நனைகின்றது நதியின் கரை 6 (4)

ப்ரபாத் வைத்த கண் வாங்காமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ மென் மின்சாரத்தால்  கட்டுண்ட்டிருப்பது போல் உணர்வு. வேறு ஒரு பரிமாணத்தில் பயணித்தது உயிர். உள்மனதில் ஒரு நிறைவு. ஒரு நாள் இவன் குடும்பமும் இப்படித்தான் இருக்கும். அம்மாவும் கூட இருப்பாங்க இன்னும் நல்லா இருக்கும்…

குழந்தை தூங்கிய பின்னும் பாலை உறிஞ்சியது. பால் முழுவதும் காலியான பின்பு, ஹயாவை தன் தோளில் சாய்த்து அவள் முதுகை சிறிது  தட்டிய பின்பு எழுந்து நின்றவளிடம் குழந்தைக்காக கை நீட்டினான்.

“விழிச்சுரப்போறா நானே போய் படுக்க வச்சுர்றனே ப்ளீஸ்….” உதட்டசைவால் கெஞ்சினாள் அவள்.

பின்னால நம்ம குழந்தையவாவது என் கைல தருவியா? மனதிற்குள் நினைவு ஓட வந்த உணர்வை புன்னகையாக கூட காட்டாமல், இறுக்க முகத்துடனே குழந்தையின் அறைக்கு வழி காட்டினான் அவன்.

உடன் சென்றவள் குழந்தையை மெல்ல படுக்க வைத்து, அவள் ஆழ்ந்த தூக்கத்தை உறுதி செய்து கொண்டு வாசல் நோக்கித் திரும்பினால், சங்கல்யா சற்றும் எதிர்பாராத நபர் அங்கு. அன்பரசி டீச்சர்.

எழுந்த உற்சாகத்தில் தான் கத்திவிடக் கூடாதென தன் வாயை கையால் பொத்தியபடி ஓடி வந்தாள் அவரிடம். “எப்டிருக்கீங்கம்மா…? இங்க எப்டி நீங்க….?” ஆரவாரம் ஆச்சர்யம் புரியாமை எல்லாம் அவள் குரலில்.

“ஹலோ இது என் அம்மா….எனக்கு மட்டும்தான் அம்மா….ஒழுங்கா ஆன்டின்னு கூப்டு….என் கூட இருந்தா எப்டி இருப்பாங்களாம்….?சூப்பராத்தான் இருப்பாங்க…” தன் அம்மா அருகில் சென்று குனிந்து அவரது கழுத்தை கட்டிக் கொண்டு இவளைப் பார்த்தான் ப்ரபாத். ‘தயவு செய்து என்ன அத்தை பையனா பாருமா தாயே’ என்பது அவனறிந்த உட்பொருள் அதற்கு.

ஆனால் ஜோனத் சொன்னது போலெல்லாம் அவள் மனதிற்கு படவே இல்லை. மாறாக பலத்த ஏமாற்றமும் பயங்கர வெறுமையும் தாக்கி நிரப்பியது சங்கல்யாவை. திணறிப் போனாள் அவள்.

ஜோனத் இவள் வந்திருக்கும் காரணத்தை என்றாவது ஒரு நாள் தன் அம்மாவிடம் சொல்வான்தானே…..அதன் பின் அன்பரசியின் பார்வையில் இவள் எப்படிப் பட்டவளாக தோன்றுவாள்? என்ற நினைவுதான் அதற்கு காரணம்.

தான் செய்யும் வேலை முழுக்கவும் சரிதானா என முதல் முறையாக ஒரு சிந்தனை அவளுள்.

தப்பு செய்றனோ…? இதுவரை இப்படிபட்ட ப்ராஜக்டுகள் இவளுக்கு ஒரு வேலையாக மட்டுமே பட்டது. ஆனால் இப்பொழுதோ உணர்வுகளை இப்படி சுடுகிறதே….அன்பரசி டீச்சரை இவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரது மகனா இந்த ஜோனத்?

