மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3(5)

“வீட்ல உள்ளவங்கள சொல்லல ஆனந்தி….. கஷ்டம்னா அது மட்டும்தானா…. கல்யாணம் ஆனதும்  குழந்தை குடும்பம்னு எவ்ளவோ இருக்கே…..” அங்கே பெரியப்பா தன் கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்…

ஆயிரம் வகை அதிர்ச்சியில் அலையும் நுரையுமான தவிப்பில் அன்றில் முழு மொத்தமாய் மிரண்டே நின்றாலும்….. இவள் கையில் அமர்ந்தபடி…. இவள் தோளில்  நாடி ஊன்றி…. இவளை பிஞ்சு கைகளால் கழுத்தோடு கட்டி…. பல்லில்லா பொக்கை வாயால் ”ங்கா…..ங்……கா “ என சொல்லிக் கொண்டிருந்த பம்ப்ளிமாஸ் பாப்பாவை உரிமையாய் இவளிடமிருந்து எடுத்து தன் முகத்திற்கு மேலாக தூக்கிப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான் ஆதிக் அவள் மனக்கண்களில்…

“என்னதான் வசதி ஆள் அம்புன்னு இருந்தாலும்…. கல்யாணம்ன்றது பொறுப்புதான…. தனக்கு முடியுதோ முடியலையோ குழந்தைக்கு பார்த்துதான் ஆகனும்…..வீட்ட கவனிச்சுத்தான் ஆகனும்னு எவ்ளவு இருக்கு….. நம்ம ரஞ்சியவே பாரேன்…..அவ மாப்ள தங்கமான பையந்தான்…..மாப்ள வீட்டப் பத்தி சொல்லவே தேவையில்ல…. இருந்தாலும் கண்ணெல்லாம் கரு வளையம் விழுந்து இப்ப எப்டி இருக்கா…” பெரியப்பா தொடர

விக்கித்து நின்றிருந்த அன்றில் கண்களில் வெப்பக் கண்ணீர் விறு விறென இறங்கிக் கொண்டிருந்தாலும்….. விரல் நகங்கள் உள்ளங்கையை ஓட்டை இடும் வண்ணம் முஷ்டியை இறுக மூடி…பல் கடித்து… தன் நினைவை நிறுத்த இவள்  கடும் முயற்சி கைக்கொண்டிருந்தாலும்…. அதையும் மீறி அவள் அக காட்சியில்

ஒற்றை சடையும்….. நைட் ட்ரெஸிலுமாய் இருக்கும் இவள்….இரவு  மணி இரண்டு என சுட்டிக் கொண்டிருந்த கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டின் கதவை திறக்கிறாள்…

“இப்டி தூங்காம இருக்காதன்னு எத்தன டைம் சொல்றது அனு….என்ட்டயும்தான் கீ இருக்கே” என்று இவள் செயலுக்கு மறுப்பு தெரிவித்தபடியே வீட்டிற்குள் நுழைந்தாலும்….

இவளை இறுக அணைத்து “செம டயர்டா இருக்குடி”  என்றபடி இவள் தோளில் முகம் புதைத்திருந்தான் ஆதிக்…

அடிக்காமல் நொறுக்காமல் வலிக்க வலிக்க உறைக்கிறது அன்றிலுக்கு அவளுள் வந்திருக்கும் காதல்…

ஃப்ளைட்டில் முதன் முதலில் ஆதிக்கைப் பார்த்த போதே நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தவிர்த்த காரணம் சட்டென இப்போது அவளுக்கு பிடிபடுகிறது….. அவனை எந்தவகை காரணமும் இல்லாமலே அவளுக்கு பிடித்திருக்கிறது….

அப்போதே ஆடத் துவங்கிய மனதில், ஒத்த ரசனையால்…. உடைய சுபாவத்தால்….அவன் வகை தொகை இல்லாமல் வந்தமர்ந்திருக்கிறான் இத்தனை நேரத்துக்குள்….

