நனைகின்றது நதியின் கரை 3

ந்த வீட்டின் போர்டிகோவில் போய் இவர்கள் ஹம்மர் நின்ற நேரம் இவர்களை தொடர்ந்து மற்றொரு காரும் வேகாமாக வந்து க்ரீச்சிட்டு நிற்பது தெரிகிறது.

ஓட்டுனர் இருக்கையில் இருந்து ப்ராபாத் குதித்து இறங்கி வந்து அரண் பக்க கதவை திறக்கும் முன் அரண் ஹயாவுடன் கீழே இறங்கிவிட்டான்.

அதோடு “பார்த்து இறங்கு சுகவிமா” என இவளுக்கு இறங்க உதவியாக கை நீட்ட வேறு செய்தான்.

அதற்குள் இவர்களுக்குப் பின் வந்த காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் அரணின் ஓல்டர் வெர்ஷன். பார்த்தவுடன் தெரிந்துவிடும் அது அவனது தந்தை திரியேகன் என.

சுகவிதா அரணை தவிர்த்து அடுத்த புறமாக கதவை திறந்து இறங்க நகரும் போது அவள் பார்வைக்குப் படுகிறது அரணின் அப்பா மகனை அணைத்துக் கொள்ளும் நிகழ்வு.

பையனை பதினைஞ்சு நிமிஷம் பார்க்காததுக்கே பாசமழை பொழியும் அல்ட்ரா அலட்டல் குடும்பம் போலவே இதுஆனா என்னை மட்டும் என் வீட்டை விட்டு மொத்தமா பிரிச்சு கொண்டுவரலாம் என்ன?

“என்னடா……இப்டி செய்துட்ட…எல்லாத்திலயும் அவசரம் தானா….?….பதற அடிச்சுட்ட”

“எப்டிப்பா இவங்களை அங்கவிட்டுட்டு நான் இன்னும் இங்க இருக்க முடியும்…?”

இதற்குள் அரண் தந்தை திரியேகனின் கண்கள் மகன் கையில் இருந்த பேத்தியின் மேல் போகிறது.

முகமெல்லாம் பெருமிதமும் உச்சகட்ட உவகையுமாய் குழந்தையை நோக்கி கை நீட்டுகிறார்.

“உண்மைதான் இவங்களை விட்டுட்டு இன்னும் எப்படி இருக்கிறதாம்…?ஹயாமா தாத்தாட்ட வருவீங்களாம்….”

குழந்தைக்கு என்ன புரிந்ததோ பொக்கை வாய் முழு சிரிப்புடன் இரு கைகளையும் நீட்டி ஒரு துள்ளலுடன் அவரிடம் குதித்துக் கொண்டு போகிறது.

பார்த்த சுகவிதாவிற்கு பத்திக் கொண்டு வருகிறது.

காரணம் மனம் கொள்ளா சந்தோஷம் முகத்தில் தெரிய, என் குழந்தை என்ற ஒரு வித கர்வம் அதோடு அழகாய் இழைய, தன் அப்பாவிற்கு முழு உலகின் முன் முடி சூடும் ஒரு மகிழ்ச்சி பாவத்துடன் மகளை தூக்கி கொடுத்துக் கொண்டு இருந்தான் அரண்.

எங்கப்பாவுக்கு கூட நான் இப்படித்தான்டா…….ஹயா அவங்களுக்கும் பேத்தி தான் டா

போய் அவன் அப்பா கையிலிருந்து குழந்தையை பிடுங்க வேண்டும்….இந்த அரணுக்கு வலி தெரிய வேண்டும்….வேகமாக காரை சுற்றிக் கொண்டு அவரைப் பார்த்து இவள் செல்ல அதற்குள் திரியேகனோ

“குழந்தைய நல்லா வளத்துருக்காங்கடா…. ஹாஸ்பிட்டல்ல வச்சு குட்டிச் செல்லத்தைப் பார்த்தது…..எத்தனை மாசம் ஆச்சு….அடையாளம் தெரியாதவங்கட்ட கூட அழாம வர்றா பாரு”

இவளது வீட்டைப் பாராட்டும் அவரிடம் முகத்தில் அடித்தார் போல் எப்படி நடந்து கொள்வாதாம்? தயங்கி நின்றுவிட்டாள்.

“இப்டி ஒரு நாள் திரும்ப வரணும்னு நான் அவ்ளவு காத்திருந்தேன்மா….கர்த்தர் என்னை கைவிடலை..” இதற்குள் இவளைப் பார்த்து சொல்லும் அவர் கண்களில் நீர் கோர்க்கிறது.

