நனைகின்றது நதியின் கரை 4(4)

சுகவிதா தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள். மனமெங்கும் ஒருவித நிறைவு. இதயம் முதல் இதழ்கள் வரை தித்திதான் அரண். அது கனவின் பலன். திரும்பி தன் மகளைப் பார்த்தாள் குழந்தை சற்று திரும்பி படுத்திருந்தாள். தூக்கத்தில் எதையோ கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

மனம் இன்னுமாய் நிறைந்து பொங்கியது சுகவிதாவிற்கு. எல்லாம் அவளுக்கு நிறைவாக இருப்பதாக ஒரு உணர்வு. ஒரு பூரணம் இதயம் வசம்.

எழுந்து அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள். இன்னும் மனதில் மாருத அலைகள். எதிர் அறை வாசல் கதவை திறந்து வைத்து அதன் வாசலில் இழுத்து வந்து கட்டிலைப் போட்டு அதில் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் கணவன்.

இவள் கூப்பிட்டால் உடனடியாக வர வேண்டும் என்பதற்காகவா?

சற்று முன்பு இவள் பார்த்த ஹயாவின் படுக்கும் விதம் ஞாபகம் வருகிறது.

மகள் தன் அப்பாவை பின்பற்றுகிறாள் போலும் இதில். வேறு எதிலெல்லாம் ஹயா இவனைப் போல் இருக்கிறாள்? கண்கள் அவன் உருவத்தை அலசுகிறது.

இருந்த மாருதம் சுமக்கும் மன நிலையா இல்லை இப்படி ஒரு பழக்கம் முன்பு அவளுக்கு இருந்திருக்கிறதா தெரியவில்லை, அருகில் படுக்கையில் அமர்ந்து அவன் முகம் அருகில் படுக்கையில் இருந்த அவனது வலக்கையை எடுத்து தன் கைக்குள் வைத்தாள்.

எதை உணர்ந்தாலோ இல்லையோ அவள் உணர்ந்தது கடும் சூடு. ஆம் அவன் கொதித்துக் கொண்டு இருந்தான். அவளையும் அறியாமல் அவன் நெற்றியைத் தொடுகிறது கை. அரண்டு போகிறது நெஞ்சம். இது வெறும் காய்ச்சல் இல்லை…..இவனுக்கு என்ன? அவசரமாக சுற்றிலும் பார்வையை ஓட விடுகிறாள். எந்த மருந்தின் அடையாளமும் இல்லை.

ப்ச்…அவன் ரூம் இது இல்லையே….கடவுளே அந்த ரூம் சாவி இவட்ட….

இப்ப என்ன செய்யனும்….? தட தடக்கும் இதயத்தோடு வரவேற்பறை நோக்கி ஓடுகிறாள். யாராவது வேண்டுமே….

“ப்ளீஸ் யாராவது வாங்களேன்…” யாரை கூப்பிட?

அவனது அப்பா ஞாபகம் வருகிறது. அவரை இவள் எப்படி கூப்பிட வேண்டும்?

“மாமா…..மாமா…..ப்ளீஸ் வாங்களேன்….அரண்க்கு….” கூப்பிட்டுகொண்டே இவள் அடுத்த அறையைப் பார்த்து ஓட இதற்குள் அவரே வந்துவிட்டார்.

“என்னாச்சுமா…?” அவர் முகத்திலும் பதற்றம். அவன் படுத்திருந்த அறையை நோக்கி ஓடுகிறார். இவள் அவர் பின்.

அடுத்து நடந்ததெல்லாவற்றிலும் இவள் வெறும் பார்வையாளர் மாத்திரமே….டாக்டருக்கு போன் கால் பறக்கிறது.

அரணை அவசரமாக காரிலேற்ற இவளும் ஹயாவுடன் உள்ளேற சில நிமிடங்களில் மருத்துவமனை.

நடப்பது என்னதென்று புரியாமல் அரை மணி நேரம். அடுத்து இவளை அழைத்து செல்கிறார் அவனது அப்பா.

இப்பொழுது அறையில் முன்பு போல் முழு உற்சாகமாக அவன். “ஐ’ம் ஆல் ரைட் டட்…” என்றபடி அவன் அப்பாவைப் பார்த்தவன் பின் வரும் இவள் முகம் பார்த்தவுடன் முகம் கனிகிறான்.

இவளையும் அறியாமல் இவள் கண்ணில் கட்டியிருந்த நீர் காரணமா?

“அது ஒன்னுமில்லமா…சிக்‌ஸ் மன்ந்த்ஸ் மூவ்மென்டே இல்லாம இருந்துட்டான் இல்லையா…..அதோட ரெஃஸ்ட் எடுக்கனும்னு சொன்னாலும் கேட்காமா சார் ட்ரிப் அடிச்சுருப்பார் போல….அதான்…பட் பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை….இன்னும் 2 மந்த்ஸ்  நான் சொல்றத ஃபாலோ பண்ணா பழைய ஃபார்முக்கு வந்துடுவான் பையன்…”

டாக்டர் இயல்பாய் சொன்னார். அவர் அரண் வீட்டாருக்கு  நெருக்கமானவராக இருப்பார் போலும்.

6 மந்த்ஸ் இவனுக்கு எதோ ஆயிற்றா? அதனால் தான் இவளைப் பார்க்க வரவில்லையா? என்னவாயிற்று?

அன்று இரவு வீடு திரும்பிவிட்டார்கள் தான். அவன் அறை சாவியை அவனிடம் கொடுத்துவிட்டாள் முதல் வேலையாக. அவன் மருந்து மாத்திரைகள் அங்கு இருக்கும் என்ற நினைவில்.

இருப்பினும் இவள் தன் அறைக்கு செல்லும்போது அங்கு இவள் அறையை அவன் அறையுடன் இணைக்கும் கதவிற்கு இவள் புறம்  தாழ்பாள் இணைக்கப்பட்டு பூட்டி இருந்தது.

அன்று இரவு சுகவிதாவிற்கு தூக்கம் வர வெகு நேரமாயிற்று. மனமெல்லாம் ஒரே குழப்பம். இவ்வளவு நேரம் இவள் தன் நிஜ நினைவுகளை மறந்து கனவை அல்லவா பின்பற்றி இருக்கிறாள் அரண் விஷயத்தில்.

எது நிஜ அரண்?

அடுத்த பக்கம்