நனைகின்றது நதியின் கரை 9 (4)

அரணிடம் சொன்னது போல் அரணைப் பற்றி சுகவிதாவிடம் ப்ரபாத் சொல்ல முயன்றான்தான். ஆனால் அவன் பெயரைக் கூட காதில் வாங்க மறுத்துவிட்டாள் சுகவிதா. அதோடு கப் போனதில் படு அழுகை. 11 வயது குழந்தை தானே அவள் அப்பொழுது.

அதன் பின்னும் அவளிடம் சொல்ல முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிய அவள் அரணை புரிந்து ஆகப் போவது என்ன என விட்டுவிட்டான் ப்ரபாத். அதோடு தான் ஜெயிலுக்கு போன விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது குறிப்பாக சுகவிதாவிடம் சொல்லவே கூடாது என கேட்டிருந்தான் அரண்.

அவள் அதை கேள்விப்பட்டு அனைவர் முன் அரணை கேலி செய்தால்…..? அந்த ஜெயில் விஷயம் வெளியே வருவதில் அரணுக்கும் அவன் அப்பாவுக்கும் சுத்தமாய் விருப்பம் இல்லை.

அந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அரணின் அப்பா அவனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட எண்ணினார். நியாயம் யார் புறம் இருந்தால் என்ன அடி மகனுக்கல்லவா விழுகிறது என்பது அவருக்கு……

பள்ளி நிர்வாகத்திடம் இதைப் பற்றி அவர் பேசிய போது ‘10த் படித்துக் கொண்டிருக்கும் ஒரு ப்ரைட் ஸ்டூடண்டை அது பயங்கரமாக பாதிக்கும்….இனி சுகவிதா மூலமா  ஒரு ப்ரச்சனையும் வராம நாங்க பார்த்துகிறோம்’ என வாக்குறுதி கொடுத்து அரணை அங்கேயே நிறுத்தி இருந்தது நிர்வாகம்.

ஆக அதன் பின் அரணும் சுகவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லாத படி அவர்களுக்கு புது வரையறைகள். ஆக சந்திப்புகள் அபூர்வம்.

அதோடு அதன் பின் அரணுக்கு அவனது படிப்பிற்கும் விளையாட்டிற்கும் பேலன்ஸ் செய்வதே படு சேலஞ்சிங்காக இருந்ததால், மேல் மனதில் அந்த வலியைக் கூட மறந்துவிட்டான். பிடித்த வேலை சிறந்த வலிநிவாரணி.

அந்த ஆண்டு பள்ளி இறுதி பரீட்சையில் அவன் மாநிலத்தில் முதலாவதாக வந்தான். சுகவிதாவோ அப்பொழுதே முடிவு செய்துவிட்டாள் அவளும் அப்படி 10த் இல் ஸ்டேட் ராங் வாங்கவில்லை எனில் அந்த அரணிடம் தோற்றுவிட்டதாக  அர்த்தம் என.

ஆம் அனவரதன் மகளிடம் மறக்காமல் அரணைப் பற்றி கொம்பு சீவிக் கொண்டிருந்தார் தினமும். அவனது ஒவ்வொரு செயலும் இவளை மூக்குடைக்கவே எனப்பட்டது அவளுக்கு.

அரணின் அப்பா திரியேகனோ மகனை மற்றவற்றில் கவனம் செலுத்த கற்று கொடுத்துக் கொண்டிருந்தார். அவரவர் விதைத்த விதை அவரவர் பிள்ளைகளிடம் வளர்ந்தது.

 

ரண் இப்பொழுது 12த்.

அவன் சுகவிதாவைப் பார்ப்பது அபூர்வம். பார்த்தால் இவனை முறைத்துக் கொண்டு எதாவது குத்தலாக நக்கலடித்துக் கொண்டு போவாள் அவள். பதிலுக்கு இவனும் கிண்டலாக எதாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு  வருவான் அவ்வளவே அவள் அவனைப் பொறுத்த வரை.