“அப்பா எப்பப்பா நீங்க இவ்ளவு….” அதோடு அரணும் தன் பேச்சை நிறுத்திவிட்டான். பாவம் அப்பா கடந்த நாட்களில் என்ன பாடுபட்டிருப்பார்…

“உங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க இன்னைக்கு ரொம்பவுமே அழகா இருக்குடா…” ப்ரபாத்தும் சற்று உணர்ச்சிவசப்படுவதாக தோன்றுகிறது சுகவிதாவிற்கு.

அப்பொழுதுதான் கவனிக்கிறாள்  தான் அரணுக்கு அடுத்து சென்று நின்று கொண்டிருப்பதை. அதுவும் இவள் புடவையிலும் அவன் வேஷ்டி சட்டையிலும்…தம்பதி சகிதமாக

அவன் உயரமும் உருவமும் பக்கவாட்டில் தெரிந்த அவன் முகமும் அதிலிருந்த மகிழ்ச்சியும் களையும்…மொத்தத்தில்…..துள்ளி இறங்கும் துடிப்பான அருவி ஞாபகம் வருகிறது…..இவள் பார்வையை உணர்ந்து அவனும் இவளைப் பார்த்து திரும்ப……சே இவனைப் போய் பார்த்துக் கொண்டு….பார்வையை மீண்டுமாக தன் குழந்தையிடம் கொண்டு வைத்தாள்…

ஹயாவோ மும்முரமாக தன் தாத்தாவின் கண்ணாடியை கழற்றுவதில் ஈடுபட்டிருந்தாள்.

“நாம ரெண்டுபேருமா சேர்ந்து சீக்கிரமா அதை கழட்டிருவோம் செல்ல குட்டி….அப்பாதான் வந்துட்டேனே…..தாத்தாக்கு இனி நோ ஆஃபீஸ்…..உன் கூட இருக்கிறதை தவிர நோ வேலை…ஓகேவா?” அரண் மகளுக்கு சொல்வது போல் தன் தந்தைக்கு இனி ஓய்வு என சொல்ல சுகவிதாவிற்கு குழப்பம். இவன் இதுவரை எங்க போயிருந்தான்?

“ஹலோ சார்…எனக்கு பேத்தி வந்திருக்கலாம்…ஸ்டில் ஐ’ம் அ யங் மேன் மை பாய்…இப்போதைக்கு ஆஃபீஸ் பக்கம் கூட வந்துடாத….நீ வந்து ஆஃபீஸைப் பார்க்கிறதுக்கா இவங்களை இப்ப அவசரமா கூட்டிட்டு வந்த…..சரி உள்ள வாங்க முதல்ல….எவ்ளவு நேரம் நிப்பீங்க…சுகா வேற டயர்டா தெரியுறா…” என்றவர்

சுகவிதாவின் தலையில் வாஞ்சையாய் கைவைத்து “வந்துடுட்டல்லமா எல்லாமே சரி ஆகிடும்” என்றார்.

அவர் குரலில் பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும். இவளுக்கு சரி ஆவதைப் பற்றி சொல்கிறாரா இல்லை அவர் மகன் குடும்பத்திற்கா?

“ரெண்டும் ஒன்னுதான்மா ….உள்ள வா….முதல்ல வந்து உட்காரு நீ….”  இவள் மனக் கேள்விக்கு பதில் போல சொல்லிய அவர் ஹயாவோடு முன்னே நடக்க இவளுக்கு இணையாக நடக்கிறான் அரண். பின்னால் ப்ரபாத்.

அந்த வீட்டின் மார்பிளால் இழைக்கப்பட்டிருந்த அந்த வாசலை தாண்டி காலை உள்ளே எடுத்து வைத்த நொடி சுகவிதா மனதில் காட்சி விரிகிறது.

அவள் முன்பு கண்டது போல் திருமண உடையில் இருக்கிறாள். இந்த அரண் கடத்தி வர, அந்த காரிலிருந்து தவிக்க தவிக்க இறங்குகிறவளுக்கு அதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை என்பது போல் ஒரு உணர்வு.

இத்தனை பெரிய கோட்டை சுவரும் கத்தி கூப்பாடு போட்டாலும் யாருக்கும் கேட்க முடியாத அந்த தனி மாளிகையும்….அதீத உணர்ச்சி வேகத்தில் மயக்கம் வர கால்கள் தள்ளாட சரிகிறவளை எதோ சொல்லியபடி  தன் இரு கைகளில் அள்ளி எடுக்கிறான் அரண்.

அடுத்த பக்கம்