நனைகின்றது நதியின் கரை 15(6)

“செம கவனிப்பா இருக்கே… ” சொல்லியவன் சில நொடி கண் மூடி விட்டு ஒரு விள்ளல்  எடுத்து  அவளுக்காக நீட்டினான்.

அருகில் நின்றிருந்தவள் ஒரு எட்டு சட்டென பின் வைத்தாள் “ நான் சாப்டுட்டேன் ஜோனத்….”

“ இது மட்டும் சிக்‌ஸர்..….எப்ப நாம சேர்ந்து சாப்டாலும் ஷேர் பண்ணிக்கனும்…”  அவன் சொல்ல மறுக்காமல் வாயில் வாங்கிக் கொண்டாள்.

“ஃபர்ஸ்ட் டைம் சாப்பாடு தர்ற…..ஸ்வீட் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” சொன்னவன் அவன் கைக்கு மிக அருகில் இருந்த பால் அவன் கை பட்டு கொட்டி விடக் கூடாதே என குனிந்து அதை தள்ளி வைக்க முயன்று கொண்டிருந்தவளின் கீழ் உதடை செல்லமாய் மென்மையாய் கிள்ளி தன் வாயில் ஒற்றிக் கொண்டான்.

சற்றும் இதை எதிர் பார்த்திராதவளுக்கு ஆயிரம் வோல்ட்ஸ் ஷாக். மிரண்டு போய் விழித்தவளின் பார்வைக்கு “ஸ்வீட் எடுத்தேன் சிக்‌ஸர்….பொங்கல் என் ஃபேவரைட் ஸ்வீட்….” என்ற ஒரு பதில் கிடைத்தது.

என்ன இவன் இப்டில்லாம் பேசுறான்!!!! இவள் மனதில் தக்க திமி தக்க திமி தா ஓடிக் கொண்டிருக்க …

“இன்னைக்கு இவ்ளவு ஸ்வீட் போதும் சிக்‌ஸர்…..முழுசா நாளைக்கு…. ” பெண்மைக்குள் அடுத்த குண்டை கொளுத்திப் போட்டான் அவன் படு கேஷுவலாய்.

நீயே எனக்கு இவ்ளவு பார்த்து செய்றப்ப…..நான் உன் கூட எவ்ளவு விளையாடனும்?… மனதிற்குள் ரசித்து சிரித்தான்.

அடுத்து அவன் பேசாமல் சாப்பிட அலையடிக்கும் தேகத்துடன் இவள். பயமும் தவிப்புமாய் ஒரு வித அலை. திரள்கிறது ஒரு கூட்ட மழை மேகம் இவளுள்.…..கொஞ்சம் பழகின பிறகு இவன் இதெல்லாம் பேசுனா என்னவாம்?? சிணுங்குகிறது மனது.

அவன் சாப்பிட்டு முடிப்பதை கண்டவள் ஃபிங்கர் பவ்லில் புது தண்ணீர் வைத்தாள்.. அதில் கை  கழுவியவன்….. “இப்படியே தினமும் கவனிச்சன்னு வை நான் 2 நாள்ள 20கிலோ வெயிட் போட்டுடப் போறேன்…..உன் வீட்டுக்காரன் கிரிகெட்டர்மா….இந்த உடம்பை தூக்கிட்டு நான் விளையாடனும்…நியாபகம் இருக்கட்டும்…”

உன் வீட்டுக்காரன்….பதம் ஒருவித உரிமை கிளர்வை தருகிறது என்றால்….கண்கள் அரை நொடி அவன் ஆறேகால் அடி தேகம் மேல் ஒரு அவசர பயணம். ‘அடிச்சு வச்ச இரும்பு சிலை மாதிரி இருந்துட்டு வெயிட் போடுறதை பத்தி பேச்சப் பாரு…..’ சந்தோஷமும் பெருமிதமாய் ஒரு எண்ணம் அவளுள்….

“என்ன பதிலைக் காணும்? “ எழுந்து படுக்கையைப் பார்த்து போய்க் கொண்டிருந்தவன் இவளை திரும்பிப் பார்த்தான்.

சிவந்திருக்கும் இவள் முகத்தைப் பார்த்தால் இன்னுமாய் சீண்ட மாட்டானாமா? வெட்க பட வெட்கமே தடை போட அவசரமாக முக பாவத்தை இறுக்கி….சைட் அடித்ததை சடுதியில் மறைத்து “அது….அம்மா உங்களை அவங்க கவனிச்சுகிட்ட மாதிரி கவனிச்சுக்க சொன்னாங்க அதான்” என்றாள்.

