நனைகின்றது நதியின் கரை 19(6)

அடுத்த சில மணி நேரத்தில் அந்த சதானா, தமன் ஸ்கோட்டா, வல்லராஜன், அவர்களுக்கு உதவிய பெப்பி அந்த பாம் செட் செய்த கிரிமினல்ஸ் என அனைவரும் ஜெயிலில் அடைபட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை வெளியில் சொல்வதால் பல க்ரைம்களுக்கு இது காரணமாகிவிடக் கூடும்….குடும்ப உறுப்பினர்களை கடத்தி வைத்துக் கொண்டு  விளையாட்டு வீர்ர்களை தங்கள் இழுப்புக்கு வளைக்க பிறரும் முயலக் கூடும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இது பற்றி எந்த தகவலும் மீடியாவிற்கு செல்லக் கூடாது என காவல்துறை முடிவு செய்தது. டிஜிபி யின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் இது.

ஜெயிலுக்கே வந்தும், நமக்கு இதைப் பத்தி ஸ்கூப் நியூஸே தெரிஞ்சிருந்தும் அதைப் போட வழி இல்லாம போய்ட்டே….. என வல்லராஜன் வட போச்சே ராஜனாகி புலம்பிக் கொண்டிருந்தார். மனசுக்குள்ளதான்….

மெல்பர்ன்:

முதலில் பேட் செய்திருந்த இந்தியா அணி 390 ரன்கள் எடுத்திருந்தது…..அரண், ப்ரபாத் இருவரும் சென்ஞ்சுரி என இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை…. இப்பொழுது ஆஸ்திரேலியா பேட்டிங்….

முதல் பால்…. தரையில் பட்டு  எழும்பிய பந்து ஓபனிங் பேட்ஸ்மேனின் பேட்டின் எட்ஜை எக்குதப்பாய் தொட்டு விர்ரென திசை மாத்தி பறந்து பேட்ஸ்மேனின் பின்னிருந்த ஒரு ஸ்டம்பை தள்ளிவிட…. ஃபர்ஸ்ட் விக்கெட்…..பௌல்ட் அவுட்….ரன்ஸ் ஆஸி 0

5 வது ஓவரில் அதகளமாகிப் போனது கதை.  நான்காம் பால்…..ஆன் ட்ரைவில் ஃபோர்…… ஐந்தாம் பால்…. கவர் ட்ரைவில் ஃபோர்…. கடைசி பால்… ஷாட் பிட்ச்….ஹூக் ஷாட்…..சிக்‌ஸர்…..அப்பொழுதுதான் களமிறங்கியவர் பின்னி எடுத்தார்.

6வது ஓவரில் பௌலிங்  வைஸ்கேப்டன் ப்ரபாத் ஜோனதன். முதல் பால்….சில்லி பாய்ண்ட் ஃபீல்டர் கேச்……அது மூன்றாம் விக்கெட்…..இரண்டாம் பால்……ஷார்ட் மிட் ஆன் ஃபீல்டரால் கேச்…. நான்காம் விக்கெட் அது….மூன்றாம் பால்….மிடில் ஸ்டம்ப் பறந்தது….ஐந்தாம் விக்கெட்……ரன்ஸ் ஆஸி 33

11வது ஓவரில் கடைசி பாலில் பேட்ஸ்மேன் பேட்டில் பட்ட பந்து நேரடியாக பறந்து 180 டிகிரியில் இடப்பக்கமாக சாய்ந்து தரையைவிட்டு ஒரு அடி உயரத்தில் அந்தரத்தில் ஹரிசான்டலாய் பாய்ந்த இல்லை பறந்த ஃபீல்டரின் கையில் அகப்பட்டது. ஆறாவது விக்கெட்….காட் அவ்ட்….ரன்ஸ் ஆஸி 66

13வது ஓவரில் ப்ரபாத் ஓடி வந்து பௌல் செய்த பால் பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டு மின்னலென ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் ஷாட்டில் இவனை நோக்கியே வருகிறது. சட்டென இடக்கையில் அதைப் பிடித்துவிட்டான்…. வலக்கையில் பௌல் செய்து இடக் கையில் கேட்ச் … ஏழாவது விக்கெட்…. பௌல்ட் அண்ட் காட்……ரன்ஸ் ஆஸி 78

16 வது ஓவரில் ஐந்தாம் பால்……பேட்ஸ்மேன் அடித்த பந்து தன்னை பிடிக்க பாய்ந்து வந்த  கவர் ஃபீல்டர் மற்றும் மிட் ஆஃப் ஃபீல்டருக்கு இடையில் சற்று தொலைவில் தரை தொட்டு பவ்ண்ட்ரி லைனைப் பார்த்து ஒலிம்பிக்கின் ஓட்ட பந்தய வீர்ர் போல் ஓடியது….

இவர்கள் இருவர் துரத்தியும் கையில் அகப்படாமல் தலை தெறிக்க ஓடிய பந்து, லாங் ஆஃப் பொஷிஷனில் இருந்து ஓடி வந்திருந்த ஃபீல்டரின் கையில் பவ்ண்ட்ரி லைன்க்கு சற்று அருகில் அகப்பட்டது.

இதற்குள் ஒரு ரன் ஓடியிருந்த பேட்ஸ்மென் இருவரும் இரண்டாம் ரன்னுக்காக ஓடிக் கொண்டிருந்தனர்….பந்து பவ்ண்ட்ரி லைனில் இருந்து பௌலர் கைக்கோ, விக்கட் கீப்பர் கைக்கோ வந்து சேரும் முன் இவர்கள் நடந்தே கூட க்ரீஸுக்குள் போய்விடலாம்….ஆனால் கையில் பந்தை எடுத்த அந்த ஃபீல்டர்…எடுத்த நொடியே பவ்ன்ட்ரி லைனுக்கு பக்கத்திலிருந்து ஸ்ட்ரெய்ட் த்ரோ….யாராலும் நம்ப கூட முடியவில்லை… நான் ஸ்ட்ரைகிங் என்ட் ஸ்டம்பில் டைரக்ட் ஹிட்….ரன் அவுட்…..எட்டாம் விக்கெட்…..ரன்ஸ் ஆஸி 98

27 வது ஓவர்… கடைசி பால்…..ரன்ஸ் ஆஸி 202/8

இப்பொழுது மழை மழை அடைமழை….அதிரடி மழை.

காத்திருக்கும் காலம் மழை ஓய்வதற்காய்….

சில மணி நேரங்கள் கடக்க மழையும் ஓய

டக்வொர்த் லூயிஸ் ப்ரொஃபெஷனல் மெத்தட் கால்குலேஷன் படி இரண்டு ஓவரில் ஆஸி 23 ரன் எடுத்தால் டை……24 ரன்ஸ் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கபடுகிறது.

அதுவரை வெற்றி கட்டாயம் இந்தியாவுக்குத்தான் என சென்று கொண்டிருந்த நிலை மாறி இப்போது டென்ஷன்…. டென்ஷன்…..இந்திய ரசிகர்கள் இதயம் எகிறி குதிக்க

ஃபர்ஸ்ட் பால்….. பௌலர் ப்ரபாத் ஜோனதன். யாக்கர்….பாலை எதிர்கொள்ள தன் பேட்டை வைத்த பேட்ஸ்மேனின் பேட் அவர் காலைத்தான் தொட்டது பாலோ பேட்டில் படாமல் ஆஃப் சைட் ஸ்டம்ப் மற்றும் மிடில் ஸ்டம்பை பறக்க வைத்தது.

அடுத்த பால்……யாக்கர்….இம்முறை  பாலை எதிர் கொள்ள வந்த பேட் முந்திக் கொண்டு காற்றில் எழும்ப எந்த தடையும் இல்லாமல் லெக் சைட் ஸ்டம்பை பிடுங்கி எறிந்தது பால்.

