நனைகின்றது நதியின் கரை 7 (2)

“ஒன்னுமில்லடா…ஒரு சின்ன டி டி அவ்ளவுதான்…எறும்பு கடிச்ச மாதிரி இருக்கும்…அதுவும் ஃபார் அ செகென்ட்……தட்ஸ் ஆல்”

“…………………….”

“போடலாமா…ஓகேவா?”

“ம்…” சொல்லிவிட்டாளே தவிர உடல் நடுங்குகிறது.

நர்ஸைப் பார்த்து தலையாட்டி சம்மதமாக சைகை செய்த அரண், தன் இடத்தோளில் சாய்ந்திருந்த சுகவி தலையை தன் இடக்கையால் சுற்றி அவள் கண்களை உள்ளங்கையால் மூடுகிறான்.

“அதெல்லாம் ஒன்னும்…” அவள் தலையை ஆட்டிய படி ஏதோ மறுப்பாக சொல்ல

“ஏய் அவன ஆட்டத அரைடிக்கெட்…” ப்ரபாத்தின் வார்த்தைகளில்

இன்னுமாய் இறுகி நடுங்கி அழுகையாய் வருகிறது வார்த்தை அவளுக்கு “வலிக்குதா ஜீவா?”

அரணுக்கு இஞ்ஜெக்க்ஷன் போடுகிறார்கள் என அவளுக்குப் புரிந்து விட்டது தானே…

“ஆமா இன்னும் கொஞ்சம் வேகமா நீ அவன ஆட்டி இருந்தா கூட ஏதோ சொல்லிக்கிற மாதிரி வலிச்சிருக்கும்…இப்ப என்ன செய்றதாம்….? வேணா நர்ஸ்ட்ட ரெண்டாவது இஞ்ஜெக்க்ஷன் ஏதாவது போடச் சொல்லுவோம்….” ப்ரபாத் தான்.

“போடா..” அரண் இவள் மீது வைத்திருந்த கையை விலக்க அவசரமாக அவன் அடுத்த தோள் பகுதியை எட்டிப் பார்க்கிறாள். அரண் தன் வலக்கையால் ஷர்ட்டின் மேல் பட்டனை பூட்டிக் கொண்டிருந்தான். அவன் தோளில் பேண்டேஜ் ஒட்டப்பட்டிருப்பது கண்ணில் படுகிறது இவளுக்கு.

இன்னொரு நாள்

இவள் அரணுடன் காருக்குள் ஏறி அமர்ந்தவுடன் துள்ளி அவன் மீது சாய்ந்து இறுக்கி அணைத்து  சில அன்பின் சின்னங்கள் அவன் கன்னத்தில் இரைத்து….”ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஜீவா…ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….அம்மாவுக்கு என்னப் பார்க்கவும் அப்டி ஒரு சந்தோஷம் தெரியுமா…தேங்க்ஸ்பா ….”

இன்னும் துண்டு துண்டாய் எத்தனையோ கனவுகள். எங்கும் எதிலும் அரண் என்னும் ஜீவன். காதல் எனும் சுகமயம். இன்பம் நிலை வரம்.

மீண்டும் வெகு நேரம் கழித்து அவள் விழித்த போது அது இரவா பகலா என்றே புரியவில்லை அவளுக்கு. அதே போல் அரண் மீது ஏதோ கோபத்தில் அவள் தூங்கப் போனாள் என்பதும் மனதில் இல்லை.

பின் மெல்ல சூழல் புரிய அருகில் இவளை அணைத்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்த அரணை உணர்ந்ததும் தான் அது இரவு என உறுதியானது அவளுக்கு.

அதோடு அவள் என்ன நினைவில் தூங்கப் போனாள் என்பதும் மெல்ல நினைவில் வருகிறது. ஆனாலும் அணைத்திருந்த அவன் மீது கொதிப்பும் கோபமுமெல்லாம் வரவில்லை.

பயம்தான் வந்தது அவளுக்கு. அடுத்து என்ன துன்பமான நினைவு வருமோ என்ற கவலை தான் காரணம். ஏன் அவனை அருகில் பார்த்தால் துன்ப நினைவுகளும் தூக்கத்தில் தூரத்தில் அவன் பற்றி இன்ப கனவுகளும் வருகின்றன?

தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். தலைவலி எதுவும் இல்லை. மனதிலும் நிர்சலனம். மருந்தின் விளைவா? அல்லது இவ்வளவு நேரம் தூக்கத்தில் உணர்ந்த காதல் உணர்வுகளா எது காரணம் இந்த நிம்மதிக்கு?

அவள் மயங்கி விழும் முன் நடந்த நிகழ்வுகள் மீண்டும் மனதில் வருகின்றது. அந்த நீச்சல் குள நிகழ்வு இப்பொழுதும் மனம் வலிக்கிறது தான். ஆனால் அதைவிடவும் அந்த நினைவு வருவதற்கு சற்று முன் அரண் அவளிடம் நடந்து கொண்ட விதம் ஞாபகம் வருகிறது.

இவள் தூங்குகிறாள் என நினைத்து விது விதுக்குட்டி என எதெல்லாமோ பேசினானே? அதில் எதுவும் நடிப்பில்லையே……தூங்குகிறவளிடத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லையே.

இப்பொழுதும் இத்தனைக்கு பிறகும் இவள் அருகில் தான் தூங்கிக் கொண்டிருக்கிறான். எதை இவள் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும், எதை இவள் கண்டுகொள்ளாமல் ஒதுக்க வேண்டும்?

“அன்றன்றைக்கு அதினதின் பாடு போதும். நேத்து நீ அவளை ஜெயிச்சியா? நாளைக்கு நீ என்னதா இருக்கப் போற…இதெல்லாம் மறந்துடு சுகா…இப்ப இந்த நிமிஷம் இந்த கேமை நீ எப்டி விளையாடப் போற…உன் ஆப்பனொன்ட் எப்டி விளையாடுறா…? அதுக்கு உன் ஸ்ட்ரடஜி  என்ன? அதைப் பத்தி மட்டும் யோசி” சிறுவயதில்  ப்ரபு சொன்னது எப்படியோ ஞாபகம் வருகிறது. அப்போதிருந்தே அவளோட கேம் ப்ளான் அது. ஒவ்வொரு போட்டிக்கும் இது அவளுக்கு உதவி இருக்கிறது. இப்பொழுதும் இது அவளுக்கு உதவத் தான் போகிறது. தான் என்ன செய்ய வேண்டும் என தெரிந்து விட்டது சுகவிக்கு

முன்பு இவளுக்கும் அரணுக்கும் என்ன நடந்ததோ இவளுக்குத் தெரியாது. ஆனால் இன்று இவன் இவளுக்கு என்னதாய் இருக்கிறான்? அதைத்தான் இனி இவள் கவனிக்கப் போகிறாள். உன் கேம் ப்ளனைப் பொறுத்து தான் என் ஸ்ட்ரடஜியும்…அரணிடம் மானசீகமாக சொல்லிக் கொண்டாள்.

எனக்கு ஜஸ்ட் பழசு மறந்து போயிருக்கு அவ்ளவுதான். மத்தபடி அப்ப உள்ள அறிவுதான இப்பவும் இருக்குது…அப்ப என்னால என் லைஃபை, அப்பாவை, இந்த அரணை ஹேன்டில் செய்ய முடிஞ்சா இப்பவும் அது முடியும்….

இப்பொழுது மனதிற்குள் இன்னுமாய் ஆழ்கிறது நிம்மதி. மெல்ல அரண் புறமாய் திரும்பி அவன் முகத்தில் சென்று கண்களை நிறுத்தினாள். இப்பொழுது ஏதாவது மோசமானது நியாபகம் வந்துவிடுமோ என்ற பயம் ஏனோ காணாமல் போயிருந்தது.

ஆழ் மனம் வரை நிம்மதியும் நேசமும் தான் வருகிறது இவளுள். பர்வை நகர்ந்து அவனது தோள்ப் பகுதிக்குச் செல்கிறது. ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டில் சற்றே வெளித் தெரிகிறது அந்த தழும்பு.  கனவில் பார்த்த ஹாஸ்பிட்டல் சீனில் அந்த தோளில் அங்கு தானே காயம் அவனுக்கு????

அப்படியானால் அவள் கனவு நிஜம் என்று அர்த்தமா???? அவனது தூக்கத்தில் என்ன உணர்ந்தானோ அரண், அவளை இன்னுமாய் அணைத்தான் அவன். இதற்கு இவள் என்ன செய்ய வேண்டும்?

யோசிக்கும் முன் அவள் தலை அவன் மார்பில் குடியேறி இருந்தது.

அடுத்த பக்கம்