திரியேகனிடம் இதை பெரிது படுத்த வேண்டாம் என மானுவின் தந்தை அழுததில் அதை அவர் பள்ளியில் கம்ளெயிண்ட் கூட செய்யவில்லை. மானுவின் வீட்டிற்கோ எது எதாக வெளி வருமோ என்ற பயம்.
ஆக அரண் இவள் அடைத்துவிட்டுப் போன சற்று நேரத்தில் பிறர் உதவியுடன் எளிதாய் வீட்டிற்கு போய்விட்டான் போலும் என்ற நினைப்பில் வெகு இயல்பாக சுகவிதா அன்று பள்ளிக்குச் சென்றாள்.
மாலை வரை எல்லாம் ஓகே தான்.
சுகவிதாவிற்கு ஸ்விம்மிங் படு படு பயம். அகுவாபோபியா.
யூ எஸ் கரிகுலத்தில் 2 அல்லது 3ம் வகுப்பிற்குள் குழந்தைகள் நீச்சல் கற்றுவிடுவார்கள் என அரணுக்குத் தெரியும். ஆனால் சுகவிதாவிற்கு இப்பொழுது வரை இவன் பள்ளியில் ஸ்விமிங் க்ளாஸ் எக்ஸெம்ஷன் உண்டு என்பதை அவனுக்கு ப்ரபாத் எப்பொழுதோ சொல்லி இருந்தான்.
ஆக சுகவிதாவுக்கு தானும் அந்த மானுவும் அனுபவித்த மன அழுத்தத்தை எப்படி புரியவைப்பது என்பது, அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இன்றி அரணுக்கு புரிந்தது.
மாலை பள்ளி முடிந்து பெரும்பாலோனர் வெளியேறி, கூட்டம் குறைவான அந்த நேரத்தில் சுகவிதாவை தர தரவென இழுத்துப் போய் நீச்சல் குளத்திற்குள் தள்ளியே விட்டான் அவன்.
அவள் உள்ளே விழவும் அவளை மீண்டுமாய் வெளியே தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. அந்த பயத்தை அவள் உணர வேண்டும் என்பதுதான் அவன் அப்போதைய தேவை.
இதில் எதிர்பாராமல் அவள் ஷர்ட் கிழிந்ததோடு, சுகவியை அரண் இழுத்துப் போவதை பார்த்துவிட்டு ஓடி வந்த ப்ரபாத் இவனுக்கும் முன்பாக அவளை தூக்கியும் விட்டான்.
இம்முறை பள்ளி நிர்வாகம் அனவரதன் திரியேகன் முன்னிலையில் அரண் சுகவிதா இருவருக்கும் ஆலோசனை அண்ட் அர்ச்சனை மழை.
சுகவிதா செய்த லேப் லாக் விஷயத்தை இப்போது அரண் அனவரதன் முன்னிலையில் ப்ரின்ஸியிடம் சொல்லி இருந்தான். அதை சுகவிதாவும் ஒத்துக் கொண்டிருந்தாள்.
ஆக பெரிய பின்விளைவு இல்லாமல் வெறும் வார்னிங்குடன் இருவரும் அனுப்பப்பட்டனர்.
“அவன் செய்றது பிடிக்கலைனா, அவன பழி வாங்கனும்னா, அவன விட பெரிய ஆளா வந்து காமி, பெருசா சாதிச்சுக் காமி, அவன விட ஃபேமஸாகிப் பாரு…..அவன விட அதிகமா சம்பாதி…அதவிட்டுட்டு இது என்ன வேலை….?” அனவரதன் மகளுக்கு இப்படி அட்வைஸ் செய்தார்.
திரியேகனோ “ ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்த காமின்னு தானபா நீ படிக்ற பைபிள்ளயும் இருக்குது….? அதோட ஒரு பொண்ணுட்ட பையன் கூட சண்டை போடுற மாதிரி முரட்டுத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்க?” என்ற ரீதியில் பேசினார்.
இரு பெற்றவர்களின் வார்த்தைக்கும் பலன் இருக்கத்தான் செய்தது.
