நனைகின்றது நதியின் கரை 8(7)

இந்திய ஜூனியர் டீமிற்கு இரு வார கால ஆஸ்த்ரிலேயா டூர் நேற்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் அந்த டீமில் இருந்தனர்.

அரண் வீட்டைப் பொறுத்தவரை கிரிக்கெட்டா படிப்பா என்ற கேள்வி வந்தால், அதிலும் மகன் விருப்பம் என்ற பதில் தான் அவனது தந்தையிடம் இருந்து வரும். ஆனால் ப்ரபாத் வீட்டில் அப்படி இல்லை. படிப்பு அங்கு மிக முக்கியம். ஆக இந்த இரு வார டூரைப் பத்தி  அன்பரசி அம்மா என்ன முடிவு செய்திருக்கிறார் என தெரிந்து கொள்ள அன்று ஒரு தவிப்புடன் காத்திருந்தான் அரண். இதில் இன்று ப்ரபு பயிற்சி முடிந்து அசெம்ப்ளி ஆரம்பிக்கும் வரையுமே வரவில்லை.

அசெம்ப்ளி முடிந்து வகுப்பிற்கு செல்லும்போதுதான் வந்து சேர்ந்தான் அவன்.

“ஏன்டா லேட்…? செம டென்ஷனாயிட்டு எனக்கு….அம்மா என்ன சொன்னாங்க?”

“அத அம்மாட்ட கேட்க நேரமே இல்லைடா…..சொன்னேல சுகாக்கு இன்னைக்கு நம்ம ஸ்கூல்ல அட்மிஷன்….லேட் அட்மிஷன் இல்லையா…? அவளுக்கு ஆயிரம் டவ்ட்….அதான் அவ கூடவே நேரம் போய்ட்டு….இன்னைக்கு அவளுக்கு ஃபர்ஸ்ட் டேல அதான் அவ கூட வந்தேன்…”

நிச்சயமாய் இந்த பதில் அரணுக்கு ஏமாற்றத்தையும் அந்த சுகா மேல் ஒரு கடும் எரிச்சலையும் தந்தது. இவனுக்கு க்ரிகெட்ட விட அந்த சுகா ஸ்கூலுக்கு வரதுதான் முக்கியமா?

ஆனால் மறுநாள் அன்பரசி அம்மாவிடம் வாதாடி, தன் தந்தையைக் கொண்டு பேசி ப்ரபுவுக்கு ஆஸ்திரேலியா டூர் செல்ல அந்த சுகா அனுமதி வாங்கிக் கொடுத்த போது அந்த எரிச்சல் சற்று குறைந்தாலும் வேறு வித ஒரு வெறுமை அவனுக்குள் தலை காட்டத் தொடங்கியது. என்ன விட ப்ரபுக்கு அந்த சுகா தான் முக்கியமோ? ஒற்றைப் பையனாய் வளர்ந்தவனுக்கு உயிராய் தோன்றிய நட்பை பகிர மனமில்லை.

அடுத்தும் அந்த வெள்ளிக் கிழமை காலை இவர்கள்  பயிற்சியைத் தொடங்கிய நேரம் கிரவ்ண்ட் ஓரத்தில் அழுதபடி வந்து நின்றாள் அவள். அன்றுதான் அவளை முதன் முதலாக அரண் பார்த்ததே.

இரட்டை போனி போட்ட குட்டை முடி, ஒல்லிபிச்சான் உடம்பு, வெள்ளெலி நிறம், 9 படிக்கும் பெண் என சொல்லும் அளவு உயரம். மொத்தத்துக்கு இருக்குன்னு ஒத்துக்க முடிஞ்ச ஒரே விஷயம் அந்த கண்ணு. அப்பா ஊர்லருந்து வர்ற கருப்பட்டி மாதிரி… யக்…. பார்க்க சகிக்கலை பல்லி மாதிரி ஒரு பொண்ணு…..

அவளைக் கண்டதும் ப்ரபு எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிப் போனான். அரண் தனக்கு வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு என்ன விஷயம் என விசாரிக்க சென்றான்.

“அதெல்லாம் கிடையாது…எனக்கு பயாமா இருக்கு….நீ என் கூட வா…..என்னை வீட்ல கொண்டு போய் விடு…”

“ஏய் அரடிக்கெட் ஏன் இந்த வரத்து வாற?….நாம ரெண்டு பேருமா ஆட்டோ பிடிச்சு போறதுலாம் நடக்ற வேலை கிடையாது….ப்ரின்ஸிட்ட சொல்லி எதாவது அரேஞ்ச் செய்யலாம்….உங்கப்பாட்ட பேசி கார் அனுப்ப சொல்லுவாங்க…….அப்றம் என்ன பயம்…?”