நினைக்கவே நடுங்கிப் போகிறாள் இவள்…

அது எப்டி ஒருத்தன ஒரு நாள்ல பிடிக்கும்….இதெல்லாம் தப்பு….. இவ்ளவுதானா நீ…..வீட்ல தெரிஞ்சா என்ன நினைப்பாங்க….. அப்பாக்குல்லாம் தெரிஞ்சுதோ பிச்சுடுவாங்க பிச்சு…. அப்பாக்கு என்ன இந்த ஆதிக்கு தெரிஞ்சாலே என்ன நினப்பான்….? சே கேவலம்…..  இப்படியாயும் ஒரு தகிப்பு….

‘இல்ல அவனும் உன்ன விரும்புறான்…..’ அடி மனதிலிருந்து அவசரமாய் ஏதோ ஒன்று இவளை ஆறுதல் படுத்தவும் முயல்கிறது….. முதல் சந்திப்பிலிருந்தே வெளிப்பட்ட அவனது அக்கறை முதல்.. கடைசியில் இவளை விட்டுப் போகும் போது நெற்றி இறுக மனமில்லாமல் விடை பெற்ற முகம் வரை மனதில் தோன்றி அவசரமாய் இந்த கருத்தை ஆமோதித்தாலும்

அதெப்டி…..அப்டின்னா அவன் அக்கா ஃபங்க்ஷனுக்காக வேற வழி இல்லாம இவள விட்டுட்டு போனான்னே இருக்கட்டும்….. அடுத்து இவட்ட கால் பண்ணியாவது பேசி இருக்க மாட்டானா? என மனச்சாட்சி உச்சி மண்டையில் அடித்து கேள்வி கேட்கிறது….

உன்னல்லாம் அவன் கண்டுக்கவே இல்ல….. ஜஸ்ட் வீணான இமாஜினேஷன்…

சரியாய் இந்த நேரம் பெரியப்பா சொல்வது காதில் விழுகிறது

“ரஞ்சி மாப்ள வீட்டுக்கு வர தினமும்  நைட் ரெண்டு மணியாகுதாம்…. வெளி சாப்பாடு அவருக்கு ஒத்துக்கலைனு அப்ப எந்திரிச்சு டிஃபன் செய்து கொடுப்பேன்றா…….பகல்ல அவ பையங்களே போதும் அவள ட்ரில் வாங்க…. சந்தோஷமாதான் அவ இருக்கா…. இருந்தாலும் இதெல்லாம் இப்பவே நம்ம அன்றில்க்கு தேவையா….?”

அவ்வளவுதான்……அவ்வளவேதான்….. கல்யாணப் பேச்சு இவளுக்குத்தான் நடந்துட்டு இருக்குதா….? இருந்த மொத்த ஆதங்கம்…. இயலாமை… ஒரு மாபெரும் இழப்புணர்வு…..அருவருப்பு என என்னவெல்லாமோ தாக்க வெடித்துவிட்டாள் இவள்…

“ பெரிம்மா!!!!! எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்…….அதப் பத்தி பேசாதீங்க நீங்க….” எடுத்ததும் உச்ச ஸ்தாதியில் இவள் ஆரம்பிக்க….

“ஏய்….ஏன்டி….முதல்ல கத்றத நிறுத்து” அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார் பெரியம்மா….

“சர்ஜரி ஆன உடம்பு அம்மு….” தவிக்க தவிக்க அவர் சொல்வதற்கு முன்னமே இன்னும் தையல் ஆறாத வயிற்றுப் புண்ணோடு சேர்த்து எங்கல்லாமோ வலிக்க தொடங்கி விட்டாலும்….

வயிற்றை ஒரு கையால் பிடித்தபடி “நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு போறேன்….இனிமே நான் இங்க வரவே மாட்டேன்….. எனக்கு மேல படிக்கனும்….” என துடிக்க துடிக்க இவள் பேச….

இப்போது பெரியம்மா கண்ணில் நீர் சுரந்து விட்டது….. “ இனி அம்மா இதெல்லாம் பேசவே மாட்டேன்ல…..இப்ப முதல்ல நீ பேசுறத நிறுத்து….வயிறு என்னத்துக்கு அம்மு ஆகும்..?” பரிதவித்தபடி இவளது கையை பற்றினார் அவர்.

அடுத்த பக்கம்