அரண் 12த் திலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட்…..கல்லூரி போய்விட்டான்…..இந்திய கிரிகெட் டீமிலும் செலக்ட்டாகி இருந்தான். ப்ரபாத்தும். ஆக அதன் பின் அந்த சுண்டெலி சுகவியை நினைக்க அவனுக்கு நேரமில்லை.
ஆனால் சுகவிதா அவனை வெறுக்க மறக்கவே இல்லை.
அவளது 10த் 12த் ஸ்டேட் ஃபர்ஸ்டாகட்டும், 15 வயதிலேயே ஜெயித்துவிட்ட கிரண்ட் ஸ்லாம்களாகட்டும் எல்லாம் மனதளவில் அரணை ஜெயித்த போர்களே!!!
இதில் இந்தியா கிரிக்கெட்டர்களை கடவுளாய் பார்க்கும் தேசம். என்னதான் அவள் வெற்றிகள் அவன் அளவிற்கும் ஏன் அவனது வெற்றிகளையும் விட பெரிதாக இருந்த போதும், நிச்சயமாய் அரணைக் கொண்டாடிய அளவு நாடு அவளைக் கொண்டாடவில்லை. அதில் இன்னுமாய் கிளறப்பட்டது அவளுக்குள் வளர்க்கப்பட்டிருந்த க்ரோதம்.
வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் அரணை அவள் ப்ரஸ் மீட்டிலும் குத்தினாள். அவளுக்கு அவனைக் குத்த பிடிக்கிறது என கண்டு கொண்ட பத்திரிக்கைகளும் அதன் பின் அவனைப் பத்தி அவளிடம் கேள்வி கேட்க மறக்கவே இல்லை.
ஆனால் அரணின் நிலையே வேறு. பெரும்பாலான விளையாட்டு வீர்ர்கள் போல் அவன் செய்திகளை நேரடியாக படிப்பதோ பார்ப்பதோ கிடையாது. அவர்களைப் பற்றி வரும் செய்திகள் அவர்கள் மனநிலையை பாதித்து ஸ்பாயில் ஸ்போர்ட்ஸ் ஆடும் என்பதால் எல்லா செலிப்ரிடிகளும் செய்வதுதான் இது.
உதவியாளர்கள் யாராவது படித்து தேவையானதை சொல்வர்….மற்றவை சென்சார்ட்…அப்படி அரணுக்கு சென்சார் ஆக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று சுகவிதா.
ஆனாலும் அவள் இவனைப் பற்றி இன்னும் குத்திக் கொண்டிருக்கிறாள் என்ற அளவு தகவல் அவனுக்கு தெரியும்.
இந்த சூழ்நிலையில் தான் அரண் அவன் வகுப்பு மானுவின் திருமணத்திற்குச் சென்றான். ஸ்கூல் கால சகாக்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பல்லவா? படு ஆவலாக, எக்ஸைட்டடாக ப்ரபாத்தும் இவனுமாகத் தான் சென்றார்கள்.
அப்பொழுதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான் அரண். ஹிஸ் ஃபர்ஸ்ட் லவ்.
இப்பொழுது கூட அவளை முதன் முதலில் பார்த்த அந்த நிகழ்வுகள் அப்படியே மனக் கண்ணில் இருக்கின்றனதான் அரணுக்கு.
பச்சை பாவடையும் ஹாட் பிங்கில் தாவணியும், வெள்ளை வெளேர் என்றில்லாமல் சற்று மங்கிய மாலை வெயில் மஞ்சள் நிறமுமாய்…..ஓவல் முகத்துடன்..மையிட்ட நீளக் கண்களுடன், மறையாமல் நீண்டு தொங்கிய மூன்றடுக்கு ஜிமிக்கியாட,
எதிர்படுவோரிடமெல்லாம் இயல்பாய் சிந்திய சிறு சிரிப்புடன், மானுவின் திருமணத்திற்கு வருவோரை பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்த அவள், ரிசார்ட்டின் பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வந்த இவன், அந்த ஹாலுக்கான நுழைவு ஆர்ச்சில் நுழையும் போதே பார்வையில் விழுந்து பட்டென சாய்த்து வைத்தாள்.