அவள் இவனையும் பார்த்து பயப்படுற மாதிரி இவன் நடந்துகொண்டால் பாவம் அவள் என்ன செய்வாள்? இவனைப் பார்த்து அவள் பயப்படுவது அவனுக்கு புரிகிறதுதானே?
அதோட இவன் வார்த்தையில் நெருங்கும் போது மலர்வதும் விலகும் போது துடிப்பதுமாய் அவள் முகமும் கண்ணும் சொல்லும் செய்தி என்ன? இவன் காதலை, கணவனாய் இவனது அருகாமையை அவள் விரும்புகிறாள் என்பதைத்தானே…..
சற்று நேரம் செல்ல, “லியா பொண்ணு “ என்றான். இதுவரை அவன் குரலில் அப்படி ஒரு மென்மையை அவள் கண்டதே இல்லை. பஞ்சாய் பட்டாய் வருடியது அது வலித்திருந்த மனதை.
“தூங்கலையாடா நீ?”
“ம்ஹூம்…”
அது பூனைக் குட்டியின் மியாவ் போல் இருப்பதாக இவளுக்கே தோன்றுகிறது. எதையாவது சொல்லி அது புது ப்ரச்சனையை கொண்டு வரவா என்ற பயம் தான் குரல் கம்ம காரணம்.
“லியாமா கொஞ்சம் இங்க பாரேன் ப்ளீஸ்….”
நோ சொன்னா அதையும் தப்பா எடுத்துப்பானோ? திரும்பும் போது அவனை இடித்துவிடக் கூடாது என்று மிக கவனமாக திரும்பி அவனைப் பார்த்து படுத்தாள்.
அவன் பார்வை அவள் கண்களை வருட,
“உன்னை தொடலாமா ?” என்றான்.
என்ன ஆச்சு இவனுக்கு?!!!!
மொத்த கண்ணையும் விரித்துவிட்டாள் போலும்.
அவசரமாக விளக்கம் சொன்னான். “நெத்திய மட்டும் தான்…. உனக்கு தூக்கம் வரும்….”
இவள் பார்வையில் என்ன கண்டானோ
அவள் நெற்றியை வருட தொடங்கினான்.….. அவளையும் மீறி கண் மூடிக் கொண்டாள்.
“உன் மேலே எனக்கு எந்த கோபமும் கிடையாது லியா பொண்ணு.” அவன் சொல்ல சட்டென விழித்துப் பார்த்தாள். வெடித்துவிடுமோ எனும் வண்ணம் இவன் கோபப்படும் போது புடைத்த அந்த கழுத்து நரம்பிருந்த பகுதிக்கு சென்றது இவள் பார்வை.
“அதப் பத்தி நாளைக்குப் பேசுவோம்….பட் இப்ப கோபம் இல்லை….இனி கோப படவும் மாட்டேன்….ஓகேவா…?”
அவன் நெற்றி வருடலில் மீண்டுமாய் கண் மூடிக் கொண்டாள்.
“முத நாள்ள வருத்தமான விஷயம் எதையும் பேச கூட வேண்டாம்னு சொல்றேன்….நீ வருத்தப் பட்டு தூங்காம இருக்க…. தூங்குமா….” தூக்கத்திற்குள் சரிய தொடங்கினாள்.
“உன் மேல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது…. இன்ஃபஅக்ட் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்….” கண் திறந்து அவன் முக பாவத்தைப் பார்க்க வேண்டும் என அவளுக்கு எங்கோ ஒரு ஆசை. ஆனால் கண் இமைகள் அவன் வருடலுக்கு அடிமையாய் துயிலின் ஆட்சியில்…
“ஐ லவ் யூ குட்டிமா”
அவள் மொத்தமாய் தூக்கத்திற்குள் முழுகிய வினாடி நெற்றியில் அவன் இதழ் ஸ்பரிசம்.
“ஐ லவ் யூ டி மை டியர் பொங்கல் ஃபேக்ட்ரி….”
தூங்கும் அவளையே பார்த்திருந்தான். இவளை விலக்கி நிறுத்துவதை விட விரும்பிச் சேர்வதுதான் சரியான அப்ரோச்சோ?
அங்கு அரணது அறையிலோ சங்கல்யாவை அனுப்பிவிட்டு சுகவிதா உள்ளே நுழையும் போது அரண் எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தான்.
“தூங்கலையா நீங்க?” சற்று கடிந்து கொள்ளும் தொனி அவள் குரலில்.
“ நீ இல்லைனா தூக்கம் வர மாட்டேங்குது விது….. அங்க லியா கூட பேசிட்டு இருக்கன்னு பட்டுது….அதான் நான் வரலை….”
நான் இல்லாம இந்த 6 மாசம் எப்படி இருந்தானாம் இவன் என்ற கேள்வி மனதில் ஓட அமர்ந்திருந்தவன் தோளில் சென்று உரிமையாய் சாய்ந்தாள். இருகைகளாலும் அவளை அணைத்தபடி படுக்கையில் சரிந்தான் அவன்.
“என்ன பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்ற மாதிரி தெரியுது…”
“ஆமா கீழ லியா எதுக்கு வந்திருந்தா தெரியுமா?”
“எதுக்கு? கம்பு கட்டைனு எதாவது எடுக்றதுக்கா? ஒருத்தன் மலையேறி இருந்தானே அவனை இறக்க?”
“போங்கப்பா…..பால்பாக்கெட்டுக்கு பால் எடுத்துட்டு போக வந்திருந்தா…..”
“ஓ”
“என்ன ஓ…அங்க அவன் சாப்டாம எப்டி சண்டித்தனம் செய்தான்? இங்க அவ கீழ வந்து கொஞ்ச நேரத்துல அவள தேடி இவன்….லியா அவனுக்கு சாப்பிட சப்பாத்தி எடுத்துட்டு கிளம்பிட்டு இருந்தா…..சீக்ரம் அனுப்பு சின்ன பொண்ணனு சொல்லிட்டு போறான்…”
அரண் முகத்திலுமே இப்போழுது சிரிப்பு வந்திருந்தது. “அவனுக்கு எங்க சண்டித்தனம் செய்றது எங்க சரண்டராகிறதுன்னு சரியா தெரிஞ்சிருக்குது…. ஹும் எனக்குதான் இன்னும் இந்த டெக்னிக் செட் ஆகலை போல…”