நனைகின்றது நதியின் கரை 11

ன்று இரவு சுகவி செய்த டென்ஷனுக்கும், அவளை அரை மயக்கமாய் ப்ரபாத்தோடு அனுப்பி வைத்ததற்கும் பெரும் விளைவு இருந்தது அரணது மனதில். பாவம் அவனும் தான் என்ன செய்வான்?

எத்தனை தான் இவள் கை சேராத கனவு என அறிவுக்கு தெரிந்தாலும் அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருக்கிறது என தெரியும் போது அதுவும் இவ்வளவாய் அவள் தவிக்கிறாள் என உணரும் போது, தோல்வி ஏற்றறியாத, எதிலும் கடைசி வரை வெற்றிக்காய் போராடிப் பார்த்துவிடும் அவனது மனமும் குணமும் எளிதாய் எப்படி அடங்குமாம்?

இந்த நிலையில் அவளது திருமண செய்தி. அதைக் காணும் வரை கூட ஏதோ ஒரு மூலையில் அவள் எப்படியும் தன்னை ஒரு நாளும் ஒத்துக்கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ மாட்டாள், அந்த நிதர்சனத்தை நான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று நினைக்க முடிந்தவனுக்கு இப்பொழுதோ அவள் நிரந்தரமாய் அவனுக்கு இல்லை என்ற உண்மை உறைக்க அதை அவனால் தாங்க முடியவில்லை.

அத்தனை வலி, அத்தனை வெறுமை, அப்படி ஒரு லோன்லினெஸ். உண்மைதான் இதுவரை அவள் அவனுடன் இருந்ததே கிடையாது தான்…ஆனாலும் இது என்ன தாங்க முடியாத தனிமையும் வெறுமையும்?

மனம் கணக்க உலகின் மொத்த பாரமும் அவன் மேல் என்பதாக ஒரு உணர்வு. சுருண்டு போனான்.

ஜீவா அவளுக்கு இல்லை என அறியும் போது இப்படித்தானே சுகவிக்கும் தோன்றும்? இப்படித்தனே அவளும் உணர்வாள்!!!

முந்தைய அவளது அத்தனை தவிப்புகளும் அதை அவள் வெளிப்படுத்திய விதங்களும் இப்பொழுது இன்னும் ஆழமாய் இவனுக்குள் ப்ரளயம்.  இந்த திருமண செய்தியை அவள் எப்படியாய் எதிர் கொள்ளப் போகிறாளாம்….?

அடுத்த நொடி கிளம்பிவிட்டான் அரண் ப்ரபாத்தின் எண்ணை அழைத்தபடி….

“ப்ரபு…உன் தங்கச்சிய நான் இப்பவே பார்த்தாகனும்……அதுக்கு ஏதாவது பண்ணு…… அவள எங்க கூட்டுட்டு வர்றன்னு சொல்லு…..நான் அங்க வந்துட்டு இருக்கேன்…”

அப்பொழுதுதான் ப்ரபாத்தை அழைத்து இந்த வெட்டிங் விபரீதத்தையும், எனக்கு இப்பவே ஜீவாவ பார்த்தாகனும் அதுக்கு நீதான் பொறுப்பு என்ற மொத்த வெயிட்டையும் இவன் தலையில் தூக்கிப் போட்டிருந்தாள் அவனது அருமை அரைடிக்கெட்.

“நீ நேர நம்ம வீட்டுக்கு வந்துடு, அவள அங்க கூட்டிட்டு வர்றேன்…. வெளிய வச்சு அவ எதாவது சீன் க்ரியேட் பண்ணிட்டானா நல்லா இருக்காது….”

ஆக அரண் ப்ரபாத்தின் வீட்டை நோக்கிப் போனான். ப்ரபாத் சுகவிதா வீட்டிற்கு.

ஆனால் அனவரதனோ படு அலர்ட்டாக இருந்தார் இம்முறை. மகள் ஏற்கனவே இந்த கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் காட்டவில்லை. இதில் இந்த அரண் வேறு ஏதாவது கோல்மால் செய்தால்????

ப்ரபாத் நல்லவன்தான். சுகிக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்யமாட்டான் தான்…. ஆனால் அரண் எப்படி இவனை ஏமாற்றுவான் என்று சொல்வதற்கில்லை……இத்தனை வருஷம் சுகவிதாவுக்கு எதிராக அரண் நடந்து கொண்டாலும் ??!!! இன்னும் இந்த ப்ரபாத் அரணையும் விடவில்லை தானே!!!

அதோடு சுகிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என தெரிய வரும் போது ப்ரபாத் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கில்லை……இந்த ஜெனரேஷன் பசங்க…. கல்யாண விஷயத்துல பொண்ணுங்க முடிவும் முக்கியம்னு தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காங்க…… எல்லாம் செய்ற அம்மா அப்பாவுக்கு தெரியாதோ எதை எப்ப செய்யனும்னு…..? எங்களுக்குல்லாம் எங்க அம்மா அப்பதான எல்லாம் செய்தாங்க…..நாங்க வாழலை?

ஆக அனவரதன் அரைடிக்கெட்டும் பால் பாக்கட்டும் பேசும் போது பக்கத்திலேயே அமர்ந்திருந்து உர் என பார்த்துக் கொண்டிருந்ததோடு, அவளை அவன் வெளியே அழைத்துப் போக கேட்டப் போது,

“கல்யாணம் ஃபிக்‌ஸ் ஆன பிறகெல்லாம் நம்ம பக்கம் பொண்ண வெளிய அனுப்புறது இல்லப்பா” என டீசண்டாக தடை உத்தரவும் பிறப்பித்தார்.

ப்ரபாத்தை விடவும் ஆடிப் போனது சுகவிதான்.

இதுவரை எந்த விஷயத்திலும் அப்பாவை மீறி அவளுக்குப் பழக்கம் இல்லை. அவரும் அப்படி ஒரு தேவையை இவள் சந்திக்கும் படியாய் நடந்து கொண்டதும் இல்லை.  அம்மா அளவுக்கு இவளுக்கு சுதந்திரம் கொடுக்கும் நபர் அப்பா இல்லைதான்….. ஆனால் அதற்காக இவளை கசக்கிப் பிழிந்ததெல்லாம் இல்லவே இல்லை.

இவளது இரண்டு சொட்டு கண்ணீர் தாங்க மாட்டார் அவர்.

ப்ரபாத் வரும் முன் அவள் இந்த பெலிக்‌ஸ் ப்ரபோசலைப் பத்தி கெஞ்சிப் பார்த்திருந்தாள் அப்பாவிடம். “முன்ன பின்ன தெரியாதவங்க…எப்படி ஒத்து போகும்னு எப்டிபா தெரியும்…?” என

“கல்யாணம்னா எல்லா பொண்ணுங்களுக்கும் வர்ற பயம்தான்மா இது….மேரேஜுக்கு பிறகு பழகிடும்…. அதோட போற இடத்துல எப்டி வச்சுக்க போறாங்களோன்ற பயத்துல தான் பிறந்த வீட்ல பொண்ணுங்கள கொஞ்சி கொஞ்சி வச்சுக்கிறதே…..இங்க இருக்ற வரையாவது நல்லா இருக்கட்டுமேன்னு….அதனால அங்க போய் அப்பா வீடு மாதிரியே இருக்கனும்னு நினைக்காம அவங்க முன்ன பின்ன இருந்தாலும் நீ தான் அட்ஜஸ்ட் செய்துக்கனும்” என்று பதில் வந்திருந்தது அதற்கு.

ஆக அவங்க மகள நல்லாதான் நடத்துவாங்கன்னு உறுதி இல்லாத ஒரு உறவுக்கு இவளுக்கு விருப்பம் இல்லனு தெரிஞ்சும் அப்பா கட்டாயப்படுத்துறாங்கன்னா….. அப்பா ஜீவா விஷயத்தில் இறங்கி வரமாட்டார் போலும்தான் என  தவித்துப் போய்தான் இருந்தாள் சுகவி. ஆனால் இப்படி தடை போடுவார் என்றெல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிகிறது. அப்பா இவள் நினைத்ததை விட இந்த கல்யாண விஷயத்தில் ஹார்ட் ராக்காக இருந்து கஷ்ட படுத்தப் போகிறார்.  கஷ்டபட போகிறார்.

அடுத்த பக்கம்