நனைகின்றது நதியின் கரை 7 (4)

ங்க்ஷன் முடிந்த இரவில் அனவரதனின் வார்த்தைகளால் அழுது கொண்டிருந்த சங்கல்யாவிற்கு அருகில் கிடந்த மொபைல் மெல்ல கருத்தில் பட்டது. அந்த ஃபங்ஷன் முடிந்து இவள் கிளம்பும் போது ஜோனத்  அதை இவள் கையில் கொடுத்திருந்தான்.

“எப்பனாலும் எதுனாலும் எனக்கு கால் பண்ணு…..எதுவும் விஷயமே இல்ல ஆனா யார்ட்டயாவது பேசனும் போல இருக்குதுன்னா கூட யூ கேன் கால் மி அப்….”

இவள் கண்ணைப் பார்த்துச் சொல்லி கொடுத்தவன், “முகத்தை இப்டி தூக்கி வச்சுட்டு இருக்கிறத பார்க்க கஷ்டமா இருக்குது” என்று வேறு பக்கம் பார்த்து முனங்கிவிட்டுப் போனான்.

அத்தனை பரிதவிப்பிலும் அந்த நொடி அவன் என்ன சொல்ல வருகிறான் என ஒரு சுர் கோபமும், ஏதோ எங்கோ ஒரு ஜில் சாரலும்.

ஹப்பா இவன் என் மேல கோபமா இல்ல…அப்டிங்கிற சந்தோஷம் தான் அது என நினைத்துக் கொண்டாள் அவள் அப்போது. அவன் அம்மாவிடம் உளறி விஷயத்தை இந்த விழா அளவிற்கு இழுத்ததற்கு அவன் கண்டிப்பாக கோபப்படுவான் என அவள் பயந்திருந்தாள்.

ஆனால் இப்போதுதான் அவன் அந்த மொபைலைக் கொடுத்த காரணமே புரிகின்றது. அனவரதன் இவளைக் கூப்பிட்டு மிரட்டத்தான் இத்தனை ஏற்பாடா? சே எத்தனை மட்டமானவன் ஜோனத்?

எனக்கு பொய் சொல்லாத , ஏமாத்தாத, நடிக்காதன்னு ஆயிரம் அட்வைஸ் சொல்லிட்டு இவன் எவ்ளவு பெரிய ஃப்ராடா இருக்கான்?

எதனால் என்று தெரியவில்லை படு ஏமாற்றமாக உணர்ந்தாள் அவள். எல்லா ஆண்களும் நம்பத்தாகதவர்கள் தான். ஆக அவர்களின் மோசமான செயல்கள் அவளிடம் கோபம் மட்டும தான் கொண்டு வரும்.

ஆனால் இதென்ன? ஏமாற்றம். அழுது கதறினாள்.

அதன்பின் இப்பொழுதோ ஏமாற்றத்தின் வலியும் இயல்பில் வரும் கோபமுமாக சேர்ந்து ஒரு வெறி வருகின்றது அவளுள்.

இந்த நொடி அவளைப் பொறுத்தவரை உலகிலேயே மிகவும் மோசமான ஆண் யாரென்றால் அது ஜோனத்தான். எப்படி நடித்து ஏமாற்றிவிட்டான்? உன்னைப் பழி வாங்காமல் விட மாட்டேன் ஜோனத்…… கோபம் கூடவே வெறி….கட கடவென யோசனை ஓடுகிறது.

ஜோனத்  தன் பற்றிய விஷயங்களைக் கூட இவளிடம் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறான் தான். ஆனால் அரண் விஷயங்களை மறைக்கிறான் தானே. அப்படியானால் அரண்  விஷயத்தை வெளிக் கொணர வேண்டும் அப்பொழுதுதான் ஜோனத்துக்கு வலிக்கும்.

என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டாள் சங்கல்யா. வல்லராஜன் இப்போதைய நிலையில் அனவரதன் மிரட்டல் காரணமாக அரண் பற்றி எதையும் வெளியிட மாட்டார்தான். ஆனால் வேற சேனலே இல்லையா? நியூஸ் பேப்பர்ஸ்தான் இல்லையா? வர்றேன்டா ஜோனத்….