ஆனால் சுகவிதாவிற்கு வாழ்வின் பெரிய எதிரியாக இவன் தான் தெரிந்தான். அவன் எதைச் செய்தாலும் அவளை அவமான படுத்த, அவளிடம் தான் பெரிய ஆள் என காண்பித்துக் கொள்ளவே செய்வதாக நினைத்தாள்.

அவன் க்ரிக்கெட்டில் வளர்ந்து வந்து கொண்டிருந்தான்.

அவளது ஒவ்வொரு டென்னிஸ் போட்டியும் அவனுக்கு பதில் கொடுக்கும் நடவடிக்கையே அவளைப் பொறுத்தவரை.

அன்று மறுநாள் அரணுக்கு கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல் எக்ஸாம்ஸ்…..பள்ளி நேரம் முடிந்து சற்று நேரமாகி இருந்தது. லேபிலிருந்து அரண் வீட்டிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான். ப்ரபாத் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என அவன் ஏற்கனவே கிளம்பிப் போயிருந்தான்.

மாடியில் 6வது தளத்தின் இடது ஓர நீண்ட அறை இந்த லேப். சுகவிதா 8 படித்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது. ASPL அவள். பள்ளி முடியவும் ஒவ்வொரு வகுப்பறையும் ஒழுங்காக பூட்டி இருக்கிறதா என மானிடர் செய்ய வேண்டியது அவளது பொறுப்பு.

அதற்கு வந்தவள் கண்ணில் அரண் லேபிற்குள் நிற்பது பட்டது. மற்றபடி லேப் காலியாக இருந்தது.

அறையின் ஒரு பக்க கதவு ஏற்கனவே அடைக்கப்பட்டிருக்க அவளுக்கு மனதில் ஒரு எண்ணம். அரண் கவனம் இங்கு இல்லை என உணர்ந்தவள் மெல்ல கதவை மூடி வெளிப்புறமாக அந்த அல்ட்ராப் லாட்சை போட்டு பூட்டி வைத்துவிட்டுப் போய்விட்டாள்.

‘ஒரு நாள் உள்ள கிடக்குட்டும்….அப்பதான் அறிவு வரும்…..’ இதுதான் அவளது எண்ணம். மறுநாள் ப்ராக்டிகல்ஸ் அவனுக்கு என்பதெல்லாம் அவள் ஞாபகத்திலோ, கவனத்திலோ இல்லை.

அவள் இப்படி பூட்டிவிட்டு சற்று தூரம் போய் அந்த ஃப்ளோருக்குள் நுழையும் மாடிப் படிகள் அருகில் இருக்கும் மெயின் கேட்டை பூட்டும் போது அரண் லேப் கதவு பூட்டப் பட்டிருப்பதை உணர்ந்துவிட்டான்.

சாவிகளின் சத்தம் தொலைவில் கேட்க, இவன் தான் உள்ளிருப்பதாய் சத்தமிட, லேப் சன்னல் அருகில் இவன் பார்வைக்கு படும் விதமாக வந்து நின்ற சுகவிதா

“ஏய் குண்டு மண்டு ஒரு நைட் உள்ள கிட, அப்பதான் உன் கொழுப்பு குறையும்…” என நக்கலாக சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் ஓடிப் போய்விட்டாள். இவனது எந்த கத்தல், மிரட்டல் எதுவும் அவளை சென்று சேரக் கூட இல்லை.

ஆனால் அரணுக்கு ப்ரச்சனை அது மட்டுமாக இல்லை. சுகவிதா கவனிக்காமல் போன விஷயம் லேபிற்குள் அரணது வகுப்பு மாணவி மானுவும் இருந்தாள் என்பதை.

பானிக் ஆகிப் போனாள் மானு.  அரண் தான் இது ஒரு விஷயமே இல்லை..ஈசியாக வெளியே போய்விடலாம் என என்னவெல்லாமோ சொல்லி அழ ஆரம்பித்த அவளை சமாதானப் படுத்தி, அவனால் இயன்றவரை சத்தமிட்டு வேறு ஆட்களை கூப்பிட்டுப் பார்த்தான். யார் காதிலும் அவன் குரல் விழவே இல்லை. 6வது தளமல்லவா?

அடுத்த பக்கம்