நனைகின்றது நதியின் கரை 6

சுகவிதா தலையைப் பிடித்துக் கொள்ளவும் பதறத் தொடங்கியிருந்த அரண்தான் கீழே விழும் முன் அவளைத் தாங்கிப் பிடித்ததும். ஆனால் அவன் பிடிக்கிறான் என்பதை உணரும் முன்னமே கூட அவள் மயங்கிப் போயிருந்தாள்.

அப்பொழுதுதான் ப்ரபாத் அங்கே இருப்பதைக் கவனித்த அரண் “ப்ரபு…” எனும் முன் ப்ரபாத் பாய்ந்து சென்று வாட்டர் ஜக்கை கொண்டு வந்து சுகவிதா முகத்தில் தண்ணீர் தெளித்தான். அதோடு மனைவியை இரு கையிலுமாக ஏந்த தொடங்கி இருந்த அரணிற்கு உதவியாக தானும் சுகவிதாவை தூக்குவதில் உதவினான் ப்ரபாத்.

அரணின் உடல்நிலை அறிந்தவன் அல்லவா….அவசரமாக சுகவிதாவை தூக்குவதில் ஈடுபட்டிருந்த தன் நண்பனுக்கு உதவினான் அவன்.

“விதுவப் பார்த்துக்கோடா…” சொல்லிய வண்ணம் முகத்தில் சுளிப்புகளைக் கொண்டு வந்த மனைவியை நண்பன் வசமிட்டு பறந்தவன் அடுத்த நொடிகளில் கையில் எதோ ஒரு காப்சூலுடன் வந்து, அப்பொழுதுதான் சுய நினைவுக்கு வந்து கொண்டிருந்தவள் தலையை தன் மடியிலேந்தி, மாத்திரையை அவள் வாயிலிட்டான். அவன் முகமெங்கும் பாச பரிதவிப்பும், தன் நிலைமீறிய சூழலை எதிர்கொள்ளும் கலக்கமும்….

இப்படி ஒரு சூழலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை சங்கல்யா. அரணின் வீட்டின் முன் காரிலிருந்து இறங்கும் போதே ஒருவித பக் பக்கை உணர்ந்தவளுக்கு, அவளை சோதனையிட்ட செக்யூரிட்டிக்கு எந்த மறுப்பும் சொல்லாமல், வீட்டிற்குள் நுழையும் முன் காலணியை கழற்றும் உடன்வந்தவருக்காக காத்திருப்பது போல் இயல்பாய் அவளை சோதனையிட்டு முடிக்கும் வரை காத்திருந்த ப்ரபாத்தின் நடவடிக்கையைப் பார்த்ததும் சற்று எரிச்சல் வந்தது.

அதுவரை காரில் அவன் பேசிய பேச்சுகளால் உண்டாகி இருந்த உணர்விற்கு எதிர்பதமாய் இருந்தது அவனது இந்த நடவடிக்கை. அவன் தன்னை நம்பவில்லை என்பதால் தான் எரிச்சல்படுகிறோம் என்றெல்லாம் காரணப்படுத்த தெரியவில்லை அவளுக்கு. ஃபெல்ட் இன்சல்டட். அவ்வளவே…

அந்த சிறு எரிச்சலை துணைக்கு கூட்டி வந்தவளுக்கு வரவேற்பறையில் நுழையவுமே வித்யாசமன உணர்வு வந்துவிட்டது. இதற்கு முன்னும் இது போன்ற பெரிய வீட்டிற்குள் ஒன்றிரெண்டு முறை சென்றிருக்கிறாள்தான்…ஆனால் குழுவினரோடு….இது அப்படியல்லவே…. எல்லாம் அந்நியம்…..ஏதோ ஒரு இன்செக்யூரிட்டி….ரெட் அலர்ட்டுக்கு சென்றது இவளது தேகம்….மானசீகமாக முப்பது கைகள் அவளுக்கு உதயம்….பத்துதலை சிந்தனை ஒற்றை தலையில்..எதை எப்டி ஹேண்டில் செய்யனும்…?

