நனைகின்றது நதியின் கரை 5 (2)

“சுகவ்…..சுகவி…” அரண் இவளை அழைத்துக் கொண்டிருப்பது இப்பொழுது உறைக்க மெல்ல நடப்பிற்கு திரும்பினாள்.

ஒருவேளை அந்த ஃபெலிக்‌ஸுடனான திருமணம் இவள் விருப்பமின்றி நிச்சயமானதோ….? அதிலிருந்து காப்பாற்றதான் அரண் இவளை கடத்தி வந்தானோ….? ஆனால்….அப்படியானால்…..இவள் இவனுடன் வரவும் தான் விரும்பியது போல் தெரியவில்லையே….?

எது எப்படியோ அப்பா நிச்சயத்த திருமணத்திலிருந்து இவளை அரண் காப்பாற்றி இருந்திருந்தானால் அப்பா அவனை வெறுப்பதில் ஆச்சர்யம் இல்லை.

“பால்குட்டிய என்ட்ட குடுத்துட்டு தூங்கப் போன்னு சொன்னேன்…..அவ தூங்கப் போற மாதிரியே இல்லை….” குழந்தையை தன் கையில் ஏந்த ஆயத்தமாய் நின்றிருந்தான் அரண்.

ஹயா இப்படித்தான். சில இரவுகளில் இப்படி எழுந்தால் இரண்டு மணி நேரமாவது ஆட்டம் போட்டுவிட்டுதான் தூங்கப் போவாள்.

சுகவிதா அரணைப் பார்த்தாள்.

என் அப்பாட்ட கூட குடுக்க மாட்டேன்னு சொல்லி, குழந்தை என் கைலதான் இருக்கனும்னு சண்டை போட்டு வாங்கிட்டு, இப்டி அவளை தனியா போட்டுட்டு எப்டி போவன்னு இவன் ஏன் கேட்கலை?

“சாரி…..அவ தூங்கிட்டு இருக்றதப் பார்த்துதான் வந்தேன்…..எனக்கு தூக்கம் வரலை….”

சிறு பயத்துடன் தயங்கி தயங்கி சொன்னாள் சுகவிதா.

“இனி இப்டி வரனும்னா என்ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வா சுகவிமா….” அவன் சொல்ல கரிசனை வந்தது இவள் மனதில்.

“நீங்க தூங்கிட்டு இருந்தீங்க அதான்…..”

“பரவாயில்லை….இல்லனா பால்குட்டிய என் பக்கத்துல வந்து படுக்க வச்சுட்டுப் போ….ஆமா உனக்கு ஏன் தூக்கம் வரலை….? உடம்புக்கு எதுவும் முடியலைனா எதையும் யோசிக்காம தயவு செய்து சொல்லிடு சுகவி…”

இவள் உடல் நலம் பற்றி விசாரிக்கிறானே……இன்று அவன் பட்டபாடு ஞாபகம் வருகிறது. அதற்கு காரணம்  போதிய ஓய்வின்மை என்றாரே மருத்துவர்.

“உள்ள வா முதல்ல….இன்நேரத்துல வெளியே நிக்க வேண்டாம்…” இவள் உள்ளே நுழைய தானும் உள்ளே வந்து கதவைப் பூட்டினான். எப்பொழுதும் இவளைப் பற்றிதான் அக்கரையா?

“எனக்காக ஸ்ட்ரெய்ன் எடுக்காதீங்க……உங்க ஹெல்த்த பார்த்துக்கோங்க…நீங்க போய் படுங்க…..நான் ஹயாவ பார்த்துகிறேன்…..அவ தூங்க இன்னும் டைம் ஆகும்” உள்ளே செல்ல துவங்கினாள். அவள் பின் வந்தான் அரண்.

இப்பொழுது அவன் படுத்திருந்த அறையை இவள் தாண்ட வேண்டும். “போய் படுங்க அரண்….குட் நைட்…”

அவளை ஒரு நொடி நின்று பார்த்தவன் “குட் நைட்….குட் நைட் ஹயாமா “ என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தான்.