கடைசியில் இதெல்லாம் அம்மா சொன்னதற்காகதானாமா….? தவித்துப் போனான்….அளவுக்கு மீறி விளையாடிட்டேனோ? அவளை ஹர்ட் செய்துட்டனா?

இவளுக்கு என்ன சொல்லவென தெரியவில்லை. தேவையில்லாமல் ஒரு வேதனையான உணர்வை தூண்டிவிட்டுவிட்டாளோ? அம்மா சர்ஜரிய ஞாபகபடுத்திட்டனோ? சே நல்லா போய்ட்டு இருந்த நேரத்தை….

“சாரி ஜோனத்….அதான் இப்ப எல்லாம்….” இவள் அவனை சமாதானப் படுத்த தொடங்க

“விட்று லியாமா முதல் நாளே மனசுக்கு பிடிக்காத விஷயங்களைப் பேச வேண்டாம்னு தான் சில விஷயத்தை நான் பேசலை…..”

‘ ஓ அவன் கோப பட்ட விஷயத்தை குறிப்பிடுகிறான் போலும்…’

“இல்லப்பா நீங்க என் மேல கோப பட்டதுல எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை….” அவசர அவசரமாக விளக்க முயன்றாள்.

அவனுக்கோ டாபிக் எங்கு போகுமோ என்று இருக்கிறது. இன்னைக்கு அவளை அழ விட கூடாது. “லியாமா முதல் நாள் இந்த பேச்செல்லாம் வேண்டாமே ப்ளீஸ்….. டைம் செட்டாகிறப்ப  நானே உன்ட்ட பேசுறேன்….இப்ப தூங்கலாம்.”

ஒரு கணம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. அவன் வா என்றால் வரவேண்டும் போ என்றால் இவள் போய்விட வேண்டும் எனபதுதான் இவள் நிலையா இவன் வரையில்? பேசக் கூட அப்பாய்ன்ட்மென்ட் ஃபிக்‌ஸ் பண்றான்…… என்றிருந்தது.

அதே நேரம் அவன் அம்மாவுக்காகதான இப்ப இந்த கல்யாணம்….நியாயப்படி இவள் மேல எத்தனை கோபம் இருக்கும் அவனுக்கு இப்போது…..அந்த நிலையிலே இதுவே ரொம்ப அதிகம்….புரிதல் வரும் போது பிரிவு சுவர் உடைந்து விடும்னு நம்பி தானே கல்யாணம் செய்தேன்….

இப்ப இருந்த அரை மணி நேர மாய சொர்கத்தில் அதை மறந்துட்டு…. இதுக்குள்ள மனசு நொந்தால் எப்படியாம்? உன்ட்ட வந்து பேசுறேன்னு சொல்றான் தானே… பேசுறப்ப சரியாகிடும்….. வெயிட் பண்ணலாம்…மனதிற்குள் இவள் ஒரு தெளிவிற்கு வர

அவனோ “லியாமா ப்ளீஸ் நம்ம ரெண்டு பேருக்கும் தூக்கம் தேவைமா…எதையும் போட்டு குழம்பாம தூங்கு….” என்றான் ஒருவிதமாக.

சம்மதமாக தலையாட்டிவிட்டு போய் படுக்கையின் ஓரத்தை ஆக்ரமித்தாள். அதன் குஷன் அவளை அள்ளி எறிந்துவிடும் போல் அப்படி துள்ளியது. இதுல எந்த மூலையில் படுத்தாலும் உருட்டி கூட படுத்துருக்கவங்க மேலயே தள்ளும் போலயே!!!

மற்ற ப்ரச்சனைகளையும் தாண்டி அந்த மெத்தை டென்ஷனிலேயே அவளுக்கு தூக்கம் வரவில்லை. இப்பொழுது அவன் இவள் முதுகு புறம் படுப்பதை உணர முடிந்தது. இவள் பக்க மெத்தையை இறுக பிடித்தபடி அசையாமல் இவள்.

பக்கத்தில் படுத்திருந்தவளைப் பார்த்திருந்தான் அவன். இவனை மட்டுமே உறவாய் உலகில் கொண்டவள்.

அடுத்த பக்கம்