நனைகின்றது நதியின் கரை 2 (2)

ஒரு ஆங்கிள்ள பார்த்தா கல்யாணத்துக்கு போற வழியில கல்யாண பொண்ணை கிட்நாப் செய்து கொண்டு போய்ட்டு….அவ கன்சீவ் ஆனதும் கொண்டு வந்து வீட்ல விட்டுட்டு போய்ட்ட பொறுக்கின்னு கூட சொல்லிகிடலாம் ….பட் இந்த சுகவிதா அப்பா ஏன் இதை பெருசாக்கலை..? அந்த மிஸ்டர் அனவரதனைப் பற்றிப் படித்தாள்.

ஆக இவருக்கு ட்ரெடிஷனல் மைன்ட்செட் …..அவ்ளவு ஈசியா குடும்ப விஷயத்தை வெளிலவிட மாட்டார்….சோ இந்த வேலைக்கு இவர் தான் சரி. மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

அடுத்து சுகவிதா பற்றி ஆராய்ந்தாள்.

  1. வெகு பிரபலமான டென்னிஸ் ப்ளேயர்…..யங்கஸ்ட் க்ராண்ட் ஸ்லாம் வின்னர்…..15 வயசுலதான் நான் 12க்கு அப்புறம் என்ன செய்யப் போறேன்னு யோசிக்கவே ஆரம்பிச்சேன்பா…..மேடம் அந்த வயசுல ஃப்ரென்ச் ஓபன், விம்பிள்டன்னு வேர்டு லெவல்ல 2 ட்ரோபி வின் செய்துருக்காங்க…..
  2. 2012, 2013 ரெண்டு வருஷமும் உலகத்திலேயே அதிகமா சம்பாதிச்ச ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிடியாமே மேடம்….அப்போ ஏன் நம்ம ஹீரோ கிட்நாப் செய்ய மாட்டார்? ஆனால் அப்போ ஏன் திரும்ப விட்டுட்டு போய்டார்….?
  3. ஒன்லி டாட்டர்….ஹீரோ மாதிரியே
  4. படித்தது ஸ்கூலிங் செயின்ட். பால்’ஸ்…10த் 12த் ஸ்டேட் ஃபர்ஸ்ட்……ஹீரோ மாதிரியே

காலேஜ் அண்ணா யுனிவர்சிடி….அரண் மாதிரியே…..

சங்கல்யாவுக்கு எதோ புரிந்த மாதிரி இருந்தது. உனக்கு ஆப்படிக்கிறது தப்பே இல்லை அரண்….இரு வர்றேன்….

ஹாஸ்பிட்டலில் கண்விழித்த நொடியில் இருந்துதான் இதுவரை சுகவிதாவிற்கு ஞாபகம் இருக்கிறது. இவள் கண்விழித்தவுடன் இவள் யார் என்றே ஞாபகம் இல்லாத நிலை. ஆராயும் அறிவும் ஐக்யூவும் குமரி நிலையில் இருக்க உலகம் பற்றிய அறிவு பிறந்த குழந்தையின் நிலையில். மெல்ல விஷயத்தை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் தாய்பாலில் ஜீவிக்கும் குழந்தையை தாய்க்கு அறிமுகப் படுத்துவது அவசியமாயிற்றே….செய்தனர் பெற்றவர், மருத்துவர்.

எத்தனை தான் முயன்று பார்த்தாலும் அழுது காய்ந்த முகத்துடன் அரைகுறையாய் புட்டிப்பாலால் நிரம்பிய  வயிற்றுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அவளது என ஞாபகம் வரவே இல்லை அவளுக்கு.

ஆனால் அறிவு அதற்குத் தெரியுமே…..இத்தனை பேர் சொல்கிறார்கள், புகைப் படங்கள் பார்க்கிறாள்…..தாயாய் குழந்தையை அவள் ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் அவள் வளர்ப்புத் தாய் போலதான்.

குணமாகாமல் தவித்துக் கொண்டிருந்த மூளை இந்த புரியா உணர்வையும் தெரிவிக்கப்பட்ட விஷயங்களின் ஆதாரங்களையும் அதீதமாக எண்ணி எண்ணி குழம்ப அவள் உடல் மற்றும் மனநிலையில் கடும் பின்னடைவு.

