நனைகின்றது நதியின் கரை 6 (3)

அரண் வித்யாசமானவனோ?.  எதை நம்ப? அவளது இத்தனைகால இயல்பின்படி அரணை நம்பவும் முடியவில்லை. ஆனால் இங்கு பார்த்து படித்த விஷயங்களின்படி அவனை சந்தேகிக்கவும் தெரியவில்லை. முதல் முறையாக ஒரு ஆணுக்கு ஆதரவாக வாதட கூட அவள் மனதில் ஒரு குரல் உதயம்.

எது எப்படியோ ஆதாரம் கேட்கும் அனவரதனுக்கு  இந்த டைரியவே கொடுத்துடலாம்….,.முடிஞ்சா அவர் படிச்சுகிடட்டும்…..டைரியை எடுத்து தன் சல்வாருக்குள் திணித்தாள்.

அந்த அனவரதனுக்கு செக் வைக்க எதாவது வேணுமே….வேறு ஏதாவது கிடைக்கிறதா? உள்ளே தேடினாள். ஒரு பெரிய பவுச் நிறைய போட்டோக்கள். கையை விட்டு கைக்கு வந்ததை உருவினாள்.

இடக்கையையை மனைவியின் கழுத்தை சுற்றியும் வலக்கையை ப்ரபாத்தின் கழுத்தை சுற்றியுமாய் போட்ட படி நடுவில் நின்றிருந்தான் அரண். மூன்று பேரும் மொத்தப் பல்லும் தெரிய ஒரு  முழு சிரிப்புடன். படு சந்தோஷமான ஒரு தருணம் போலும்.

ஏனோ கண்ணை அந்த படத்தைவிட்டு எடுக்க முடியவில்லை அவளால். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இப்பொழுது நடுவில் நிற்பது ஜோனத்தாகவும் அவன் வலக்கை அரண் கழுத்திலும், இடக்கை இருப்பது இவள் கழுத்திலுமாக….மனதில் இப்படி ஒரு காட்சி தோன்ற, தூக்கி வாரிப் போடுகிறது அவளுக்கு. பதறிப் போய் புகைப் படத்தை மீண்டும் பவுச்சில் போட்டாள். எல்லாம் இந்த டிராமா ஐடியாவால வர குழப்பம்.

கீழே குழந்தை அழும் குரல் பெரிதாகிறது.

இறங்கிச் செல்ல துடிக்கிறது மனது. ஏனோ அந்த அவசரத்தில் அரணின் டைரி வல்லராஜன் கையில் கிடைப்பது போல் ஓர் எண்ணம் மனதில் வருகிறது. மிரண்டு போனாள் சங்கல்யா.

உடைக்குள் மறைத்த டைரியை வெளியில் எடுத்து மற்றவைகளுடன் பத்திரமாக வைத்துவிட்டு, அவசர அவசரமாக படி இறங்கி வந்தாள். வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்து ஃபீடிங் பாட்டிலை குழந்தையின் வாயில் வைக்க போராடிக் கொண்டிருந்த ஜோனத் அவள் கண்ணில் பட்டான்.

அவனுக்கு குழந்தையை எந்த பொஷிஷனில் பிடிக்க வேண்டும் எனத் தெரியவில்லை. குழந்தைக்கு வாகாக இல்லை என்பதால் அழுது கொண்டிருக்கிறாள் என பார்த்தவுடன் புரிகிறது இவளுக்கு.

“பாப்பாவ குடுங்க…” ப்ரபாத் மடியிலிருக்கும் குழந்தையை இரு கைகளால் பிடித்தாள்.

திரும்பி முறைத்தான் அவன். இப்பொழுது அவனிடம் ஏனோ எகிற தோணவில்லை.

“எங்கயும் கொண்டு போகலை சார், இங்க தான் உங்க கண்ணு முன்னால உட்கார்ந்து நீங்க கரைச்சு வச்சுருக்க பாலைத்தான் குடுக்கப் போறேன்…” குழந்தையை மடியிலேந்தி சோஃபவை ஒட்டி தரையில் அமர்ந்தாள்.

