நனைகின்றது நதியின் கரை 14(6)

“உனக்கு ஓகே தான லியாமா?” இதைத்தான் அவர் கேட்டிறுக்க வேண்டும் என்பது இவளது யூகம். அவர் கண்களில் கெஞ்சல் பாவம். நீயாவது புரிஞ்சுக்கோ என்பதாய்…

ஒரு நொடி அவன் தரிசனம், இரு நொடி புன்னகை, இல்லையென்றாகும் இவளை அவனது மூன்று நொடி பேச்சு… இதுக்கே அவள் தகுதியில்லை என்று தவித்திருக்க முழுவதுமாக அவனை இவளிடம் தூக்கிக் கொடுக்கிறேன் என்றால்…….

இப்பொழுது அன்பரசி முகம் இவள் கண்ணீர் வழியாய் பார்க்கையில் ஏனோ கடைசி நிமிட இவள் பாட்டியின் முகமாகவே தெரிகிறது…..உயிரோடு இருக்ற காலமெல்லாம் ஜோனத் கூட இருக்க சொல்லி இவளிடம் கெஞ்சுகிறது அது…

அவள் முடிவு செய்யும் முன்பாக ஆடி இருந்தது அவள் தலை ஆம் என்று.

“நீ சொல்லுமா அவன்ட்ட…..” இதை சொல்ல அவர் போராட இவள் எங்கிருந்து நிமிர்ந்து பார்க்கவாம் அவனை…..

சட்டென இவள் கையை பற்றி இழுத்தபடி வெளியே வந்தது ஜோனத்தான்…… அவன் பற்றிய இடம் தீயாய் காந்துகிறது. எலும்போ நொறுங்கி விடும் போலும்…. வலி மட்டும் மனதின் வலியை விட கம்மிதான்….

“ஜோனத் அம்மா பாவம் ஜோனத்….தயவு செய்து அவங்கள நிம்மதியா…”.

இவளை முரட்டடியாய் இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாத்தினான்…

“என்ன நினச்சுட்டு இருக்க நீ….?  கடவுள்க்கு மட்டுமில்ல என் அம்மாவுக்கு கூட பொய்யா போலியா கல்யாணம் செய்றது பிடிக்காது……இன்னைக்கு எங்கம்மாவுக்காக கல்யாணம் செய்துட்டு நாளைக்கு என் லைஃப் நாசமா போறப்ப எங்கம்மாவுக்கு இப்ப இருக்றதை விட அதிகமா வலிக்குமே….அவங்க போறப்ப நிம்மதியா போகனும்றதை விட போன பிறகும் நிம்மதியா இருக்கனும்றது எனக்கு முக்கியம்…..ஆனா உனக்கு இதெல்லாம் எங்க புரியப் போகுது….சரியான ஃப்ராடு……கரெக்டா சொன்னா லூசு….கழுத்துல கத்திய வச்சா நம்ம எங்கேஜ்மென்ட் நடந்துச்சு? நீயும் தான ரிங் போட்ட….? அப்றம் அரணை எதுக்கு அடிச்ச? இப்போ கல்யாணத்துக்கு தலைய ஆட்டிட்டு நாளைக்கு என் அம்மாவையே அடிப்பியே…..ஏன்னா எனக்கு எங்கம்மாவ ரொம்ப பிடிக்கும்னு உனக்கு தெரிஞ்கிட்டுப் பாரு……இல்லனா தூக்கத்தில என் தலைல கல்ல தூக்கிப் போட்டாலும் போட்டுடுவியே….”

அவன் கொதித்த விதத்தில்…. அவள் கண்ணில் பட்ட அவன் கழுத்து நரம்பு புடைத்த வகையில்…..அவன் நெஞ்சு ஏறி இறங்கிய வேகத்தில்….அவன் காது மூக்கின் வழியாய் ரத்தம் வந்திடுமோ என மிரண்டு கொண்டிருந்தாள் சங்கல்யா…..

“ப்ரபு” அதட்டலாய் அரண் குரல் காதில் விழவும் தான் மூச்சு வந்தது அவளுக்கு.

“டேய் வாடா நீ….” நண்பனை இழுத்துக் கொண்டு இவளை ஆறுதலாய் ஒரு பார்வை பார்த்த வண்ணம் போனான் அரண்.

அரண் எப்படியும் ஜோனத்தை சமாளிப்பான் என ஒரு சின்ன ஆறுதலுடன் தொய்கிறது கால். இருந்த உணர்ச்சி போராட்டம்….பகலெல்லாம் சாப்பிடாத அவள் உடல்….தட்டு தடுமாறி அருகிலிருந்த சேரில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

எதையும் கோர்வையாக நினைக்க கூட முடியவில்லை…..

கண் மூடிக் கொண்டாள். ‘கடவுளே நான் இப்ப என்ன செய்யனும்? அன்பரசி அம்மா சொல்றத செய்யவா….இல்லை ஜோனத் சொல்றத கேட்கவா?’ எவ்வளவு நேரம் சென்றதோ….. மீண்டும் கண் விழிக்கையில் சற்று தொலைவில் பார்வையில் பட்டான் அரண்.

அவன் கையில் ஹயா. அவளது பாதம் நிறத்துக்கும், அவளணிந்திருந்த பிஸ்தா க்ரீன் & வைட் நிற ஃப்ராக்கிற்கும், சற்றே சுருண்ட அந்த அடர் முடிக்கும்…. அரணின் தோளில் ஒரு கையைப் போட்டுக் கொண்டு….ஏதோ அவனுக்கே சமானாமாய்…..சற்று தொலைவில் இருந்த அனவரதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது அனவரதன் மெல்ல அருகினில் போனார். அரணை விட அவர் சற்று உயரம் கம்மி. ஆக நிமிர்ந்து மருமகனை ஒரு கால் நொடி பார்வை, பின் தன் பார்வையை பேத்தியிடம் வைத்துக் கொண்டார்.

“ஹயாமா தாத்தாவ தெரியுதா…?” குழந்தை சட்டென முகம் திருப்பி அரண் கழுத்தை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு தகப்பன் தோளில் முகம் புதைத்தாள்.

அவ்வளவுதான் அனவரதன் முகம் வாடிப் போனது.

“அவ உங்கள பார்த்ததுல ரொம்ப எக்‌ஸைட் ஆகிட்டா அங்கிள்…..அப்பதான் இப்படி செய்வா…” மாமனரிடம் சொல்லியவன்

“ஹேய் பால்குட்டி சந்தோஷமான கடிக்காதன்னு சொல்லிருக்கேன்ல” மகள் முகத்தை தன் தோளிலிருந்து நிமிர்த்த முயன்றான். அவன் முகத்தில் தான் எத்தனை சுக ப்ராவகம். பெருமிதம்.

பல்லில்லா வாயால் தகப்பனை கடிக்க முயன்று கொண்டிருந்த குழந்தை தன் கால் முட்டுகளை கூட்டி அரண் மார்பில் இரண்டு இடி துள்ளலாய்…..பின் சட்டென அனவரதனைப் பார்த்து முழு நீள பொக்கை வாய் சிரிப்புடன் இரண்டு கைகளை தூக்கிப் போட்டுக் கொண்டு ஒரு தாவல்….

கண்ணில் நீர் கட்டி விட்டது அனவரதனுக்கு…… அந்த நொடி அவருக்கும் அரண் குடும்பத்திற்கும் இடையில் இருந்த அத்தனை கசப்பு சுவர்களும் உடைந்து விழுந்ததாகத் தான் தோன்றியது சங்கல்யாவுக்கு.

எத்தனைதான் தவறான புரிதல் இருந்தாலும் அடிப்படையில் நம்மிடம் உண்மை இருந்தால் பிரிவுச் சுவர் ஒரு நாள் உடைந்து விழுந்துவிடும் தான் போலும். இப்படித்தான் தோன்றியது அவளுக்கு.

அதுவே சற்று முன் கடவுளிடம் கேட்ட கேள்விக்கும் விடையாயும் தோன்றியது உள்ளுணர்வில்.

ஜோனத் அரணிடம் இவள் ஒரு ரிப்போர்ட்டர், அனவரதன் அனுப்பி வந்திருக்கிறாள் என்றவரை உண்மையை சொல்லி இருக்கிறான் என்பது தெளிவு. பின் இந்த பியான்சி கதைக்கு ஆவசியம் என்ன? தன் அம்மாவிடம் வேறு அதைத்தான் சொல்லி   இருக்கிறான். ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக அரண் இவளை ஜோனத்தின் ஃபியான்சி எனதான் முழு மனதாக நம்புகிறான்….. அப்படியானால் உண்மையில் இவள் ஜோனத் அளவில் என்னதாய் இருந்திருக்கிறாள்???? இது நேற்று அரண் தன் வாழ்க்கையை பத்தி இவளிடம் பகிர்ந்து முடிக்கும் போதே  புரிந்துவிட்டது….அப்பொழுதுதான் அன்பரசி அம்மா பற்றி ஃபோன் கால்….அதற்கு மேல் அந்த ஃபியான்சி கதையை ஆராய அவள் சூழல் இடம் தரவில்லை.

அடுத்த பக்கம்