இப்படி செயற்கையாக நினைவை கொண்டு வர செய்யப்படும் அவசர காரியங்கள் அவளை மீளா மன அழுத்தத்திற்குள் இழுத்துச் செல்வதையும், எதையும் செயற்கையாக ஞாபகபடுத்தாமல் இயற்கையாகவே அவள் அதை திரும்பப் பெறுவதுதான் பாதுகாப்பான வழிமுறை என்றும் மருத்துவக்குழு அறிந்து உரைத்தது.

அதிலிருந்து அவள் பெற்றோர் உட்பட யாரும் அவளிடம் எதையும் ஞாபகப் படுத்த முயலவில்லை.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின் சில நினைவுகள் அவள் பெற்றோரைப் பற்றி. ஆக அவர்களுடன் அவளால் ஓரளவு இணைய முடிந்தது.

இதில் வித்யாசமான விஷயம் என்னவென்றால் பெற்றோரைப் பற்றி இவளுக்கு நினைவு திரும்பிய அந்த சில நிகழ்வுகள் எல்லாம் அவர்களை இவள் மீது பெரும் பாசம் கொண்டவர்கள் என காண்பித்தாலும் ஏனோ இவள் அடிமனதால் அவர்களுடன் முழு திருப்தியுடன் இணைய முடியவில்லை.

ஒரு இனம் புரியா விலகல். அவர்கள் எத்தனை தான் நெருங்கி வந்தாலும் இவள் அறிவு அவர்களை நோக்கி உந்தி தள்ளினலும் அடிமனதில் ஒரு தடுமாற்றம்…வசதியின்மை….காரணம் புரியவே இல்லை.

அதே போல் புரியாத இன்னொரு விஷயம் இவள் திருமணம், கணவன் பற்றியது. இவளுக்கு குழந்தை இருக்கிறது என்றவுடன் அதன் தகப்பன் என்ற ஒரு கேள்வி…..

அவனைப் பற்றி யாரும் எதுவும் பேச்சு வாக்கில் கூட குறிப்பிடவில்லை.

முதலில் இத்தனை சுகவீனத்திலும் கணவன் என்று யாரும் இவளைத் தேடி வரவில்லை என்றதும் இவளுக்கு ஏற்பட்ட விபத்தில் அவன் இறந்துவிட்டானோ என்று ஒரு பயம் தோன்ற சுருண்டுவிட்டாள்.

அப்பொழுது அவளை ஆறுதல் படுத்தவென அப்படி ஒருவன் உயிருடன்தான் இருக்கிறான் என்று இவள் பெற்றோர் தெரிவித்தனர். அவன் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

அவர்கள் தெரிவித்த விதத்திலேயே அவனை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது அவளது அறிவுக்கு. ஆனால் ஏனோ அந்த கணவன் என்ற நினைவு மட்டும் அவளுக்குள் ஒரு நிறைவான உணர்வை தந்தது.

விபத்திலிருந்து இவள் பெரும் போராட்டத்துக்குப் பின் வீடு திரும்பி 6 மாதம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒரு முறை கூட அவன் வந்து பார்க்க கூட இல்லை, அவனிடம் இருந்து ஒரு அலைபேசி அழைப்புக் கூட இல்லை என்ற போதும், அவள் பெற்றோர் அவனை ஆழமாக வெறுக்கின்றனர் என்ற போதும், அந்த அறியாக் கணவன் மீது நம்பிக்கை தேய்பிறையாய் தேய்ந்து போன போதும், அவன் வராததால் வளர்பிறையாய் வளர்ந்த கோபம் குமுறிய போதும் அவன் பற்றி இருந்த அந்த அடிமன உணர்வு மாறவே இல்லை.

இன்றும் இவன் உள்ளே நுழையவும் தெரிந்துவிட்டது இது தான் அவன் என. அவன் அழைக்கவும் அவனுடன் கிளம்பி வரத்தான் தோன்றியது. அவனைப் பற்றி இவளுக்கு எதுவும் தெரியாமலே, அவள் பெற்றோர் அவனை  வெறுக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவனை ஏன் விலக்கி நிறுத்த வேண்டும் என்று ஒரு கேள்வி வேறு மனதில்.

ஆனால் அவனுடன் வந்த பின்னல்லவா ஞாபகம் வருகிறது இவனின் சுய ரூபம்………இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? குழந்தை வேறு அவனுக்கு அருகில் இன்ஃபன்ட் கார் சீட்டில்….அவனை அடித்துப் போட்டு இறங்கி ஓட இது நேரமில்லை….உடல் இறுக பெரும் அதிர்ச்சியுடன் அவள்….

அடுத்த பக்கம்