“ஏன்டா அவள அழவைக்க, பாரு அவ முகம் எப்டி போகுதுன்னு…  நீ என்ன அம்மானே கூப்டுமா….அவன் கிடக்கான்.” தன்னருகில் நின்றவளை அணைத்தார் அன்பரசி.

அணைப்பிற்கு உட்பட்ட சங்கல்யாவின் நெற்றி தன் தாய் தோளைச் சுற்றி இருந்த ப்ரபாத்தின் முழங்கை மீது ஏதேச்சையாய் பட்டது. தீப் பட்டது போல சட்டென தன் கையை உருவினான் அவன்.

என்னவளத் தவிர வேற யாரையும் மனசால கூடத் தொட மாட்டேன்…..அவன் சொன்னது ஞாபகம் வருகிறது. எதையோ பெரிதாய் இழந்து போனது போல் மனதில் வலிக்கிறது இவளுக்கு.ஏன்?

ன்பரசி இவளுக்குத் தேவையான உடைகளைக் கொண்டு வந்திருந்தார். என்னவென்று சொல்லி கேட்டிருப்பான் தன் அம்மாவிடம்? அதை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதாம்?

அப்பொழுது தன் அறையிலிருந்து அரணும் வெளி வந்தான். வரவேற்பறையில் சென்று அமர்ந்தனர் அனைவரும். அரண் அன்பரசிக்கு அருகில். ஜோனத் இவளுக்கு அடுத்து வந்து அமர்ந்தான் எதிர் சோஃபாவில். ஆக நாடகம் ஆரம்பம். நினைத்துக் கொண்டாள் சங்கல்யா.

சிறிது நேரம் சுக விசாரிப்புகள். சுகவிதாவுக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது என்பது இவளது ஊகம். காரணம் வீட்டில் இந்நேரம் வரை இருக்கும் அமைதி.

“ரொம்ப பயந்துட்டான்மா…அவளுக்கு ஹெட் ஏக் வரக் கூடாதுன்னு சொல்லிருந்தாங்கல்ல…. நல்ல வேளை இது அது மாதிரி இல்லையாம்…. ஜஸ்ட் ஓவர் ஏமோஷனானதாலயாம்… தூங்க மெடிசின் கொடுத்து தூங்க வச்சுருக்காங்க….” ஜோனத்தான் சுகவிதா பற்றி விளக்கினான்.

“நம்ம லியாட்ட கூட பேச முடியலைம்மா…இப்பதான் வர்றேன்….” மன்னிப்பு கேட்கும் விதமான தொனியோடு இவளைப் பார்த்தான் அரண்.

“பரவாயில்லண்ணா….சுகவிய நீங்கதான பார்த்துக்க முடியும்…” ஒரு கம்ஃபர்டபிள் ஃபீல் இவளிடம்.

“அரண் நீயே சொல்லுப்பா…..நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்றதா இருக்கோம்னு சொல்லிட்டு இப்டி பொண்ணை கூட்டி வந்து இங்க வைக்றது நல்லாவா இருக்குது…?” அடுத்து அன்பரசி ஆரம்பிக்க அரணின் வார்த்தையால் வந்திருந்த அந்த கம்ஃபர்ட்டபிள் ஃபீல் காணாமல் போக கட்டுமையாக தூக்கி வாரிப் போட்டது சங்கல்யாவுக்கு.

இந்த எங்கேஜ்மென்ட் டிராமாவை அரணிடமும் சுகவிதாவிடமும் மட்டுமாய் சொல்வதாய் தானே ஏற்பாடு?  இது என்ன அவன் தன் அம்மாவிடம் அதுவும் அன்பரசி ஆன்டியிடம் சொல்லி வைத்திருக்கிறான்?.

இவள் தொழில் என்ற பெயரில் அரணின் சொந்த வாழ்வை துப்பறிந்து கடை பரப்ப வந்திருக்கிறாள் என ஒருநாள் அவருக்கு தெரியவரும் என்ற நினைவை கூட தாங்கமுடியாமல் தடுமாறி தவித்துக் கொண்டிருக்கிறது உள்ளம் உள்ளுக்குள்.

அடுத்த பக்கம்