”இந்தியா செமிஃபைனலுக்கு இலகுவாய் நுழைந்தது” என்றது கமென்டேட்டர் வார்த்தைகள். அத்தனை இந்தியரும் அலைகடலாய் ஆர்பரிக்க, மொத்த இந்திய டீமும் முரட்டுத்தனமாய்  துள்ளி குதிக்க அமைதியாய் நின்றிருந்த ப்ரபாத்தின் தோளில் கை போட்ட படி மௌனமாய் வெளியேறினான் அரண்.

இருவர் மனநிலையும் ஒன்றே…..

ப்படி வேணும்னாலும் கேஸை ஹேண்டில் பண்ணு….ஆனா நாங்க இன்னைக்கு கிளம்புறோம்…” என கேஸ் பொறுப்பு அனைத்தையும் ப்ரவிர் தலையில் தூக்கிப் போட்ட சுகா ஹயா, லியா, மற்றும் தன் பெற்றோர், மாமனார், ப்ரபாத்தின் அம்மா அன்பரசி என அனைவரையும் அழைத்துக் கொண்டு அன்று இரவே ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டாள்.

சிட்னி ஏர்போர்ட்டில் சுகவிதாவைப் பார்க்கவும் அவள் கையிலிருந்த ஹயாவை அள்ளிய அரண் கழுத்தை தன் குட்டிக் கைகளால் கட்டி அவன் தோளில் முகம் புதைத்து, முளைத்து வரும் புதுப் பற்களால் வாய்பட்ட இடத்தை அவன் பால்குட்டி பதம் பார்க்க….ஒரு கையில் மகளை ஏந்தி மறு கையால் அவளை சுற்றி அணைத்து அந்த வலியைக் கூட ரசிப்பவன் போல கண்மூடி நின்றிருந்தான் தகப்பன்.

“ஜீவா “ தன்னவன் மனம் என்னதாய் தவித்திருக்கும் என உணர்ந்தவளாய் உருகிய சுகாவின் குரலில் அடுத்த நொடி மகளை அணைத்திருந்த கையை நீட்டி மனைவியின்  கையை இறுக பற்றினான்.….”இப்பதான் விது நிம்மதியா இருக்குது” ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டவன்…

.”நானாவது பிரவாயில்லை, ப்ரபு வாய திறக்கவே இல்லை….”

தன் நண்பனை திரும்பிப் பார்த்தாள் சுகா.

சுகாவைத் தொடர்ந்து வந்திருந்த சங்கல்யாவை பார்வையால் கூட சந்திக்காமல் உணர்வுகள் அற்ற வெற்று முகத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

மேட்ச்  முடிந்த நேரம் இவர்கள் ஃப்ளைட்டில் போர்டாகி இருந்ததால் இப்பொழுது வரை கிட்நாபிற்குப் பின் சங்கல்யா அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை….எப்பொழுது காண்போம் என ஓடி வந்தவளுக்கு இப்படி ஒரு பாரா முக வரவேற்பு.

“ஜோனத்…?” தவிப்பாய் அழைத்தாள்.

அதற்குள் பின்னால் வந்து கொண்டிருந்த அன்பரசியிடம் ஓடினான் அவன். சென்றவன் தன் தாயின் கையைப் பற்றிக் கொண்டான். அம்மாட்ட போறதெல்லாம் சரிதான் இவளைப் பார்த்து ஒரு வார்த்தை, ஒற்றைப் புன்னகை, ஏன் இவளை ஒரு பார்வை பார்த்தால் என்னவாம்?

அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு செல்லும் போதும் காரில் அவனது அம்மா அருகில் அமர்ந்து கொண்டான். இவள் ஒருத்தி அங்கு இருப்பது அவனுக்கு தெரிகிறதா இல்லையா என இவளுக்கு குழப்பம் வரும் அளவிற்கு இவளை சட்டை செய்யவே இல்லை.

அடுத்த பக்கம்