அப்படி ஒரு நிலையில் வந்தவள் இப்படி ஒரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. இதுவரையும் ப்ரபாத் தன்னைப் பற்றி பேசிக் கொண்டு வந்திருக்கிறானே தவிர, சுகவிதா அரண் பத்தி மேலோட்டமாக மட்டுமே சொல்லி இருக்கிறான் என்பதே இப்பொழுதுதான் அவளுக்கு உறைக்கிறது.

சுகவி வெளி வந்த வேகத்திலும் அவள் பேசிய வார்த்தையிலும் இயல்பில் சங்கல்யாவுக்கு அரண் மேல் கொதித்து எழுந்தது கோபம் என்றால், அடுத்து அரண் நடந்து கொண்ட விதத்தில் அவள் ஆண்கள் பற்றிய புரிதலில் விழுந்தது 60000கேஎம்பி வேகத்தில் ஒரு அடி. பெரிதும் தாக்கப்பட்டாள் அவள் மனதளவில்.

அவள் வாழ்க்கையில் முதல் முதலாக, தன்னை தாக்கிய ஒரு பெண்ணிற்காக, தன்னை வெறுக்கும் ஒரு நபருக்காக  பரிதவிக்கும் ஒரு ஆணைக் காண்கிறாள் சங்கல்யா. அதுவும் அவன் முகமும் உடலும் மொத்த தவிப்பும் சொல்லியெதென்னவாம்?

இதேவித தவிப்பை அவள் பலமுறை அனுபவித்து இருக்கிறாள். சிறுமியாக இருந்த காலத்தில் அவ்வப்போது படுத்திருந்த படுக்கையில் கண்கள் சொருக வாய் கோண, கை கால்கள் வளைந்தும் நெளிந்தும் வெட்ட, கழுத்து ஏதோ ஒரு திசையில் சுருள, இவள் பாட்டி இழுபடும்  போதெல்லாம் இவள் இப்படித்தான்

இவனைப் போலவேதான் உணர்வாள். நடப்பதை தாங்கவும் முடியாமல், அதை தடுக்கவும் தெரியாமல், வலி வலியாய், பயம் பயாமாய், பரிதவிப்பாய்….ஹோப்லெஸ்னெஸ்…

ஆண் என்ற அடையாள அட்டையை தாண்டி மனிதன் என்ற முகவரியில் முதல் முதலாக ஒருவனை அவள் இன்றுதான் காண்கிறாள்.….

“அண்ணா சீஷர் பேஷண்டை மூவ் செய்யக் கூடாது…வாய்ல எதுவும் போடக் கூடாது…” அதிர்ச்சி விலகியவள் சூழ்நிலைக்குள் இறங்கி சுகவிதாவுக்காக ஓடினாள். அண்ணா அதுவாக வருகிறது வாயில் அரணை நோக்கி.

“இல்லமா சுகவிக்கு ஃபிட்ஸ் எதுவும் கிடையாது…இது வேற….” அந்த சூழலிலும், அறிமுகமற்ற இவளை எத்தனை தன்மையாய்….? முளைத்திருந்த முப்பது கைகளில் பாதி காணாமல் போனது இவளுக்கு. ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ப்ளேஸ் அ ரோல்….

“நீ கொஞ்சம் வெளிய வெய்ட் செய்யேன்…” ப்ரபாத் தான். என்ன இருந்தாலும் அவர்களின் படுக்கை அறைக்குள் இவள்….

வெளியே வந்து நின்று கொண்டாள்.

அடுத்து என்ன நடக்கிறது என அவளுக்கு அறியும் வாய்ப்பு இல்லை.

ஆனால் மருத்துவரின் வருகையும் இன்ன பிற சத்தங்களும். அங்கேயே நின்றிருந்தாள். சுகவிக்கு எதுவும் பெருசா இருந்துடக் கூடாதே கடவுளே!!!

இடையில் குழந்தையின் அழுகுரல் கேட்கவும் உள்ளே செல்ல ஓர் பலத்த உந்தல்.

இதற்குள் அழும் ஹயாவை ஆறுதல் படுத்த முயன்றபடி  ப்ரபாத் வெளியே வருகிறான். மனதிற்குள் ஓர் ஆறுதலும் நிம்மதியும் அதோடு எதுவுமோ…. குழந்தையுடன் அவனைப் பார்க்க ஒரு மென்மையான உணர்வு வருகிறதுதானே….

அடுத்த பக்கம்