யாரோ “சங்கல்யா உள்ள வந்து உட்காருமா…. விழிச்சுக்கோ…. .பார்க்கிங்ல தனியா இருக்றது சேஃப் இல்ல பாரு…. “என்னவெல்லாமோ சொல்ல அரை குறையாய் ஏதோ விளங்க அந்த நபரின் இழுப்புக்கு முக்கால் தூக்கத்தில் உடன் நடந்தவள்,
அந்த பெண் சொல்லிய “இங்க உட்காருமா” வில் உட்காரும் போது தான் தன்னுடன் பேசுவது ஒரு பெண் அது புஷ்பம் என புரியுமளவுக்கு அரை தூக்கத்திற்கு வந்து சேர்ந்தாள்.
இரு கைகளாலும் முகத்தை துடைத்துப் பார்த்தாலும் தூக்கம் போவதாய் இல்லை. ஆனால்
“ஓ மை காட்!!! அத்தனை சொல்லியும் இங்க வந்து நிக்ற நீ….” காதில் சிறு குரலில் விழுந்த அந்த அதீத கோப சீறலில், அடையாளம் கூட விட்டு வைக்காமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டது தூக்கம்.
ஜோனத்!!!! முதல் கணம் எதுவும் நினைவு வரும் முன் அது அவன் குரல் என புரிந்த நொடி ஏனோ அவனை அள்ளிக் கட்டிக் கொள்ள வேண்டும் என தோன்றியது ஒரு உணர்வு.
இனி அவனை பார்க்கவோ பேசவோ பழகவோ முடியாது என்றிருந்த நிலைக்கு, இந்த அவன் நேரில் அருகில் நிற்கிறான் என்ற புரிதலில் அடிமன தழைகள் அறுந்தோட……சட்டென உறைக்கிறது பெண்ணிற்கு…. இவளுக்கு கூட காதல் வந்திருக்கிறது அதுவும் ஜோனத் மேல்……அவன் உயரம் என்ன இவள் நிலை என்ன???????
அதே நொடி அவள் இருக்கும் மருத்துவமனையும், மற்ற சூழலும் அவன் சொன்ன கட்டளையும் உறைக்க, கொடும் பயமாக மாறிப் போனது பெண்ணவள் உணர்வு உலகம்.
“சாரி ஜோனத்….நான் …இங்க….எனக்கே….சாரி…..இப்பவே போய்டுறேன்….” அவசர அவசரமாக இவள் எழ தூக்கத்திலிருந்து சட்டென எழுந்ததால் சற்று தடுமாறி அருகில் நின்றவனை நோக்கி சரிந்தவளை அவன் பிடித்து நிறுத்திய போது
அங்கு வந்து நின்றார் அனவரதன். “ப்ரபு…அம்மா கூப்டுறாங்க…. “ இவளை ஒரு தீ பார்வை பார்த்தான் ப்ரபாத். அவன் கை இவள் கையை விட்டிறுந்தது இப்போது. இவள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“சங்கல்யாவையும் தான் கூப்டுறாங்க….நீ வாம்மா” இவளது கையை பிடித்தது புஷ்பம்.
“நீங்க போங்க இதோ வர்றோம் ஆன்டி….”
அவர் விலகவும் இவளிடமாக கொதித்தான்…. “ எந்த காரணத்த கொண்டும் உள்ள வந்து எதுக்காவது சரின்னு தலைய ஆட்டி வை…அப்றம் இருக்கு…”
“ உங்களுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் ஜோனத்….”
பதிலின்றி நடந்தான்.
அவன் பின் இவள். அப்படி என்ன சொல்லிடுவாங்கன்னு இவன் இப்படி கொதிக்கிறான்?
உள்ளே போனதும் எந்த சஸ்பென்ஸும் வைக்காமல் அதை சொல்லியே விட்டார் அன்பரசி.
“ஓபன் ஹார்ட் சர்ஜரி போறதுக்கு முன்னால எனக்கு இவங்க கல்யாணத்தைப் பார்க்கனும்….”
அவர் இதை எளிதாய் சொல்லி இருந்தால் “தேவையில்லாம குழப்பிக்காதீங்க ஆன்டி…” அப்டின்னு எதாவது சொல்லி வைத்திருப்பாள் இவள்.
ஆனால் அத்தனை குழாய்களுக்கு நடுவில், ஏதோ பீப் பீப் சவ்ண்டுகளுக்கு இடையில் ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றிவிட்டு…. ஒவ்வொரு வார்த்தை சொல்லவும் இளைத்து களைத்து…..தவியாய் தவித்து
அவர் என்ன சொல்ல வருகிறார் என முழுதாய் புரியும் முன் தலையை சம்மதமாய் ஆட்ட தயாராய் இருந்தாள் இவள். மௌன அழுகை அதற்கும் முன்னதாக ஆரம்பமாயிருந்தது. இவள் பாட்டியும் மரண தருவாயில் அப்படித்தான் இவளுக்காக தவித்தார்…
அன்பரசி சொன்ன விஷயம் புரிந்த நொடி மறுத்திருந்தான் மகன்.
“அம்மா …இப்ப எதுக்குமா இந்த டைம்ல…உங்களுக்கு ஒன்னும் ஆகாது…உங்க ஹெல்த் நல்லா ஆன பிறகு கிராண்டா வைக்கலாம்…..”
“இ….இல்ல ……. இ…இப்ப…..” இதற்குள் அங்கு பி பி ஏற தொடங்க……
சங்கல்யாவுக்கு கிடு கிடு வென வருகிறது. இந்த ஆர்க்யூமென்டை இவளால் பார்க்க முடியாது.
“அம்மா ரிலாக்ஸ்….இதென்ன குழந்தை மாதிரி பிடிவாதம்…..? முதல்ல தூங்கி ரெஸ்ட் எடுங்க நீங்க…”
“எ….என்….லா…லாஸ்ட் வி…விஷ்டா…..” அவனிடம் அவர் சொல்ல இவள் நெஞ்சில் உயிர் வலி.
தன் தாயின் நெற்றியில் கை வைத்து அவர் சற்று உயர்த்தி நீட்டிய கையை பற்றிய அவன் கண்களில் நீர்…. அப்படியே கை பற்றியபடியே அவன் முழங்காலிட “அம்மா” என்றான்.
அதற்கு மேல் பார்த்திருக்க இவளால் முடியாது. இவள் விம்மலுடன் வெளியேறும் வண்ணம் திரும்பியே விட்டாள்…. கூடவே இவன் இன்னொரு பன்னீர் செல்வமாக வாய்ப்பே இல்லை என்ற உணர்வு….
இதற்குள் கட்டிலருகில் இருந்த இவளது கையை பற்றினார் அன்பரசி…..