மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு 4 (3)

“டேய் அம்மு கிட்ட மறுத்து எதுவும் சொல்லிடாதே.அவளை குமரியாய்‌ பார்க்காத.குழந்தையாய் பாரு.இப்போ நீ ஒரு குழந்தைக்கு ஊட்ட போற அதை மட்டும் உன் மனசுல வச்சுக்கோ”என்று வேதவ் அவன் காதில் சொல்ல அவனை முறைத்தாலும் அவன் சொன்னது போல் தான் செய்தான் அவன்.

தன் முன் இருந்த குமரிப்பெண்ணை குழந்தை பெண்ணாக உருவகம் செய்யத் தொடங்கி விட்ட அவன்‌ மனது மூளைக்கு அந்த செய்தியை கடந்த அதை ஏற்றுக் கொண்ட மூளையும் உணவூட்ட கரங்களுக்கு கட்டளை பிறப்பிக்க அதை பணிந்து ஏற்று உணவூட்ட நீண்டது அவன் கரங்கள்.

ஆர்வமாய் ஆசையாய் அவன் கரத்தினின்று உணவை வாங்கி உண்டாள் அம்மு.

ரசித்து ருசித்து அதை அவள் உண்ண இப்பொழுது ஒரு தாயின் வாஞ்சையுடன் அவளைப் பார்க்க தொடங்கி இருந்தான் அப்புதியவன் மனதால் அவளை குழந்தையாய் வரித்ததால்!

“போதும் பிரபோ.வயிற்றுடன் சேர்ந்து மனமும் நிரம்பி விட்டது.வெகுநாளைக்குப் பிறகான திருப்தியான ஆகாரம் என் பிரபோவின் கரங்களால்”என்றவள் அவன்  கை கழுவ ஏதுவாய் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை அவன்பால் நகர்த்த அதில் கை கழுவினான் அப்புதியவன்.

“அம்மு மாத்திரை சாப்பிடு”என்று ரஞ்சனி அவள் கையில் திணிக்க

“இன்னும் ஏன் இந்த மருந்துகள்.அதுதான் என் பிரபோ வந்துவிட்டார் அல்லவா.இனி என் பிணி எல்லாம் பறந்து விடும்” என்று மருந்துண்ண மறுத்தாள் மங்கை.

நீ சொல் என்பது போல் வேதவ் பார்க்க இத்தனை மணிநேரத்தில் அவன் பார்வையின் பொருள் உணர்ந்து செயல்பட்டவன் இப்பொழுதும் அவ்வாறே செய்து அம்முவை மருந்துண்ண செய்தான்.

அவன் கைப்பிடித்தே அங்கும் இங்கும் நகராமல் சில நாழிகைகள் சுற்றி திரிந்தவள் மருந்தின்‌ வீரியத்தால் கண்கள் சொக்க அவனையும் அழைத்துக் கொண்டே உறங்கச் சென்றாள்.

அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் வரை அமைதியாய் இருந்தவன் அவள் உறங்கி விட்டதை உறுதி செய்து அங்கிருந்து நகர அவன்‌ கையை இறுக்கமாய் பிடித்து “என்னை விட்டு செல்லாதீர்கள் பிரபோ”என்று உறக்கத்திலும் உலறினாள் அம்மு.

அவளை பரிதாபமாய் பார்த்தவன் பெரும்பாடு பட்டு அவளிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு நேராக வேதவ்வை காணச் சென்றான்.

“சொல்லுடா யாரு அந்த பொண்ணு.எதுக்கு என்னை பிரபோன்னு கூப்பிடுது.வித்தியாசமா நடந்துக்குது.அதுக்கு என்ன பிரச்சினை? எல்லாத்தையும் சொல்லு”

வேதவ் அனைத்தையும் சொன்னான் ஆதி முதல் அந்தம் வரை!அதைக் கேட்டவனோ சிலையாக சமைந்து நிற்க

“டேய் விதார்த்”என்று அப்புதியவனை போட்டு உலுக்கினான் வேதவ்.

“இனி‌ அம்முவை குணமாக்குவது என் பொறுப்பு”என்று வேதவ்விற்கு உறுதி அளித்தான் அம்முவால் தன் மன்னவன் என்று உருவகம் செய்து வைக்கப்பட்டிருக்கும் விதார்த் பிரபு.

மன்னவன் வந்தாயிற்று  இனி தீருமோ மங்கையின் பிணி?

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி