நனைகின்றது நதியின் கரை 7

சுகவிதா மயங்கி விழும்போது அரண் மீது கடும் கோபத்திலும் வேதனையிலும் இருந்தாள்தான். மீண்டும் அவள் மயக்கம் தெளிந்ததும் அது தொடரத்தான் செய்தது. ஆனால் தலைவலி காரணமாக அவளுக்கு மருந்து கொடுத்து தூக்கத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டதால் அவளால் அதன்பின்பு  எதையும் கோர்வையாக நினைக்க கூட முடியவில்லை.

சுய நினைவில் மனதில் எதெல்லாமோ கொதித்தாலும், அரண் மீது அறிவில் எத்தனை கோபம் இருந்தாலும், தூக்கத்திற்குள் நுழைய தன் மனதிற்குள் தானே இறங்க…….. இறங்க………

இந்த அரணுடைய வீட்டில் தான், கிட்சனில் அவள் ஏதோ சமைக்க முயன்று கொண்டிருக்கிறாள். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்திருக்கிறாள் அவ்வளவே….”ஏய் ட்ரம்ஸ்டிக் இங்க உனக்கென்ன வேலை…”

சமயலறை  உள்ளே நுழைந்த அரண் வந்த வேகத்தில் ஒற்றைக்கையால் பின்னிருந்து அப்படியே அவள் இடையோடு கை கொடுத்து தூக்கிக் கொண்டு போகிறான்…”ஐயோ விடுங்க…நான் கேசரி செய்யப் போறேன்…”

“ஐயையோ அப்ப நான் கண்டிப்பா விட மாட்டேன்…பாவம்டி நான்…”

இப்பொழுது இன்னொரு காட்சி.

இதே வீட்டின் முகப்பு வாசலில் இவள். வெளியே கடும் காற்று. மரங்களும் செடிகளும் வாயுவுடன் வாழ்வாதார போராட்டம். அதை இவள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுதும் அங்கு வந்த அரண் அவள் பின்னிருந்து தன்னோடு இவளை அணைத்துக் கொள்கிறான்.

“இதென்ன வேலை…வாசல்ல வச்சு…?”  சிணுங்கினாலும் அவன் கையிலிருந்து விடுபடும் எண்ணம் எதுவுமில்லை அவளுள்.

“ஏய் கொசு…காத்து உன்ன தூக்கிட்டுப் போயிடப் போகுது….”

“என்னது கொசுவா நான் உங்களுக்கு? …விடுங்க என்ன…” கோபம் போல சொல்லிக் கொண்டாலும் இன்னும் அவனுக்குள் பம்மத்தான் தோன்றுகிறது அவளுக்கு.

“ஸ்கூல்ல படிக்றப்ப நீ கொசு வேலை தான பார்த்த…அதான் அப்ப வச்ச பேரு…வைட் மஸ்கிடோ..இப்ப வைஃப்மஸ்கிடோ…”

இப்பொழுது எங்கோ இரவில் இவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கிறார்கள்…

“அதெல்லாம் கிடையாது  கேர்ள் பேபியோ பாய் பேபியோ…உங்க நேம்தான் குட்டிக்கு…”

“எதுலதான் என் பேச்சே கேட்ட..…சரி வச்சுக்கோ……என்ன நீ எங்க ரெண்டு பேர்ல யாரக் கூப்டாலும் சீனியரைனு நினச்சு ஜூனியரும் , ஜூனியரைனு நினச்சு நானும் கண்டுக்காம இருந்துப்போம்…”

ஷ்…ஆஅ…இப்பொழுது இவள் தன் காலைப் பிடித்து நொண்டினாள்.

“ஹேய் …என்ன ஆச்சு விதுமா…?” பதறியபடி குனிந்து அவள் காலைப் பார்த்தான் அரண்.

கண் சிமிட்டினாள் இவள். “நான் இன்னும் உங்கள கூப்டவே இல்ல…அதுக்குள்ள இப்டி…இதுல கூப்ட்டும் வராம இருக்கப் போற ஃபேஸை கொஞ்சம் காமிங்க பாப்போம்……ரெண்டு பேர்ல யாரக் கூப்டாலும் கண்டிப்பா நீங்க வந்து நிப்பீங்க…உங்க ஜூனியர் விஷயம் தான் தெரியலை….”

இப்பொழுது வேறு ஒரு காட்சி

ஏதோ மருத்துவமனை போலும்….இவள்  மிரண்டு போய் அமர்ந்திருக்கிறாள்..

“என்ன விதும்மா இதுக்குப் போய் யாராவது இவ்ளவு டென்ஷனாவாங்களா…?” அருகிலிருந்த அரண் ஆறுதல் சொன்னான்.

“எனக்கு பயமா இருக்குது ஜீவா.. சின்ன வயசுல இருந்து இஞ்ஜெக்க்ஷன்னா ரொம்ப பயம்…” இவள் அரணை ஜீவா என்று கூப்பிடுகிறாள்.

“அதுக்குன்னு இவ்ளவா…? “

“டாக்டர் டாக்டர் இந்த பொண்ணுதான் டாக்டர் விடாதீங்க ஒன்னுக்கு ரெண்டா அதுவும் பெரிய நீடில் வச்சு போடுங்க…” ப்ரபுதான் பக்கத்திலிருந்து கேலி செய்து கொண்டிருக்கிறான்.

“ஏன்டா அவளே அரண்டு போய் இருக்கா…இதுல நீ வேற..” அரண் தன் நண்பனிடத்தில் மனைவிக்காய் பரிந்து பேசுகிறான்.

“இதெல்லாம் உலக மகா அநியாயம்ங்க மக்களே…ஸ்விமிங் தெரியாத பொண்ண பூல்ல தூக்கிப் போட்டவர் பேசுற பேச்சா இது..?”

“போடா..போடா அதெல்லாம்……” அரண் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க டாக்டர் உள்ளே நுழையவும் பேச்சு நின்று போகிறது.

சுகவிதாவோ அருகில் இருந்த அரண் கையைப் பற்றுகிறாள். அவளை ஒரு பார்வை பார்த்த டாக்டர் “இவங்களை தனியா …”

அவர் சொல்லி முடிக்கவில்லை.

“நோ…நோ டாக்டர்….நான் இவங்க பக்கத்துலதான் இருப்பேன்…” இன்னுமாய் மிரள்கிறாள் பெண்.

டாக்டர் அரணைப் பார்க்கிறார். “நான் என்ன சொல்ல வரேன்னா…”

“இல்ல டாக்டர் அவ தனியா இருந்தா இன்னும் அதிகமா டென்ஷனாவா…. ப்ளீஸ்…” அரண் தான்.

இப்பொழுது நர்ஸ் கொண்டு வந்த இஞ்ஜெக்க்ஷனை வாங்கிப் பார்த்துவிட்டு நர்ஸிடம் கொடுக்கிறார் டாக்டர்.

அரணின் கையைப் பற்றியிருந்த சுகவிதாவோ  இப்பொழுது அவனது தோளோடு சென்று அப்புகிறாள்.

“ரொம்ப பயமா இருக்கு ஜீவா…” நடுநடுங்கிய சிறு குரலாய் வருகிறது வார்த்தைகள்.

அடுத்த பக்கம்