அவளுக்கு ப்ரபாத் கொடுத்திருந்த மொபைலைக் குடைந்தாள். அதில் கால் செய்யும் வசதி தவிர மெசேஜ் ஃபெசிலிடி மட்டும்தான் இருந்தது. ஆயிரம் வருஷம் முந்திய அபூர்வ மொபைல் போலும்…

ம்…நீ எத்தனை கேர்ஃபுல்லா இருந்தாலும் என்ன தடுக்க உன்னால முடியாது…. அவளுக்குத் தெரிந்த வேறோரு சேனலின் ஊழியர் ஒருவருக்கு அழைத்தால் போதும். அவள் நினைத்தது நிறைவேறி விடும். ஆனால் அவர் எண் இவளிடம் மனப்பாடமாக இல்லையே.

வல்லமை சேனலில் வேலைப் பார்க்கும் சக ஊழியர் ஒருவருக்கு அழைத்தாள்.

சில நிமிடங்களில் ‘பீபுள்’ சேனல் நம்பரே கிடைத்தது. பீபுள் சேனல் என்றால் நேஷனல் லெவல் ரீச் இருக்கும். அந்த நபருக்கு அழைத்தாள். “ஸ்போர்ட்ஸ் ஸ்டார் அரண் பெர்சனல் லைஃப் பத்தி எல்லா டீடெய்ல்ஸும் இருக்குது…வித் சம் ஃபோட்டோஸ்…”

“…………………”

“ இப்போதைக்கு வீடியோ எதுவும் இல்லை…பட் ஐ’ல் ட்ரை…”

டீல் பேசி முடித்துவிட்டாள் சங்கல்யா. அடுத்த நாள் இரவு அவளிடம் இருந்து ஆதாரங்களை வாங்கிக் கொள்வதாக தெரிவித்தது எதிர் பார்ட்டி. டைரியையும் ஃபோட்டோஸையும் எப்படி எடுக்க வேண்டும் என இவளுக்குத் தெரியும்.

ஆனால் அவைகளைக் கொடுக்க பிறர் அறியாமல் இந்த வீட்டை விட்டு இவள் வெளியே சென்று உள்ளே வர வேண்டுமே….அது எப்படியாம்? அதற்குத்தான் அவள் நேரம் வாங்கிக் கொண்டதே மறுநாள் வரை.

றுநாள் முழுவதும் வீட்டை எத்தனையாய் கண்காணித்தும் ஆராய்ந்தும் யோசித்தும் வெளியே சென்று வர வழிதான் கிடைக்கவே இல்லை சங்கல்யாவிற்கு. அன்று மாலை இவளைக் காண ஜோனத் வந்தான். அவன் வருகை அறிந்தவுடன் அவன் இவளைப் பார்க்கும் முன்பாக தன் அறைக்குள் வந்து அடைந்துவிட்டாள் இவள்.

அவனிடம் நடிப்பிற்காக கூட அவளால் முகம் கொடுத்து பேச முடியாது என்பது சங்கல்யாவிற்கு நன்றாகத் தெரிகிறது. அதனால் அவள் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது என முடிவு செய்திருந்தாள்.

அப்படியானல் இதுவரை ஜோனத்திடம் முகம் கொடுத்துப் பேசியது நடிப்பிற்காக இல்லையா என்ற கேள்வி ஏற்படுத்திய எரிச்சலின் காரணமாய் அதற்கு பதில் கண்டுகொள்ள முனையாமல் அதை அடித்து விரட்டினாள் மனதைவிட்டு.

சற்று நேரத்திற்குப் பின் இவளது அறைக்கே வந்தான் ஜோனத்..

அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டும், வந்திருப்பது யார் என அவளுக்கும் தெரிந்தும், அவளுக்கு கதவைத் திறக்க மனம் வரவில்லை.

சிறிது தட்டிப் பார்த்தவன் அடுத்து கதவை தட்டவில்லை. திரும்பிச் சென்றிருப்பானாய் இருக்கும். மெல்ல கதவை திறந்து பார்த்தாள்.  மார்பிற்கு குறுக்காக கைகட்டி இவள் அறைக் கதவிற்கு எதிர் சுவரில் சாயந்தபடி நின்றிருந்தான் ஜோனத்.

அடுத்த பக்கம்