“அதெல்லாம் கிடையாது…எனக்கு இப்பவே போகனும்….பயாமா இருக்கு….நீ என் கூட வா…..என்னை வீட்ல கொண்டு போய் விடு…”

“ஏன்டா இந்த மங்கி டாங்கி இப்டி லூசு மாதிரி உளறிட்டு இருக்கு” கேட்டுக் கொண்டே வந்து சேர்ந்த அரண் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

அதைப் பார்த்ததும் சுர் என ஏறியது சுகவிதாவிற்கு. மங்கி டாங்கியா?

“ப்ச்…அரண்….அவ இப்பவே வீட்டுக்கு போகனுமாம்……..ஆனா அவ கார் ட்ராப் செய்துட்டு போய்ட்டு….….ஆட்டோல கூட்டி போய் விடச் சொல்றா…”

“இப்ப என்ன உன் மங்கி டாங்கி வீட்டுக்கு போகனும் அவ்ளவுதான….என் கார் வெயிட் பண்ணிட்டு தான் இருக்கு…ட்ரைவர் இருப்பார் அவரை ட்ராப் பண்ண சொல்றேன்….வா…”

இவன் ப்ராக்டீஸ் டைம் வேஸ்டாவதை நினைத்து எரிச்சலுடன் நடக்கத் தொடங்க

“சரி உன் பேக்கத் தா…அழாம வா….” ப்ரபு அந்த சுகாவை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான். முதுகில் தாழ தொங்கிக் கொண்டிருந்த பேக்கை இன்னும் இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் அவள்.

“போடா…அதெல்லாம் கேட்காத தர மாட்டேன்….நீ உன் பேக்க எடுத்துட்டு வா….”

அவ்வளவுதான் அரணுக்கு கொதித்துக் கொண்டு வந்தது.

“ஏய் மங்கி டாங்கி…அடி பின்னப் போறேன் உன்ன…உன் வயசுக்கு அவன டா போட்டுப் பேசுவியா….எல்லாம் அவன் கொடுக்ற இடம்…” அவளை அதட்டியவன்.

“டேய் அதுதான் டாங்கி லக்கேஜ் தூக்கின்னு தெரியுதுல்ல அதுட்ட போய் பேக்க தான்னு கேட்டுகிட்டு….” தன் நண்பனை கடிந்துவிட்டு மீண்டுமாக அவளை பார்த்து எகிறினான்

“ஏய் லூசு நீ மட்டும் தான் வீட்டுக்குப் போற….அவன் எங்க கூட இங்க இருக்கனும்…”

“போடா அருவாமணை நீ தான் லூசு….அவன் என் கூட தான் வருவான்…”

நிச்சயமாக இப்படி ஒரு ரெஸ்பான்ஸை அரண் அவளிடம் இருந்து  எதிர் பார்க்கவில்லை. அவளது போடாவில் ஈகோ ஹர்ட் ஆகி எகிறியது. ஆனாலும் இதில் ஒரு ப்ரச்சனை என்னவென்றால் அருவாமணை  என்றால் என்னவென அவனுக்கு தெரியவில்லை.

கவ்ண்டர் கொடுக்கவாவது அது என்னவென்று தெரிய வேண்டுமே…

அருகில் வந்த ப்ரபுவிடம் பல்லை கடித்துக் கொண்டு மெல்ல கேட்டான் “அருவாமணைனா என்னடா?”

பாம்புக் காது போலும் அவளுக்கு.

வாய்விட்டு சிரித்தாள் அவள்.

“எனக்கே அருவாமணை தெரியுது….உங்கம்மாவுக்கு தெரியலை பாரு….சொல்லித் தரலையே உனக்கு….மக்கு மம்மிக்கு மண்டு குண்டு சன்.”

அவ்வளவுதான் அரணுக்கு வந்ததே கோபம். அவளோடு கம்பேர் செய்தால் அந்த வயதில் சற்று சதைப் பற்றான உடல் வாகுதான் அரணுக்கு. ஆனால் அவனுக்கு கோபம் அந்த குண்டுவினால் இல்லை….இறந்து போய் இவனை ஏங்கவிடும் அவன் அம்மாவை அவள் சொன்ன வார்த்தை….

ஓங்கி ஒன்று வைத்தான் அவள் கன்னத்தில்……அதை அவள் அப்படியே வாங்கி இருந்தால் அங்கேயே மயங்கி விழுந்திருப்பாளாய் இருக்கும். ஆனால் தடுக்க என இடையில் வந்த ப்ரபாத் வாங்கினான் அதை.

அடுத்த பக்கம்