“இதென்ன தரையில….? சும்மா சோஃபால உட்கார்…”  அவளிடத்தில் அரண் சுகவிதா சம்பந்தபட்ட விஷயங்களில் முழு இளக்கம் காண்பிக்க ப்ரபாத்திற்கு விருப்பமில்லை. அவர்களுக்கு  தீங்கு செய்வதை தடுப்பதற்காக என்று இல்லை,

சுகவிதா மற்றும் குழந்தையை பாதிக்கும் எதையும் சங்கல்யா செய்துவிடமாட்டாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவள் இப்படி ஒரு வேலைக்கு வந்ததே தவறு என்ற உணர்வு அவளுக்கு வந்தாக வேண்டுமே….அதற்காகத்தான்.

ஆனால் அதற்காக அவள் ஒரேடியாய் தன்னை விலக்கி குறுக்கினாலும் கஷ்டமாய் இருக்கிறது அவன் மனதுக்கு. அடுத்த வீட்டில் வந்து தரையில் உட்காருவேன் என்றால் என்ன அர்த்தமாம்?

“இல்ல எனக்கு இப்டின்னாத்தான் வசதியா படும்…” அவன் கால்களை விட்டு இரு அடி தொலைவில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சோஃபாவில் சாய்ந்து கொண்டவள் குழந்தையை வாகாக கையிலேந்திய பின் பீடிங் பாட்டிலிற்காய் இவனை நோக்கி கை நீட்டினாள்.

“கொஞ்சம் தான் குடிச்சா….அப்றம் குடிக்க மாட்டேன்றா….ஆன்டி 100 எம் எலாவது குடிப்பான்னு சொல்றாங்க…” தனக்கு தெரிந்ததைச் சொன்னான்….

“கிரிக்கெட் பால பத்தி மட்டும் தெரிஞ்சு வச்சிருந்தா இப்டித்தான்….” சட்டென மனதில் பட்டதைப் சொல்லிவிட்டாள் சங்கல்யா.

‘ஆம்ப்ளடி நான்….இதெல்லாம் செஞ்சா கேவலம்…அதுகுத்தான் நீ இருக்கியே….’ அடுத்தவீட்டு ராணி அக்காவின் கணவர் அடிக்கடி கத்துவது மெல்லத்தான் ஞாபகம் வருகிறது. இப்போது இவனிடம் இருந்தும் அப்படி ஒரு பச்சைமிளகாய் பதில் கேட்க வேண்டி இருக்கும்…

“சுகா சின்னதா இருக்கப்ப கொடுத்தது…டச் விட்டு போச்சு…சீக்ரம் ட்ரெய்னிங் எடுத்துகிடுறேன்….” இவள் எதிர்பார்ப்பிற்கு எதிர்ப்பதமாய் அவன் பதில். அவனை திரும்பிப் பார்க்க உந்திய உணர்வை அவளுள் ஏதோ திரையிட்டு தடு என்றது. அரண் அண்ணா மாதிரிதான் இவனும்….மனதிற்குள் பட்சி பாடியபடி பறந்தது…..

“பொஷிஷன் கஷ்டமா இருந்திருந்தாலும்  பசின்றதால குடிச்சிருப்பா….இப்போ பசி கொஞ்சம் அடங்கிருக்கும்…சோ கம்ஃபர்ட்டா இல்லனு ஃபீல் செய்றா…… “என்றபடி பாட்டிலை வாங்கியவள் அதை உயர தூக்கிப் பார்த்தாள். வந்து தோன்றும் உணர்வுகளைத் தொடர பெரும் பயம். அவளுள். பேச்சை மாற்ற வேண்டும்….

“ ஸ்டெரிலைஸ் செய்துறுக்கு தானே…?”  இப்போது அவன் முறைத்தான்.

“ஸ்டெரிலைசர்ல இருந்துதான் எடுத்தேன்….” அவன் சொல்ல பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தாள்.

ஹயாவோ மறுப்பின்றி அதை  வாயில் வாங்கிக் கொண்டவள் முதலில் தன் இரு கைவிரல்களை இணைத்து  ஆராய்ந்தாள். அதன்பின்  சங்கல்யாவின் நாடி, துப்பட்டா என ஆராய்ச்சியை தொடர்ந்தவள்  பாட்டிலில் ஐக்கியமானாள். மெல்ல கண் சொருக தூக்கத்திற்குள் பயணம்.

அடுத்த பக்கம்