அவனைத் தாண்டி ஒரு எட்டு வைக்கவும்தான் வெளியே கேட்ட பேச்சுக் குரலும் செடியில் மறைந்த ஏதோ ஒன்றும் ஞாபகம் வருகிறது சுகவிக்கு.

“அது வந்து..” அவனிடம் விசாரிக்க இவள் திரும்ப அதற்குள் அவன் அறையிலிருந்து அவசரமாக ஒருவித பதற்றத்துடன் வெளியே வந்திருந்தான் அரண். “என்ன சுகவிமா….?”

இவளை சற்று முன் காணாமல் வெளியே போய் தேடும் போது எவ்வளவு பதறி இருப்பான்? ஆனால் இவளைக் கண்டதும் இவளிடம் துளி கடுமை காண்பிக்கவில்லையே….உணர்ச்சிப் பூர்வமான மனிதனாக இருந்தாலும் உணர்ச்சியின் அடிப்படையில் நடந்து கொள்பது இவன் சுபாவமில்லை போலும்.

சுகவிதாவுக்கு வேறு ஒன்றும் புரிந்தது எந்த காரணத்தை முன்னிட்டும் இவள் அடுத்த அறையில் இருக்கும் வரை அவனுக்கு போதிய ஓய்வு கிடைக்கப் போவது இல்லை எனபதுதான் அது. இப்படி இவளது  ஒரு ஒரு சலனத்துக்கும் சத்தத்திற்கும் தூங்காமல் எழுந்தால் அவன் உடல் நிலை என்னாவதாம்?

இப்பொழுது இவளுக்கு அவன் பற்றி வரும் நினைவுகளையா கனவுகளையா உணர்வுகளையா எதை வைத்து  இவர்கள் உறவை முடிவு செய்ய வேண்டும் என்று தெரியவில்லைதான். ஆனால் சக மனுஷியாக அவன் இன்று பட்ட பாட்டை பார்த்தபின்பும், எக்கேடும் கெடட்டும் என்று அவன் உடல் நிலையை  விட முடியாதே..

“உங்கட்ட ஒன்னு கேட்பேன்….தப்பா எடுத்துக்க கூடாது….”.

“சொல்லுமா…”

“ நானும் ஹயாவும் உங்க கூட….ஐ மீன் இந்த ரூம்ல இருக்கலாமா…….? பெட் ரூம்னு சொன்னீங்களே அது வேண்டாம்….” அதற்குள் செல்ல பலவித தயக்கம் அவளுக்குள்.

பதிலின்றி பார்த்தான் அவன். இதை என்ட்ட கேட்கனுமா? என்றது அவன் கண்கள்.

அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு ஒரே ஒரு படுக்கைதான் இருந்தது. ஓரளவு சின்னதும் கூட.

“இது சரியா வராது என் ரூம்க்கு வாங்க….அங்க பெட் பெருசா இருக்கும்…”

அடுத்த சில நிமிடங்களில் அவள் அறை படுக்கையில் அவன்.

“இங்க தான் இருக்கோம்…ஹயா தூங்கவும் நானும் படுத்துடுவேன்…..நீங்க எங்களைப் பத்தி யோசிக்காம தூங்குங்க…..”

இரண்டாம் நிமிடம் தூங்கி இருந்தான் அரண். ஹயாவின் ங்கா….ஆ….ங்காம்மா….வோ அவளை கொஞ்சிய சுகவியின் சத்தமோ அவனை எழுப்பவே இல்லை.

இப்படி தன் மனைவி மகள் சந்தோஷ சத்தத்தில் தூங்கி அவர்களது சிறு கஷ்டத்திலும் தூக்கம் கலைந்து அலைந்து இருப்பவன்  தனக்கு கெடுதல் செய்திருக்கவே மாட்டான் என்று தோன்றியது அந்த நொடி அவளுக்கு.

ஆனால் மறுநாள்தான் கதை காட்சி அமைப்பு என எல்லாம் மாறிப் போனது.

அடுத்த பக்கம்