக்கு மட்டும்தான் நான் அவங்க கூட இருந்தேன்! அதுக்கு அப்பறம் அவங்க போன ‘நேச்சர் காலேண்டர் ஷூட்க்கு’ அவங்க கூட சஞ்சு மேடம், சர்வா சார் மட்டும் தான் போனாங்க. நான் போகலை! இந்த விஷயமும் எனக்கு அவங்க மறுபடியும் ஒண்ணா வெனிஸ் வந்தப்ப தான் தெரியும்! அப்பறம் நான் சஞ்சு மேடத்தோட இந்தியா வந்துட்டேன்! இதுக்குமேல எனக்கு எதுவும் தெரியாது!”

அவர் விடாமல் கேள்வி கேட்டதில் இவளுக்கு இன்னமும் எரிச்சல் கூடி படபடத்தாள்! அவரோ இவள் இருப்பதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் எதையோ யோசித்தபடி அவர் அறை நோக்கி செல்ல, ‘ச்சே! என்ன பெண்மணி இவர்?’ என்று வேதனைப்பட்ட அபியோ இருந்த சக்தியெல்லாம் மொத்தமாய் வடிந்தது போல தொய்ந்து போய் அமர்ந்து விட்டாள்! ஆனால் அவளின் மனமெல்லாம் மேலே உறங்கிக்கொண்டு இருப்பவளையே சுற்றி சுற்றி வந்தது!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி