நனைகின்றது நதியின் கரை 1

ட்டு வேஷ்டி சட்டையில் வேகமாக உள்ளே நுழைகிறான் அரண். அரண் ஆதித்யா. அவனை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகத்தின் அதிர்ச்சியில் தெரிகிறது.

ஆனால் அவன் கண்களோ அங்கே நின்ற அவள் மேல் தான். சுகவி….. பழையபடி உடலில் ஒரு சதை பற்றும் இல்லாமல் மெலிந்திருக்கிறாள்.

ஆனால் முன்பு போல் இருக்கும் அந்த வெட்டி வைத்த வெண்ணெய் வழவழப்பு இல்லை. காய்ந்த சருகு போல் அவள்…மனம் உருகுகிறது…. வீட்டிலிருக்கும் போது புடவை கட்டி இருக்கிறாள்….என்னவெல்லாம் ஆகிவிட்டது இவளுக்கு…?

ஆனால் இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல……

அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அனவரதன், சுகவியின் தந்தை இவனைப் பார்த்ததும் எதிர் பாராத ஏகபட்ட அதிர்ச்சியில் துள்ளி எழுகிறார்.

அவர் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு பின்னிருந்த ஷோகேஸில் எதையோ குடைந்து கொண்டிருந்த சுகவி தந்தையின் அசைவில் திரும்பிப் பார்த்தவள் இவனைப் பார்த்ததும் ஒரு வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள் முகத்தில் உணர்ச்சியே இன்றி.

இவனைக் கூட அடையாளம் தெரியாமல் அவள் பார்க்கும் அந்த பார்வை….உயிர் வரை வலிக்கிறது. எல்லாம் இவனால் தானே…..என்ன செய்துவிட்டான் இவன்…..?

ஆனாலும் இவனைக் கண்டதும் கத்தி ஆர்பாட்டம் செய்யாமல் இருக்கிறாளே அதுவே இப்பொழுதுக்கு பெரிய ஆறுதலாக படுகிறது.

அவளை நோக்கி தாவி முன்னேறியவன் கண்ணில் பட்டது, அங்கிருந்த ப்ராமில் தூங்கிய குழந்தை.

ஜீவனின் அடி நுனி முதல் அத்தனையும் தித்திக்கிறது அவனுள். என் குழந்தை….
அவ்வளவுதான் இதற்கு மேல் பொறுக்க முடியாது…. ஒருகையில் மழலையை மலராய் வாரி அணைத்தான் மார்போடு…. தன் மகளின் முதல் ஸ்பரிசம்…..தெய்வசுகம்….

மனதின் ஒரு மூலையில் ஒரு சிறு சந்தேகம்…வீட்டுக்கு வேற யாரும் கெஸ்ட் வந்திருந்து இது அவங்க குழந்தையா இருந்திர கூடாதே…. இருக்காது வேற யாரும் வந்ததா நியூஸ் இல்லையே

மறுகையால் சுகவியை தன்னோடு இழுத்தணைத்தவன் நடப்பது என்னவென்று உணராமல் அதிர்ந்து நின்ற அனவரதனை சடுதியில் கடந்து போர்டிகாவை நோக்கி பாய்ந்தான்.

“ஏய் விடுறா அவங்களை….” அலறினார் அனவரதன். உள்ளறையில் இருந்து ஓடி வருகிறார் புஷ்பம்….சுகவியின் தாய் “ சுகிமா….”

இதற்குள் இவனை நோக்கி பிஸ்டலால் குறி பார்த்தபடி அனவரதன். “என் மகள காப்பாத்த நான் கொலை கூட செய்வேன்….அவங்களை விடுடா…”

“அங்கிள்…” இவன் ஆரம்பிக்கும் முன் ஓடி வந்து தடுத்தது புஷ்பம்.”அவனால நீங்க கொலைகாரனும் ஆகனுமா…? அந்த ப்ளான்லதான் அவன் வந்தே இருப்பானா இருக்கும்…..நீங்க ஜெயிலுக்கு போய்ட்டா நம்ம சுகி நிலமை என்ன?” பதறினார்.

மனம் வலித்தது அரணுக்கு….இவன் செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு….என்றாவது இவர்கள் இவனை ஏற்பார்களா?

ஆனாலும் இப்பொழுது இங்கு நின்று வருத்தப்பட்டு என்ன ப்ரயோஜனம்….நிலமை இன்னும் விபரீதமாகும் முன் கிளம்ப வேண்டும்….

சுகவி மற்றும் குழந்தையுடன் இஞ்சினை ஆஃப் செய்யாமல் விட்டு சென்றிருந்த ஹம்மரில் ஏறியவன் பறந்தான்.

பட்டு வேஷ்டி சட்டை வெள்ளை தாடி, தலை முடி என்று ஒரு முதியவர் வேஷத்தில் வந்ததால் அடையாளம் தெரியாமல் இவனுக்கு கேட்டை திறந்துவிட்டிருந்த செக்யூரிட்டி இப்பொழுது கேட்ட அனவரதனின் கர்ஜனையின் நிமித்தம் இவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்ததால்,

அவன் திறந்தபடி விட்டிருந்த கேட்டின் வழியாக வெகு எளிதாக வெளியேறியது அரணின் ஹம்மர்.

வீட்டை விட்டு வெளியேறியதும், யாரும் துரத்தவில்லை என்பதும் உறுதியானதும் சற்று இலகுவானான் அரண்.

ரியர் வியூவில் சுகவியைப் பார்த்தான். அதே வெறுமையான பார்வை. இவளை எப்படி சரி செய்ய போகிறேன்…? உயிர் சோர்ந்தது. இப்படி செய்துட்டனே….அவசர பட்டுடனே….

அருகினில் இருந்த தன் குழந்தையின் மீது விழுகிறது பார்வை. ஹி என பொக்கை வாய் காட்டி சிரித்தது அது. வேர் வரை பலம் வந்தது அவனுக்கு.

“சாரிமா…வெரி சாரி சுகவிமா…” ரியர் வியூ வழியாக அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

சுகவி…..சுகவிதா…சுகவிதா அனவரதன் வெட்ஸ் ஃபெலிஸ் ஃப்ராங்க்ளின்….

அரணின் சுகவி என்ற அழைப்பு பின் இருக்கையில் இருந்த அவள்  மனதிற்குள் எதை எதையோ தூண்ட  சிவப்பு இதய வடிவ ரோஜாக்களின் அணிவகுப்பில் வெண் ரோஜாக்களால் எழுத பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை மன கண்ணில் தெரிகிறது….

முன்பு அந்த திருமண வரவேற்பு பலகை  இவள் வீட்டு வாசலில் இருக்கிறது….இவள் காரில் வெண்ணுடை தேவதையாக அதை கடந்து கேட்டை தாண்டி….திருமணப் பெண்ணாய் பயணம் வருகிறாள்….சர்ச்சுக்கு போகிறாள் போலும்…ஓ இவளுக்கு திருமணம்….

காரில் மணப்பெண் அலங்காரத்தில் இவள் ……..படபடப்பாக வருகிறது. ஏதோ நடக்கபோவதாக ஒரு பயம்….அவன் என்ன செய்வான்???

அடுத்த பக்கம்